News Image

ஆசியாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அநீதியான மரணம்

2021ல், ஆசியாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளது ASIANews செய்தி நிறுவனம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த ஆண்டில், அதாவது 2021ல், ஆசியாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, இந்தியாவில் அநீதியாக 8 மாதங்கள் சிறைவைக்கப்பட்டு உயிரிழந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளது ASIANews செய்தி நிறுவனம்.

2021ன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ள இச்செய்தி நிறுவனம், மியான்மாரில் பிப்ரவரி முதல் தேதி இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, ஜூன் 17ல் Hong Kongன் மக்களாட்சி ஆதரவு பத்திரிக்கை அலுவலகம் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆப்கான் ஆடசி மாற்றம், இரஷ்ய மற்றும் பிலிப்பீன்ஸின் மனித உரிமை நடவடிக்கையாளர்கள் நொபெல் அமைதி விருதைப் பெற்றது என்ற வரிசையில், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணத்தையும் இணைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காக உழைத்த ஒரே காரணத்திற்காக, பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு 8 மாத சிறைத்தண்டனை அனுபவித்து, அத்தண்டனைக் காலத்தின்போதே கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜூலை 5ம் தேதி உயிரிழந்த அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணம், 2021ம் ஆண்டின் நிகழ்வுகளுள் முக்கியத்துவம் நிறைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது, ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க, இயேசுசபையினரால் மும்பை உயர்நீதிமன்றத்தில், கடந்தமாதம் விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அடுத்தது