News

வாரம் ஓர் அலசல் – திருவள்ளுவர்நாள் மற்றும் ஜல்லிக்கட்டு

1971ஆம் ஆண்டு முதல் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


இரண்டடியில் ஏழடி சீர் படைத்து மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்தவர், அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று இயல்களையும், சுவை குன்றாது பகிர்ந்தளித்தர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தைத்திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கலன்று திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. ஏடில்லா காலத்தில் எழுத்தானி கொண்டு, ஓலைச்சுவடியில் ஒப்பற்ற வார்த்தைகளை வரிகளாக வடித்த வார்த்தை வித்தகராம் பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் பற்றியும் தமிழ்நாட்டின் வீர விளையாட்டாம் சல்லிக்கட்டு பற்றியும் இன்றைய நம் நிகழ்வில்காணலாம்.


அரசியலையும், அறிவியலையும் அன்றே அத்தனை மக்களும் பொருளுணர்ந்து பின்பற்றி வாழ வார்த்தைகளில் வழி வகை செய்தவர். வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என பாருலகம் பெருமை கொள்ளும் வகையில் சொற்களால் புதிய சரித்திரம் படைத்தவர் திருவள்ளுவர். 1333 திருக்குறள்கள் வழியாக வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர். பண்டைய காலம் முதல் இக்கால கவிஞர்கள் வரை தங்களது சொற்பொழிவுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசாதவர் எவரும் இலர் என்றால் அதுமிகையாது. மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு' தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தனர். அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


சமணர் என்றும் சைவர் என்றும் சிலரால் அழைக்கப்படும் திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி எனக் கூறப்பட்டு விழா எடுக்கப்பட்டு வந்த நிலையில், 1971ஆம் ஆண்டு முதல் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளில் திருவள்ளுவர் பற்றிய கவிதை, கதை, கட்டுரை, சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் பொங்கல் விழா சிறப்பின் போது கொண்டாடப்படுகின்றன. வள்ளுவர் கோட்டம் என்றழைக்கப்படும் 1976 ஆம் ஆண்டு சென்னையில் கட்டப்பட்ட திருவள்ளுவரின் நினைவகத்திற்கு இந்நாளில், மக்கள் திரளாக வருகை தருவார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இந்நாளில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது அற்புதமான பங்களிப்புக்கு மரியாதையும் செலுத்துகின்றனர். வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணையும் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

முந்தைய அடுத்தது