Banner Image

11-03-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு, தவக்காலம் மூன்றாவது வாரம் புதன்கிழமை

முதல் வாசகம் – இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4:1, 5-9
நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.- பல்லவி

15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்.- பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.- பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 6: 63b,68b
ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:17-19
அக்காலத்தில், இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர் !
இறையாட்சியின் செய்திகளை அறிவிக்கிறவர்களாக வாழவே இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டார். அச்சீடர்களை இரு பிரிவினராகப் பிரிக்கிறார் இயேசு. அவரது கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே பிறருக்கும் கற்பிக்கிறவர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிறவர் பெரியவர் எனப்படுவர். இன்றைய திருச்சபையில் நாம் சிறியோர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், கடைப்பிடித்துக் கற்பிக்கும் பெரியோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இறைவனின் கட்டளைகளை முழு மனதோடு கடைப்பிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அதற்கு இறையாசி தேவை. கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்புப் பணி. அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media