News

மும்பையில் கருணை இல்லக் குழந்தைகளுக்கான புதிய திட்டம்

மும்பையில் கடந்த வாரம் புனித கேத்தரின் பள்ளியும் கருணை இல்லமும் இணைந்து செங்கல் சூளைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்கு உணவு மற்றும் கல்வி ஆதரவை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

மும்பையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள Tokowade மற்றும் Dhasai ஆகிய கிராமங்களில், மொத்தம் ஐந்து முதல் ஆறு செங்கல் சூளைகள் உள்ளன என்றும், 1 முதல் 15 வயதுடைய 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இச்சூளைகளில் வாழ்கின்றனர் என்றும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான நலன்புரி அமைப்பின் செயலாளரும் அறங்காவலருமான அருள்சகோதரர் ஜோசப் செபாஸ்டியன் அவர்கள், ஆசியச் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.

வேலை தேடி புலம்பெயர்ந்த குடும்பங்கள், பொதுவாக கல்வி கற்க முடியாத தங்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள் என்றும், அவர்கள் ஜூன் முதல், செப்டம்பர் வரை பருவமழைக் காலத்தில் விவசாயத்திலும், ஆண்டு முழுவதும் அக்டோபர் முதல், மே வரை செங்கல் சூளைகளிலும் வேலை செய்கிறார்கள் என்றும் கூறிய சகோதரர் ஜோசப் செபாஸ்டியன் அவர்கள், இக்குழந்தைகளின் நலன்களுக்காகவே இப்புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதால் பள்ளியில் சேர்க்கப்படும் இவர்களின் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக எடுத்துரைத்த சகோதரர் ஜோசப் அவர்கள், பெரும்பாலான மாணவர்கள் ஏழை, மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தத் திட்டம் நீண்ட கால அடிப்படையில் அல்ல, தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

புனித கேத்தரின் பள்ளியும் கருணை இல்லமும் இணைந்து சுத்தமான உடைகள், ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்ப்பதற்கான உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றன. மேலும், பல்வேறு வகையான கல்வி நடவடிக்கைகளில் வயதான குழந்தைகளை ஈடுபடுத்த முயற்சிப்பதுடன் மாணவர்களுக்கு சில நிதி உதவிகளையும் கொடுத்து உதவுகின்றன. (Asianews)

முந்தைய அடுத்தது