இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

வழியை ஏற்படுத்துங்கள்...

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

(எசாயா 63,16-17.19: 64,2-7
1கொரிந்தியர் 1,3-9
மார்கு 13,33-37)

வாசகங்களை
வாசித்துவிட்டு
வசனங்களைப்
படித்துவிட்டு
வாழ்விற்குள் புகுத்தாத
அடையாளக் கொண்டாட்டங்களே
இன்று அதிகமாகிவிட்டன!
எண்ணங்கள் ஒன்றாகவும்
செயல்கள் இன்னொன்றாகவும்
இருவேட
வாழ்க்கை முறைகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
சுடர்விட ஆரம்பித்துவிட்டன!
நல்லது
செய்வதைவிட
தீமையை அணுகுவதில்
ஆனந்தப்படுகிறது
நம் மனம்!
எதிர்த்து நிற்க வேண்டிய
சூழல்களில் எல்லாம்
ஏதாவது கிடைக்குமா என்ற
எதிர்பார்ப்பில்
நடைபோடுகிறது
இன்றைய உலகம்...
காலத்தின் ஓட்டத்தில்
உண்மை
குருடாக்கப்பட்டுவிட்டது
நேர்மை
செவிடாக்கப்பட்டுவிட்டது
வாய்மை
வாய்பேசாமல் முடக்கப்பட்டுவிட்டது!
எதார்த்தத்தை
எடுத்துச் சொல்கிறவர்களை
எதிரிகளாகப் பார்ப்பதும்
உள்ளதைச் சொல்கிறவர்கள்
உயிருக்குப்
போராடிகிறவர்களாக மாறுவதும்
நிஜங்களைப் புறக்கணித்து
நிழல்களுக்குத் தூபம் காட்டுவதும்
இன்றைய அவனியின்
அவசரக்கால நடவடிக்கைகளாக மாறிற்று!
சுதந்திரமாய்
வாழ்வதற்குகூட
அனுமதிக்கேட்கும் அளவிற்கு
அந்நியப்பட்டுவிட்டோம் நாம்...
இத்தகைய சூழலில்
திருவருகை;காலத்தின்
இரண்டாம் ஞாயிறு இது!
பாலைவனக்குரல்
நம் பக்கத்தில்
ஒலிக்கும் வேளையிது!
சடங்குகளால்
ஊறிப்போன நம்
மனங்களைத் தூசித்தட்டி
தூண்டிவிட வருகிறார்
திருமுழுக்கு யோவான்...
மாற்றம் முக்கியம்
மனமாற்றமும் முக்கியம்
எங்கே நிகழ்கிறது?
எப்படி நிகழ்வுகிறது?
கேட்கப்பட வேண்டிய வினாக்கள்...
பகட்டான வாழ்விற்குச்
சவுக்கடி கொடுக்கும்
யோவானின் வாழ்க்கை
அறுதியிட்டுக்கூறும்
அடிப்படை தத்துவம்
‘வழியை ஏற்படுத்துங்கள்’
என்பதுதான்!
உறங்கிக் கொண்டிருக்கும்
மானுடத்தை உசுப்பிவிடுங்கள்
அவர்கள் இறைவனுக்காய்
வழியை உருவாக்கட்டும்
என்கிறது நற்செய்தி!
சாதியத் தீயில்
கருகுபவர்களும்
சமய வெறியில்
தத்தெளிப்பவர்களும்
மதப்போர்வையில்
மகத்துவத்தை இழப்பவர்களும்
அதிகாரப் பார்வையில்
அச்சுறுத்தலைச் சந்திப்பவர்களும்
கொஞ்சம்
மூச்சு விடட்டும்!
மூர்க்கதனமான எண்ணங்கள்
மறைந்திட
பாதை அமைத்துகொடுக்கிறது
இன்றைய
இறைவாக்கு வழிபாடு!
கடவுள்
பொறுமையின் பொக்கிஷம்
என்கிறார் புனித பேதுரு...
இதுவரை காணப்பட்டவை
இனி நல்லதாய் மாற்றப்படும்
என்கிறார் இறைவாக்கினர் எசாயா...
வழியைச் செம்மையாக்குங்கள்
வாழ்வை மேன்மையாய் மாற்றுங்கள்
என்கிறார் திருமுழுக்கு யோவான்...
தயாரிப்புக்காலத்தில்
தவழ்ந்துவரும்
அன்புக்குரியவர்களே
காது கொடுத்து
கொஞ்சம் கேளுங்கள்...
பாலகனுக்காய்
பாதையை வெளியில் அல்ல
உள்யே அமையுங்கள்!
புறத்தைவிடுத்து
அகத்தினுள்
பாதை அமைத்திட முற்படுங்கள்!
கோபத்தையும்
எரிச்சலையும்
பழிவாங்கும் எண்ணத்தையும்
போட்டிப் பொறாமையையும்
புரையோடிய
பழங்காலத்து எண்ணங்களையும்
எதிர்மறையான சிந்தனைகளையும்
முன்விரோத்தையும்
அகத்தினிலே தகர்த்திடுங்கள்...
கரடு முரடானவற்றைத்
உடைத்தெறியுங்கள்...
அழுக்குகளை அகற்றுங்கள்...
அப்போது
பாதைகள் பிறக்கும்
வழிகள் கிடைக்கும்
வாக்கின் மனிதரான
பாலகன் நம் உள்ளத்திலும்
பிறப்பார்...
நாம் ஏற்படுத்திய பாதையிலும்
பயணிப்பார்...
அப்போது
பாதைகள் தோறும் அமைதியை
அருள்கொடையென பொழிவார்!
- ஆமென்


எழுத்துருவாக்கம்
சகோ.மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்