மெட்யுகோரியோவில்(Medjugorje) மரியன்னையின் தரிசனங்கள்


பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 7 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம் இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2019-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே வானகத் தந்தையின் விருப்பம் மற்றும் அவரது அன்பின் பிரதிபலிப்பாக நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன், தாயின் அன்புடன் உதவவும், நம்பிக்கையை இதயத்தில் வளர்க்கவும், இதனூடக நீங்கள் உலக வாழ்வின் ஊடான நித்திய வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் இறைத் தந்தையின் இரக்கத்தையும் கண்டுகொள்ளவும் அழைக்கிறேன். அன்பான பிள்ளைகளே, உலக வாழ்வு நித்தியத்திற்கு, உண்மைக்கு மற்றும் மறு வாழ்விற்கு இட்டுச்செல்கின்றது, உண்மை மற்றும் நம்பிக்கையில் தாகம் இருந்தாலேயே நீங்கள் கிணற்றிலிருந்து அவற்றை அருந்த முடியும். வானகத் தந்தையில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரது அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரது சித்தத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள், நீங்கள் பயப்படாதீர்கள். உங்களுக்குச் சிறப்பானவைகள் அனைத்தும், உங்களை நித்திய வாழ்விற்கு இட்டுச் செல்லும் அனைத்தும், உங்களுக்குத் தரப்பட்டுள்ளன. வாழ்வின் நோக்கம், விருப்பம் மற்றும் எடுப்பதில் இல்லாமல் மாறாக அன்புசெய்வதிலும் கொடுப்பதிலும் உள்ளது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் உண்மையான சமாதானம் மற்றும் உண்மையான அன்பு இருக்கட்டும். நீங்கள் அன்பின் தூதர்களாக இருப்பீர்களாக. நீங்கள் உங்களை உதாரணமாகக் காட்டிக்கொள்ளுங்கள், எனது மகனையும் அவரது அன்பையும் அறியாத எனது பிள்ளைகளுக்கு அவர் குறித்து அறிவியுங்கள். எனது பிள்ளைகளே, எனது அன்பார்ந்த தூதர்களே, என்னுடன் சேர்ந்து எனது மகனிடம் மன்றாடுவதுடன் அனைத்திலும் பார்க்க அவரை அன்பு செய்யுங்கள். அவரது உண்மையில் வாழ்வதற்கு நீங்கள் எப்பொழுதும் முயற்சியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.”
2019-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இன்று நான் எனது எண்ணங்களுக்காகச் செபிக்க உங்களை அழைக்கிறேன், அப்போதுதான் என்னால் உங்களுக்கு உதவ முடியும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபமாலையைச் செபியுங்கள் அத்துடன் அதிலுள்ள இரகசியங்களைத் தியானியுங்கள், ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்களும் மகிழ்ச்சி மற்றும் கவலைகளுக்கு ஊடாகக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இதுபோன்றே நீங்களும் உங்கள் வாழ்வை இறைவனின் கரங்களில் ஒப்படைக்கும் வரை இரகசியங்களைக் கடத்திச் செல்ல வேண்டியிருக்கும். இதேவழியில் நீங்கள் பேதுருவுக்கு இருந்தது போன்ற விசுவாச அனுபவங்களைக் கொண்டிருங்கள், யார் இயேசுவைச் சந்திக்கின்றார்களோ அவர்களின் இதயங்கள் தூயஆவியானவரால் நிரப்பப்படும். அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்களும் இறைவனுக்குச் சாட்சியாக ஒவ்வொரு நாளும் அன்பால் வாழ்ந்து காட்டுவதற்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள். ஆகவே அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தைத் திறந்து நம்பிக்கையுடன் செபியுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.”
2019-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! செபியுங்கள்! செபியுங்கள்! ஒவ்வொரு நாளும் செபமாலையைத் தியானியுங்கள். இந்த பூ வளையமானது, அன்னையாகிய எனக்கு உங்கள் வேதனைகள், துயரங்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை நேரடியாக இணைத்து வைக்கின்றது. எனது அன்பான தூதர்களே, எனது மகனின் இரக்கம் மற்றும் அன்;பு காரணமாக நான் உங்களுடன் இருப்பதுடன் செபிக்குமாறு உங்களை உற்சாகப்படுத்துகின்றேன். உலகத்திற்கு உங்கள் செபங்கள் மிகவும் தேவைப்படுகின்றது, இதனால் ஆன்மாக்கள் மனம்திரும்பட்டும். எனது மகன் முழு நம்பிக்கையுடன் உங்கள் இதயங்களைத் திறப்பதுடன் அவரது வார்த்தைகளை ஒன்றுபடுத்தி வழங்குகிறார்-இதுவே அன்பாகும். எனது பிள்ளைகளே, அன்னையாக நான் உங்களுக்குக் கூறுகிறேன், எனது மகனின் முன்பாக முழந்தாள்படியிடுவதற்கு இதுவே சரியான தருணம், அத்துடன் அவரை உங்கள் இறைவனாக -உங்கள் வாழ்வின் நடுப்புள்ளியாக- தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு விருப்பமான காணிக்கைகளை வழங்குங்கள், அதாவது அயலாரை அன்புசெய்வது, இரக்கம்காட்டுவது மற்றும் தூய இதயத்தைக் கொண்டிருப்பது. எனது அன்பார்ந்த தூதர்களே, எனது பல பிள்ளைகள் எனது மகனை தமது இறைவனாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் அவரது அன்பை இதுவரை கண்டறிந்து கொள்ளவில்லை. நீங்கள் உங்கள் செபங்கள் மூலமாக, தூய மற்றும் திறந்த இதயத்துடன் கேட்டு, உங்கள் காணிக்கைகளை எனது மகனிடம் கொடுப்பதன் ஊடாக கடுமையாக இருக்கும் இதயங்களைத் திறக்கச் செய்யுங்கள். எனது அன்பார்ந்த தூதர்களே, பலமுள்ள இதயத்தால் வேண்டப்படும் செபங்கள் உலகத்தை மாற்றியமைக்கும். ஆகவே எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களுக்கு நன்றிகூறுகின்றேன்.„
2019-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே, நீங்கள் செயற்படுவதுடன் அன்பால் வானக இராச்சியத்திற்கு சான்று பகருங்கள், இதன்மூலம் இவ்வுலகில் உங்களுக்கு நலமுண்டாகட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவன் உங்கள் முயற்சிகளை நூறுமடங்கு ஆசீர்வதிப்பார், நீங்கள் மக்களுக்கு சாட்சிகளாய் இருப்பீர்களாக, இறைவனை நம்பாதோரின் ஆன்மாக்கள் மனம்திரும்பி இரக்கத்தை உணர்வார்கள், இதனால் வானகம் உங்கள் முயற்சிகளுக்கும் இழப்புகளுக்கும் நன்றியுடையதாய் இருக்கும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் கைகளில் செபமாலையை வைத்துக்கொண்டு சான்று பகருங்கள், நீங்கள் என்னுடையதாய் இருப்பதுடன், நீங்கள் தூயவர்களாக இருக்க முடிவுசெய்துகொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகின்றேன்."
2019-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது மகனின் அன்பு பெரிதானது. நீங்கள் அவரது அன்பின் ஆழத்தை அறிந்து கொள்வீர்களானால், அவரிடம் செபிப்பதையும் அவரை நினைப்பதையும் விட்டுவிடமாட்டீர்கள். அவர் எப்பொழுதும் நற்கருணையில் உங்களுடன் உயிரோடு உள்ளார், ஏனென்றால் நற்கருணை அவரது இதயமாகும், நற்கருணை விசுவாசத்தின் இதயமாகும். அவர் உங்களை விட்டு எப்போதுமே பிரிந்ததில்லை. ஆகவே நீங்கள் அன்பால் நிறைந்து அவரிடம் மனம்திரும்பி வரும்போது அன்னையாகிய எனது இதயம் மகிழ்வடைகின்றது, நீங்கள் ஒப்புரவுபெற்று, அவரின் அன்பு மற்றும் நம்பிக்கையைத் தேடி வருவதை நான் காணும்போது மகிழ்வடைகின்றேன். எனது திருத்தூதர்களே, நீங்கள் விசுவாசத்தின் வழியில் நடக்கும்போது, மொட்டாகவும் மலராகவும் உள்ளீர்கள், ஆனால் செபம் மற்றும் நோன்பு இருக்கும்போது நீங்கள் பழம் ஆகின்றீர்கள். நீங்கள் ஒளியை ஏந்துபவர்களாக இருக்க வேண்டும் அத்துடன் நீங்கள் அன்பு மற்றும் மதிநுட்பத்துடன் உங்களைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் ஒளியாக இருக்க வேண்டும். எனது பிள்ளைகளே, அன்னையாக உங்களிடம் வேண்டுகிறேன்: செபியுங்கள், செபத்தின் தேவைகளை நினைவிற்கொள்ளுங்கள். உங்களுக்கு நடந்த அனைத்தையும்- அழகானவை, வேதனையானவை, மகிழ்வானவை, தூயதானவைகளை நினைவிற் கொள்ளுங்கள், நீங்கள் உளரீதியாக வளர்ச்சியடைந்தால், எனது மகன் உங்களில் வளர்ச்சியடைவார். எனது பிள்ளைகளே, உங்களை அவரிடம் ஒப்படையுங்கள், அவரில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரது அன்பை நம்புங்கள், அவர் உங்களை வழிநடத்தட்டும். திருப்பலி வழிபாடு உங்கள் ஆன்மாவை அண்மையாக அழைத்துவரும் இடமாக இருக்கட்டும், அதில் அன்பும் உண்மையும் பெருகி, எனது மகனுக்குச் சாட்சியம் பகரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."
2019-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களுக்கான எனது அழைப்பு செபமாகும். செபங்கள் உங்களுக்கு மகிழ்வைத் தருவதுடன் ஒரு வளையம் போன்று இறைவனுடன் பிணைக்கின்றது. அன்பான பிள்ளைகளே, தீர்ப்பு வரப்போகின்றது ஆனால் நீங்கள் உறுதியாக இருக்காது போனால், பாவங்களே வெற்றி பெறும், ஆனால் நீங்கள் எனது மகனின் இதயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தால், வெற்றி எமக்கே எனக் கூறமுடியும். ஆகவே எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புங்கள், இச் செபங்கள் பகலிலும் இரவிலும் உங்கள் வாழ்வாக மாறும்வரை தொடரட்டும். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றிகூறுகின்றேன்.„
2019-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இரக்கமுள்ள தந்தையின் விருப்பத்தின்படி, அன்னையின் அடையாளத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்துவதுடன், இதை நான் தொடர்ந்தும் செய்துகொள்வேன். எனது பிள்ளைகளே, ஆன்மாக்கள் குணமடைவதே அன்னையின் விருப்பம். அதாவது எனது ஒவ்வொரு பிள்ளையும் உண்மையான விசுவாசத்துடன் வியப்பான அனுபவங்களை அனுபவிப்பதுடன் எனது மகனின் வார்த்தைகளான ஊற்றைக் குடிக்க வேண்டும்- இதுவே வாழ்வின் வார்த்தைகள். எனது பிள்ளைகளே, எனது மகன், நம்பிக்கையின் ஒளியை தனது அன்பு மற்றும் அர்ப்பணிப்பணிப்பு மூலம் உலகிற்கு மீட்பு வழங்கியதுடன், உங்களுக்கு நம்பிக்கையின் வழியைக் காட்டியுள்ளார். எனது பிள்ளைகளே, நம்பிக்கை வேதனை மற்றும் துன்பங்களை அதிகரிக்கின்றது. உண்மையான நம்பிக்கை செபத்திற்கு நல் உணர்வைக் கொடுப்பதுடன், இரக்கமுள்ள இதயத்தின் செயற்பாட்டை செயற்படுத்துகின்றது. நம்பிக்கை கொண்டுள்ள எனது ஒவ்வொரு பிள்ளைகளும் எப்படியிருந்தபோதும் மகிழ்வாக இருக்கின்றார்கள், ஏனென்றால் அவர்கள் வானக மகிழ்வின் தொடக்கத்தை உலகிலேயே அனுபவிக்கின்றார்கள். ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, நீங்கள் உண்மையான விசுவாசத்திற்கு உதாரணமானவர்களாக வாழுங்கள், எனது மகனின் அன்புக்குச் சாட்சியாக எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியை ஏற்ற அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, அன்னையாக உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் உங்களது மேய்ப்பர்கள் இல்லாமல் விசுவாசத்தின் வழியில் செல்லமுடியாது என்பதுடன் எனது மகனைப் பின்பற்ற முடியாது. அவர்கள் உங்களை அன்புடன் வழிநடத்தப் பலத்தைக் கேட்டுச் செபியுங்கள். உங்கள் செபங்கள் எப்பொழுதும் அவர்களுக்கு எற்றபடியாக இருக்கட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."
2019-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே விசேடமான வகையில் நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன். நான் உங்களுக்காக புதிய காலத்தை ஆயத்தப்படுத்துகிறேன், இதன்மூலம் நீங்கள் விசுவாசத்தில் பற்றுடனும் செபத்தில் உறுதியுடனும் இருப்பீர்களாக, தூயஆவியானவர் உங்கள் மூலமாக செயலாற்றுவதுடன் உலகின் அமைப்பைப் புதுப்பித்துக்கொள்வார். நானும் உங்களுடன் சேர்ந்து அமைதிக்காகச் செபிக்கிறேன், இதுவே பெறுமதியான பரிசாகும், சாத்தான் போரையும் வெறுப்பையும் விரும்பினாலும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது விரித்த கரங்களுடன் இறைவனோடு செல்வதில் பெருமையடையுங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்."
2019-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே, தூய மற்றும் திறந்த இதயமுள்ளவர்கள் மட்டுமே எனது மகனை உண்மையாக கண்டறிந்து கொள்வார்கள் என்பதுடன், எனது மகனி;ன் அன்பை அறியாத அனைவரும் உங்கள் மூலமாக அவரை அறிந்து கொள்ளட்டும். அன்பு மட்டுமே உங்களைப் புரிந்துகொள்ளச் செய்கின்றது அது இறப்பிலும் பார்க்க வலிமையானது ஏனென்றால் உண்மையான அன்பு இறப்பை வெற்றி கொள்வதுடன் இறப்பை இல்லாமல் செய்கின்றது. எனது பிள்ளைகளே, மன்னிப்பு அன்பின் உச்சக்கட்ட நிலையாகும். எனது அன்பான தூதர்களே, புரிந்து கொள்தல் மற்றும் மன்னிப்பு அன்பினதும் இரக்கத்தினதும் உதாரணங்களாகும். புரிந்துகொள்ளல் மற்றும் மன்னிப்பு என்பது ஒரு கொடை, அதற்காகச் செபிப்பதும் மற்றும் அதை வழக்கத்தில் கொள்வதும் அவசியமாகும். மன்னிப்பதின் மூலம் எவ்வாறு அன்பு செய்யலாம் என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுகின்றீர்கள். சற்று அவதானியுங்கள் எனது பிள்ளைகளே, வானகத் தந்தை எவ்வாறு உங்களை அதிக அன்புடன், புரிதலுடன், மன்னிப்புடன் மற்றும் நீதியுடன் அன்பு செய்கிறார், அவர் உங்களுக்கு என்னைத் தந்துள்ளார் - உங்கள் இதயத் தாயை. இங்கு நான் உங்கள் மத்தியில் அன்னையின் ஆசீரை வழங்குவதற்காக, உங்களை ஒறுத்தலுடன் செபிக்குமாறு அழைக்க வந்துள்ளேன். நம்புங்கள், நம்பிக்கை கொள்ளுங்கள், மன்னியுங்கள், செபியுங்கள் மற்றும் அனைத்திலும் மேலாக எல்லையில்லாது அன்பு செய்வதுடன் உங்கள் மேய்ப்பர்களுக்காகச் செபியுங்கள் எனக் கூற வந்துள்ளேன். எனது பிள்ளைகளே, என்னைப் பின்தொடருங்கள். எனது வழி சமாதானத்தினதும் அன்பினதும் வழி, எனது மகனின் வழி. இந்த வழியே எனது இதயத்தை வெற்றிக்கு இட்டுச்செல்லும் வழியாகும். உங்களுக்கு நன்றி."
2019-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இறைவன் தமது இரக்கமுள்ள இதயத்தின் ஊடாக என்னை உங்களிடம் வருவதற்கும், உங்களுக்கு அறிவிப்பதற்கும், மனம்திரும்பும் வழியில் வழிநடத்தவும் அனுமதித்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் முழு இதயத்தோடு செபிக்கவும், அதன்மூலம் உங்களுக்கும், உங்கள் ஊடாக மற்றவர்களுக்கும் உடல், உள நலம் பெற அழைக்கப்பட்டுள்ளீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வாழ்க்கை குறுகியது என்றும் நித்தியவாழ்வு உங்களுக்கான பரிசாக வரவுள்ளது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகவே செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதன்மூலம் நீங்கள் இறைவன் கைகளில் பாராட்டுப்பெறும் கருவிகளாக இருப்பீர்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“
2019-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! அன்னைக்குரிய அன்புடன் உங்களை நான் தூய மற்றும் திறந்த இதயத்துடன் எனது மகனில் வைத்துள்ள அதிக அன்பில் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரது அன்பு எவ்வளவு அதிகமானது என்பதை நான் அறிவேன். நான் அவரை எனது இதயத்தில் ஒளியாகவும் உலகின் அன்பாகவும் தாங்கிக் கொள்கிறேன். எனது பிள்ளைகளே, நான் உங்களிடம் வருவது உங்களுக்கு எனது அன்பினதும் வானகத் தந்தையின் அடையாளமாகவும் இருக்கின்றது. எது மகனின் இரத்தம் உங்கள் அன்பிற்காகச் சிந்தப்பட்டது. இந்த விலைமதிப்பில்லாத எனது மகனின் அன்பு நித்திய வாழ்விற்கு அழைக்கின்றது. வானகத் தந்தை மனிதரை முடிவில்லாத அன்பின் ஊடாகப் படைத்தார். எனது மகனின் அன்பை அறிந்தவர்கள், அவரை பின்பற்றுவோர் என்றுமே இறப்பதில்லை. ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, செபம் உங்களுக்கு வழியைக் காட்டுவதுடன் எனது மகனின் அன்பை எடுத்துக்காட்டுவதாக அமையட்டும். எனது பிள்ளைகளே, நீங்கள் எனது மகனின் வார்த்தைகளில் வாழ முயற்சிக்கும்போதும் செபத்தை விட்டுவிடாதீர்கள். நீங்கள் அன்புசெய்யும் பிறரைச் சந்திக்கும்போது எனது மகனின் அன்பையும் பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள். அன்பு வானுலகத்தின் கதவுகளைத் திறந்துவிடும். எனது பிள்ளைகளே, ஆரம்பம் தொடக்கமே நான் திருச்சபைக்காக செபித்துவருகிறேன். ஆகவே எனது தூதர்களே நீங்களும் திருச்சபைக்காகவும் எனது மகனால் அழைக்கப்பட்ட அதன் பணியாளர்களுக்காகவும் செபிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்."
2019-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே!
இது ஒரு இரக்கத்தின் காலம், ஒவ்வொருவரும் மற்றவரில் கருணை கொள்ளும் காலம். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வெறுப்புகள் மற்றும் திருப்பதியற்ற காற்றுக்கள் உங்களைச் சுற்றி வீசாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பையும் செபத்தையும் கொடுப்பதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். சாத்தான் சமாதானத்தையும் ஒழுங்கையும் குலைக்க முனையலாம், ஆனால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் மரித்து உயிர்த்த இயேசுவில் நீங்கள் மகிழுங்கள். அவர் உங்களுக்கு நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காக சாவை வென்றார். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அவரில் உயிர்த்தமைக்கு சாட்சிகளாகவும் பெருமைப்படுபவர்களாகவும் இருங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.
2019-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! அன்னையாக, தனது பிள்ளைகளைத் தெரிந்தவளாக, நீங்கள் எனது மகனைத் தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் உண்மையை, சமாதானத்தை, மாசற்ற தூய்மையானவற்றைத் தேடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே அன்பான இறைவன் ஊடாக அன்னையாக உங்களிடம் வருவதுடன், நீங்கள் திறந்த இதயத்துடன் செபித்து, நீங்களாகவே எனது மகனை- அவரது அன்பை, அவரது இரக்கமுள்ள இதயத்தை அறிந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன். எனது மகன் அனைத்தையும் அழகாகக் காணுகின்றார். அவர் அனைத்து ஆன்மாக்களிலும் நல்லதைத் தேடுகின்றார், ஆகவே எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, அவரிடம் செபிப்பதுடன், இடைவிடாது நன்றி கூறி அவரைப் போற்றுங்கள். அவர் உங்களுக்கு இறை வார்த்தைகளைக் கூறியுள்ளார், இந்த இறை வார்த்தைகள் அனைவருக்கும் மற்றும் எக்காலத்துக்கும் உரியவை. ஆகவே, எனது பிள்ளைகளே, மகிழ்வாக, பேருவையாக, ஒன்றுபட்டு மற்றும் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருங்கள். இதுவே, இன்றைய உலகில் உங்களுக்குத் தேவையாக உள்ளது, இதன்மூலமே நீங்கள் எனது அன்பின் தூதர்களாவீர்கள், இதன்மூலமே நீங்கள் எனது மகனுக்கு உண்மையான சாட்சிகளாவீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்".
2019-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது ஒரு இரக்கத்தின் காலம். இயற்கை எவ்வாறு தனக்கு புதுவாழ்வை மீள வழங்குகின்றதோ, அதுபோன்று நீங்களும் மனம்திரும்ப அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இறைவனிடம் தஞ்சமடையுங்கள்! எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் வெறுமையாகவும் நண்பர்கள் எவருமின்றியும் உள்ளீர்கள், ஏனென்றால் இறைவன் உங்களிடம் இருக்கவில்லை. ஆகவே செபங்கள் உங்களுக்கு வாழ்வாக அமையுமட்டும் செபியுங்கள். இறைவனைத் தேடுங்கள், அவர் உங்களை இயற்கையிலிருந்து உருவாக்கினார், அந்த இயற்கை வாழ்விற்காகப் போராடுகிறதே தவிர இறப்பிற்காக அல்ல. மக்களினங்களின் இதயங்களில் போர் நிறைந்துள்ளது, ஏனென்றால் அவர்களிடம் சமாதானம் இல்லை, எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் அயலாரை சகோதரராகக் கொள்ளுங்கள். இறைவனிடமும் செபத்திலும் மனம் திரும்புங்கள். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்!„
2019-02-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை ஒரு புதுவாழ்விற்காக அழைக்கிறேன். நீங்கள் எந்த வயதினர் என்பது முக்கியமானதல்ல, உங்கள் இதயத்தை இயேசுவிற்காகத் திறவுங்கள், அவர் உங்களுக்கு இவ்வேளையை இரக்கத்தின் காலமாக மாற்றியமைப்பதுடன், நீங்கள் இயற்கை போன்று இறைவனின் அன்பில் புதுப்பிறப்பு அடைவதுடன், நீங்கள் உங்கள் இதயங்களை வானகம் நோக்கியும் விண்ணரசு நோக்கியும் திறந்து கொள்வீர்களாக. நான் எப்போதும் போன்று உங்களுடன் உள்ளேன், ஏனென்றால் இறைவன் உங்களை அன்புசெய்ய என்னை அனுமதித்துள்ளார். என் அழைப்பைக் கேட்பதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்!“
2019-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் அன்னையாக உங்களை மனம்திரும்ப அழைக்கிறேன். இந்தக் காலம் உங்களுக்கு எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அமைதியினதும் செபத்தினதும் காலம். ஆகவே உங்கள் இதயத்தை சூடாக்கி, விசுவாசம் எனும் விதைகளால் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே நாளுக்கு நாள் செபத்தின் தேவை அதிகமாகி வருவதை உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை ஒழுங்காகவும் பொறுப்புக் கூறுவதாகவும் அமையட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த உலகம் நிரந்தரமில்லாதது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதுடன், இறைவன் அருகில் இருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள், உங்கள் அன்பு அனுபவங்கள் இறைவனுக்குச் சாட்சி பகர்வதாக அமைவதுடன் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக மன்றாடுகின்றேன், ஆனால் நீங்கள் ஆம் என்று சொல்லாவிட்டால் என்னால் இது முடியாது. எனது அழைப்பை நீங்கள் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.
2019-01-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! கவலைக்குரிய விதத்தில் உங்கள் மத்தியில் பல சண்டை சச்சரவுகள், வெறுப்புகள், சொந்த விருப்புகள், சுயநலங்கள் உள்ளன. நீங்கள் இலகுவாக எனது மகனையும் அவரது வார்த்தைகளையும் அவரது அன்பையும் மறந்து விடுகின்றீர்கள். பல ஆன்மாக்களில் நம்பிக்கை அழிந்து விடுவதுடன், இதயம் உலகப் பொருட்களின் மாயையில் அமிழ்ந்து விடுகின்றது. ஆனால் தற்போதும் நம்பிக்கை மற்றும் அன்பைக் காட்டுவது மற்றும் எனது மகனை எவ்வாறு நெருங்கி வருவது எனவும், களைப்படையாமல் எனது மகனைத் தேடுவதுடன்- என்னையும் நீங்கள் தேடிக்கொள்கின்றீர்கள் என அன்னையின் இதயத்தைக் கொண்ட எனக்குத் தெரியும். வேதனைகள் மற்றும் துன்பங்களை பணிவுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்கு அமைதியான வகையில் நம்பிக்கை கிடைப்பதுடன் அனைத்திலும் மேலாக விசுவாசத்தை பரப்புகின்றனர். இவர்களே எனது அன்பின் தூதர்கள், எனது பிள்ளைகளே, நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன், எனது மகன் எவ்வேளையிலும் நீங்கள் செபித்துக்கொண்டு இருப்பதை விரும்பவில்லை மாறாக உங்கள் இரக்கச்செயல்களால் மற்றவர்களை மகிழ்விக்கவே விரும்புகிறார். உங்கள் செபங்களால் நம்பிக்கை வளரவேண்டும் என விரும்புகிறார். அவர் விரும்புவது ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே. இதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும். எனது பிள்ளைகளே! எனது மகன் பார்க்க விரும்பியவர்களுக்கும் அதைப் பெற விரும்பியவர்களுக்கும் ஒளியைக் கொண்டுவந்தார் என்பதை மறவாதீர்கள். நீங்களே உண்மையின், சமாதானத்தின் மற்றும் அன்பின் ஒளி. நான் அன்னையாக உங்களை வழிநடத்துவதுடன், நீங்கள் எனது மகனிடம் செபிக்கவும், எனது மகனை அன்புசெய்யவும், உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் எனது மகனை நோக்கியதாகவும் அவர் பெயரிலும் இருக்கட்டும். இதனால் எனது இதயம் நிறைந்திருக்கும். நான் உங்களுக்கு நன்றிகூறுகிறேன்.
2018-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் எடுத்துச் செல்கிறேன், அவரே சமாதானத்தின் அரசர். அவர் உங்களுக்கு சமாதானத்தைத் தருவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் மகிழ்வையும் பணிவையும் தருவார். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக இந்த இரக்கத்தின் காலத்தில் செபித்துக்கொள்வேன். நான் உங்களுடன் இருக்கும் வேளையில் எனது அன்பின் அடையாளமாக உங்களைப் பாதுகாப்பதுடன் நித்திய வாழ்விற்கு வழி நடத்துகிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.
2018-11-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இது இரக்கத்தின் மற்றும் செபத்தின் காலம், காத்திருக்கும் மற்றும் அன்பளிப்பு வழங்கும் காலம். இறைவன் தன்னை உங்களுக்கு வழங்குகிறார், அதன்மூலம் நாங்கள் அனைத்திலும் மேலாக அவரை நேசிக்கின்றோம். ஆகவே, அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயங்கள் மற்றும் குடும்பங்களைத் திறவுங்கள், அதன்மூலம் இந்த காத்திருப்பு மற்றும் செபம் அன்பாக உருவெடுப்பதுடன் எல்லாவற்றிற்கும் மேலாக அதை வழங்குவதில் தங்கியிருக்கும். நான் உங்களுடன் உள்ளேன், அன்பான பிள்ளைகளே, உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள், நல்லவற்றைக் கைவிடாமல், நல்லவற்றை விட்டுவிடாமல் இருங்கள், ஏனென்றால் அதன் பலனை தொடர்ந்தும் காணவேண்டும் என்பதுடன் அவற்றைக் கேட்கவும் வேண்டும். ஆகவே இதுகுறித்து சாத்தான் கோபமடைவதுடன் உங்கள் செபங்களைக் குழப்ப அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளும். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்."
2018-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் எனது பிள்ளைகளைப் பார்க்கும்போது, அவர்கள் உண்மைக்காக வாழாமல் தம்மை மறைத்துக்கொள்வதுடன், உணர்வுடனும் செயல்முறையிலும் செபிக்காததால் எனது தாய்க்குரிய இதயம் வேதனைப்படுகிறது. நான் எனது மகனிடம், அதிகமான எனது பிள்ளைகள் விசுவாசம் அற்று உள்ளனர், அவர்களுக்கு அவரை -எனது மகனைத்- தெரியாது உள்ளனர் எனக் கூறும்போது நான் மிகவும் கவலையடைகிறேன். ஆகவே நான் உங்களை அழைக்கிறேன், எனது அன்பான தூதர்களே, மனித இதயங்களின் அடித்தளங்களைக் காண்பதற்கு முயலுங்கள், அங்கு நீங்கள் நிச்சயமாக ஒரு சிறிய மாற்றத்திற்கான பெறுமதிகளைக் கண்டுகொள்வர்கள். இந்த வழியில் பார்ப்பது, வானகத் தந்தையின் இரக்கத்தின் பார்வையாக அமையும். தீமைகளிலும் நன்மையைத் தேடுவதுடன், மற்றவர்களைத் தீர்ப்பிடாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலுங்கள், இதுவே எனது மகன் உங்களிடம் கேட்டுக்கொள்வது. அவர் சொல்வதைக் கேட்குமாறு, அன்னையாக நான் உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, உடல் மற்றும் அன்பை எடுத்துச் செல்வது மற்றும் அது குறித்த செயற்பாடுகளிலும் பார்க்க ஆன்மா முக்கியமானது, இது அனைத்துத் தடைகளையும் கடந்து செல்லும். எனது மகன் உங்களில் வாழ்கிறார் மற்றும் அவர் உங்களை அன்பு செய்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அவரே உலகின் ஒளி அத்துடன் அவர் முன்னால் எவரும் எதுவும் முடிவில்லாத பிரகாசமாக நிற்க முடியாது. ஆகவே எனது அன்பான தூதர்களே, நீங்கள் உண்மைக்குச் சாட்சிகூறப் பயப்படாதீர்கள். எனது மகனை இதுவரை கண்டறிந்திராவர்களுக்கு அவர் குறித்த உண்மையை எடுத்துரைக்க மறவாதீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன், உங்களுக்கு உற்சாகம் அளிப்பேன். சாட்சியமான அன்பு ஒருபோதும் முடிவதில்லை, ஏனென்றால் அது வானகத் தந்தையிடமிருந்த வருகின்றது, அது முடிவில்லாதது, மற்றும் எப்போதும் எனது அனைத்துப் பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகின்றது. எனது மகனின் ஆவி உங்களோடு இருப்பதாக. மீண்டும் நான் உங்களை அழைக்கிறேன், எனது பிள்ளைகளே, உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்களை எனது மகனின் அன்பு வழிநடத்தட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்"
2018-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களுக்கு அதிகளவு இரக்கம் உள்ளது ஏனென்றால் நீங்கள் நான் வழங்கும் தூதுரைகள் மூலம் ஒரு புதுவாழ்விற்கு அழைக்கப்படுகின்றீhகள். எனது அன்பான பிள்ளைகளே, இது ஒரு இரக்கத்தின் காலம், உங்களையும் எதிர்கால சந்ததிகளையும் மனம்மாறுவதற்கு அழைக்கும் காலம். ஆகவே உங்களை அழைக்கிறேன் எனது அன்பான பிள்ளைகளே, மேலும் செபிப்பதுடன் உங்கள் இதயங்களை எனது மகன் இயேசுவுக்காகத் திறந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருந்து உங்களை அன்பு செய்வதுடன் அனைவரையும் எனது தாய்க்குரிய பாசத்துடன் ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி கூறுகிறேன்."
2018-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! களைப்படையாமல் உற்சாகமாக இருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன் ஏனென்றால் ஒரு சிறிய நன்மைதானும், ஒரு சிறிய அன்பின் அடையாளம்தானும் சாத்தானை வெற்றி கொள்ளும் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். எனது பிள்ளைகளே, நான் கூறுவதைக் கேளுங்கள், இதன்மூலம் நன்மை வெற்றியடைவதுடன், எனது மகனின் அன்பை அறிந்து கொள்ள நேரிடலாம். இது ஒரு பெரிய மகிழ்வாகும் - எவர் ஆன்மாவை விரும்புகிறார்களோ, எவர் உங்களுக்காக தம்மை வழங்குகின்றார்களோ மற்றும் எப்பொழுதும் புதிதாக நற்கருணையை உட்கொள்கின்றார்களோ அவர்களை எனது மகனின் கைகள் அரவணைப்பதுடன், அவரிடமிருந்து நித்திய வாழ்விற்கான வார்த்தைகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அவரது அன்பைக் கண்டறிந்து கொள்வது மற்றும் அவரது பாதச்சுவடுகளைப் பின்தொடர்வது என்பதன் அர்த்தம், ஆன்மீகத்தில் நிறைவாக இருப்பது என்பதாகும். இதுவே நிறைவானது, இது சிறப்பான உணர்வுகளை வழங்குவதுடன், அன்பையும் நன்மையையும் எங்கும் காணச்செய்கின்றது. எனது அன்புத் தூதர்களே, எனது பிள்ளைகளே, சூரியக் கதிர்கள் போன்றிருங்கள், அது எனது மகனின் அன்பை சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கி சூடாக்கட்டும். எனது பிள்ளைகளே, உலகிற்கு அன்புத் தூதர்கள் தேவைப்படுகிறார்கள், உலகிற்கு அதிகம் செபங்கள் தேவைப்படுகிறது, ஆனால் செபங்கள் உதடுகளால் முணுமணுக்கப்படாமல் இதயத்தாலும் ஆன்மாவாலும் சொல்லப்பட வேண்டும். எனது பிள்ளைகளே, உங்கள் செபங்கள், உங்கள் வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் உங்களுக்காக வானகத்தின் கதவுகளைத் திறக்கவோ அல்லது மூடவோ செய்கின்றன. எனது மகன் உங்களுக்கான வழிகளைக் காட்டியதுடன் உங்களுக்கு நம்பிக்கையை வழங்கியுள்ளார், நான் உங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் உற்சாகப்படுத்துகின்றேன். ஏனென்றால், எனது பிள்ளைகளே, நான் வேதனைகளை அனுபவித்தவள், ஆனால் எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் இருந்தது. அதனால் இப்போது எனது மகனின் இராச்சியத்தில் வாழும் பரிசைப் பெற்றுள்ளேன். ஆகவே, நான் சொல்வதைக் கேளுங்கள், களைப்படையாமல் உற்சாகமாக இருங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
2018-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இயற்கையும் உங்களை அன்புசெய்வதற்கு எடுத்துக்காட்டாக பழங்களைத் தருகின்றது. நீங்களும், எனது வருகையின் மூலம் அதிகளவு வெகுமதிகளையும் ஆசீரையும் பெற்றுள்ளீர்கள். எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் எனது அழைப்பிற்கு எந்த அளவில் பதிலளித்துள்ளீர்கள் என்பதை இறைவன் அறிவார். நான் உங்களை அழைக்கிறேன்: இன்னும் தாமதமாகவில்லை, நீங்கள் தூயவற்றிற்கும் இறைவனின் இரக்கத்திற்கும் சமாதானத்திற்கும் முடிவெடுங்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பதுடன், நீங்கள் அவரில் நம்பிக்கை வைத்தால் அவர் உங்களுக்கு நூறு மடங்காக வழங்குவார். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகின்றேன்„
2018-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைளே! எனது வார்த்தைகள் எளிமையானவை, ஆனால் அவை அன்னையின் அன்பும் அரவணைப்பும் நிரம்பியவை. எனது பிள்ளைகளே, இருளின் நிழல் மற்றும் ஏமாற்றுதல்கள் உங்களுக்கு அதிகரிக்கலாம், ஆனால் ஒளியாக மற்றும் உண்மையாக வாழுமாறு நான் உங்களை எனது மகனின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன். அவரால் மட்டுமே ஏமாற்றங்கள் மற்றும் துன்பங்களை சமாதானமாக மற்றும் இன்பகரமாக மாற்றமுடியும், அவரால் மட்டுமே கடுமையான வேதனைகளுக்கு நம்பிக்கை தரமுடியும். எனது மகனே உலகின் வாழ்வாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக அவரை கண்டறிந்து கொள்கின்றீர்களோ, எவ்வளவு அதிகமாக அவருக்கு அருகில் வருகின்றீர்களோ, அவ்வளவு அதிகமாக அவரை அன்பு செய்வீர்கள், ஏனென்றால் எனது மகன் அன்பானவர். அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும், அனைத்தையும் அழகாக்கும், அன்பில்லாமல் போனால் அவை உங்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே நான் உங்களுக்கு மீண்டும் கூறுகின்றேன், நீங்கள் உள்ளத்தால் வளர்ச்சிபெற விரும்பினால், நீங்கள் அதிகம் அன்பு செய்ய வேண்டும். எனது அன்பான தூதர்களே, இது எப்பொழுதும் இலகுவாக இருப்பதில்லை என்பதை நான் அறிவேன், அத்துடன் வேதனையான பாதைகள் உள வளர்ச்சியைத் தருவதுடன், எனது மகனில் நம்பிக்கை கொள்ள வைக்கும் பாதைக்கு இட்டுச்செல்கின்றது. எனது பிள்ளைகளே, செபியுங்கள், எனது மகனை நினைவிற் கொள்ளுங்கள். நாளின் ஒவ்வொரு வினாடியிலும் உங்கள் ஆன்மாவை அவரிடம் எழுப்புங்கள், உங்கள் செபங்களை அழகான தோட்டத்தில் பறிக்கும் பூக்களைப் போன்று நான் எடுத்து எனது மகனிடம் ஒப்படைப்பேன். நீங்கள் உண்மையில் எனது அன்பின் தூதர்களாக வாழுங்கள், எனது மகனின் அன்பை அனைவரிடமும் பரப்புங்கள், அழகிய தோட்டத்தில் உள்ள மலர்கள் போன்று வாழுங்கள். உங்கள் மேயப்;பர்கள் மனநிறைவுள்ள தந்தையர்களாக வாழவும் அனைத்து மனிதரையும் அன்பால் ஆட்கொள்ளவும் உங்கள் செபத்தால் உதவுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."