News Image

இந்தியாவைக் குறித்த OXFAM பிறரன்பு அமைப்பின் ஆய்வறிக்கை

இந்தியாவில் 2021ம் ஆண்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகியுள்ளதாகவும், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் Oxfam என்ற பிறரன்பு அமைப்பின் ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

இந்தியாவின் வரிவிதிப்புக் கொள்கைகள் பணம் படைத்தவர்களுக்கே சாதகமாக இருப்பதாகவும், இந்தியாவில் நிகழும் சரிநிகரற்ற நிலைகளால் உயிரிழப்புகள் தொடர்வதாகவும் உரைக்கும் Oxfam அமைப்பு, 2021ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து 39 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஏழைகளின் ஆண்டு வருமானம் 53 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தன் ஆய்வறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 98 பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் சொத்து மதிப்பு, அந்நாட்டில் அடிமட்டத்தில் இருக்கும் 55 கோடியே 50 இலட்சம் மக்கள் கொண்டிருக்கும் சொத்து மதிப்பிற்கு ஈடாக இருப்பதாகவும் இவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

2020ம் ஆண்டில், இந்தியாவில் 102 ஆக இருந்த பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 142 ஆக உயர்ந்துள்ளது என்றும், உலகில் அதிக எண்ணிக்கையில் பெரும் கோடிஸ்வரர்களைக் கொண்டுள்ள நாடுகளுள், சீனா. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் வளங்கள் பணக்காரர்கள் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், ஏழை-பணக்கார இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாகவும் Oxfam பிறரன்பு அமைப்பின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய அடுத்தது