21-12-2025
முதலாவது திருவழிபாடு ஆண்டு,
திருவருகைக்காலம் நான்காவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை
மகிழ்ச்சிக்குரியவர்களே, திருவருகை காலத்தின் நான்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். யோசேப்பு தம் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத ஒரு நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவருடைய உள்ளத்தில் மாபெரும் கலக்கம். அவருக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் ஆகியிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கணவனும் மனையுமாகக் சுடி இல்லறம் நடத்தாத நிலையில் மரியா ஒரு குழந்தையைத் தம் வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறார். யோசேப்புக்கு ஏற்பட்ட கலக்கமும் குழப்பமும் அவருடைய உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் அவர் ''நேர்மையாளராக இருந்தார்'' எனவே, அவருடைய உள்ளத்தில் நேர்மையும் கண்ணியமும் குடிகொண்டிருந்தன. அவர் தம் மனைவியின் நல்ல பெயரையும் காப்பாற்ற எண்ணுகிறார். எனவே, மரியாவைப் பொதுமக்கள் முன்னிலையில் குற்றப்படுத்த அவருடைய மனது உடன்படவில்லை. மரியாவை மறைவாக விலக்கிவிட யோசேப்ப திட்டமிடுகிறார். நம் வாழ்க்கையிலும் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. அந்நேரங்களில் நாம் உள்ளம் கலங்குவதும் உண்டு. இவ்வாறு சலனமுற்றிருக்கின்ற வேளைகளில் நாம் அவசரப்பட்டு முடிவெடுக்கத்தான் தோன்றும். ஆனால் நாம் உணர்ச்சிக்கு அடிமையாகிவிடாமல் நிதானமாகச் சிந்தித்தால் சில வேளைகளில் நம் சிக்கல்களுக்கு ஒரு சரியான தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு. யோசேப்பின் வாழ்வில் ஏற்பட்ட பல துன்பங்களையும் அவர் நேர்மையான மனத்தோடு சந்தித்தார். கடவுளின் உதவியை நாடினார். அந்த உதவி அவருக்கு எப்போதுமே கிடைத்தது. கடவுளின் செய்தி யோசேப்புக்கு வானதூதர் வழியாக வழங்கப்பட்டது என நற்செய்தி கூறுகின்றது. நமக்கும் கடவுளின் உதவி உண்டு. ஆனால் நாம் அந்த உதவியை நாடுவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த சக்தியிலேயே நம்பிக்கை கொண்டு வழிதவறிப்போவதும் உண்டு. எங்கு நேர்மையான உள்ளம் இருக்கிறதோ அங்கே கடவுளுக்கு உகந்த முடிவெடுக்கின்ற பண்பும் இருக்கும். சிந்தித்தவர்களாக இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்
அந்நாட்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்: அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும் " என்றார். அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட."டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் " என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.
1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்: தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள். நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
மத் 1: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
இறைவா!
'கடவுள் நம்மோடு' என்றுள்ள உமது இம்மானுவேலை எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் அழுத்தமாகப் பற்றிக் கொள்ளவும். அவரது அருளால் ஆற்றல் பெற்று அனைத்து மக்களினத்தையும் அவரில் நிறைவுகொள்ளச் செய்தருள இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
மன்றாட்டு 2:
இறைவா!
இறைவனும் மனிதனுமான எம் ஆண்டவர் இயேசுவை நாங்கள் சரியான முறைகளில் புரிதல் கொள்ள அருள் தாரும். உமதருளால் நாங்கள் தூண்டப்பட்டு எல்லா இனத்தாரையும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க செய்திட அருள் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
மன்றாட்டு 3:
இறைவா!
புனிதர்களில் ஒளிர்ந்த உமது மாட்சிமை கண்டு வியக்கின்றோம். எல்லாப் புனிதர்களிலும் முதன்மையானவராய் துலங்கும் எம் பெருந்தந்தை யோசேப்பில் மிளர்ந்திட்ட நேர்மையை எம்மிலும் மலரச் செய்யும். நாங்களும் அவரைப் போல் மாண்புடன், கனிவுடன் எம்மை நடத்திட இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
மன்றாட்டு 4:
இறைவா!
உம் திருமகனைத் தம் இதயத்தில் வைத்துப் போற்றிட்ட யோசேப்பின் படிப்பினையால் நாங்கள் தெளிவு பெற்று உமது திருஅவையின் பாதுகாவலர்களாகத் திகழ்ந்திட வரம் அருள இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
மன்றாட்டு 5:
இறைவா!
உம் அருள் மகனை வரவேற்க ஆவலாய் உள்ள நாங்கள் வேற்றுமை களைந்து, உள உறுதியுடன் அவரை எதிர்கொள்ள வரம் தாரும். நாங்கள் இவரால் தூண்டப் பெற்று எல்லா மக்களுக்கும் இவரையே தந்திட அருள்புரிய இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
''மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார்'' (மத்தேயு 1:18)
மரியாவுக்குக் கடவுள் அளித்த மாபெரும் மாண்பு அவரைத் தம் மகனின் தாயாகத் தேர்ந்துகொண்டது ஆகும். கடவுளின் தாயாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட மரியாவைக் கடவுள் தொடக்கத்திலிருந்தே பாவத்திற்கு உட்படாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. மரியாவைக் கடவுளுக்கு நிகராக நாம் கருதுவதில்லை. ஆனால், கடவுளின் படைப்பாக இருந்தாலும் மரியா மனித மீட்பு வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளதால் அவருக்குத் தனிச் சிறப்பு உள்ளது என்பது தெளிவு. மரியா கடவுளை முழுமையாக நம்பினார். கடவுளும் மரியாவைத் தம் வல்லமையால் நிரப்பினார். கடவுளின் செயலால் மரியா பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதோடு கடவுளின் மகனாகிய இயேசுவையும் கன்னிமை குன்றாமல் கருத்தரித்தது இறைவனின் வியத்தகு செயலே. மரியாவின் வாழ்வில் கடவுள் புரிந்த அரும்செயலை யோசேப்பு முதலில் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கடவுளின் திட்டம் என்னவென்று அவர் உணரத் தொடங்கியதும் மரியாவைத் தம் மனைவியாக ஏற்றுக் கடவுளின் திருவுளத்திற்கேற்ப ஒத்துழைக்க முன்வந்தார். இதனால் அவர் ''நேர்மையாளர்'' என அறியப்படுகிறார் (மத் 1:19).
கடவுளின் வல்லமை என்பது இயற்கைக்கு எதிரான விதத்தில் கடவுளால் செயல்பட முடியும் என்பதை மட்டும் குறிப்பதில்லை. கடவுள் வல்லமை மிக்கவர் என்பது அவர் மனிதரின் நன்மைக்காக அரும் செயல்களைச் செய்கிறார் என்றே பொருள்படும். கடவுளின் ஆவி நம்மை ஆட்கொள்ளும்போது நாமும் கடவுளின் வல்லமையால் நிரப்பப்படுவோம். அந்த ஆவியின் தூண்டுதலை நாம் உளமார ஏற்று அவர் காட்டும் வழியில் நடந்தால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுவோம். அப்போது மரியாவைப் போல நாமும் ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது'' எனப் பாடிப் புகழ்வோம்.
மன்றாட்டு:
இறைவா, அன்னை மரியாவைப் போல நாங்களும் உமது திருவுளத்தை நிறைவேற்ற எப்போதும் முன்வர அருள்தாரும்.