இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

நமக்குத் தெரியாதா?

1 அரசர்கள் 19:4-8
எபேசியர் 4:30-5:2
யோவான் 6:41-51

'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள் பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது. உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கற்பிக்கும் நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜன்னலில் நான்கு கட்டங்கள் இருக்கும்: (அ) எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியும், (ஆ) எனக்குத் தெரியாது பிறருக்குத் தெரியும், (இ) எனக்குத் தெரியும் பிறருக்குத் தெரியாது, (ஈ) எனக்கும் தெரியாது பிறருக்கும் தெரியாது. எ.கா. 'நான் அணிந்திருக்கும் சட்டையின் நிறம் கறுப்பு' - இது எனக்கும் தெரியும், பிறருக்கும் தெரியும். 'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருக்கிறது' - இது எனக்குத் தெரியாது, பிறருக்குத் தெரியும். 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்' - இது எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியாது. 'நாளை மழை வரும்' - இது எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியாது.

  இந்த நான்கு கட்டங்களில் நம் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மற்றும் தடை செய்யும் கட்டம் 2வது கட்டம். எப்படி?

  'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருப்பது' எனக்குத் தெரியாது. ஆனால் அது பிறருக்குத் தெரியும். நான் வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கிழிந்த சட்டையோடு நான் மாணவர்முன் நின்றால் அது நான் என்னைப் பற்றி அக்கறையில்லாதவனாய் இருக்கிறேன் என்ற ஒரு உருவத்தை அவர்கள் மனத்தில் உருவாக்கும். அல்லது கிழிந்த சட்டை போட்டிருப்பதால் எனக்கே அது எதிர்மறையான உணர்வைத் தரும். நான் பாதிவழி போய்க்கொண்டிருக்கும்போது வழியில் வரும் ஒரு மாணவர், 'ஃபாதர் உங்க சட்டை பின்னால் கிழிந்திருக்கு' என சுட்டிக்காட்டும்போது, நான் உடனடியாக அறைக்குச் சென்று சட்டையை மாற்றிக்கொள்கிறேன். ஆக, அந்த மாணவர் சுட்டிக்காட்டியதால் நான் இங்கே வளர்கிறேன். ஆனால், அதே வேளையில், 'எனக்குத் தெரியவில்லை என்றாலும், 'எனக்குத் தெரியாதா?' நீ வேலையைப் பார்த்துக்கொண்டு போ' என்று சொல்லும்போது, அதுவே என் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

ஆக, எனக்குத் தெரியவேண்டுமென்றால் மற்றவர் எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

'தெரிதலும், கற்றுக்கொடுத்தலும்' என்ற இரண்டு வார்த்தைகள் நம் வாழ்நாள் வரை நம்மோடு வரக்கூடிய வார்த்தைகள். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், பொழுதிலும் நாம் தெரிந்துகொள்கிறோம், கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.

'தெரிதல்' 'கற்றுக்கொடுத்தல்' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்து இன்றைய வாசகங்கள் சுழல்கின்றன:

அ. 'நான் நல்லவன் அல்ல. நான் சாக வேண்டும்' என்று தன்னைத் தெரிந்து வைத்துள்ளார் எலியா. ஆனால் இறைவன், 'நீ எழுந்து சாப்பிடு. நீண்ட பயணம் செய்ய வேண்டும்' எனக் கற்றுக்கொடுக்கின்றார்.

ஆ. 'இயேசுவின் சிலுவை இறப்பு என்பது ஒரு சோகம், தோல்வி, அவமானம்' என இயேசுவைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர் எபேசுத் திருச்சபை மக்கள். ஆனால், 'அது நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' என கற்றுக்கொடுக்கின்றார் பவுல்.

இ. 'இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு என்பதும், இவருடைய தாய் மற்றும் தந்தை யார் என்று தெரியும்' என இயேசுவைத் தெரிந்து வைத்துள்ளனர் யூதர்கள். ஆனால், 'நான் வானிலிருந்து இறங்கி வந்த உணவு' எனக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 அர 19:4-8) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இஸ்ரயேலின் அரசன் ஆகாபு சமாரியாவில் இருந்துகொண்டு ஆட்சி செய்தபோது சீதோனிய நாட்டு ஈசபேலை மணக்கின்றார். மணமகளாக வருகின்ற ஈசபேல் தன்னோடு தன் பாகால் தெய்வத்தையும் சமாரியாவுக்குள் கொண்டு வருகின்றார். தன் மனைவியை திருப்திப்படுத்த நினைக்கும் ஆகாபு தன் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு பாகாலுக்கு கோவிலும் பலிபீடமும் கட்டுகின்றான் (1 அர 17:32). பாகால் வழிபாட்டைக் கண்ணுற்ற யாவே வானங்களை அடைத்து மழைபொழியாமால் செய்துவிடுகிறார். கொடிய பஞ்சம் நிலவுகிறது. 'பஞ்சத்தைப் போக்கும் வழி என்ன?' என்று தன் இறைவாக்கினர் எலியாவைக் கேட்கின்றான் ஆகாபு. 'பாகால் தெய்வ வழிபாடும், பாகாலின் இறைவாக்கினர்களும் அழிக்கப்பட வேண்டும்!' என்கிறார் எலியா. சொன்னதோடு மட்டுமல்லாமல், கர்மேல் மலையில் (1 அர 18:20) அரசன் மற்றும் மக்கள் முன்னிலையில் பாகால் இறைவாக்கினருக்கு சவால் விட்டு, பாகால் பொய் என்றும், யாவே இறைவனே உண்மையானவர் என்றும் நிரூபிக்கின்றார். வானம் திறக்க, மழை கொட்டுகின்றது. பாகால் தெய்வத்தின் பீடமும், அதன் பொய்வாக்கினரும் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லத் தேடுகின்றார். எலியா இப்போது அவளிடமிருந்து தப்பி ஓடுகின்றார். அப்படித் தப்பி ஓடும் வழியில் நடக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.

தன் உயிரை எடுத்துக்கொள்ளுமாறு எலியா இறைவனிடம் முறையிடுகின்றார் (19:4). வானதூதர் 'எழுந்து சாப்பிடு!' என உணவு தருகின்றார் (19:5). மீண்டும் படுத்துக் கொள்கிறார் எலியா (19:6). வானதூதர் மறுபடியும் சாப்பிட அழைக்கின்றார் (19:7). அப்பத்தினால் நிறைவுபெற்ற எலியா நீண்ட பயணம் மேற்கொள்கின்றார் (19:8). 'சாக வேண்டும்', 'தூங்க வேண்டும்', 'நடக்க வேண்டும்' என்று எலியாவின் வாழ்க்கை படுக்கையிலிருந்து நடத்தலுக்குக் கடந்து போகின்றது. வானதூதர் இரண்டு முறை உணவு தருகின்றார்: முதல் முறை அவரது உயிருக்கு, இரண்டாம் முறை அவரது உடலுக்கு.

இஸ்ரயேலின் மாபெரும் இறைவாக்கினராக எலியா இருந்தாலும், யாவே இறைவனின் உடனிருப்பை மக்களுக்கு அவர் வெளிப்படுத்தினாலும், யாவே இறைவனின் எதிரியான பாகாலின் ஆலயத்தை இடித்து, பொய்வாக்கினர்களைக் கொன்றாலும், வெறுமையும், தனிமையும், பயமும் அவரைப் பற்றிக்கொள்கின்றன. ஈசபேலின் வாள்தான் தன் கண்முன் தெரிகின்றது. உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடும் (19:3) எலியா அதை எடுத்துவிடுமாறு இறைவனிடம் இரண்டுமுறை வேண்டுகின்றார் (19:4). அதாவது, வாழ்வதற்கு இன்னும் வாய்ப்பில்லை என்றவுடன் மனம் எளிதாகத் தப்பித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கும் குறுகிய வழிதான் 'மறைசாட்சி மனப்பான்மை' (Martyr Complex). மேலும், தான் அளப்பரிய பணியைச் செய்து முடித்தாலும், 'நான் அவர்களைவிட நல்லவன் அல்ல' எனப் புலம்புகின்றார்.

எலியா தன்னைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததோ இவ்விரண்டும்தான்: 'நான் சாக வேண்டும்,' 'நான் நல்லவன் இல்லை.' 

ஆனால், இறைவனின் கற்றுத்தருதல் இங்கே வேறுவிதமாக இருக்கிறது. மூன்று அற்புதங்கள் இந்த நிகழ்வில் நடந்தேறுகின்றன. ஒன்று, பாலைவனத்தில் சூரைச் செடி இருக்கிறது. அந்த சூரைச்செடியின் நிழலில் ஒருவர் படுத்துறங்கும் அளவிற்கு நிழல்தரக்கூடியதாக இருக்கிறது. இரண்டு, தணல் மூட்டப்பட்டு அதில் அப்பம் சூடாகிக்கொண்டிருக்கிறது. மூன்று, குவளையில் தண்ணீர் இருக்கின்றது. பாலைநிலத்தில் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில் பாலைநிலக் காற்றை மரங்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஆக, நம் காலுயரச் செடிகள்தான் அதிக அளவில் இருக்கும். காலுயரச் செடிகள் நிழல் தருவதுமில்லை. ஆனாலும், இறைவனின் பராமரிப்பால் நிழல்தரும் சூரைச்செடி கிடைக்கின்றது. மரம் அல்லது நிழல் என்பது நமக்கு மேல் இருக்கும் ஒருவகையான கூரை. யாரின் தலைமேல் கூரை இருக்கிறதோ அவர்தான் பாதுகாப்பானவர் என்கிறோம்.தலையின் மேல் கூரையாக மரத்தைத் தருவதன் மூலம் எலியாவின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார் இறைவன். இரண்டாவதாக, அப்பம். அப்பம் சுடுவது (அன்றைய நாளில்) மிக நீண்டகால வேலை. மாவு பிசைய வேண்டும். அது புளிக்க வேண்டும். நெருப்பு மூட்ட வேண்டும். பின் பக்குவமாக செய்ய வேண்டும். இந்த எந்த உழைப்பும் இல்லாமல் எலியாவின் பசி ஆற்றப்படுகிறது. மூன்று, குவளையில் தண்ணீர் குடிப்பவர்கள் வீட்டில் வசிப்பவர்கள் மட்டும்தான். பயணத்தில் அல்லது பாலைநிலத்தில் தோல்பைகள்தாம் தண்ணீர்கொள்ளப் பயன்படுத்தப்படும். ஆக, ஒரு வீட்டில் இருப்பது போல பாதுகாப்பையும், பசிதாகம் ஆற்றப்படும் பாக்கியத்தையும் பெறுகின்றார் எலியா.'சாக வேண்டும்' என மன்றாடிய எலியா 'படுத்துக் கொள்கிறார்'. தான் சொன்னதை செயலில் காட்டுகின்றார். அதாவது, ஒருவர் அதிகம் தூங்குகிறார் என்றால் அவரின் மனச்சோர்வு அல்லது மனச்சுமை அதிகம் என்பது அர்த்தம். தூக்கம் ஒரு தற்காலிக சுதந்திரம் தருகிறது. தூக்கத்தில் இந்த உலகம் நமக்கு இருட்டாகிவிடுகிறது. நம் எதிரிகள் எல்லாம் மறைந்துவிட்டதாக ஒரு மாயை பிறக்கிறது. 'நான் இனி எந்தச் செயலையும் செய்யப்போவதில்லை' என்பதைச் சொல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்வதும் தூக்கம்தான்.இப்படித் திரும்பப் படுத்துக்கொள்வது நம்மை எதார்த்தத்திலிருந்து தப்பிக்க உதவினாலும், இந்தத் தீர்வு தற்காலிகமானதுதான். நாம் எழுந்து இந்த உலகைச் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறாக, உணவு கொடுத்து நீண்ட பயணத்திற்கு எலியாவை அனுப்புகிறார் இறைவன்.

'என் வாழ்வு முடிந்துவிட்டது' எனத் தெரிந்துவைத்துள்ளார் எலியா. ஆனால், 'முடிவு அல்ல இது. இன்னும் நீ செல்லவேண்டிய பாதை இருக்கிறது' எனக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார் இறைவன்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:30-5:2), கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மாதிரியாக தன் எபேசுத் திருச்சபைக்கு அளிக்கும் பவுலடியார், அவர்கள் அந்த மாதிரியில் தங்கள் வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வாழ்வியல் விதிமுறைகளைத் தருகின்றார். 'மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்!' (4:31), 'ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள்' (4:32), 'நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்!' (5:1), என்று அறிவுரை சொல்கின்ற பவுல் இறுதியாக ஒரு அழகிய உருவகத்தைக் கையாளுகின்றார்.

தொடக்கக் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதற்குத் தடையாக இருந்தது அவருடைய சிலுவை மரணம். குற்றவாளிகளில் ஒருவராக, இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவே, கொடிய சிலுவை மரணத்தைத் தழுவிய இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குச் சிலுவை இடறலாக இருந்தது. இவ்வாறாக, அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை அவர்களுடைய நம்பிக்கைக்குத் தடையாக இருந்தது. இந்தத் தடையை நீக்க புதிய இறையியலைக் கற்றுக்கொடுக்கின்றார் பவுல்:

'கிறிஸ்து உங்களுக்காக தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக கடவுளிடம் ஒப்படைத்து ...'

இயேசுவின் இறப்பு அவருக்கான இறப்பு அல்ல, மாறாக, அனைவருக்குமான இறப்பு. மேலும், தூசியும், துர்நாற்றமும், எலும்புக் கூடுகளும், கழுகளின் ஓலமும், இரத்தமும், வியர்வையும், அழுக்கும், புளித்த காடியும் இருந்த கல்வாரி மலை சிலுவைப் பலியை, ஏதோ ஒரு ஆலயத்தில், தூய்மையான இடத்தில் நடந்தேறிய 'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' எனக் கற்றுத்தருகின்றார் பவுல். இவ்வாறாக, தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்கு அவர்களை அழைத்துச்சென்று, அந்த நிகழ்வையே வாழ்வியல் மற்றும் நம்பிக்கை பாடமாக ஆக்குகின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 6:41-51) கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியே. யூதர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே 'வாழ்வுதரும் உணவு' விவாதம் தொடர்கிறது. 'யூதர்கள்' என்பவர்கள் யூத மதத்தை அல்லது சமூகத்தைச் சார்ந்தவர்கள் எனச் சொன்னாலும், இங்கே 'யூதர்கள்' என்பதை 'இயேசுவுக்கு எதிரானவர்கள், அவரை ஏற்றுக்கொள்ள இடறல்படுபவர்கள்' என்ற அர்த்தத்தில்தான் பொருள் கொள்ள வேண்டும். 

'வாழ்வு (6:48), நிலைவாழ்வு (6:47), இறுதிநாளில் உயிர்ப்பு (6:44)' - இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் வருகின்றன. வாழ்வு என்பது சாவிற்கு எதிர்ப்பதம் அல்ல. மாறாக, நிறைவாழ்வு. நிலைவாழ்வு அல்லது இறுதிநாளில் உயிர்ப்பு என்பது மறுவாழ்வைக் குறிப்பது போல தோன்றினாலும், அவை மறுவாழ்வைக் குறிப்பதில்லை. மறுவாழ்வு குறித்த சிந்தனை இன்னும் அதிகமாக வேரூன்றாத சூழலில்தான் யோவான் தன் நற்செய்தியை எழுதுகின்றார். மேலும், இயேசுவின் இரண்டாம் வருகை மிக சீக்கிரமாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஆக, இறுதிநாள் என்பது அந்த இரண்டாம் வருகையின் நாள் (ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்!). 'நிலைவாழ்வு' என்பதை 'நிறைவாழ்வு' (யோவா 10:10) எனவும் எடுத்துக்கொள்ள முடியாது.

யோவான் கிரேக்க சிந்தனை மற்றும் 'அறிவுவாதம்' (Gnosticism) கருத்தியலால்  அதிகம் கவரப்பட்டவர். அவர்காலத்தில் நிலவிய கிரேக்க சிந்தனைப்படி மனிதர் என்பவர் உடல் மற்றும் ஆன்மாவின் கலவை என்று கருதப்பட்டார். ஆக, உடல் அழியக் கூடியது. ஆன்மா அழியாததது. மனிதர்கள் உடலைச் சார்ந்தவற்றைத் தேடினால் அவர்கள் அழிவைத் தேடுகிறார்கள். ஆன்மா சார்ந்தவற்றைத் தேடினால் அழியாததைத் தேடுகிறார்கள். ஆகவேதான், செக்ஸ், குடி, போசனப்பிரியம் மற்றும் விபச்சாரம் என்று வாழ்ந்தவர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். இதற்கு மாறாக, அறிவு, புகழ், வெற்றி, கணிதம், ஆராய்ச்சி, தத்துவம் என தேடியவர்கள் அழியாததைத் தேடியவர்களாகக் கருதப்பட்டனர். உடல்-ஆன்மா பிளவு யோவான் நற்செய்தியில் அதிகம் புலப்படுகிறது. இந்த உடல்-ஆன்மா பிளவை யோவான், 'உலகம்-கடவுள்', 'இரவு-பகல்', 'கீழ்-மேல்' என்ற சொல்லாடல்கள் வழியாகவும் வெளிப்படுத்துகின்றார். வாழ்வு பற்றி யோவான் எழுத மற்றொரு காரணம் அவருக்கு யூத விவிலியம் (அதாவது, நம் முதல் ஏற்பாடு) நன்றாகத் தெரிந்தது. யூதர்களின் தோரா நூலின் படி மனிதர்களுக்கு இறுதியாக கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கட்டளை வாழ்வைத் தேடுங்கள் என்பதுதான்: 'இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். நீயும் உன் வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்!' (காண் இச 30:15-20). மனிதர்கள் தேட வேண்டிய வாழ்வு இயேசுதான் என்று இயேசுவை யூத சட்ட மற்றும் இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றார் யோவான்.

இங்கே, யோவான் நற்செய்தியில் வரும் 'எதிர்மறை நேர்கருத்து' (irony) என்னும் இலக்கியப் பண்பை புரிந்துகொள்வோம். இவ்வகை இலக்கியப் பண்பில் இரண்டு பேருக்கும் இடையில் உரையாடல் நடக்கும். அந்த உரையாடலில் ஒருவர் மேல் கோட்டிலும், மற்றவர் கீழ் கோட்டிலும் இருப்பார். இந்த உரையாடலை வாசிக்கும் நபர் இந்த மேல் கோட்டிற்கும், கீழ் கோட்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு உரையாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார். இந்த இலக்கியப் பண்பு யோவான் நற்செய்தியில் பல இடங்களில் உள்ளன: 'ஒருவர் மீண்டும் பிறக்க வேண்டும்' என மேல் கோட்டில் பேசுவார் இயேசு. 'மீண்டும் எப்படி தாய் வயிற்றுக்குள் நுழைந்து பிறக்க முடியும்' என கீழ்கோட்டில் பேசுவார் நிக்கதேம் (3:1-8). 'அவர் வாழ்வு தரும் தண்ணீரை உனக்குக் கொடுப்பார்' என்பார் இயேசு. 'உம்மிடம் வாளி இல்லையே' என்பார் சமாரியப் பெண் (4:1-42). இந்த நிகழ்வுகளை வாசிக்கும் வாசகர், இந்த இரண்டு கோட்டு அர்த்தங்களையும் பார்த்து ஒரு நொடி புன்னகைப்பார். அந்தப் புன்னகையில் உரையாடலின் அர்த்தம் அவருக்கும் புரிந்துவிடும். இதுதான் இந்த இலக்கியப் பண்பின் சிறப்பு. இன்றைய நற்செய்தியிலும் இந்த இலக்கியப் பண்பு இருக்கிறது. 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என மேல் கோட்டில் இயேசு சொல்ல, 'இவர் அப்பா - அம்மா நமக்குத் தெரியுமே' எனக் கீழ் கோட்டில் யூதர்கள் சொல்கின்றனர். வாசிக்கும் நமக்குப் புரியும் இந்த யூதர்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்று.

இவ்வாறாக, 'எங்களுக்குத் தெரியும்' என்ற அவர்கள் நிலையிலிருந்து சற்று உயர்த்துகின்றார். 'கடவுள்தாமே கற்றுத்தருவார்' என்று அவர்கள் தெரிந்திருந்தும், கடவுளின் கற்றுத்தருதலுக்கு அவர்கள் திறந்த மனம் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கு (54:13) இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கற்றல் யாருக்குச் சாத்தியம்? 'தந்தையால் ஈர்க்கப்படுபவர்களுக்கே' அது சாத்தியம்.கடவுளை நம்புவதற்கும் கடவுள்தான் அருள்தர வேண்டும். தந்தை தன்னிடம் ஈர்ப்பது என்பது அவரது கற்றுக்கொடுத்தலில் நிறைவு பெறுகிறது (யோவா 6:45). இஸ்ரயேல் மக்களை தன் மகனாக, மகளாக நினைத்து தன்னிடம் அழைக்கின்றார் யாவே இறைவன். யூதர்களின் பொய்யைத் தோலுரித்துக் காட்டுகின்றார் இயேசு: 'உங்க கடவுள் உங்களை மகன் என்றார், ஆனால் அந்தக் கடவுளின் மகனை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் யோசேப்பின் மகன் என்று சொல்லித் தப்பிக்கப்பார்க்கிறீர்கள்.' இவ்வாறாக, இயேசுவின் உடல் பற்றி தெரிந்தவர்களுக்கு, அவர்கள் அறியாத 'விண்ணிலிருந்த உணவு' என்ற சிந்தனையை அவர்களுக்குக் கற்றுத்தருகின்றார் இயேசு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

நாம் சிலவற்றைத் தெரிந்துவைத்துள்ளோம். சிலவற்றை மற்றவர்கள் கற்றுத்தருகிறார்கள். அப்படி அவர்கள் கற்றுக்கொடுக்கும்போது அந்தக் கற்றலை நாம் ஏற்றால்தான் நம் தெரிதல் வளரும். 

அ. மூன்று நிலைகள்

'சாகப்போகிறேன்,' 'தூங்கப் போகிறேன்,' 'நடக்கப் போகிறேன்' என்ற நிலையில்தான் கற்றல் நடக்கிறது. 'சாகப்போகிறேன் மனநிலையில்' கற்றலுக்கு இடமே இல்லை. 'தூங்கப் போகிறேன் மனநிலையில்' கற்றல் பாதி நடைபெறுகிறது. 'நடக்கப் போகிறேன் மனநிலையில்தான்' கற்றல் முழுமை அடைகிறது. ஆக, நான் என் வாழ்வில் இந்த மூன்றில் எந்த நிலையில் இருக்கிறேன்? எனக்குத் தெரிவதுதான் உலகம் என நான் நினைத்துவிடக்கூடாது. நாளை நான் புதியவற்றைத் தெரியலாம். எனக்குச் சிந்தனை மாற்றம் வரலாம். ஆக, ஒன்றை நாம் கேட்டவுடன், உணர்ந்தவுடன், 'இதுதான் எல்லாம்!' என்ற முடிவுக்கு வந்துவிடாமல், நம்பிக்கையோடும், துணிவோடும் காத்திருக்க வேண்டும்.

ஆ. தெரிதல் வாழ்வில் வெளிப்பட வேண்டும்

'தெ ப்ருஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' ('the proof of pudding is in the eating') என்பார்கள். புட்டு நன்றாக இருக்கிறது என்றால், அது சாப்பிடுபவருக்கு இனிக்க வேண்டும். ஆக, எனக்கு வாழ்வில் தெரிதல், அறிதல் இருக்கிறது என்றால், அந்தத் தெரிதல் என் வாழ்வில் செயல்களாக, என் பழக்கமாக வெளிப்பட வேண்டும்.

இ. எனக்குத் தெரியாதா?

கற்றுக்கொள்வதற்கு மிகவும் பெரிய தடையாக இருப்பது இதுதான். 'எனக்குத் தெரியாதா?' என்று நான் சொல்லும்போதே, கற்றுக்கொடுப்பவர் உள்ளே வந்துவிடாமல் நான் கதவுகளை அடைத்துவிடுகிறேன். மேலும் இந்த மனநிலை நம் முற்சார்பு எண்ணங்களே உண்மை என்ற கிட்டப்பார்வைக்கும் இட்டுச்செல்கின்றன.

இறுதியாக,

'எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியும்' ஜன்னலை நான் எனக்கும் எனக்கும், எனக்கும் பிறருக்கும், எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுநிலைகளில் சரி செய்ய, எனக்குத் தெரிவதிலிருந்து, அடுத்தவரின் கற்றுத்தருதலுக்கு என் மனம் திறக்க வேண்டும். அப்படி மனம் திறந்தால் என் வாழ்விலும் சோர்வு, துயரம், முற்சார்பு எண்ணம் மறையும். இவைகள் மறைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்.