ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

சந்திப்பின் காலம் - தவக்காலம்இறைவன் தரும் அருளின் காலம் தவக்காலம்
நல்லுறவை ஏற்படுத்தும் காலம் தவக்காலம்
ஆன்மாவை அழகுப்படுத்தும் காலம் தவக்காலம்
பயிற்சியின் சிறப்பான காலம் தவக்காலம்
சந்திப்பை ஆழப்படுத்தும் காலம் தவக்காலம்

            சந்திப்பு என்பது ஒருவரை அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள உதவும் ஒரு இணைப்பு. இந்த சந்திப்பின் வழியாக உறவுகளை அடையாளம் கண்டு கொண்டு நன்மையால் நிறைவு காண்கின்ற ஒர் அருளின் காலம் தான் தவக்காலம். நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் நம்மை சந்திக்கின்ற இறைவன் இந்த தவக்காலத்தில் தன் உடனிருப்பின் வழியாக நம்மோடு அவர் கொண்டுள்ள அன்பை எண்பித்து உறுதிப்படுத்திட நமக்கு அழைப்பு கொடுக்கின்ற காலமே இந்த தவக்காலம்.

        

     திருவிவிலியத்தில் பல நபர்களை இறைவன் சந்தித்து அன்புறவை கட்டியெழுப்பியுள்ளார் எனவும் சந்திப்பின் வழி எப்படிப்பட்ட அற்புதமான ஆரோக்கியமான உறவின் மேன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் அறிய வருவோம்.

 

 

கடவுளின் சந்திப்பு- ஆதாம் ஏவாள்

கடவுள் தான் படைத்த மக்களைச் சந்திக்க ஆர்வமாய் வருகிறார். மேலும் இங்கு ஆண்டவராகிய கடவுள் ஆசையாய் ஆதாமையும், ஏவாளையும் தேடுகிறார். ஆர்வம் மற்றும் ஆசையே சந்திப்பை வளர்க்கும் காரணிகளாக இருக்கிறது. இவையை நமக்கு முன் செல்லும் வாய்ப்பினையாக இருந்து, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தூண்டும் கருப்பொருளாக அமைகிறது.

 

தொடக்கநூல்3: 9 -10ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

 

உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன் என்றான் மனிதன்.

 

இங்கு மனிதனின் நிலையை கடவுள் அறிந்தவராக இருந்தார், அதனை அவனும்  அறியச்செய்ய வாய்ப்பினை கொடுக்கிறார்.

 

கடவுளின் சந்திப்பு எப்படிப்பட்டது?

கடவுளின் சந்திப்பு தூய்மை, இறையுண்மை, எதார்த்தம்,  எளிமை, மன்னிப்பு என்று மனிதனை நல்வழிப்படுத்தும் காரணியாக அமைகிறது. ஆதாம், ஏவாள் பாவத்தை மேற்கொண்ட பிறகு அவர்களுக்குள் அச்சமும், ஒளிவு நிலையும் ஏற்படுவதை திருவிவிலியத்தில் வாசிக்கிறோம். ஆனால் கடவுளாகியத் தந்தை மன்னிப்பு வழியாக ஆதிபெற்றோருக்கு புதிய சந்திப்பில் அமைதியான வாழ்வு வாழ அருள்கொடை கொடுக்கிறார்.

தவக்காலத்திற்குள் நுழைய இருக்கும் நாமும் நமது நிலையை தெரிந்துக்கொள்ள திருஅவை நமக்கு சந்தர்ப்த்தை தருகிறது.

 

கடவுளை சந்திக்கவிருக்கும் நான் எனது வாழ்வில் அச்சமாகவும், ஒளிவுமாகம் கருதும் செயல்பாடு எது? அதை இந்த தவக்காலத்தில் கடவுளின் துணையோடு புதுப்பிக்க உங்களையும், என்னையும் அழைக்கும் திருஅவைக்கு ஒத்துழைப்போம். ஆண்டவரின் அருள் பெறுவோம்.

 

கடவுளின் சந்திப்பு- நோவாவுடன்

கடவுளின் சந்திப்பு எப்போது எந்தநேரத்தில் நிகழும் என தெரியாது. அதைப்போன்று தான் நோவாவிற்கும் நிகழ்ந்தது.  நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.

தொடக்கநூல்7: 1 அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

 

ஆண்டவர் சந்திக்கும் போது பாராட்டும், ஆசீர்வாதமும் பெறும் நபராக நோவா திகழ்கிறார். தனது வாழ்க்கையில் அடிப்படையாக பொறுப்பு, நேரியவழி, பயபக்தி, மரியாதை, கீழ்ப்படிதல் போன்று விளங்கும் மூலக்கூற்றினை நோவா பயன்படுத்துகிறார். எளிய சாதாரண வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்.

 

தவக்காலத்திற்குள் நுழைய இருக்கும் நாமும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, திருஅவை கற்றுக்கொடுத்த கிறிஸ்தவ பண்புகளில் வளர்க்கப்பட்டு வாழ்க்கை பாதையில் முன்நோக்கி கடந்து கொண்டு இருக்கிறோம். ஆகவே இந்த தவக்காலத்தில் கடவுளின் அருள் பார்வை நம்மில் கிடைக்கவும், அதன் வழி தொய்வாக காணப்படும் இந்த கொரோனா காலத்தில் நமது வாழ்க்கைத்தரம் உயர்ந்திட நமது நற்பண்புகளை வளப்படுத்தி திருஅவைக்கும் நமக்கும் ஆசீர்வாதங்களை பெறும் காலமாக இந்த தவக்காலத்தை மாற்ற முற்படுவோம்.

கடவுளின் சந்திப்பு- மோசே

விடுதலைப் பயணம் 24:12ஆண்டவர் மோசேயை நோக்கி, என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்” என்றார்.

 

கடவுளின் சந்திப்புமோசேக்கு உடனிருப்பை கொடுத்தது. அந்த உடனிருப்பின் மூலமாக சட்டதிட்டங்கள், நெறிமுறைகளை கொடுத்து ஒழுங்குகளை திருஅவைக்கு ஆணித்தரமாக வித்திட்டவராக உயர்த்தப்பட்டவர் மோசே.

 

தவக்காலத்திற்குள் நுழைய இருக்கும் நாமும், சமுதாயம் கொடுக்கும் சட்டதிட்டங்கள், திருஅவை கொடுக்கும் ஒழுங்கள், நமது குடும்பம் வைத்திருக்கும் நெறிமுறைகள் ஆகியவையை சரிவர, முழுமையாக பயன்படுத்தவும் அதில் விழிப்பாய் இருக்கவும் இந்த தவக்காலத்தில் கடவுளின் துணையைப் பெற்று மோசேக்கு கிடைத்த கடவுளின் உடனிருப்பை நமது வாழ்வில் அனுபவத்தின் வழியாக அருட்கொடையாகப் பெற்று மகிழ ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம்.

கடவுளின்  சந்திப்பு என்னில்

    ஞானஸ்தானத்தின் வழியாக உங்களையும் என்னையும் சந்தித்த இறைவன் நம்மோடு பயணிக்கிறார். நம்மைப் போன்று மனிதராக பாடுகள் அனுபவித்த இறைமகனை சிறப்பாக இந்த தவக்காலத்தில் தனிப்பட்ட விதத்தில் ஆன்மாவில் சந்திக்க முற்படுவோம். ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள், ஈசாக்கின் கடவுள், இஸ்ரவேலின் கடவுள், நம்மை பாதுகாக்க, வழிநடத்த, நம்மோடு உறவாட தொடர்ந்து சந்திப்பை நம் உடன்மனிதர்கள் வழியாகவும் எண்பிக்கிறார், ஆகவே சிறிய சிறிய சந்திப்பை மற்றவர்களுக்கும் கொடுத்து நாமும் பெற்று இந்த தவக்காலத்தில் கடவுளோடு இணைவோம் ஆமென்.

[2021-02-14 12:20:14]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி