Banner Image

18-05-2025
திருவழிபாடு ஆண்டு, பாஸ்கா காலம் ஐந்தாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை

திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்புக்குரியோரே, நம் அன்பராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசு நம்மை அன்பு செய்தது போன்று, நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் வாழ்வு கடவுளை மாட்சிப்படுத்தியது போல, நம் அன்பு வாழ்வின் வழியாக கடவுளை மாட்சிப்படுத்த நாம் அழைக்கப்பட்டுளோம். இயேசுவின் அழைப்புக்கு ஏற்ப அவரது சீடர்களாய் வாழ்ந்து, கடவுள் தரும் மாட்சியைப் பெற வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14:21-27
திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.
அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் – திருப்பாடல்கள் 145: 8-13
பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி



10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி



12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5
கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன” என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவனுக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33a, 34-35
யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
வாழ்வின் வழியாம் இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டு பவர்களாய் திகழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 2:
வாழ்வின் ஒளியாம் இறைவா,

கிறிஸ்தவ உண்மைகளை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டு வாழும் மாற்று சமயத்தினர் அனைவரும் மனந்திரும்பி, உமது உண்மையின் ஒளியை நோக்கி முன்னேற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 3:
இறைவா! எம் தந்தையே!

திருச்சபையின் பொறுப்பாளர்களான உமது அடியார்கள் தம் பணிவாழ்வில் வருகின்ற பாதகங்கள், வேதனைகள் கண்டு மனம் வெதும்பிடாமல், நம்பிக்கையில் நிலைபெற்றுப் பிறரை ஊக்குவிக்கும் வரம்தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

மன்றாட்டு 4:
எல்லோரிலும் செயலாற்றும் தந்தையே!

உமக்கு இடம், பொருள். காலம் தடையாயிருப்பதில்லை என நம்புகிறோம். எமக்குள் வல்லமையாய்ச் செயல்பட்டு உமது திருமகனின் திருவுடலாம் திருச்சபையைத் தீரமுடன் கட்டியெழுப்ப எமக்கு உதவியாய் இருக்க இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

மன்றாட்டு 5:
வாழ்வின் இலக்காம் இறைவா,

கிறிஸ்தவர்கள் செய்யும் சமூக நலப் பணிகளை தவறாக கண்ணோக்கும் இயக்கங்களின் வழிகாட்டுதலால் மனதில் நஞ்சு கலந்திருக்கும் இளைஞர்கள், நீரே வாழ்வின் உண்மையான இலக்கு என்பதை உணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 6:
வாழ்வின் துணையாம் இறைவா,

நோய், துன்பம், அழுகை போன்றவற்றையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் மக்கள், மன அமைதியையும், மகிழ்ச்சியையும் சுவைக்கும் வகையில் புதிய வாழ்வைக் காண துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மன்றாட்டு 7:
மேன்மைமிகு அரசராம் இறைவா,

பிற சமயத்தினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாமல், உலகெங்கும் வாழும் மக்களுக்கு உம் திருமகனது உயிர்ப்பின் நற்செய்தியைக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருமாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இன்றைய சிந்தனை
கடவுள் மாட்சி பெறட்டும் !
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நாம் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் இறைமொழி வழியாக அறிகின்றோம். இயேசு தமது இறுதி செபத்தில் இவ்வாறு செபித்தார்: #8220;மானிட மகன் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்”. நாம் நேர்மையோடும், அன்போடும் ஆற்றுகின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவன் மாட்சி அடைகின்றார். மனம் மகிழ்கின்றார்; என்பதே ஒரு நற்செய்தி அல்லவா! எனவே, நாம் எதைச் செய்தாலும், அச்செயல் வழியாக இறைவன் மாட்சி அடையவேண்டும் என்னும் மனநிலையில் பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு அன்புச் செயலும் இறைவனை மனமகிழச் செய்கிறது என்பதை உணர்ந்தால், நமது செயல்களுக்குப் புதிய பரிமாணம் கிடைக்காதா? எனவே, நாம எதைச் செய்தாலும், கூலிக்காக செய்யாமல், ஆண்டவருக்காக செய்ய முன்வருவோமாக!

மன்றாட்டு:

உழைப்பை மேன்மைப்படுத்தி, தந்தையை மாட்சிப்படுத்திய இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். #8220;தந்தை எனக்குக் கொடுத்த வேலையை செய்துமுடிப்பதே என் உணவு” என்று மொழிந்து, உரைத்தவாறே தந்தையின் பணிகளை நன்றாகச் செய்து, தந்தையை மாட்சிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. உம்மைப் போல நாங்களும் உழைக்க, இறைவனை மாட்சிப்படுத்த அருள்தாருமு;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media