05-04-2026
பாஸ்கா வாரம்
ஞாயிற்றுக்கிழமை
ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா
முன்னுரை
ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! விடுதலை வாழ்வை வழங்கும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று உயிர்ப்பு ஞாயிறு. இயேசு உயிர்த்து விட்டார்-அல்லேலூயா சாவு வீழ்ந்தது! இருள் அழிந்தது! அடிமைத்தனம் அகன்றது! அருள் வாழ்வு கிடைத்தது அதனால் புது வாழ்வு நாம் பெற்றோம். துன்புறும் இதயங்களுக்கு இயேசு இறந்தார் என்ற செய்தியை விட இயேசு மீண்டும் உயிர்த்தார் என்ற செய்திதான் அதிகமாக ஆறுதலைக் கொடுக்கும். நம்பிக்கை இழந்த உறவுகளை புதுப்பித்து புது நம்பிக்கையை ஊட்ட இயேசு உயிர்த்துவிட்டார். கல்லறை வாழ்வு காலியாகிவிட்டது, காரிருளின் வாழ்வில் உயிர்ப்பு மலர்ந்தது. இனி அழுகையில்லை, தோல்வியில்லை. அனைத்தையும் புதுப்படைப்பாக்கும் எம் தெய்வம் இயேசு உயிர்பெற்று எழுந்துவிட்டார். நமது வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் நீக்கிவிட்டு உயிர்பெற்ற இயேசுவோடு புதுப்பாடைப்பாவோம். கிறிஸ்துவை அறிந்து கொள்வோம்-புதுச்சமுதாயம் உருவாக்க நாம் உயிர்பெற்று எழுந்து விட்டோம். இனி என்றும் சாகாத இயேசு என்னோடு வருகிறார் என்னில் அவர் இருந்து செயலாற்றும் அனைத்தையும் நாமும் இணைந்து செயல்படுவோம்.
இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
அப்போது பேதரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்கு மல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர் " என்றார்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள் ளது அவரது பேரன்பு. 2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:
16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல் களை விரித்துரைப்பேன்: பல்லவி:
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்கு கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
1 கொரி 5:7b-8b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்: கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து,"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ,எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்: ஆனால் உள்ளே நுழையவில்லை.அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார்.இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
வியப்புக்குரிய எம் இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் , பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்களாகவும் உமது திட்டங்களை சரியான நேரத்தில் சரியான முறையில் விளக்கிக் கூறுபவர்களாகவும் இருக்கவும்: தூய ஆவியின் அருளையும் உடல் நலனையும் வர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 2:
விடுதலையின் தெய்வமே இறைவா!
இன்று உலக நாடு முழுவதும் யுத்தத்தால், வன்முறையால் இடம் பெயர்ந்து , அகதிகளாகி அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களிலே நிம்மதியாக வாழவும்: உலகிலே அடக்குமுறைகள் அழிந்து: அன்பும் , மனிதநேயமும் , நீதியும் நிலைபெறச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 3:
ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும் , ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும் , சமாதானத்தின் தூதுவர்களாகவும் , உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 4:
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும் , இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 5:
இரக்கமுள்ள இறைவா!
புளித்த மாவை மாற்றி புதிய நல்ல மாவை வைத்து பாஸ்கா கொண்டாடுவது போல நாங்கள் அழுக்கேறிய பழைய வாழ்க்கையை விட்டு, சுத்தமான புது வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 6:
உலகின் மீட்பரே இறைவா!
உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்விட்டு உயிர்த்து வெற்றி கொண்டீரே; உம்மைப் போன்று தன்னலம் கருதாமல் பிறரின் தேவைகளை அறிந்து உதவி செய்து வாழ் வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 7:
வழிநடத்தும் இறைவா!
பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்பட்டு, நீரே ஆறுதல் எனத் தேடி வரும் மக்களுக்கு தூய ஆவியின் அருட்கொடைகளைப் பொழிந்து நல்பாதையில் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 8:
இறைவா,
உயிர்ப்பை கொண்டாடி மகிழுகின்ற நாங்கள் உயிர்ப்பு தரும் நம்பிக்கை, எதிர்நோக்கு. அன்பினை உணர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புக்கு என்றும் முடிவிராது!
இன்று புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அன்புக்கோர் இலக்கணமாய், எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் மகதலா மரியா. அவருக்காக இன்று இறைவனைப் போற்றுவோம். வரலாற்று இயேசுவைப் பலரும் அன்பு செய்தனர். அந்த அன்பைப் பல வழிகளில் வெளிப்படுத்தினர். புதிய ஏற்பாட்டில் இயேசுவை வெகுவாக அன்பு செய்த பலரையும் காண்கிறோம். இருப்பினும், அவர்கள் அனைவரிலும் தனித்துவம் மிக்கவராய் மிளிர்கிறார் மகதலா மரியா. அவருடைய அன்பை இன்று தியானிப்போம். மரியாவின் அன்பை நற்செய்தியாளர் யோவான் வெளிப்படுத்தும் பாணி உணர்வுமிக்கதாய் அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில், அதுவும் இருள் நீங்கும் முன்பே மரியா கல்லறைக்குச் சென்றார் என்னும் வரிகள் அவரது அன்பின் ஆழத்தை அருமையாக எடுத்துரைக்கின்றன. முந்தின நாள் ஓய்வுநாள் ஆனதால், இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருள்கள் வைக்கும் பணியைச் செய்யமுடியவில்லை. எனவே, எப்போது ஓய்வுநாள் முடியும், எப்போது கல்லறைக்குச் செல்லலாம் என இரவு முழுவதும் ஆவலோடு காத்திருந்தார் போலும் மகதலா மரியா. ஆதலால்தான், அதிகாலையில், இருள் நீங்கும் முன்பே கல்லறைக்கு விரைந்து சென்றார்.
அவரது அன்பு உண்மையானது. அவரது அன்பு செயலில் வெளிப்பட்டது. அவரது அன்பு துணிவு மிக்கது. சிலுவை அடியிலும் அவர் அஞ்சவில்லை. கல்லறைக்குச் செல்லும்;போதும் பயப்படவில்லை. அவரது அன்பு சாவையும் வென்றது. வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் இறைவாக்கைப் போன்று, வாழ்ந்த காலத்திலும் இயேசுவை அன்பு செய்தார். இறப்புக்குப் பின்னும் அந்த அன்பு தொடர்ந்தது. ஆம், அன்புக்கு என்றும் முடிவிராது. சாவு அன்பைப் பிரிக்க முடியாது என்று எண்பிக்கிறார் மகதலா மரியா.
மன்றாட்டு:
சாவை வென்றவரே இயேசுவே, இன்றைய நாளில் அன்பு சாவையும் வெல்லும் என்று எண்பித்த புனித மகதலா மரியாவுக்காக உம்மைப் போற்றுகிறேன். அவரைப் போலவே நானும் என் அன்பைத் துணிவுடன், உண்மையுடன், செயலாற்றலோடு வெளிப்படுத்த அருள் தாரும். யாரையெல்லாம் நான் அன்பு செய்கிறேனோ, அவர்களுக்கு என் அன்பை செயல் வடிவில் வெளிப்படுத்த எனக்கு அருள் தாரும்.