இரயில் திட்டம் குறித்து கவலைகளை எழுப்பும் இந்திய ஆயர்கள்
மக்களின் பரவலான எதிர்ப்பிற்கு மத்தியில் முன்மொழியப்பட்ட இரயில் திட்டத்தின் மீதான முடிவுகளை மாற்றிக்கொள்ளுமாறு தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசை கத்தோலிக்கத் திருஅவை வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 29, செவ்வாயன்று, கேரளாவின் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிவேக ரயில் பாதை அல்லது மாநிலத்தின் ஒரு முனையை மற்றொன்றோடு இணைக்கும் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் விமர்சனங்களை முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது என்று கேரள அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த இரயில் திட்டத்தில் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ள மக்களின் நலன் கருதி அதற்கான சாத்தியக்கூறுகளை அரசு முடிவு செய்யவேண்டும் என விரும்புவதாகவும், இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்புகளை விளைவிப்பத்துடன் சாமானிய மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என்று மக்கள் அஞ்சுவதாகவும், ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"நாங்கள் எந்த ஒரு நலத்திட்டத்திற்கும் எதிரானவர்கள் அல்ல, அதேவேளையில் அதைத் தொடங்குவதற்குமுன் அது மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருக்கவேண்டும் என்று ஆயர்கள் விரும்புவதாக, கேரள கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அருள்பணியாளர் Jacob G. Palackappilly கூறியுள்ளார்.
மக்கள் நலனில் தலத்திருஅவை மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும், மக்கள் துயரங்கள் அனுவிப்பதை அது விரும்பவில்லை எனவும், ஆகவே, அரசு எல்லா சந்தேகங்களையும் நீக்கவேண்டும் என்றும் யூக்கா செய்திக்கு கூறிய அருள்பணியாளர் Jacob அவர்கள், மக்கள் நலத்திட்டங்கள் என்பதன் பெயரில் இடம்பெயர்ந்து சென்ற பலருக்கு இன்னும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பதே தங்களின் கடந்தகால அனுபவமாக இருக்கின்றது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார். (UCAN)