பொது இடத்தில் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து பேராயர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பேயான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுடன் பொது இடத்தில் வைத்து ஓர் ஆணும் பெண்ணும் தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து தலத்திருஅவை ஆயர்களும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் வைத்து சட்டத்திற்கு புறம்பாக ஓர் ஆணும் பெண்ணும் கொடுமையாக தாக்கப்பட்ட காணொளி தன்னை மிகவும் வருத்தியதாகவும், ஒரு நாகரீக சமுதாயத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து தண்டனை வழங்க எவருக்கும் அனுமதியில்லை எனவும் கூறினார் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கொத்தா பேராயர் தாமஸ் டி சூசா.
மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள், ஓர் ஆணையும் பெண்ணையும் தாக்க 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்ததுக் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட பேராயர், ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இத்தகைய செயல்கள் எதிர்பார்க்கப்படாதது என கூறினார்.
பொதுமக்கள் முன்னிலையில் இவ்விருவரும் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மேற்கு வங்க அரசுக்கு விளக்கம் கேட்டு புகார் ஒன்றை அனுப்பியுள்ளது.