அருள்பணி ஸ்டான் சுவாமி விடுதலைக்கு ஐ.நா.வின் உதவி கோரி.....
அமைதிக்குலைவை ஏற்படுத்தினார் என்று, அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து மும்பையின் Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பு உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் இயேசு சபையினர், துறவு சபைகள், குறிப்பாக, கிளேரிசியன் சபையினர், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதற்கு, ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் (OHCHR) இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.
ஐ.நா.விற்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில், இந்தியாவில் பழங்குடி இனங்களின், வறிய, மற்றும், வீடற்ற மக்கள் எதிர்கொண்டுவந்த வன்முறைகளையும், துன்பங்களையும் நிறுத்துவதற்கென, அவர்களுக்கு ஆதரவாக, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், நீண்டகாலமாக, சட்டமுறைப்படியும், அமைதியான வழியிலும் பணியாற்றிவந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களோடு கைது செய்யப்பட்டுள்ள 15 மனித உரிமை ஆர்வலர்களில், Varavara Rao போன்ற சிலர், வயதானவர்கள் மற்றும், நோயாளிகள் என்றும், அவர்களை பிணையலில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பம், இரக்கமின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, டிசம்பர் 10ம் தேதி, உலக மனித உரிமைகள் நாளன்று, இந்திய அரசுக்கு உலகளாவிய அளவில் விண்ணப்பம் விடுக்கப்பட்டது என்றும், UNHRC அமைப்பும், குடியுரிமை மற்றும், அரசியல் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்று, இது தொடர்பாக இந்திய அரசுக்கு ஏற்கனவே செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்றுரைக்கும் பீதேஸ் செய்தி, இந்த விண்ணப்பத்தின் ஒரு கட்டமாக, உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளது. (Fides)