01-01-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு,
-புத்தாண்டு 2026- வாரம்
-வியாழக்கிழமை
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா
அன்பு இறைமக்களே! புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது. பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது. எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசே வழியாக ஆரோனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஆசீர் எவ்வாறு வழங்கவேண்டுமென்பதை அறிவுறுத்துகின்றார். இரண்டாம் இறைவாக்கில் “கடவுளின் ஆசீர் தம் மகன் கிறிஸ்து வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக புனித பவுல் கலாத்தியர்களுக்கு கூறகின்றார். லூக்கா நற்செய்தியாளர் இடையர்கள் பாலன் இயேசுவை சந்தித்த நிகழ்வினூடாக அன்னை மரியா இயேசுவின் தாய் என்பைதை சித்தரித்துக்காட்டுகின்றார்.
இப்புதிய ஆண்டில் அன்னை மரியாளைப் பின்பற்றி தாழ்ச்சியும், இறைநம்பிக்கையும் கொண்ட நற்கிறிஸ்தவர்களாக வாழ முயலுவோம். எம்மையும், எம் குடும்பங்களையும் எமக்குள்ள யாவற்றையும் ஆசீர்வதித்து காத்திட வேண்டுமென்று தொடரும் திருப்பலியில் பங்குகொள்வோம்.
இஸ்ரயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது, நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்.
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! "இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக. - பல்லவி
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.
சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா, தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
எபி 1:1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
அக்காலத்தில், இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
மீண்டும் ஒரு புத்தாண்டைத் தந்து ஆசீர்வதித்தவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திரு அவைத்தலைவர், பணியாளர்கள் அன்பின் நிறைவால் மக்களை வழிநடத்தவும். சமூக சீர்கேடுகளை சாடும் துணிச்சலைத் தரவும் இறையாசீரை மக்களுக்கு பெற்றுத் தரும் வழியாய் அமைந்து புத்தாண் சிறப்பாய் அமைய இறை ஆசீர் வழங்க வேண்டுமென்று இறைவா உம்பை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 2:
கடந்ததை நினைத்துக் கலங்காதே என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டை மதத்தால் கூறு போடாமல் நல்வாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்களை வருத்தும் சட்டங்களையும், வரிச் சுமைகளையும் திரும்பப் பெற்று, புத்தாண்டில் மக்களின் மகிழ்வுக்கான செயல்களை இயற்கையோடு இணைந்து செயல்படுத்த, நல்லறிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 3:
உம் திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்பவரே எம் இறைவா!
எம் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க துணிவையும், உம் துணையையும் எமக்குத் தந்து, எங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக வாழ்வை மேற்கொள்ளவும். பிறருக்கு எங்கள் உதவியையும், நேரங்களையும் பகிர்ந்து கொள்ளவும் தேவையான மனநிலையை நாங்கள் பெற்றுக் கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 4:
விண்ணக கருவூலத்தை திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
எம் பகுதியில் வேளாண்மை சிறக்க தேவையான பருவகால சூழ்நிலையைத் தந்து விளைச்சல் அதிகப்படவும். குடும்ப பொருளாதார நிலை உயரவும், புத்தாண்டில் குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும். படிக்கும் மாணவர்கள் சிறந்த ஞானத்தோடு பயிலவும். வேலைவாய்ப்பு. திருமணம், குழந்தை வரத்திற்காக ஏங்கிக் காத்திருப்போர் இந்த ஆண்டில் உறுதியாய் பெற்றுக்கொள்ள வரம் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 5:
இறைவா!
கடவுளின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாளின் பங்கு அளப்பரியது என்பதை உணர்ந்து தினமும் குடும்ப செபமாலை சொல்லுதல், விவிலியம் வாசித்தல் ஆகிய நற்பழக்கத்தை எம் அன்றாட வாழ்வில் பழக்கப்டுத்திக்காள்ள ஆண்டவரே எமக்கு ஆசீர் வழங்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 6:
எம்மைத் தேடிவந்த இறைவா!
இவ்வாண்டு முழுவதும் எங்களையும், எம் குடும்பங்களையும், நாம் செய்யவிருக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆசீர்வதித்து எம்மை நல்வழியில் நடத்திச்செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னையின் ஆசியோடு!
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.
இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.
மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.