News Image

உடல் உறுப்பு தானம் என்பது மரணத்தை விட உயர்ந்த அன்பு!

உரோமையிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் புதிய கூழ்மப்பிரிப்பு (Dialysis) பிரிவை பார்வையிட்ட திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், "கொடுப்பதன் கலாச்சாரம்" என்ற தலைப்பில் அங்கு நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றில் பேசியபோது, "உடல் உறுப்பு தானம் என்பது மரணத்தை விட உயர்ந்த அன்பு" என்று கூறினார்.

“பணம், நேரம் அல்லது உறுப்புகளை தானம் செய்வது எதுவாக இருந்தாலும் அவை தாராள மனப்பான்மையின் செயல்கள்” என்று குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், "மரணத்தை கடந்து மாண்பை மீட்டெடுக்கும் அன்பை அவை வெளிப்படுத்துகின்றன" என்று எடுத்துரைத்தார்.

மேலும் “உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் வாழ்க்கையையும் வழங்கும் ஓர் ஆழமான பரிசு” என்று பாராட்டிய அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பதினேழு வயது நோயாளி சாமுவேல் கலிம்பெர்தி என்பவரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதைக் குறித்தும், உலக மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டுகளில் உலக சாம்பியனாக மாற எவ்வாறு அனுமதித்தது என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

“உண்மையான தாராள மனப்பான்மை கடவுளை மகிமைப்படுத்துகிறது” என்றும், “தன்னார்வத் தொண்டு, கவனிப்பு மற்றும் உடனிருப்பு ஆகியவை கொடுப்பதன் முக்கிய வடிவங்கள்” என்றும் வலியுறுத்திக் கூறினார் கர்தினால் பரோலின்.

மேலும் இக்கலந்துரையாடலில் பேசிய குழந்தை இயேசு மருத்துவமனையின் தலைவர் திசியானோ ஒனெஸ்தி அவர்கள், "குழந்தைகளில் முதலீடு செய்வது ஒரு சமூகத்தின் உண்மையான நல்வாழ்வை வெளிப்படுத்துகிறது" என்று சுட்டிக்காட்டினார்.

முந்தைய அடுத்தது