News Image

இந்திய, பாகிஸ்தான் அமைதிக்காக ஆயர்களின் முயற்சி

"இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை உருவாக்க, நாம் செபிப்போம், உழைப்போம்" - இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் உரையாடல் வழியைத் தெரிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை உருவாக்க, நாம் செபிப்போம், உழைப்போம்" என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

பிப்ரவரி 14ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளதையும், அதற்கு, பாகிஸ்தான் இராணுவம், பதில் தாக்குதல் நடத்தியுள்ளதையும் மனதில் கொண்டு, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

தீவிரவாதத்தையும், அதற்குப் பதிலிருப்பாக மேற்கொள்ளப்படும் போர் முயற்சியையும், நாங்கள் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உண்மையான அமைதிவேண்டி, இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொள்ளும் உரையாடல் முயற்சிகள், தெற்கு ஆசியாவுக்கும், உலகிற்கும் பொருளுள்ள முயற்சியாக விளங்கும் என்று எடுத்துரைத்தார்.

போரைத் தடுப்பது முக்கியம் என்ற கருத்து, பன்னாட்டளவில் ஆதரவு பெற்றுவரும் வேளையில், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் கருத்து வேறுபாடுகளை, உரையாடல் வழியே தீர்ப்பதே பாகிஸ்தான் தலத்திருஅவையின் விருப்பமும், மன்றாட்டும் என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் போர்ச் சூழலைத் தவிர்ப்பதற்கு, பேச்சு வார்த்தைகளில் ஈடுபட, இவ்விரு நாடுகளையும், பன்னாட்டு அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

முந்தைய அடுத்தது