இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

கொடைகளைக் கொண்டாடுங்கள்!

எண்ணிக்கை 11:25-30
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

'கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்ததுபோல' என்னும் சொலவடையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இச்சொலவடை எப்படி உருவாகியிருக்கும்?

பாட்டி ஒருத்தி தன் வீட்டில் சோறு சமைக்கு முற்பட்டாள். அடுப்பு இருந்தது. பாத்திரம் இருந்தது. தண்ணீர் இருந்தது. அரிசி இருந்தது. அடுப்பு எரிக்க விறகும் இருந்தது. ஆனால், அடுப்பின் விறகைப் பற்ற வைக்கும் நெருப்புதான் இல்லை. நெருப்பு பெட்டி காலியாகிவிட்டது. இந்நேரமும் கடையும் சாத்தியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாத பாட்டி தன் பக்கத்து வீட்டிற்குள் சென்று நெருப்பு பெட்டி கேட்கிறாள். அந்த வீட்டின் பெண்மணியோ, 'எனக்கும் நெருப்பு பெட்டியில் ஒரு குச்சிதான் இருந்தது. ஆனால், ஒன்று செய். என் வீட்டில் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிலிருந்து ஒரு கட்டையை எடுத்துக் கொடுக்கிறேன். நீ சென்று அதை வைத்து உன் வீட்டில் அடுப்பு பற்ற வைத்துக்கொள்.' 'சரி' என்று வாங்கிய பாட்டி 'எரிகின்ற, எரிந்து மின்னுகின்ற கொள்ளிக்கட்டையுடன் தன் வீடு நோக்கி வேகமாகச் செல்கிறாள். தன் வீட்டிற்குள் வரும்போது தன் வீட்டின் நிலையில் தன் தலை இலேசாக உரச, அந்த இடம் அரிக்கத் தொடங்குகிறது. வழக்கமாக கட்டையாலேயே தன் உடலையும், தலையையும் சொறிந்த பழகிய பாட்டி, தன் கையில் இருப்பது கொள்ளிக்கட்டை என்று தெரியாமல், தன் தலையில் அதை தேய்க்க ஆரம்பிக்கிறாள். விளைவு? அவளின் தலை வெந்துபோயிருக்கும். கட்டை அணைந்து போயிருக்கும். ஆக, உணவு சமைக்க கொடுக்கப்பட்ட நெருப்புக்கட்டை அவளின் தலையை சமைத்துவிடுகிறது.

கொடையாகப் பெற்ற கொள்ளிக்கட்டை ஆபத்தாக முடிகிறது.

இப்படிப்பட்ட வருத்தமான நிகழ்வு மூன்று மனிதர்கள் வழியாக நடப்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

கடவுளின் பணியாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட கொடையைக் கொண்டாடாமல், தங்கள் பொறாமை உணர்வால் அவற்றைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள நினைக்கும்போது, அது அவர்களையே அழிக்கும் கருவியாக மாறிவிடுகிறது என்பதே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் பாடம்.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எண் 11:25-29) நம் சிந்தனையைத் தொடங்குவோம். எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் யாவே இறைவன், அவர்களை மோவாபு பாலைநிலத்தில் வழிநடத்திச் செல்கின்றார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் பயணம் செய்யும் மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்கிறது எண்ணிக்கை நூல். இந்த மக்களால் தான் அடையும் 11 துன்பங்களை வரிசையாக இறைவனிடம் முறையிடுகின்றார் மோசே. மோசேயின் 11 முறையீடல்களுக்குப் பின் யாவே இறைவனின் பதில் என்னவாக இருக்கிறதென்றால், மோசேயிடமும், மக்களிடமிருந்தும் யாவே இறைவனின் கை ஒருபோதும் அகலாது என்பதுதான். மோசே தன் பணிக்கு வலுவூட்டுவம், பணியை எளிதாக்கி இன்னும் விரிசல்படுத்தவும் 70 மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்த மூப்பர்களைத் தெரிவு செய்து அவர்களின் மேல் தூய ஆவியைப் பொழியும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். சந்திப்புக்கூடாரத்தின் மேகத்தின்மேல் இறங்கி வருகின்ற யாவே இறைவன், மோசேயிடமிருந்த தன் ஆவியை எடுத்து, அதை எழுபதின்பர் மேல் அனுப்புகின்றார். ஆக, இந்த எழுபதின்மர் இனி மோசேயின் ஆவியைக் கொண்டிருக்கின்றனர். மோசே போல கடவுளின் அருட்செயலில் பங்குபெறுகின்றனர்.

எழுபதின்மர் மேல் ஆவி இறங்கி வந்த நேரத்தில். தங்கள் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப்பற்றி புகார் தருகின்றார். ஆனால், மோசே அவரை கடிந்து கொள்கின்றார்.

யோசுவாவை பொறுத்தவரையில், ஆண்டவரின் கொடை என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், அதிலும் குறிப்பாக சந்திப்புக் கூடாரத்தில் கூடியிருந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானது என அவர் நினைக்கிறார். ஆகையால்தான், சந்திப்புக் கூடாரத்தில் இல்லாமல் தங்களின் சாதாரண கூடாரங்களில் இருந்த இருவர்மேலும் ஆண்டவரின் ஆவி பொழியப்பட்டதை யோசுவாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யோசுவா, இவ்வாறாக, சந்திப்புக் கூடாரத்தில் இருந்தவர்கள் மற்றவர்களை விட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது உயர்ந்தவர்கள் என்ற நிலையில் சிந்திக்கிறார். இவருடைய சிந்தனை, 'நாங்கள் - அவர்கள்' என்ற இரண்டு பிரிவை உருவாக்குவதுபோல இருக்கிறது. ஆனால், மோசேயின் சிந்தனையோ, 'நாம்' என்ற ஒற்றைச் சிந்தனையாக இருக்கிறது. கடவுளின் கொடை அனைவர் மேலும் பொழியப்படலாம் என்பதும், கடவுளிடம் பாரபட்சம், பாகுபாடு இல்லை என்பதும் மோசேயின் புரிதலாக இருக்கிறது. மோசே தரும் பதில் ஆச்சர்யமாக இருக்கிறது: 'ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!' இவ்வாறாக, தான் பெற்ற கொடையை மற்றவரும் பெற்றிருக்கிறார் என்பதைக் கண்டு, கொடையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, தன் பொறாமை உணர்வால் தன்னையே அழித்துக்கொள்கிறார் யோசுவா.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 5:1-6) யாக்கோபு தன் திருஅவையில் விளங்கிய 'தற்சார்பு' மற்றும் 'தன்நிறைவு' போக்கைக் கண்டிக்கிறார். தற்சார்பும், தன்நிறைவும் நல்லதுதானே? அடுத்தவரின் கையை நாடாமல், நானே நிறைவோடு வாழ்வது நல்லதுதானே? 'தற்சார்பும்,' 'தன்நிறைவும்' நல்லதுதான். எப்போது? அது 'தன்மையப்போக்கு' இல்லாதபோது. யாக்கோபின் திருச்சபையில் வாழ்ந்த பணக்கார நிலக்கிழார்களையும், செல்வந்தர்களையும் நோக்கி இருக்கிறது அவருடைய கண்டனமும், அறிவுரையும். இந்த இரண்டு குழுக்களும், 'தற்சார்பு,' மற்றும் 'தன்நிறைவு' கொண்டிருப்பதாக நினைத்து, தன்மையப்போக்கைக் கொண்டிருந்தனர். எப்படி?

முதலில், இவர்கள், 'கடவுள் எங்களுக்குத் தேவையில்லை' என நினைத்தனர். தாங்கள் இவ்வுலக வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்றுக்கொண்டதால், மறுவுலகமும், மறுவுலகம் தருகின்ற மகிழ்வும் தேவையில்லை என எண்ணினார்கள். இவ்வாறாக, தங்கள் வாழ்வை இவ்வுலகம் சார்ந்த வாழ்வாக மட்டுமே வாழ்ந்தனர். இவர்களின் பணம், பகட்டான ஆடை, பொன், வெள்ளி அனைத்தும் அழுகிப்போனவை என்றும், பயனற்றவை என்றும், கடவுளின் முன் செல்லாதவை என்றும் கடிந்துகொள்கிறார் யாக்கோபு. செல்வம் அழியக்கூடியது. இயற்கைச் சீற்றமோ, பூச்சிகளோ, துருவோ, திருடர்களோ நம் செல்வத்திற்கு ஆபத்தாகவே இருக்கின்றனர். யாக்கோபு இந்த மடலை எழுதிய காலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் பணத்தையும், பொருளையும் தங்கள் இல்லங்களில்தான் சேமித்து வைத்திருப்பர். ஆக, செல்வம் எளிதில் அழியக்கூடிய பொருளாகவே இருந்திருக்கும். இரண்டாவதாக, இவர்கள் சம்பாதித்த செல்வம் அனைத்தும் அடுத்தவர்களை ஏமாற்றி, அடுத்தவர்களின் உரிமைகளை மறுத்து சம்பாதித்தவை. தாங்கள் நிறைவு பெற வேண்டும் என்பதற்காக, இவர்கள் பணியாளர்களுக்கு தகுந்த ஊதியம் தரவில்லை. அவர்களின் உழைப்பை இவர்கள் சுரண்டினர். எளியவர்க்கு உரியதை இவர்கள் மறுத்தனர். யாக்கோபு குறிப்பிடும் செல்வர்கள் மற்றவர்களைச் சுரண்டிச் செல்வம் சேர்த்தவர்கள். அதாவது, தங்களின் வயல்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் மற்றும் அறுவடை செய்பவர்களின் கூலியைக் கொடுக்காமல் அவற்றை தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

இவ்வாறாக, உணவு, செல்வம், வாய்ப்பு, ஆடம்பரம் ஆகிய கொடைகளை இவர்கள் பெற்றிருந்தாலும், இவர்கள் அவற்றைப் பகிராமல் தங்களுக்கே வைத்திருந்ததால், அக்கொடைகளே அவர்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற் 9:38-48) மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

அ. நம்மைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுகிறார் என்று இயேசுவிடம் புகார்

ஆ. சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருத்தல் வேண்டாம்

இ. பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை

முதலில், முதல் வாசகத்தின் யோசுவா மோசேயிடம் புகார் அளித்தது போல, யோவானும் இயேசுவிடம் ஒரு முறையீடு செய்கின்றார். இயேசுவின் பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார். ஆனால், அந்த நபர் 12 திருத்தூதர்களோடு சேராதவர். திருத்தூதர்கள் தாங்கள் ஏற்கனவே பேய்களை ஓட்டியிருந்ததால், இந்தக் கொடை தங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு உரிமை என நினைத்தனர். இயேசுவின் பெயரில் தங்களுக்கு மட்டுமே பங்கு உண்டு எனக் கருதினர். இதன் காரணமாக, தங்களோடு சேராத அந்த நபரைக் கடிந்துகொள்கின்றனர். அவர் அப்படி வல்ல செயல்கள் செய்வதைத் தடுக்கவும் செய்கின்றனர். ஆனால், இயேசு, மோசே செய்ததைப் போல, 'அவரை ஒன்றும் செய்ய வேண்டாம்' என அறிவுறுத்துகின்றார்.இயேசுவின் பதில் இரண்டு கூறுகளை உள்ளடக்குகின்றது: ஒன்று, தன் பெயரால் வல்ல செயல் செய்பவர் ஒருபோதும் தனக்கு எதிராக கிளர்ந்தெழ மாட்டார். இரண்டு, 'நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்' என்னும் பழமொழி. இந்த இரண்டின் வழியாகவும் பேய் ஓட்டுபவர் இயேசுவுக்கு எதிரானவர் அல்லர் என்ற செய்தியை இயேசு முன்வைத்து, 'கொடைகள் அனைவருக்கும் பொதுவானவை' என்று தன் திருத்தாதர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

இரண்டாவதாக, 'யாருக்கும், குறிப்பாக, சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாக இருக்க வேண்டாம்' எனக் கற்பிக்கிறார் இயேசு. 'சின்னஞ்சிறியவர்கள்' என்பவர்கள் திருத்தூதர்குழாமைச் சேராதவர்கள். அதாவது, திருத்தூதர்குழாமைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் - எடுத்துக்காட்டாக, பொறாமைப்பட்டால், குறுகிய மனப்பான்மை கொண்டிருந்தால் - அது, குழுவைச் சாராதவர்களுக்கு எதிர்சான்றாய் அமையும். அவர்களின் நம்பிக்கை அதனால் பாதிக்கப்படும். ஆக, கடவுளின் கொடையை தங்கள் குறுகிய மனப்பான்மையால், பொறாமையால் அதை தங்களுக்கு உரிய உரிமைப் பொருளாகப் பாவித்துக்கொள்ள வேண்டாம் என்றும், மாறாக, கொடைகளை மற்றவர்களோடு பகிரும்போது, இடறல் குறையும் என்றும் கற்பிக்கிறார் இயேசு.

மூன்றாவதாக, பாவத்தில் விழுவது பற்றிய எச்சரிக்கை. இங்கே பாவம் என்பது யோவான் மற்றும் திருத்தூதர்களின் பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையைக் குறிப்பதாக இருக்கிறது. பாவத்திற்கு இட்டுச் செல்லும் கை, கால், மற்றும் கண் - இடறலாக இருந்தால் - அவற்றை வெட்டி அல்லது பிடுங்கி எறிய வேண்டும் என்கிறார் இயேசு. இங்கே பயன்படுத்தப்படும் இலக்கிய நடை 'மிகைப்படுத்துதல்'. கை, கால், கண் என்னும் மூன்றும் பாலியல் சார்ந்த பாவங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பது ரபிக்களின் போதனை. அதாவது, கையால் செய்யப்படும் சுயஇன்பம் ஒருவர் தன்னோடு செய்து கொள்ளும் விபச்சாரம் என்றும், கண்களால் பார்த்து, அந்தக் கண்களை நோக்கி கால்கள் நடந்து செய்யும் பாவம் பிறரோடு செய்யும் விபச்சாரம் எனவும் அவர்கள் போதித்தனர். தன் சமகாலத்தில் நிலவிய போதனையை இயேசு அப்படியே தன் போதனையில் சேர்த்திருக்கலாம். மூன்று உறுப்புகள் மட்டும் சொல்லப்பட்டிருப்பது எதற்காக என்றால், இந்த மூன்று என்ற எண்ணின் வழியாக எல்லா உறுப்புகளும் சொல்லப்படுகின்றன என்பதும் கருத்து. உடலை வெட்டுவது என்னும் கொடூரத்தை 2 மக்கபேயர் 7ல் வாசிக்கின்றோம். அங்கே தீய அரசன் நல்லவர்களுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கிறான். இங்கே தீமை நிகழாமல் இருக்க உறுப்பு சேதம் அவசியமாகிறது. உறுப்பு சேதம் இயேசுவின் சமகால கும்ரான் போதனையிலும் அதிகமாக இருந்தது. மேலும் கிரேக்க இலக்கியத்தில் நாம் காணும் இடிபஸ் தன் தாய் வழியாக தான் பெற்றெடுத்த குழந்தைகளைக் காண இயலாமல் தன் கண்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறான். உறுப்பு சேதம் பாவத்தின் கொடுமையான தன்மையைக் குறிப்பதாகவும் இருந்தது. தின்னும் புழு, அவிக்கும் நெருப்பு. புழுக்களும், நெருப்பும்தான் நரகத்தில் மனிதர்களை வதைப்பவை என்று நம்பினர் யூத முன்னோர். இங்கே நரகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது பற்றி இயேசு பேசவில்லை. மாறாக, பாவத்தில் விழும் சீடர்களுக்கு என்ன நிகழும் என்பதையே இயேசு சொல்கின்றார்.

இவ்வாறாக, திருத்தூதர்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற கொடையைக் குறித்து குறுகிய மனப்பான்மை கொள்ளாமல் இருத்தல் வேண்டும். மேலும், கொடைகளைப் பெற்றவர்கள் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கு இடறலாக இருக்குமாறு பயன்படுத்தினால் அது அவர்களுக்கே தீங்காய் முடியும்.

இப்படியாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு, கொடைகள் கொண்டாடப்படவில்லை என்றால், அவை ஆபத்தாக முடியும் என எச்சரிக்கை விடுக்கின்றது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

ஒட்டுமொத்த மனித இனத்தையும், கிறிஸ்தவர்களாகிய நம்மையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், 'கொடையினால் வரும் உரிமை.' அப்படின்னா என்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரச பதவியில் இருக்கின்றவர்கள், தங்கள் பதவியை மக்களின் கொடையாகப் பெற்றுள்ளார்கள். ஆனால், இது கொடை என்பதை மறந்துவிட்டு அவர்கள் தங்கள் உரிமைகளின்மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். தங்களுக்கென்று வீடு, வாகனம், மருத்துவ வசதி என எல்லாவற்றையும் பெற்றாலும், மக்களின் தேவைக்குரியது அனைத்தையும் ஊழல் செய்து, ஊழல் செய்வதை தங்கள் உரிமைபோல நினைத்து, அனைத்தும் அவர்களுக்குரியது ஆக்கிக்கொள்கின்றனர். மண், தண்ணீர், பால், சாலை, போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்பு என அனைத்திலும் ஊழலைப் பரவச் செய்து, பாமர மக்களின் உரிமைச் சொத்துக்களைச் சுரண்டி தங்களுக்குரியது ஆக்கிக்கொள்கின்றனர். நம்மைவிட இவர்களுக்கு என்ன கூட இருக்கிறது? இவர்கள் என்ன படித்தவர்களா? வெகுசிலர் படித்திருக்கலாம். இவர்கள் நல்லவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இப்படி இருக்க, இவர்கள் தங்கள் கொடைகளை ஏன் தங்களுக்கு சாதகமாக்கி, தங்கள் தன்நிறைவு மற்றும் தற்சார்பு பற்றியே நினைக்கின்றனர்?

கிறிஸ்தவர்களாகிய நாமும் சில நேரங்களில், 'தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள்' என்று சொல்லிக்கொண்டு மற்றவர்களை 'பேய்களாகவும்,' 'அழிவுக்குரியவர்களாகவும்' நினைக்கிறோம். நமக்குள்ளே எழும் பல்வேறு சபையினர், தங்களுக்கு மட்டுமே ஆவி அருளப்பட்டதாகவும், மற்ற திருச்சபையினர் போதிப்பதெல்லாம் பொய் என்றும் சொல்லிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம். இப்படிச் செய்யும்போது, நாமும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் காணும் யோசுவா, செல்வந்தவர்கள், மற்றும் யோவான் போலத்தானே இருக்கின்றோம்? நம் குறுகிய எண்ணங்களிலிருந்து நம்மால் ஏன் விடுதலை பெற முடியவில்லை?

நாம் பெற்றிருக்கும் கொடைகளை எப்படி கொண்டாடுவது?

1. தாராள குணம் கொண்டிருத்தல்

பரந்த மனம் நாம் பெற வேண்டிய பெரிய சொத்து. இன்றைய முதல் வாசகம் மோசேயின் பரந்த குணத்தையும், நற்செய்தி வாசகம் இயேசுவின் பரந்த மனத்தையும் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. பரந்த மனம் கொண்டவர்கள் பாகுபாடு பார்க்க மாட்டார்கள். அவர்கள் தீமையைக் கடிந்துகொள்வார்களே தவிர, தீயவர்களைக் கடிந்துகொள்ள மாட்டார்கள். நன்மையைக் கொண்டாடுவார்கள். மேலும், இவர்கள் கடவுளைப் போல பார்க்கத் தொடங்குவார்கள். கடவுள் அனைவரையும் இணைத்துப் பார்ப்பவர். அவர் யாரையும் பிரித்துப் பார்ப்பவர் அல்லர். அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையில் பார்க்கிறார் இயேசு. நல்லதைச் சொல்லவோ, செய்யவோ ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த ஆடைதான் அணிய வேண்டும் என்று வரையறுப்பதை விட எல்லோரும் செய்யலாம், செய்ய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைக்கு அழைப்பு விடுக்கின்றார். 'சார்ந்தவர்', 'சாராதவர்' என்பதெல்லாம் மேலோட்டமாக எழுகின்ற உணர்வுகள். அதிலிருந்து கடந்து செல்வதுதான் பரந்த மனப்பான்மை.

2. பொறாமை அகற்றுதல்

மோசேக்குப் பின் மக்களை வழிநடத்தும் தலைவராக நியமனம் பெற்றவர் யோசுவா. அப்படியிருக்க, தனக்கு போட்டியாக இந்த எழுபதின்மர் அல்லது எல்தாவு அல்லது மேதாது வந்து, தன் இடத்தைப் பறித்துவிடலாம் என்ற நினைப்பில் அவர்கள் மேல் பொறாமை கொண்டிருக்கலாம். அதுபோல, யோவானும், இயேசுவின் பெயரால் பேயை ஓட்டிய இயேசுவைச் சாராதவர் தன்னைவிட பெரியவர் ஆகிவிடலாம் என நினைத்திருக்கலாம். பொறாமையோடு கைகோர்த்துவரும் மற்றொரு நோய் 'தன்மைய அல்லது தன்வெற்றிமைய மனநிலை.' 'பொறாமை' என்பதை 'தீமையான கண்' என பதிவு செய்கிறது கிரேக்கப் பாடம். ஆக, தீமை என்ற உணர்வு உள்ளத்திலிருந்து ஏறி, நம் கண்களை நிரப்பிவிடுவதால் நம்மால் யாரையும் முழுமையாக அல்லது நலமானதாகப் பார்க்க முடிவதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி நம்மையே நாம் தாழ்வாக மதிப்பிடுவதற்குப் பெயர்தான் பொறாமை என்று திருக்குறள் பொருள் கூறுகிறது. பொருள், குணம், செயல், பண்பு, கொடை, நட்பு - இவை நமக்குக் கிடைக்காமல் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அல்லது நமக்குக் கிடைத்தாலும், மற்றவருக்கும் கிடைக்கும்போது நம்மில் எழுகின்ற ஒரு உணர்வு ஒப்பீடு. இந்த ஒப்பீட்டின் உடன்பிறப்பு பொறாமை. இந்தப் பொறாமை நம்மிடமிருந்து விரட்டும் ஒரு நல்ல குணம் சகிப்புத்தன்மை.

3. கொடைகளைப் பயன்படுத்துதல்

நம்மிடம் நிறைய பணம் இருந்தும், அந்தப் பணம் அடுத்தவருக்குப் பயன்படவில்லை என்றால், அந்தப் பணம் நம்மிடம் இல்லை என்றே பொருள். ஏனெனில், அந்தப் பணம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? யாக்கோபின் திருச்சபையிலிருந்து பெரிய பிரச்சினை இதுதான். செல்வந்தர்களும், நிலக்கிழார்களும் தங்கள் செல்வத்தைப் பெற்றிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதைவிடுத்து, அவற்றை இன்னும் அதிகமாக்கவம், அதிகமாக்கியதைப் பேணிப் பராமரிப்பவும் அக்கறை காட்டுகின்றனர். தங்கள் உழைப்பைக் கொடுத்தவர்களுக்குக் கூட இழப்பீடு செய்ய இவர்கள் தயாராக இல்லை. மேலும், கொடைகள் பயன்படுத்தப்படுவது மற்றவர்களுக்கு இடறலாகவும் இருத்தல் கூடாது. ஏனெனில், இடறல் மற்றும் பாவச்சூழல்களுக்கு கொடைகள் பயன்பட்டால், அக்கொடைகளைப் பெற்றிருப்பவருக்கே அவை ஆபத்தாக முடியும்.

இறுதியாக,

நம் கொடைகள் கொண்டாடப்படவில்லை என்றால், அவைகள் ஆபத்தாக முடியும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. கொடைகளை நாம் அடையாளம் காணவும், அடையாளம் காணும் கொடைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளும் கொடைகளைப் பேணிக்காக்கவும் வேண்டும். மோசேயும், இயேசுவும் தங்களின் தான்மையை, தங்களின் கொடைகளை உணர்ந்திருந்ததால், அவர்களால் அனைவரையும், அனைத்தையும் கொண்டாட முடிந்தது.

கொடைகள் நம் கைகளில் இருக்கும் கொள்ளிக்கட்டைகள். இவற்றை வைத்து நாம் அடுப்பில் விறகு ஏற்றுவதே சால்பு. அதைவிடுத்து, அக்கைகளை நம்நோக்கித் திருப்பினால், அது நமக்கே ஆபத்தாகிவிடும். சில நேரங்களில் நாம் தடுமாறி விழலாம். நாம் விழும் இடத்தைப் பார்க்காமல், நாம் சறுக்கிய இடத்தைப் பார்த்து நம் வாழ்வைச் சரி செய்யும்போது நம் கொடைகளை நாமும் கொண்டாட முடியும்.