கிறிஸ்துவின் அடிச்சுவட்டில் நடக்க அழைப்புவிடுக்கும் கிறிஸ்துமஸ்
எளிய மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளியாகத் தோன்றினார் என்றும், கிறிஸ்துவின் அன்பும் மகிழ்ச்சியும் எல்லைகளைத் தாண்டி, அவரது அடிச்சுவடுகளில் நடக்க நம் அனைவரையும் அழைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் அருள்பணி பாபு.
வடக்கு கர்நாடகாவின் குல்பர்கா மறைமாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான ஆலண்டில் பல்சமயத்தாருடன் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்ச்சியின் கொண்டாட்டம் பற்றிய தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுடன் பகிர்ந்துள்ளார் Aland பகுதியில் உள்ள Shanthivana ஆலய இயக்குநர்.
அனுபவமண்டபத்தைச் சார்ந்த ஸ்ரீ கோரணேஸ்வர சுவாமிஜி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி என்னும் நிகழ்வில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திருமதி பூஜா லோஹர் அவர்கள் கலந்துகொண்டார் என்றும், ஆலந்து பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது அமைதி, எதிர்நோக்கு ஒற்றுமை என்பதை வெளிப்படுத்தியது என்றும் கூறினார் அருள்பணி பாபு.
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைக் கூட கொண்டிராத இப்பகுதியில் கிறிஸ்து பிறப்புவிழாவானது 8 வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட மறைப்பணி நிலையத்தாரால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகின்றது என்றும், மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சி மற்றும் அமைதியின் செய்தியை வழங்கி வருகின்றது என்றும் கூறினார் அருள்பணி பாபு.
ஸ்ரீ கோரணேஸ்வர சுவாமிஜி அவர்கள் உரையாற்றுகையில், இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அமைதியைக் கொண்டுவரவே வந்தார், இந்த அமைதியை நமது சமூகங்களில் வாழ வைப்பது நமது பொறுப்பு என்றும், அவரைப்போலவே நாம் அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கவும், அனைத்து மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வேண்டும் என்று ஊக்குவித்தார்.
முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திருமதி பூஜா லோஹர் அவர்கள் பேசுகையில் ஒற்றுமை மிக அவசியம் என்றும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக, நல்லிணக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் வளர்த்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தை இயேசுவுக்கு மரியாதை செலுத்தினர் என்றும், சமய நல்லிணக்க உணர்வை எடுத்துக்காட்டிய இந்நிகழ்வில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் குழந்தை இயேசுவை வணங்கி ஆசீர் பெற்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீடித்த இந்த கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் கொண்டுவரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது என்றும், அமைதியின் இளவரசராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட பலதரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒன்று கூடியது மனதிற்கு மகிழ்வைத் தந்தது என்றும் கூறினார் அருள்பணி பாபு.