Banner Image

16-04-2026
பாஸ்காகாலம் இரண்டாவது வாரம் வியாழக்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33
நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
அந்நாள்களில்
காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!” என்றார்.

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.

இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 34: 1,8. 16-17. 18-19
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 20:29

அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி
அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்'' (யோவான் 3:20-21)
''இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார் (யோவான் 20:15)
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படை. கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்த அந்த நேரத்தில் இயேசுவைக் கண்டவர் எவருமில்லை. ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசு அவரில் நம்பிக்கை கொண்ட பல மனிதருக்குத் தோன்றினார். யோவான் நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாததால் கவலையோடு அழுதுகொண்டிருந்த மரியா ஒரு மனிதரைக் காண்கின்றார். அவர் தோட்டக்காரராக இருப்பாரோ என மரியா எண்ணுகிறார். ஆனால் உண்மையிலே அவர் உயிர்பெற்றெழுந்த இயேசுதான். இயேசு மரியாவிடம் ''ஏனம்மா அழுகிறாய்?'' எனக் கரிசனையோடு வினவுகிறார். ''யாரைத் தேடுகிறாய்?'' என இயேசு கேட்கிறார். இயேசுவைத் தேடுவதாக மரியா கூறியதும் இயேசு ''மரியா'' என்று பெயர் சொல்லி அழைக்கிறார். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதை மரியா உடனேயே கண்டுகொள்கிறார். தான் பேசிக்கொண்டிருக்கின்ற மனிதர் உண்மையிலேயே இயேசுதான் என உணர்ந்த அந்த நேரத்திலேயே மரியா ''ரபூனி'' (''போதகரே'') என இயேசுவைக் கூப்பிடுகிறார்.

இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். இயேசுவை யார் என நாம் அறிந்து அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை நாம் அவர் நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்னும் உண்மையை ஏற்பதுதான். இயேசுவின் அன்பு நம்மை அரவணைக்கிறது எனவும் அவருடைய அன்பின் பிணைப்பில் நாம் புதுவாழ்வு பெறுகிறோம் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால் அவரை நாம் ஆண்டவரே எனவும் போதகரே எனவும் அழைப்பதோடு அவருடைய போதனையை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் கொள்வோம். இயேசுவை அனுபவித்து உணர்கின்ற மனிதர் அவருடைய அன்பின் ஆழத்தை அறிவார்கள். அப்போது நாம் தேடுகின்ற இயேசு நம் கைகளுக்கு எட்டாதவராகவோ நம் பார்வைக்கு அப்பாற்பட்டவராகவோ இருக்கமாட்டார். மாறாக, அவர் நாம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளோமோ அதைவிடவும் நமக்கு நெருக்கமாக உள்ளார் என நாம் உணர்வோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மை முற்றிலுமாக உருமாற்றுகிறது. பாவம் என்னும் தீமையிலிருந்து இயேசு நம்மை விடுவித்துள்ளார் என்னும் அனுபவம் நமதாக வேண்டும். அப்போது நன்மையைத் தேடிச் செல்கின்ற மனநிலை நம்மில் உருவாகும். நாம் தேடுகின்ற இயேசு நம்மை விட்டு அகன்றுவிட்டாரோ என்னும் அச்சம் நம்மில் எழாது. மாறாக, இயேசுவின் உடனிருப்பு நம் உள்ளத்தில் உள்ளதை நாம் உணர்வோம்; அவருடைய ஆவியால் புது வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி நாங்களும் உம் திருவுளத்தை நிறைவேற்ற அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media