News

குடியரசு தின விழா, ஏழைகளுக்கு விடியலைக் கொணரட்டும்

சனவரி 26, இந்திய குடியரசு தினம். குடியரசு தின விழாவுக்கு ஒத்திகைகள் நடந்து முடிந்துள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொலாந்தே அவர்கள் வந்துள்ளார். இந்தியா பல துறைகளில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது. அதேசமயம் இன்னும் இந்தியாவில் களையப்பட வேண்டிய சமூகத் தீமைகளும் உள்ளன.


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண், பதினைந்து வயதிலேயே, சொந்தத்தில் வாழ்க்கைப்பட்டு, 16 வயதில் குழந்தையையும் பெற்றார். ஆனால், பிறந்தது பெண் குழந்தை என்பதால், பெண் சிசுவைக் கொன்றுவிடச் சொல்லிக் கணவரிடமிருந்து உத்தரவு வந்ததும் ஆடிப்போய் விட்டார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவர் கேட்கவே இல்லை. குழந்தையைக் கொல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை. ஆனாலும் மிகுந்த துணிச்சலுடன் குழந்தைக்காக மணவாழ்க்கையைத் துறந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார் அந்த இளம் பெண்.


கணவரும் அடுத்த கல்யாணத்தை முடித்துக்கொள்ள, மனதில் விழுந்த அடியை மீறி, எப்படியும் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியுடனும் சென்னைக்குப் பயணமானார். கல்வியறிவு இல்லாத அந்த இளம் பெண், சென்னையில் சொந்தங்களை நம்பி, தனது மூன்று வயதேயான தன் பெண் குழந்தையுடன் பிழைக்க வந்தார். சென்னையிலிருந்த உறவினர்களும் ஏமாற்றாமல் பாதுகாப்பளித்து, பிழைப்புக்கு ஒரு வழியையும் காட்டினார்கள். வீடுகளில் பணிப்பெண் வேலை தாராளமாகக் கிடைத்தது. ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் என்று அயராமல் வேலை செய்து, எல்லாரிடமும் நல்ல பெயரையும் வாங்கினார். கையில் வருமானம் கிடைத்தபின் தன்னம்பிக்கையுடன், உறவினர் வீட்டுக்கு அருகிலேயே, தனியாக ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார். மகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.


இப்போது அந்தப் பெண் குழந்தை 10-ம் வகுப்பை நிறைவு செய்து ப்ளஸ் ஒன் படிக்கிறார். பெண் குழந்தை வேண்டாமென்று மறுகல்யாணம் செய்து கொண்ட அவரது கணவரின் 2வது மனைவிக்கும் பெண் குழந்தைதானாம். அன்பர்களே, பெண் சிசுக்கொலை, இளவயது திருமணம் இவற்றிக்கெல்லாம் இந்தியாவில் எப்போது விடிவு பிறக்கும்? ஏழைகளின் வாழ்வு எப்போது மகிழ்வடையும்? குடியரசு தின விழா, ஏழைகளுக்கு விடியலைக் கொணரட்டும்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி)

முந்தைய அடுத்தது