Banner Image

11-01-2026
பொதுக்காலம் முதலாவது வாரம் -ஞாயிற்றுக்கிழமை

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா.
திருப்பலி முன்னுரை
புதிய ஆண்டின் இரண்டாவது ஞாயிறு பலியாகிய இன்று பங்கேற்க வந்துள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம். திருஅவை இன்று இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை கொண்டாடி மகிழ அழைக்கின்றது. இந்த கொண்டாடத்தில் தான் திரியேக தேவனின் பிரசன்னத்தை உணர நற்செய்தியாளர் அழைக்கின்றார். தந்தை தன்மகனை பெருமைப்படுத்துவதையும், ஆவியானவர் இறங்கி வந்து தங்குவதையும் பார்க்கின்றோம். நம்முடைய திருமுழுக்கும் இதே முக்கியத்துவம் பெற்றது தான். நாமும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆவியின் அபிஷேகம் பெற்று, தந்தையினால் சிறப்புற தேர்வு செய்யப்படுகின்றோம். இதனை உணர்ந்து இறைவனை துதிப்போம். நன்றி கூறுவோம். அழைப்புக்கேற்ப வாழ்ந்து சான்று பகர்வோம். அவருடைய மக்களாகவே வாழ்வோம். வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் – இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல் – திருப்பாடல் 29: 1,2. 3-4. 9-10
ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்;
தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி

3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது;
ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது;
ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி

9b ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது;
அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்;
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகம் – திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38
அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 9: 7அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் – மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?'' என்று கூறித் தடுத்தார். இயேசு, இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்
மன்றாட்டு 1:
அன்பின் அரசரே இறைவா,

திருஅவையை ஆசீர்வதியும். திருஅவை அன்பர்கள் திருமுழுக்கின் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து அதனையே பிறருக்கு போதிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 2:
உண்மையின் அரசரே இறைவா,

எமது நாட்டைஆசீர்வதியும். நாட்டை ஆள்வோரையும், அதிகாரிகளையும் ஆசீர்வதியும். தெய்வபக்தி, பயமுள்ள அன்பர்களாக வாழ்ந்து, மக்களை ஏற்றமான வாழ்வில் வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 3:
ஆறுதலின் அரசரே இறைவா,

திருமுழுக்கு பெற்ற அன்பர்கள் நாங்கள், அழைப்புக்கேற்ற வாழ்வின் வழி, என்றும் உம்முடைய மதிப்பிற்குரிய மக்களாக வாழ, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 4:
மகிமையின் அரசரே இறைவா,

திருமுழுக்கிலே பெற்ற அருளை பாவ பழைய வாழ்வால் தொலைத்து விடாமல், எச்சரிக்கையோடும், விழிப்போடும் வாழும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்றாட்டு 5:
நீதியின் அரசரே இறைவா,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, தமிழரின் புத்தாண்டை தொடங்கும் அன்பர்களின் நம்பிக்கை வீண்போகாதவாறும், மன்றாட்டு மறுக்கப்படாதவாறும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே.. .. .."
அருமையான ஒலி ஒளி காட்சி. கற்பனையில் பார்த்து ரசியுங்கள். அழகிய ஆற்றங்கரை. குளிர்ந்த தெளிந்த நீர் பொங்கி பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது.மக்கள் கூட்டம் மௌனப் பேரணி நடத்திக்கொண்டிருக்கும் கண்கொள்ளா காட்சி. வண்ண வண்ணப் பறவைகள் வானில் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கின்ற மற்றொறு காட்சி. அவற்றுள் வெள்ளைப் புறா ஒன்று மட்டும் அனைவரின் கவனத்தைக் கவரும் வண்ணம் உள்ளது. சல சல ஒலியில் இயற்கையின் காதுக்கினிய இன்னிசை விருந்து. இதமான இந்த ஒலியின் நடுவே ஒரு பேரிடி முழக்கம். விண்ணதிரும் பெருங்குரல். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் ப+ரிப்படைகிறேன்". யார் இந்த அன்பார்ந்த மகன்? கிறிஸ்(து)தவன் நீ.ஆம். உன்னைக் குறித்து உன்னைப் படைத்த இறைவன் பூரிப்படைய வேண்டும்.நீ வாழப்போகும் சாட்சிய வாழ்வைக் குறித்து உன் இறைவன் பெருமைப்பட வேண்டும். நீ கிறிஸ்தவனாக வாழும் வாழ்கையைப் பார்த்து மக்கள் கூட்டம் வாழ்த்த வேண்டும். இவ்வுயர் நிலையை நீங்கள் பெற வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media