இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் இரண்டாம் வாரம்

உனக்கு ஆசி வழங்குவேன்

தொடக்கநூல் 12:1-4a
2 திமொத்தேயு 1:8b-10
மத்தேயு 17;1-9

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு. உனக்கு நான் ஆசி வழங்குவேன் என்ற இறைவனின் வாக்கு உயிருள்ளது. மனிதனாகிய பிறந்த நமக்கு இறைவன் அனுதினமும் அவருடைய ஆசிரை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவனின் நமக்கு வழங்கும் ஆசிர்களும் நன்மைகளும் ஏராளம். மனம் மாற்றத்தின் காலத்தில் பயணம் செய்யும் நமக்கு மீண்டும் உறுதி தரும், வாழ்வு தரும் ஆசீரை வழங்குவேன் என்று வாக்குறுதி தருகின்றார். இறைவன் ஆபிராமை நோக்கி கூறும் வார்த்தையை கவணிப்போம். இறைவன் அவரிடம் கூறுவது " உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் நாட்டிற்குச் செல் " என்று கேட்கின்றார். மனித வாழ்க்கைக்கு மிகமுக்கியமான மூன்று தேவைகளை விட்டுவிட்டு வரும்படி இறைவன் ஆபிராமை கேட்கின்றார். உன்நாடு, உன் இனம், உன் தந்தை வீடு. இவைகள் மூன்றையும் விட்டுவிட்டு வந்தால் உன்னை நான் பெரிய இனமாக்குவேன், உனக்கு ஆசி வழங்குவேன், உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன், நீயே ஆசியாக விழங்குவாய் உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன், உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன், உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும் "என்கிறார். இறைவன் அன்று ஆபிராமிடம் கேட்டதுபோல் இன்று நம் அனைவரிடமும் கேட்பதும் அதுதான். நம்முடைய அனுதின வாழ்க்கையில் இறைவனின் ஆசிரைப் பெறுவதற்கு தடைகள் ஏராளம். பாவம், செல்வம், பணம், பதவி, பொருளாசை, கடினமான உள்ளம், பொருட்கள் மீது ஆழமான பற்று, இறைவனுக்கு முதலிடம் கொடுக்காமல். மனிதனுக்கு முதலிடம் தருவது, போன்றவைகள் இறைவனின் ஆசிரைப் பெற தடையாக இருக்கும் தீயசக்திகள். மேலும் நாம் அனைவரும் உலக ஆசைகளுக்கும், நவீன பொருட்களுக்கும் அடிமையாகி இறைவனின் ஆசிரை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்று குடும்பத்தில் பிளவு, சமுதாயத்தில் பிளவு, சண்டைச் சச்சரவுகள், நான் உயர்ந்தவன், நீ உயர்ந்தவன் என்ற பல்வேறு தடைகளின் மத்தியில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். இறைவன் இவைகளை அனைத்தையும் விட்டுவிட்டு வா உனக்கு நான் ஆசிவழங்குவேன். நீ மற்றவருக்கு ஆசியாய் விளங்குவாய். திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி 16:26 காண்பது "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? உலகமும் அதன் நிறைந்துள்ள நன்மைகள் அனைத்தும் தீமைக்கு இட்டுச் செல்லக் கூடாது மேலும் உலகம் நம்மை ஒருபோதும் இறைவனிடமிருந்து பிரிக்ககூடாது. ஆபிரகாம் உலகச் சுகங்களை புறக்கணித்து அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் இறைவன் ஆபிராமை நிறைவாக ஆசிர்வதித்தார். இந்தவாரம் ஏன் நாம் ஆன்மாவாகிய நமது உள்ளத்தையும், நமது எண்ணங்களையும் ஆய்வு செய்யக் கூடாது? உலக இன்பங்களில் தன்னுடைய வாழ்க்கையை மூழ்கடித்து பாவவழியில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெற்று, ஆசீர் வழங்கும் மனிதனாக மாற்றம் பெற்று இறைவனுக்கு சாட்சியாக வாழ்வதை நாம் அறிந்திருக்கின்றோம். புனித அகஸ்தினார் வாழக்கையில் மாற்றம் பெற்று ஆண்டவரின் அருளையும் ஆசிரையும் பெற்றவர்தானே? சிந்திப்போம்.

இறைமகன் இயேசு தனது மறையுரையில் கூறுவது "உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு கைமாறு அளிப்பார்". நானும் நீங்களும் சில பாவம் செய்யும்போது அடுத்திருப்வருக்கோ, தம்முடைய உறவிணர்களுக்கோ, நம்மை கவணித்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ தெரியாமல் இருக்கலாம் ஆனால் இறைவனுக்கும் எனக்கும் உங்களுக்கு மட்டும்தான் அவற்றைப்பற்றி தெரியும் எனவே அதிகம் தாமதிக்க வேண்டாம். நமது ஆன்மாவாகிய உள்ளறைக்குச் சென்று இறைவனின் ஆசிரை பெறமுடியாமல் தடுக்கும் அனைத்து பாவச் செயல்களை வேரோடு களைந்து எரிவோம். நமது இறைவன் இரக்கமும், பேரன்பும், நீடிய பொறுமையும் உள்ளவர், அனைத்தையும் மன்னிப்பவர். இறைவாக்கினர் யோவேல் கூறுகின்றார். மேலும் அவர் நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம். இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள் என்று கூறுகின்ற இறைவார்த்தைக்கு செவிமடுத்து. தூய்மையும் தாழ்மையும் நிறைந்த உள்த்துடன் இறைசமூகத்தில் நம்மையே அவர்முன் தாழத்தி நான் பாவி இயேசுவே என்னை மன்னியும். என் குற்றங்களை நான் அறிவேன். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும் என்று மன்றாடுவோம். அப்பொழுதுதான் இறைமகன் இயேசு தாபோர் மலையில் இறைமாட்சியில் மாற்றம் பெற்றது போல் நம்மால் இறைமாட்சியில் மாற்றம் பெறமுடியும். இறைவனின் ஆசீரைப் பெறுவதற்கு தடையாய் உள்ள செயல்களை ஆய்ந்து அறிந்து அவற்றைத் தவிர்பதற்கு முயற்சி எடுப்போம். இறைவன் நம்முடைய முயற்சியை நிறைவாக ஆசீர்வதிக்க அனைவருக்காகவும் மன்றாடுவோம். இந்த வாரம் நாம் சந்திக்க இருக்கும் அனைவருக்கும் ஆசியாய் விளங்குவோம். நமது ஒவ்வொரு சொல்லும் அருளும் ஆசியும் நிறைந்து இருக்க முயற்சிப்போம்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது அவர்கள் செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.திருப்பாடல் 33:4