Banner Image

24-12-2025
முதலாவது திருவழிபாடு ஆண்டு, திருவருகைக்காலம் நான்காவது வாரம் புதன்கிழமை

திருப்பலி முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் திருப்பலிக்கு வரவேற்கின்றோம். இயேசுவின் பிறப்பு மனிதர்களுக்கு சிறப்பையும், எண்ணிறைந்த ஆசீர்வாதங்களையும் தருகின்றது. இன்றைய இறைவார்த்தைகள் மனித வாழ்வுக்கான புதிய நம்பிக்கையையும், நமது ஏக்கங்களுக்கு முடிவு உண்டு என்னும் உறுதியான செய்தியையும் தருகின்றன. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகிய மீட்பர் இயேசுவின் பிறப்பு விழா கொண்டுவரும் மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள, இறைவார்த்தை நமக்குச் சொல்வதுபோல் நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் வாழ முயற்சி செய்வோம். அதற்கான வலிமையை இப்பலியில் இறைவனிடம் கேட்பதோடு நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் உலகிலும் அமைதியும், மகிழ்வும் நிறைய அருள் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் மன்றாடிச் செபிப்போம்.
முதல் வாசகம் – இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16)
தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்: 89: 1-2, 3-4, 26, 28
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி



3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி



26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி



நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை| என்று அவன் என்னை அழைப்பான்.
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27)
இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக!
சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப்படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
1.எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸதுவைக் கொடுத்த எம் இறைவா!

விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2025ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் உமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 2:
2. ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா!

இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களைப் பல்வேறு இயற்தைசீற்றங்களும், கடும் வெயில், வறட்சி, விவசாயச் சாகுபடிப் பற்றாக்குறை, மழையின்மை, புயல் பெரும்மழை போன்ற இவை அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்!

இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம்முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட எம் அன்பு சகோதரர் சகோதரிகள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்கவும் இறங்கி வந்த எம் இறைவா!

இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர், மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வ வளம் பெறத் தேவையான அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா!

இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்னைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து இவையெல்லாம் நம் வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
''வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்'
கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்'
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' என்றார்'' (லூக்கா 1'30-31)
மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின் வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர் என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர் உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப் பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.




மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின் சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது. ''இயேசு'' என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும் புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில் உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில் நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media