Banner Image

01-09-2025
மூன்றாவது திருவழிபாடு ஆண்டு, பொதுக்காலம் 22 வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம் – திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17
கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.
சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்பு கிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிடமாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 96: 1,3. 4-5. 11-12. 13
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி



4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத்தக்கவர்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே;
ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். -பல்லவி



11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி



13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 4: 18


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30
அக்காலத்தில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப் பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ``இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.


அவர் அவர்களிடம், ``நீங்கள் என்னிடம், `மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, `கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
செயல்வழிக் கற்பித்தல் !
இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய தனது செயலையும் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சிலும், செயலிலும் உள்ள நியாயத்தை உணர்ந்த அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. நாம் பிறருக்குப் போதிக்க விரும்பும் நல்ல மதிப்பீடுகளை நாம் கடைப்பிடித்து, அதன்வழி செயல்வழிக் கற்பித்தலை நாமும் செயல்படுத்தலாமே.

மன்றாட்டு:

நல்ல ஆசிரியரான இயேசுவே, செயல்வழி நீர் தந்த பரிவின் முதன்மை என்னும் பாடத்திற்காக நன்றி கூறுகிறேன். அனைத்திற்கும் மேலாக அன்பும், பரிவுமே உயர்ந்தது என்பதை நான் உணர எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media