01-11-2025
மூன்றாவது திருவழிபாடு ஆண்டு,
பொதுக்காலம் 30 வாரம்
சனிக்கிழமை
புனிதர் அனைவர் பெருவிழா
ஆண்டின் இயேசுவின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களே, பொதுக்காலம் 30 ஆம் வாரத் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றேன்.
இன்று அனைத்துப் புனிதர்கள் பெருவிழாத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். இன்று நாம் திருவிழாவைக் கொண்டாடும் புனிதர்களின் சிறப்புத் தன்மை என்னவென்றால்: இவர்கள் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர்கள்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெற்றவர்கள். ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே, இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்: தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள், என்று இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு விளக்கியுரைக்கின்றன. இப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாமும்: இறைவனின் திருமுகத்தை நாடி அவரது அருட் துணையில் மாத்திரமே நம்பிக்கை கொண்டவர்களாகவும், இறைவனுடைய நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பதன் வழியாக நேர்மையாளர்களாகவும், அவரது ஆசி பெற்றவர்களாயும் வாழ நம்மை அர்ப்பணித்தவர்களாய் இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.
பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, ``எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்'' என்று அவர்களிடம் கூறினார்.
முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம். இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
அவர்கள், ``அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது'' என்று உரத்த குரலில் பாடினார்கள். அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். ``ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்'' என்று பாடினார்கள்.
மூப்பர்களுள் ஒருவர், ``வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?'' என்று என்னை வினவினார். நான் அவரிடம், ``என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்'' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: ``இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.''
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி
3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி
5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
சகோதரர் சகோதரிகளே, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.
- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''
- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டு 1:
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே!
திருஅவை பொறுப்பாளர்கள் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை தெளிவுற அறிவுறுத்தி ஆன்மாக்களை மீட்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 2:
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே!
நாட்டுத் தலைவர்கள் நிரந்தரம் இல்லாத உலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்வின் மீது நம்பிக்கையும் கொண்டு அதனை அடைய முனைப்போடு உண்மையாய் உழைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 3:
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே!
பலியிலே பங்கேற்கும் நாங்கள், மறுவுலக வாழ்வு கூறித்து, நம்பிக்கை கொண்டவர்களாக இவ்வுலக வாழ்வை சிறப்புடனே கடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 4:
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே!
எம்மோடு வாழ்ந்து மரித்த அன்பர்கள் உம் இரக்கம் பெற்று, உம்மை முகமுகமாய் சந்திக்கும் வரம் பெற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாட்டு 5:
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே!
இறப்பை ஈடுகட்ட முடியாது பரிதவிக்கும் அன்பர்கள் உம் ஆறுதலையும், அன்பையும் பெற்று சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனே பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
''இயேசு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்'' (லூக்கா 6:12)
இயேசு இறைவேண்டலில் பல மணி நேரம் செலவழித்தார் என நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருத்தூதரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இவ்வாறு இறைவேண்டலில் ஈடுபட்டார். இதற்கான காரணத்தை நாம் தேடினால் இயேசு எப்போதுமே தம் தந்தையாம் இறைவனோடு ஒன்றித்திருப்பதில் நிலைத்திருந்தார் எனக் கண்டுகொள்ளலாம். கடவுளோடு அவருக்கு இருந்த உறவு சாதாரண மனித உறவு போன்றதன்று. மாறாக, இயேசு கடவுளின் மகன் என்பதாலும், தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் தம் தந்தையின் விருப்பப்படி நடப்பதையே தம் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்தார். கடவுளிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை முழுமையானதாக இருந்தது. எனவே, எது கடவுளின் விருப்பமோ அதுவே இயேசுவின் விருப்பமுமாக அமைந்தது. பன்னிரு திருத்தூதரை இயேசு தேர்ந்தெடுத்தபோதும் அவர்களிடம் ஒரு பணியை ஒப்படைத்தபோதும் அவர்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதையே தங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொள்ளவேண்டும் என இயேசு விரும்பினார்.
நம் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கின்ற வேளையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின்போதும் நாம் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் நாம் கடவுளோடு நெருங்கிய உறவுப் பிணைப்பால் இணைந்திருக்க வேண்டும். இது இறைவேண்டல் வழியாக நிகழ்கிறது. கடவுளின் உடனிருப்பு நம்மோடு உள்ளது என்னும் உணர்வில் நாம் தோய்ந்திருப்பதுதான் இறைவேண்டலுக்கு அடிப்படை. இது ஒருவித தியான மன நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும். கடவுளின் பிரசன்னத்தை ஒவ்வொரு நொடியிலும் உணரும்போது அவருடைய பார்வையிலிருந்து நாம் அகன்றுபோதல் இயலாது. அவரோடு இணைந்து நாம் செயல்படுவோம். நம்மில் இறைவேண்டலும் பணிவாழ்வும் பிணைந்திருக்கும்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவதில் நிலைத்திருக்க அருள்தாரும்.