News

விண்மீன் காட்டும் பாதையில்... : பசிபோக்கும் முயற்சிகள் பரவ...

சென்ற ஆண்டு, மார்ச் மாத இறுதி வாரத்தில், இந்தியாவில் முழு அடைப்பு என்ற ஆணை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டதும், பல கோடி வறியோரின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த முழு அடைப்பு காலத்தில், யாருடைய வேண்டுகோளும் இன்றி, எவ்விதத் தூண்டுதலும் இன்றி, எள்ளளவும் விளம்பரங்களைத் தேடாமல், தனிப்பட்ட மனிதர்கள், குறிப்பாக, இளையோர், மற்றும் அரசுசாரா தன்னார்வ அமைப்பினர், பல இலட்சம் மக்களுக்கு உணவு வழங்கிவந்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பிஸ்வநாத் (Biswanath) மாவட்டத்தில் வாழும் 10,000 வறிய குடும்பங்களுக்கு உணவு வழங்கிவந்த ஜயந்த போரா (Jayanta Bora) என்பவர், உணவுவழங்குகையில், கோவிட் பெருந்தொற்றிலிருந்து அம்மக்கள் தங்களையே காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் கூறிவந்தார்.

அதேபோல், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், 'அட்சயம்' என்ற பிறரன்பு அமைப்பின் வழியே, நவீன்குமார் என்ற இளையவரும் அவருடன் இணைந்த இளையோரும், தங்கள் பகுதிகளில், தெருக்களில் வாழ்வோரின் பசிபோக்கும் பணியில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டு வந்தனர்.

கோவிட் பெருந்தொற்று காலம் முழுவதும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், கத்தோலிக்கத் திருஅவை, தன் மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், துறவற நிறுவனங்கள், காரித்தாஸ், மற்றும், புனித வின்சென்ட் தே பால் அமைப்புகள் வழியே, மக்களின் துயர் நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.

செய்திகளாக வெளிவராமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், ஏன், அடுத்திருப்பவர் கவனத்தையும் ஈர்க்காமல், மக்களின் பசியைப் போக்கிவரும் மனிதர்கள், நம்மைச் சுற்றி எப்போதும் உள்ளனர். இவர்கள், அனைவரும், மனிதம் இவ்வுலகில் ஒருபோதும் அழியாது என்பதற்கு, உயிருள்ள சாட்சிகள். "உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை" என்று கூறி, மக்களுடைய பசியைப் போக்க உணவளித்த இயேசுவின் புதுமையை இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 15:29-37) செவிமடுக்கும் வேளையில், இத்தகையப் புதுமை, நம்மிடையே இன்றும் பல வடிவங்களில் தொடர்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றிகூறுவோம். திருவருகைக்காலம் முழுவதும், வறியோரின் பசிபோக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட, இறைவன் நமக்கு வழிகாட்டுவாராக!

முந்தைய அடுத்தது