14-12-2025
முதலாவது திருவழிபாடு ஆண்டு,
திருவருகைக்காலம் மூன்றாவது வாரம்
ஞாயிற்றுக்கிழமை
மகிழ்ச்சிக்குரியவர்களே, திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை நம் தாய் திருச்சபை மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. ஒளியாம் இறைவனின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவானின் குரலுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவானின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையுடன் வாழ பழகிக் கொள்வோம். ஆண்டவரின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொணர, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.
அந்நாள்களில்
பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப் படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.
தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”
அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;
ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
பல்லவி: ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பல்லவி
9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். பல்லவி
10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பல்லவி
ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள்.
சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
எசா 61: 1ac
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? " என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, " நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்: கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்: தொழுநோயாளர் நலமடைகின்றனர்: காது கேளாதோர் கேட்கின்றனர்: இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்: ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் " என்றார். அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: " நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் " என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
1. மகிழ்ச்சியின் மன்னரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு பணி செய்வதில் மகிழ்ந்திருக்கவும், உமது நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகோருக்கு பகிரவும் வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 2:
2. அக்களிப்பு தருபவரே இறைவா,
பகை, வன்முறை, தீவிரவாதம், போர் போன்றவற்றால் அமைதியின்றி தவிக்கும் இவ்வுலக மக்களை, உமது அன்பால் ஒன்றிணைத்து, அக்களிப்பின் தைலத்தால் திருநிலைப்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 3:
3. மகிமையின் வேந்தரே இறைவா,
எம் நாட்டு மக்களிடையே பிரிவுகளையும் பிணக்குகளையும் தூண்டி, அமைதியை சீர்குலைப்போரை மனந்திருப்பி, உமது மேன்மையை அனைவரும் உணரச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 4:
4. மனமாற்றம் அளிப்பவரே இறைவா,
தீமைக்குரிய இருளின் பாதையில் நடக்கும் அனைவரும், ஒளியாகிய உம்மை கண்டுகொள்ளவும், அதன் வழியாக உடல், உள்ள, ஆன்ம நலன்களை பெற்று மகிழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மன்றாட்டு 5:
5. அகமகிழ்வின் ஊற்றே இறைவா,
உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் உமது அருளை பொழிந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மெசியாவின் காலம் !
வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்னும் யோவானின் சீடர்களின் கேள்விக்கு இயேசு அளிக்கும் மறுமொழி பளிச் என்று ஒளிர்கிறது. நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று சொல்லும் இயேசு தனது இறையாட்சிப் பணிகளை பட்டியல் இடுகிறார். அதில் நோயாளர் நலம் பெறுவதும் நற்செய்தி அறிவிக்கப்படுவதும் சேர்கின்றன. இயேசு வாய்ச்சொல் வீரர் அல்லர். செயல்வீரர். தம் செயல்களாலே நற்செய்தி அறிவித்தவர். அவருடைய செயல்கள் மெசியாவின் காலம் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றின. நாமும் மெசியாவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமது செயல்களால்தான் எண்பிக்க முடியும். நற்செய்தி அறிவிப்பு என்பதைப் பலர் கூட்டங்கள் போட்டு, போதிப்பது என்று தவறாகப் பொருள்கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவைப் போல செயல்களால் பறைசாற்றுவது. உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் வானகத் தந்தையை அனைவரும் மகிமைப்படுத்த வேண்டும் என்னும் இயேசுவின் அமுத மொழிகளை நம் வாழ்வாக்குவோம்.
மன்றாட்டு:
உலகின் ஒளியான இயேசுவே, உமது செயல்களால் இறையாட்சி மலர்ந்துவிட்டது என்பதைப் பறைசாற்றினீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் எங்கள் சொல்லால் அல்ல, செயல்களால் உமது வருகையை, உமது உடனிருப்பை, உமது மீட்பின் காலத்தைப் பறைசாற்ற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.