Banner Image

02-04-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு, புனித வாரம் வியாழக்கிழமை

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
திருப்பலி முன்னுரை
முன்னுரை - 1

இறை உறவில் இதம் மகிழ இனிதே கூடிவந்திருக்கும் அன்பு உள்ளங்களே!

இன்று புனித வாரத்தின் பெரிய வியாழன். வரலாறு காணமுடியாத தன் வாழ்வின் உயரிய செயலை இயேசு இன்று எமக்கு விட்டுச் செல்கின்றார். தன்னை உடைத்துக் கொடுத்து, மாதிரி காட்டிச் சென்று இரு பெரும் அருட்க்கொடைகள் வழியாக தன்னை தினமும் பலியாக்கி, பலிப்பொருளாக்கி, பலிப்பீடத்தின் வழியாக நற்கருணையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இதை என் நினைவாகச் செய்யுங்கள் எனும் இயேசுவின் வல்லமைமிகு வார்த்தைகள் இன்றும் திருப்பலியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இயேசு, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானவர், தான் அழைத்துத், தேர்ந்தெடுத்து, தன்னோடு இருக்க தம் பணிப்பொறுப்பையே கொடுத்தவர், அவர்களின் கால்களைக் கழுவி குருத்துவ அருட்கொடைக்குரிய பொருளையும் உணர்த்திவிட்டார்.

இவ் அழகிய அருட்கொடைகள் வழியாக, கிறிஸ்து இன்றும் வாழும் இறைவனாக தன்னை எண்பித்துவிட்டார், அதேவேளை இவ் இரு அருட்கொடைகள் வழியாக திரு அவை இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது, எமக்குத் தேவையாக அருட்கொடைகளும் நிறைவாகப் பொழியப்படுகின்றன. எனவே, எம் இதயத்தை நற்கருணையில் வாழும் கிறிஸ்துவின் ஆலயமாக மாற்றுவோம். அம் மகிழ்ச்சியை உலகெங்கும் பரப்பும் கருவியாக எம்மை மாற்றிக்கொள்ள வரங்கேட்போம். மேலும், தம்மை தியாகியாக்கி, தமது வாழ்வால் கிறிஸ்துவை உலகறிவிக்கும் குருக்களுக்காகவும் இப்பலியிலே மன்றாடுவோம்.



முன்னுரை - 2

இவ்வுலகம் வாழ இயேசு தன்னயே தாழ்த்திக்கொண்டார்; இவ்வுலகம் வாழ்ந்து காட்ட, அவர் தன்னையே மாதிரியாக்கிக் கொண்டார்.

இறை இயேசுவின் பிரியமுள்ள அன்பு உறவுகளே! இன்றைய நாள் கிறிஸ்து இயேசுவின் அதி உன்னத செயல்களை எமக்கு திரு அருட்கொடைகளாக கொடுத்த பேறுபெற்ற நாள் - புனித இரவில் பெரிய வியாழன். புனித வாரத்தின் திரிதின வழிபாடுகளின் முதல் நாளில் நுழைகின்றோம்.

தன் சீடர்கள் எப்பொழுதும் தன்னுடன் இருக்கவும், தன் பணியாற்றவும், இவ்வுலக மக்களின் மீட்புக்காகவும், தூய்மைக்காகவும் பணிசெய்யவுமே என தன்னை இருபெரும் கொடைகளாக இவ்வுலகிற்குக் கொடுக்கின்றார் இயேசு. பழைய பாஸ்கா விருந்தை கொண்டாடும் யூத சமய பாரம்பரியத்தில், தன்னையே புதிய பாஸ்கா பலியாக கொடுத்த இயேசு, நற்கருணையாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அடிமைகள் எப்பொழுதும் தன் தலைவனின் காலடிகளை கழுவும் பழைய யூத கலாசாரத்தில், புதிய கட்டளையாக இயேசுவே தன் சீடர்களின் காலடிகளைக் கழுவி தன்னை, குருவாகவும் பலியாகவும் பலிப்பீடமாகவும் இவ்வுலகிற்கு ஒப்புக்கொடுக்கின்றார்.

இவ்வுயர்ந்த உன்னத கொடைகள் வழியாக பேசும் இறைவன் இன்றும் எம்மையும் இணைத்து நாமும் புனித நற்கருணையாக வாழவேண்டும் என்று எம்மை அழைக்கின்றார். இவ்வுலகின் ஆணவம் தவிர்த்து, பேராசை விலக்கி, உயர்ந்தவனாக இருக்கவேண்டும் எனும் எண்ணங்கள் நீக்கி, சீடனாகவே திகழவேண்டும் என்று இன்று அழைத்து நிற்கின்றார். நான் உங்களை அன்பு செய்தது போல், நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் எனும் அழைப்பின் வழியாக இன்றும் அவர் எம்மோடு இணைந்திருக்கின்றார்.

ஈவிரண்டு அருட்கொடைகளாலும் ஊட்டம்பெறும் திரு அவை பல்வேறு சவால்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுவோம். வாழ்வின் மாறுபட்ட தத்துவங்களாலும், இயற்கைக்கு புறம்பான கொள்கைகளாலும் சமூக புரட்சிகளாலும் சவால்களைச் சந்திக்கும் திரு அவையும் அதன் பணியாளர்களும் காக்கப்பட்டு தொடர்ந்து இறைவனை இவ்வுலகில் வாழ்விக்க அருள்புரிய வேண்டுமென்று இப்பலியினூடாக மன்றாடி அவர் வரம் இரஞ்சி நிற்போம்.
முதல் வாசகம் – விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14
இது ஆண்டவரின் பாஸ்கா
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:
அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)
பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.- பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.- பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.- பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11:23-26
அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 13:34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15
பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
தமது குருத்துவத்தை நினைவுகூர்ந்து கொண்டாடும் அனைத்து திருநிலைப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம்.

இயேசுவை சொந்தமாக்கிகொண்டு, அவர் பணியை சிரமேற்கொண்டு, தம்மை அர்ப்பணிக்கும் அனைத்து குருக்களும் இயேசுவின் அழைப்பை ஏற்று இறை மக்களுக்காகவே வாழ்ந்து, இறை அருளை இரஞ்சும் கருவிகளாக திகழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 2:
சீடர்களுக்கு மாதிரிகாட்டி ஆசிரியரும், குருவுமாக திகழும் இறைவா,

எமது நாளந்த வாழ்விலே, தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கற்றுக்கொள்ள வரமருளும். எம்மைக் கடந்துசென்ற காலங்களில் இத்திரு அவைக்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த அனைத்து பணியாளர்களையும் நன்றியோடு நினைக்கச் செய்தருளும். இவர்களின் நம்பிக்கை வாழ்வு எமக்கு ஒரு சான்றாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 3:
எமது திரு அவையில் நற்கருணை மட்டில் வாஞ்சையோடும் தாகத்தோடும் தவிக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் அருட்சாதன முறையில் உட்கொள்ளும் இயேசுவின் உடலும் இரத்தமும் எமது வாழ்வுக்கான அருமருந்தாக அமையவும், எமது நாளாந்த வாழ்வை தாங்கிக் செல்லவும், புனித வாழ்வுக்கு எம்மை அழைத்து நாளும் புதுப்பிக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 4:
இன்றைய சூழலில், மிகுந்த அச்சத்தோடும், தீராத நோவுகளோடும், முடிவில்லாத கவலையோடும் வாழும் அனைவரையும் நினைத்துக்கொள்வோம்.

துன்பங்கள் வாழ்வின் சுமைகளன்று, சவால்கள் அதன் எல்லைகளன்று, மாறாக இயேசுவோடு இணைந்து பயணிக்கும் அருள்கிடைக்கவும், தீமைகளை நாடிச்செல்லாத மனதை உருவாக்கி, இயேசுவின் மனநிலை கொண்டு வாழும் அருள்கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 5:
உலகில் நடந்தேறிக்கொண்டிருக்கும் போர்கள் நிறுத்தப்படவும், வன்முறைகள் ஒழிக்கப்படவும் மன்றாடுவோம்.

தனி மனித சுயநலத்தால் எமக்கு முன்பே அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை இறைவன் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டுமென்று மன்றாடுவோம். நாளும் மாண்டுகொண்டிருக்கும் மனித மாண்பு காக்கப்படவும், நாம் விரும்பும் சுதந்திரம் நிலைநாட்டப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
''பின்னர் இயேசு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி
இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்'' (யோவான் 13:5)
இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்திருக்கிறார். விருந்து அன்பின் அடையாளம். இயேசு தம்மை முழுவதும் மக்களின் நல்வாழ்வுக்குக் கையளிப்பதற்காக வந்தவர். அவர் தம்மையே உணவாக நமக்கு அளிப்பதன் அடையாளம் அவர் தம் சீடர்களோடு அருந்திய விருந்து. அந்நேரத்தில் இயேசு எதிர்பாராத ஒரு செயலைச் செய்கிறார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகிறார். விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைப்பவர் அவர்களை நன்கு உபசரித்து அனுப்புவர். விருந்து என்பது அவர்களிடையே நட்பினை ஆழப்படுத்துகின்ற ஒரு தருணம். நம் நடுவே வருகின்ற விருந்தினருக்குக் கைகால் முகம் கழுவுவதற்கு நாம் தண்ணீர் கொடுப்பதுபோல, யூதரிடையே விருந்தினரின் காலடிகளைக் கழுவும் வழக்கம் இருந்தது. அச்செயலைப் பொதுவாக வேலையாட்கள் செய்வார்கள். இயேசுவோ சீடர் நடுவே ''ஆண்டவர்'', ''போதகர்'' என்னும் நிலையில் இருந்தவர் (யோவான் 13:13). ஆனால் அவர் தம்மை ஒரு வேலையாளுக்கு நிகராக மாற்றிக்கொண்டு, தம் சீடருடைய காலடிகளைக் கழுவித் துடைக்கின்றார். இது சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. வழக்கம்போல பேதுரு இயேசுவிடம் அச்செயலுக்கு விளக்கம் கேட்கிறார். இயேசு தரும் பதில் என்ன?




சீடரின் காலடிகளைக் கழுவுகின்ற இயேசு அவர்களை ''இறுதிவரை அன்புசெய்கின்ற'' ஆண்டவர்; அன்பின் முழுமையை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். அந்த அன்புப் பலி கல்வாரியில் போய் முடியும். அதே நேரத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவுவதன் வழியாகத் தம் சீடர் எவ்வாறு தம்மைப் பின்பற்றி அவ்வாறு ஒருவர் ஒருவருக்கு ஊழியராக மாற வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பிறருக்குப் பணி செய்வது இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்ததுபோல, அவருடைய சீடர்களும் பணி மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும். சீடர் குழுவாகிய திருச்சபை தன் ஆண்டவராகிய இயேசுவைப் பின்சென்று உலக மக்களுக்குப் பணிபுரிவதில் ஈடுபடவேண்டும். இயேசுவின் பணி அதிகாரம் செலுத்துகின்ற பாணி அல்ல, மாறாக, பிறருடைய நலனை முதன்மைப்படுத்தி அவர்களுக்காகத் தன்னையே பலியாக்குகின்ற பணி. இதுவே திருச்சபையின் பணியாகவும் இருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media