Banner Image

16-11-2025
திருவழிபாடு ஆண்டு, பொதுக்காலம் 33 வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
ஞானமுடையோரே,பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் ஞாயிறு கொண்டாட்டத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆண்டவரின் வருகைக்காக தயார் நிலையில் இருக்குமாறு இன்றைய திருவழிபாடு நம்மைப் பணிக்கிறது. உலக முடிவு எப்போது நிகழும் என்று நமக்கு தெரியாது என்றாலும், கடவுளுக்கு கணக்கு கொடுக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்க வேண்டும் என இயேசு நமக்கு இன்று கற்று தருகிறார். இறையாட்சி விருந்தில் பங்கேற்கத் தகுதி பெற விழிப்புடன் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம் – இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2
என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்
``இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 98: 5-6. 7-8. 9
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். -பல்லவி



7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். -பல்லவி



9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்;
ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;
மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். -பல்லவி


இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12
உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
சகோதரர் சகோதரிகளே, எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19
அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, ``இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், ``போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ``நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
வானக அரசரே இறைவா,

திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறையாட்சி நெறியில் மக்களை வழிநடத்தவும், உம் திருமகனின் வருகைக்கு தயார் செய்யவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
மகிழ்ச்சி தருபவரே இறைவா,

உலக மக்கள் அனைவரும் நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்து மனந்திரும்பவும், உம் திருமகனின் வருகைக்காக தங்களைத் தயாரிக்கவும் அருள் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
உண்மையின் உறைவிடமே இறைவா,

எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் உமது மாண்பை உணர்ந்து கொள்ளவும், உமது நீதித் தீர்ப்புக்கு பயந்து நேர்மையாக ஆட்சி செய்யவும் தூண்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 4:
குணம் அளிப்பவரே இறைவா,

உலக நாட்டங்களாலும், உடல் இச்சைகளாலும் பாவத்தில் உழலும் மக்கள் அனைவரும், உமது இரக்கத்தால் மனந்திரும்பி, ஞானத்தோடு உம்மை எதிர்கொள்ள அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 5:
எங்கள் மீட்பரே இறைவா,

எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உம் திருமகனின் இறையாட்சி விருந்துக்கு விழிப்புடன் எங்களைத் தயாரிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
ஏமாறாதீர்கள் !
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இயேசுவின் காலத்திலும் நானே மெசியா, நானே விடுதலை தருபவர், காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் பலர் இருந்தனர். இயேசு அவர்களைப் பற்றி எச்சரித்தார். அவர்கள் பின்னே போகாதீர்கள். ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கிறார்.



ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரால், அற்புதங்கள். அருங்குறிகள் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்களின் கூட்டமும் பெருகத்தான் செய்கிறது. ஏன் இந்த நிலை? அருங்குறிகளிலும், அடையாளங்களிலும் மக்களுக்கு இருக்கும் அதிகபட்ச ஆர்வம்தான் இந்த ஏமாற்றலுக்குக் காரணம். அருங்குறிகள் தேடாமல், இறைவார்த்தையின்படி வாழும் ஆர்வத்தை ஏன் நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. அற்புதங்களை நாடாமல், நேர்மையாக, மாதிரியாக வாழ்கின்ற முறையை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்வோம். யாரும் நம்மை ஏமாற்றாதவாறு விழிப்புடன் வாழ்வோம்.

மன்றாட்டு:

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும். உமது துhய ஆவியால் என்னை நிரப்பும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media