Banner Image

19-04-2026
பாஸ்க்கா காலம் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
எங்களோடு தங்கும் ஆண்டவரே!
வழிப்போக்கர்களே, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இருள் சூழும் நேரத்தில் நாம் நடந்து செல்லும்போது, இயேசு நமக்கு வழித்துணையாக வருகிறார் என் பதை உணர்ந்துகொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு வின் இறப்பால் மனம் உடைந்து போயிருந்த சீடர்கள் இருவர் எம்மாவு செல்லும் வழியில், ஆண்டவர் உடன் நடப்பதைக் காண்கிறோம். அவர்களின் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாக மறைநூலின் இறைவாக்குகள் மூலம் தமது உயிர்ப்பை விளக்கி கூறுகிறார். இயேசு அப்பத்தைப் பிட்டபோது, சீடர்கள் அவரைக் கண்டு கொண்டார்கள். நற்கருணை யில் நம்மோடு உடனிருக்கும் ஆண்டவர் இயேசுவை, நமது விசுவாசப் பயணத்தில் வழித் துணையாக கொண்டு வாழும் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33
நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது:

‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.”

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 16:1-2, 5-6, 7-8, 9-10
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.2 நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். -பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;6 இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன; உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே. -பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். -பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர் -பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
இரண்டாம் வாசகம் – தூய பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21
நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார்.
அன்பார்ந்தவர்களே,
நீங்கள் ‘தந்தையே’ என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
திபா 118:24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
வாழ்வின் வழித்துணையே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மையே வழித் துணையாக கொண்டு விசுவாச வாழ்வில் நடை பயிலவும், உம் மக்களை வழிநடத்தவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
மூவுலக அரசரே இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
“வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர்”

என்கிற உண்மையை உணராமல், போர்கள் தொடுத்தும், ஏவுகணைகள் வீசியும், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தியும், இந்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நாடுககையும், நாடுகளின் தலைவர்களையும், அமைதியின் அரசராகிய நீர்தாமே, உம்முடைய திருப்பாடுகள், மரணம் ஆகியவற்றின் பலனாக, அமைதியின் பாதைக்கு அழைத்துவர வேண்டுமென்றும், பரந்துபட்ட எம் உலகிலும், எங்கள் தேசத்திலும், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவை நிலைபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
இரக்கத்தின் ஊற்றே இறைவா,

உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
உண்மையின் நிறைவே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உடலால் ஊட்டம் பெற்று வழிநடக்கவும், அவரது உயிர்ப்புக்கு சாட்சிகளாய் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''சீடர்களோடு இயேசு பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரைக் கண்டுகொண்டார்கள்'' (லூக்கா 24:30-31)
உயிர்த்தெழுந்த இயேசு பல சீடர்களுக்குத் தோன்றினார். அவ்வாறு இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளுள் மிகச் சிறப்பான ஒன்று அவர் எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தது ஆகும் (லூக் 2:13-35). லூக்கா நற்செய்தியாளர் இதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இயேசுவின் இரு சீடர்கள் (அவர்களது பெயர்கள் தரப்படவில்லை) எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு அடையாளம் தெரியாத ஒரு மனிதரை வழியில் சந்திக்கின்றனர். அவர்தான் இயேசு என்பதை அவர்கள் பிறகே கண்டுகொள்வர். அன்னியராக வந்த மனிதர் சீடர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்கிறார். அங்கே உணவருந்தும் வேளையில் எதிர்பாராத ஓர் அனுபவம் சீடர்களுக்குக் கிடைக்கிறது. அந்த அன்னியர் அப்பத்தை எடுக்கிறார், கடவுளைப் போற்றுகிறார், அப்பத்தைப் பிட்கிறார், அதை அவர்களுக்குக் கொடுக்கிறார். இச்செயல்களைக் கண்ட சீடர்கள் இருவரும் முன்னாளைய அனுபவத்தை நினைத்துப்பார்க்கிறார்கள். அவர்களுக்குப் போதகராக இருந்த இயேசு செய்த செயல்கள் அனைத்தையும் இந்த அன்னியரும் செய்கிறார் என்பதைத் தொடர்புபடுத்துகின்றனர். அந்த நேரத்திலேயே அவர்களுடைய ''கண்கள் திறக்கின்றன''. அவர்களும் இயேசுவை ''அடையாளம் கண்டுகொண்டார்கள்''.




பெயர் குறிப்பிடப்படாத இந்த இரு சீடர்களின் கதை நம் கதை ஆகும். இயேசுவை நாம் நம்புகிறோம். அவர் நம்மோடு நடமாடி, நம்மோடு பழகிச் செயல்படாவிட்டாலும் அவர் நம்மோடு தங்கி வாழ்கின்றார் என்பதை நம் கண்கள் காண வேண்டும். நம் கண்கள் ''திறக்கப்பட வேண்டும்''. குறிப்பாக இயேசு இரு செயல்களைச் செய்கிறார். முதலில் மறைநூலை அவர் சீடர்களுக்கு விளக்கி உரைக்கிறார். பின்னர் சீடர்களோடு ''அப்பம் பிட்டுப் பகிர்ந்துகொள்கிறார்''. இந்த இரு நிகழ்ச்சிகளும் திருப்பலியின் போது நிகழ்கின்றன. இறைவார்த்தை அங்கே வாசித்து விளக்கப்படுகிறது. அப்பம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கடவுளின் வார்த்தையைக் கேட்டு, இயேசு நமக்கு அளிக்கின்ற அவருடைய உடல் என்னும் உணவை உட்கொண்டு நாம் வளம்பெறுகிறோம். திருச்சபையில் இயேசு தொடர்ந்து உடனிருக்கிறார் எனவும் செயல்படுகிறார் எனவும் நாம் நம்புவதை ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக நாம் நினைவுகூர்கிறோம், இயேசுவோடு ஆழ்ந்த விதத்தில் ஒன்றிணைகிறோம். இயேசுவிடமிருந்து நாம் பெறுகின்ற வாழ்வு பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு நீர் தங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media