Banner Image

04-02-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு, பொதுக்காலம் நான்காவது வாரம் -புதன்கிழமை

இலங்கை நாயகி திருவிழா
முதல் வாசகம் – விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17:8-16
“இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்’
பின்னர், அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார். ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்’ என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை” என்றார்.மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு ‘யாவே நிசீ’ என்று பெயரிட்டழைத்தார். ஏனெனில், “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்” என்றுரைத்தார் அவர்.

-அல்லது-

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2, 9-17

அந்நாள்களில்
தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்” என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர்.

வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்” என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: “நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: ‘நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்’ ”.

காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: “உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”. “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்” என்று தாவீது கூறினார்.

ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, “போதும்! உன் கையைக் கீழே போடு” என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.

மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 95:1-3.7-10
பல்லவி: வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்
1வாருங்கள்; ஆண்டவரைப்புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப்போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;புகழ்ப் பாக்களால் அவரைப்போற்றி ஆர்ப்பரிப்போம்.
3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். பல்லவி

7அவரே நம் கடவுள்;நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச்செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்’. பல்லவி

-அல்லது-
திருப்பாடல்கள் 32: 1-2. 5. 6. 7
பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

1எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி

5‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி

6ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. - பல்லவி

7நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பணி நூலிலிருந்து வாசகம் 16:25-33
“ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்”
நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள். பின்பு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.



- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
லூக்கா 1:45
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.
-அல்லது-
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். 3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார்.

அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர்.

நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்

-அல்லது-

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில்

இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
"இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்றார்" (லூக்கா 4:24)
கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தவர்கள் இறைவாக்கினர். சில வேளைகளில் இறைவாக்கினர் என்றால் வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கின்றவர்கள் எனப் பொருள்கொள்ளப்பட்டதுண்டு. ஆனால் பழைய ஏற்பாட்டில் வருகின்ற மோசே, எசாயா, எசேக்கியேல், எரேமியா போன்றோர் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை; அவர்கள் மக்களையும் ஆட்சியாளர்களையும் கண்டித்துப் பேசியதுண்டு; தம் தீய நடத்தையை விட்டுவிட்டு கடவுளை நோக்கித் திரும்பவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியதுண்டு. மேலும் இறைவாக்கினர்கள் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் உண்மையான மன மாற்றம் நிகழாவிட்டால் மக்கள் அழிந்தொழிவார்கள் என்னும் செய்தியையும் இறைவாக்கினர் அறிவித்தனர். இதனால் இறைவாக்கினரை எல்லாரும் எப்போதும் வரவேற்றார்கள் என்று சொல்ல முடியாது.




மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான எதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை. நம் வாழ்க்கையிலும் இது நிகழக் கூடும். இயேசு யார் என்னும் கேள்விக்கு நாம் ஏற்கெனவே விடை கண்டுவிட்டதாக நினைத்தால் இயேசுவோடு நமக்குள்ள உறவு ஆழப்படுவதற்கு வழியில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனம் நமக்கு இருந்தால் அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசு என்னும் இறைவாக்கினரின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை நாளும் அதிகமாக அறிந்திட எங்கள் உள்ளத்தை ஒளிர்வித்தருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media