Banner Image

03-05-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு, பாஸ்க்கா காலம் ஐந்தாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே!"
உண்மைக்குரியவர்களே,
ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்காக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இயேசுவே நம் வழியும் உண்மையும் வாழ்வுமாக இருக்கிறார் என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தந்தையினுள்ளும் தந்தை இயேசுவினுள்ளும் ஒன்றித்திருப்பதை நம்புமாறு நாம் அழைக்கப்படுகிறோம். மனிதராய் வந்த இறைமகனில் செயல்பட்ட இறைத்தந்தையைக் கண்டுகொள்ள இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதராய் பிறந்து நம்மிடையே வாழ்ந்த இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்புக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிப் போம். கிறிஸ்து இயேசுவின் வழியாய் உண்மை கடவுளைக் கண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7
திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.
அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 33: 1-2. 4-5. 18-19.
ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். -பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-9
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்.
அன்பிற்குரியவர்களே,
உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், “இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்” என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.

நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர் மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று.” மற்றும் அது, “இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும்” இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்; இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 14:6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்'' என்றார். தோமா அவரிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?'' என்றார். இயேசு அவரிடம், ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்'' என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
உண்மை வழியே இறைவா,

திருச்சபையின் மக்களை உமது வழியில் நடத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
உண்மை ஒளியே இறைவா,

இந்த உலகில் உம்மைப் பற்றிய உண்மையை ஏற்காமலும், புரிந்து கொள்ளாமலும் வாழும் அனைவரின் உள்ளங்களிலும் உமது ஒளியை வீசி, அவர்களுக்கு விசுவாசத்தை ஊட்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
உண்மை வாழ்வே இறைவா,

எம் நாட்டு மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர் கள் அனைவரையும் உமது வழியிலும் உண்மையிலும் வழிநடத்தி, எங்கள் வாழ்வை வளமாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
உண்மை உயிரே இறைவா,

உலகெங்கும் பரவி வரும் பயங்கரவாதம், மதவாதம், இனவாதம் போன்ற தீமைகள் நீங்குமாறு, மக்களின் உள்ளங்களில் அமைதியையும் அன்பையும் விதைத்து உயிரூட்டு மாறு உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
உண்மை நிறைவே இறைவா,

எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உண்மை வழியில் நடந்து, நீர் அளிக்கும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவிடம் இன்னும் விளக்கம் கேட்கன்றனர் திருத்தூதர்கள். நம் வாழ்வின் இலட்சியம் தந்தை இறைவனின் திருப் பாதம் அடைவது. தந்தையின்; திரு உளத்தை வாழ்வதே உண்மை வாழ்வு. தந்தையின் திருஉளம் காட்டும் பாதையில் வாழ்வதே நம் வாழ்க்கைப் பாதை. இதையே இயேசு தந்தை இறைவனோடு உள்ள உறவில் காண்கிறார். அதையே வெளிப்படுத்துகிறார். ஆகவே இறை வழியில் உண்மையின் பாதையில் நடக்கும் மனிதன் தன் வாழ்வைக் கண்டடைகிறான்; இயேசுவைக் காண்கிறான். இயேசுவின் வழியாகத் தந்தை இறைவனையும் கண்டு அனுபவிக்கிறான்.இத்தகையோர் வாழ்வில் எந்த குறையும் இருக்காது. இயேசு தந்தையின் திரு உளத்தை நிறைவேற்றி, அவரையே தன் வாழ்வாக, வழியாக, உண்மையாக்கொண்டு வாழ்ந்ததால், நானும் தந்தையும் ஒன்றே என்று தந்தை இறைவனோடு தனக்குள்ள உறவினை உலகுக்குச் சொல்கிறார்.

சொல்வதை நம்பாவிடில் என் செயல்களின் பொருட்டாகிலும் நம்புங்கள். தான் வாழ்ந்த வாழ்க்கை தந்தை இறைவனை வெளிப்படுத்தும் சாட்சியம். இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளும் நாமும், அறிய பெரிய காரயங்களைச் சாதிக்க முடியும். நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவின் பாதையில் நம் வாழ்க்யை அமைத்துக்கொண்டால் பெரியவற்றை உங்கள் வாழ்வில் செய்வீர்கள். "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்".(யோவான் 14:12) இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் வழிநடத்தல் இருப்பதால் நாங்கள் தவறிச் செல்லாதிருக்க அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media