28-06-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு,
பொதுக்காலம் 13 வாரம்
ஞாயிற்றுக்கிழமை
பொதுக் காலம் பதிமூன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாகவே இவ்வார நற்செய்தி வாசகமும் அமைந்துள்ளது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்று தனது சீடர்களுக்கு உரைத்த ஆண்டவர், இன்றைய நற்செய்தியில் தனக்கு முதலிடம் கொடுப்பவர்கள் மட்டுமே தனது உண்மைச் சீடர்களாய் ஒளிர முடியும் என்று தனது சீடர்களிடம் வலியுறுத்துகின்றார். இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதலாவதாக, சீடர்களுக்குரிய தகுதியையும் இரண்டாவதாக, இறைமக்களுக்குரிய கடமைகளையும் எடுத்துக்காட்டுகின்றது. முதல் கருத்தை எடுத்துரைக்கும் நற்செய்திப் பகுதி “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்” இயேசுவின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத் திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.
ஆண்டவரின் புனிதர் வரும்பொழுதெல்லாம், இங்கே தங்கிச் செல்லட்டும்.
ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார். ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான். எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார். எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
1ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி
15விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி
17ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
18நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். - பல்லவி
கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
அன்புக்குரியவரே, திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
1 பேது 2:9
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு கூறியதாவது “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
“மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்” என்கிற உமது வாக்குறுதியில் நிலைத்திருந்து,
எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், மக்கள் முன்னிலையில் உம்மை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமல்லாமல், உமக்கு ஏற்றவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 2:
“சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.” என்கிற உமது வாக்கின்படி,
நாங்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையோடு, அச்சம் தவிர்த்து வாழவும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்கிற நம்பிக்கையோடு வாழ்வை நடத்தவும், வாழ்வின் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 3:
“வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பதும்; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய்,
எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒளிவு மறைவற்ற, ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 4:
இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும்,
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி, இருளின் செயல்களை விட்டொழித்து ஒளியின் மக்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்"(மத்தேயு 10:40)
இயேசுவின் சீடருக்கும் இயேசுவை நம் மீட்பராக அனுப்பிய கடவுளுக்கும் இடையே பாலமாக அமைபவர் இயேசுவே. கடவுள் இயேசுவை அனுப்பியதும் இயேசு சீடரை அனுப்பியதும் நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள். செய்தியைக் கொண்டுவருகின்ற தூதரை ஏற்போர் தூது அனுப்பியவரை ஏற்கிறார் என்பது தெளிவு. எனவே, இயேசுவின் தூதர் இயேசுவின் சாயலாக, இயேசுவை மக்களுக்கு அறிவிப்பவராக மாற வேண்டும். அப்போது, கடவுள் - இயேசு - சீடர் - உலக மக்கள் ஆகிய நால்வருக்கும் இடையே நிலவுகின்ற, நிலவ வேண்டிய ஆழமான உறவு கண்கூடும் வகையில் வெளிப்படும்.
மன்றாட்டு:
இறைவா, நீர் அனுப்பிய உம் மகன் இயேசுவை நாங்கள் ஏற்கவும், அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்கவும் எங்களுக்கு அருள்தாரும்.