இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

தறியின் ஓடுகட்டை

யோபு 7:1-4, 6-7
1 கொரிந்தியர் 9:16-19, 22-23
மாற்கு 1:29-39

உருவகங்கள் என்றும் ஆச்சர்யம் தருபவவை. உருவகங்கள் அதை உருவாக்கியரின் கைகளில் இருந்து விலகியவுடன் அது தனக்கென்று ஒரு பொருளை கைக்கொள்ளும் ஆற்றல் பெற்றுவிடுகிறது. அதைப் பயன்படுத்தும் இடம், நபர், காலம், சூழல் பொறுத்து அது தன் பொருளை அழகாக விரித்துக்கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, 'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்ற இறைவசனத்தில் 'ஆயர்' என்பது 'ஆண்டவருக்கான' ஓர் உருவகம். மகிழ்ச்சியில், நன்றியில் திக்குமுக்காடும் ஒருவர் இதை வாசித்தால் 'ஆயர்' என்ற உருவகம் அவருக்குள் நேர்முகமான உணர்வைத் தட்டி அவருக்கு இன்னும் உற்சாகம் அளிக்கிறது. அதே வேளையில் இழப்பு, கவலை, வெறுமை என சோர்ந்து நிற்கும் ஒருவருக்கு இதே உருவகம் அவருக்குள் எதிர்நோக்கையும், 'அனைத்தும் மாறிவிடும்' என்ற நம்பிக்கை உணர்வையும் தருகிறது. நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு உருவகமாக ஏதோ ஒரு உருவகத்தை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே நம் வாழ்வியில் எதார்த்தம்.

இன்றைய முதல் வாசகத்தில் (யோபு 7:1-4, 6-17) நாம் காணும் ஓர் உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. அதிலிருந்து நம் சிந்தனையை இன்று தொடங்குவோம்: 'என் வாழ்நாள்கள் தறியின் ஓடுகட்டையிலும் விரைந்தோடுகின்றன!' (யோபு 7:6). எந்நேரமும் கைத்தறிகளின், விசைத்தறிகளின் சத்தங்களுக்கு நடுவில் நான் பிறந்த வளர்ந்ததால் என்னவோ இந்த உருவகம் என்னை மிகவும் கவர்கின்றது. தறியில் ஓடுகட்டை மிக முக்கியமான ஒன்று. கைத்தறியின் அந்தப் பக்கத்தில் நூல் பாவு இருக்கும். தறியின் இந்தப் பக்கம் அதை தன் கைகளால் இயக்குபவர் அமர்ந்திருப்பார். அவரின் ஒரு கை நூல் கோர்க்கும் கட்டையையும் மறு கை ஓடு கட்டையையும் இயக்கும். இந்த ஓடு கட்டையின் நடுவில் நூல்கண்டு இருக்கும். ஓடுகட்டையின் இரு முனைகளிலும் உலோக மூக்கு இருக்கும். ஓடு கட்டையின் சக்கரங்கள் வழுவழுப்பான சக்கரத்தில் இருக்கும். ஓடுகட்டைக்கு சரியான வேகம் தரப்பட வேண்டும். அதிகமான வேகம் தந்தால் அது தறியைவிட்டு வெளியே பாய்ந்துவிடும். குறைவான வேகம் தந்தால் பாதியில் நின்றுவிடும். சீரான வேகத்தில் இயங்கும் இந்த தறிகட்டைதான் ஒரு கைத்தறியின் இயக்கத்தின் அடையாளம்.

தன் வாழ்நாள்களை தறியின் ஓடுகட்டையோடு ஒப்பிடுகின்றார். ஏன்? தன் வாழ்வின் வேகம் அப்படி இருப்பதாக அவர் எழுதுகின்றார். இந்த ஒப்பீட்டுக்கு முன் அவர் மேலும் இரண்டு உருவகங்களைப் பயன்படுத்துகின்றார்:

அ. நிழலுக்கு ஏங்கும் அடிமை

ஆ. கூலிக்கு காத்திருக்கும் வேலையாள்

வெயிலில் வேலை செய்யும் அடிமை நிழலுக்காக ஏங்குவான். அப்படி அவன் நிழலில் சற்றுநேரம் இளைப்பாறினாலும் அவன் இன்னும் பார்க்க வேண்டிய வேலை வயலில் இருப்பதால் அவன் மீண்டும் வெயிலுக்கே செல்வான். வெயிலில் நிற்கும் அவன் மீண்டும் நிழல் தேடுவான். ஒரு பக்கம் தான் தேடி அலையும் நிழல். மறுபக்கம் தான் பார்க்க வேண்டிய வேலை. இந்த இரண்டிற்கும் இடையே அவன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். 

அதே போல, கூலிக்கு காத்திருக்கும் வேலையாள். இது எனக்கு தனிப்பட்ட அனுபவமாகவே இருந்திருக்கிறது. என் அம்மாவுக்கு பள்ளிக்கூடத்தில் சமையலுக்கு வேலை கிடைக்காத நாள்களுக்கு முன் அவர் பருத்தி எடுக்க காட்டுக்குச் செல்வார். மாலையில் 5 மணிக்கு 6 ரூபாய் கூலி தரப்படும். 6 ரூபாய் கைகளில் ஏந்தி வீட்டிற்கு வருவதற்குள் பால், எண்ணெய், காய்கறி, அரிசி என அன்றைய இரவுக்கும், அடுத்தநாள் காலைக்குமான உணவிற்கான பொருள்களை வாங்க வேண்டியிருப்பதால் வீட்டிற்குள் நுழையும்போது வெறும் 20, 50 சில்லறைக்காசுகளே மிஞ்சும். உடனே அடுத்த நாள் தேவை என்னும் கவலை பற்றிக்கொள்ளும். இரவு தூங்கும்போதுகூட அடுத்தநாள் தனக்கு அதே பருத்திக்காட்டில் வேலை கிடைக்குமா? அல்லது இன்னும் தூரம் செல்ல வேண்டுமா? என்ற கவலை வந்துவிடும் அவருக்கு. ஆக, ஒரு வேலையின் அல்லது உழைப்பின் கனியை இரசித்து ருசிப்பதற்குள் அடுத்த நாள் வேலை அல்லது கவலை வந்துவிடுகிறது.

இதே கவலைதான் தனக்கும் இருப்பதாக யோபு எழுதுகின்றார்: 'இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன். இரவோ நீண்டிருக்கும். விடியும்வரை புரண்டு உழல்வேன்.' 

இரவில் கவலைகள். பகலில் உழைப்பு. மாலையில் கூலி. மறுபடி கவலைகள். மறுபடி உழைப்பு. மறுபடி கூலி. இப்படி சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கை என்றுமே மாறாது என்ற நம்பிக்கையின்மை வந்துவிடுகிறது யோபுவிற்கு. 'என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா!' என விரக்தியடைகின்றார்.

கொஞ்சம் நம் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திப்பார்க்கவே நமக்கு பயமாக இருக்கிறது. இல்லையா? நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். பகல் முழுவதும் வேலை. வேலை பார்த்துவிட்டு ஓய்ந்திருக்கலாம் என இரவில் தூங்க வீட்டிற்கு வந்தால், 'அடுத்த நாளிலிருந்து பேருந்து கட்டணம் உயர்வு, டீசல் கட்டணம் உயர்வு, மின் கட்டனம் உயர்வு' என டிவி செய்தியில் வயிற்றில் புளியைக் கரைத்து தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறார்கள். மேலும், அடுத்த நாளைப் பற்றிய திட்டமிடலில் ஆழ்ந்துவிடுகிறோம். இன்று இந்த உலகம் நம்மை 'பிஸியாகவே' இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. நாம் 'பிஸியாக இருந்தால்தான்' நாம் 'ப்ரொடெக்டிவாக' இருக்கிறோம் என்ற கற்பனையையும் இத்தோடு கட்டிவிடுகிறது. நாள்காட்டி, திட்டமிடல், வேக் அப் டைமர், ஸ்டாப் வாட்ச் என சின்னஞ்சிறியவற்றிலும் நாம் திட்டமிடத் தொடங்கிவிட்டோம். நம் குழந்தைகள் நமக்குமேல் பிஸியாக இருக்கிறார்கள். காலையில் யோகா அல்லது கராத்தே. பகல் முழுவதும் பள்ளி. மாலையில் டியூஷன், வீட்டுப்பாடம். இரவில் ப்ராஜக்ட். வீக்எண்டில் ஸ்விம்மிங், ஸ்கேடிங், கர்ஸிவ் ரைட்டிங் என நிறைய செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் விளையாட்டு, கற்பனைத்திறன், படைப்பாற்றல் என அனைத்தையும் இழக்கச் செய்கிறோம். 

நாம் இப்படி பிஸியாக இருக்க என்ன காரணம் என்பதை யோபுவைப் போன்ற ஞானநூல் அறிஞர் சபை உரையாளர் இப்படி பதிவு செய்கிறார்:

'மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல். காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் எனச் சொல்லப்படுகிறது.' (சஉ 4:4-5).

ஆக, அடுத்தவர் என்னை 'மடையன்' என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயத்தில் நான் ஓடி ஓடி உழைக்கின்றேன். என் வேலைகளை விறுப்பாகச் செய்கின்றேன். அடுத்தவரை நான் 'மடையர்' என்று சொல்லாதவண்ணம் அவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்.

இந்த ஓட்டத்திற்கான, பரபரப்புக்கான தீர்வை யோபு தரவில்லை. ஆனால், சபை உரையாளர் தொடர்ந்து எழுதுகின்றார்: 'உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.'

இவ்வாறாக, யோபுவின் வாழ்க்கை ஓட்டம் தறியின் ஓடுகட்டை போல இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த முனையை தொடும் ஓடுகட்டை நின்று ஓய்வெடுக்காமல் மீண்டும் அடுத்த முனை நோக்கி ஓடுகிறது. 'நிழல்' என்று கொஞ்ச நேரம் நிற்கவும் முடியவில்லை. 'வேலை' என்று வெயிலில் நின்றுகொண்டே இருக்கவும் முடியவில்லை.

இதுதான் மனிதரின் உழைப்பா? இவ்வளவுதான் மனித வாழ்க்கையா? நம் உழைப்பு வெறும் காற்றா? நம் உழைப்பு பயனற்றதா? நம் வாழ்வு பொருளற்றதா? உழைப்பில் மகிழ்ச்சி என்பதே இல்லையா?

இப்படி எல்லாம் நமக்கு இப்போது கேள்விகள் எழலாம். இப்படிக் கேள்விகள் கேட்டு விரக்திக்கு நாம் உள்ளாகிக்கொள்ள வேண்டாம்.

ஏனெனில், இந்தக் கேள்விகள் தரும் விரக்தியை அப்படியே நம்பிக்கைத் துளிகளாக மாற்றி நம்மேல் தூரல் பெய்யச்செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 1:29-39). இயேசுவின் ஒரு நாள் புரோகிராமை அல்லது அவருடைய ஒருநாள் டாஸ்க் லிஸ்டை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.இன்றைய நற்செய்தி வாசகத்தை கால அட்டவணையாக இப்படி போடலாம்:

இடம்: கப்பர்நகூம்

நாள் 1

காலை 09:00 மணி தொழுகைக்கூடத்தில் போதனை, தீய ஆவி பிடித்தவர் நிகழ்வு மாலை 03:00 மணி தேநீர், பேதுருவின் இல்லம் மாலை 03:30 மணி பேதுருவின் மாமியாருக்கு காய்ச்சலிலிருந்து நற்சுகம் தருதல் மாலை 03:45 மணி மாமியாரின் பணிவிடை, இயேசுவும் சீடர்களும் ஓய்வெடுக்கின்றனர். (மாமியார் அவர்களுக்கு பணிவிடை புரிந்தார் என பதிவு செய்கின்றார் மாற்கு. ஒருவேளை சீடர்கள் குளிப்பதற்காக அல்லது பாதங்கள் கழுவுவதற்காக சுடுதண்ணீர் வைத்திருப்பார் மாமியார். இது மிகவும் சாத்தியம். ஏனெனில் காய்ச்சலில் தண்ணீரைத் தொட முடியாமல் இருந்த மாமியார் இப்போது தண்ணீர் காய்ச்சுகின்றார். ஆக, அவருக்கிருந்த காய்ச்சல் தண்ணீருக்கு வந்ததால் தண்ணீர் கொதிக்கிறது!) மாலை 06:00 மணி பேதுருவின் வீட்டின்முன் கூட்டம். பலர் நலம் பெறுகின்றனர் மாலை 09:00 மணி இரவு உணவு

நாள் 2

காலை 03:00 மணி துயில் எழுதல், இயேசு செபிக்கச் செல்லுதல் காலை 06:00 மணி சீடர்கள் தேடி வருதல் காலை 09:00 மணி 'நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்'

இவ்வாறாக இயேசுவின் நாள் தறியின் ஓடுகட்டைபோல ஓடுகின்றது. 

ஆனால், யோபுவைப் போல ஏன் இயேசு விரக்தி அல்லது சோர்வு அடையவில்லை? இயேசுவால் எப்படி ஒவ்வொரு நாளையும் இனிமையாக வாழ முடிந்தது? ஆக, பிஸியாக இருந்தாலும் அதை நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்பது இயேசுதரும் படிப்பினையாக இருக்கிறது.

யோபுவிடம் இருந்த பரபரப்பு இயேசுவிடம் சாந்தம் என்ற நிலையாக எப்படி மாறியது? இயேசுவால் எப்படி நிழலையும், வேலையையும் சமமாகப் பார்க்க முடிந்தது. இதற்கு நாம் மூன்று காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டுகொள்ள முடிகிறது:

அ. மனித உறவுகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் நலம் நாடுதல்

மனிதர்களோடு செலவிடும் நேரம் ஒருபோதும் செலவல்ல, அது ஒரு முக்கியமான முதலீடு என்பதை அறிந்திருந்தார் இயேசு. இதை மாற்கு நற்செய்தியாளரும், 'இயேசுவும் மற்ற சீடர்களும் தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன், சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்' என பதிவு செய்கின்றார். இயேசுவை எப்போதும் மக்கள் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். யாக்கோபு, யோவான், சீமோன், அந்திரேயா ஆகிய நால்வரும் ஒரே ஊர்க்காரர்கள். ஆக சீமோனின் மாமியார் இவர்கள் 4 பேருக்கும் நன்கு அறிமுகமானவர். சீமோனின் மாமியாரைக் குணமாக்குவதற்காக இயேசு அவரின் வீட்டிற்குச் செல்கின்றார். மாமியார் நோயுற்றிருப்பது அங்குதான் அவரிடம் சொல்லப்படுகின்றது. இதைச் சொன்னவர்கள் தயங்கி தயங்கித்தான் சொல்லியிருப்பார்கள். அல்லது 'தீய ஆவியை விரட்டிய இவரால் நோயை விரட்ட முடியுமா?' என்று சோதித்துப்பார்ப்பதற்காகக் கூட அவர்கள் இப்படிச் சொல்லியிருப்பார்கள். சொல்லப்பட்ட உடன் இயேசு அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்குகிறது. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்.

இவ்வாறாக, இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரின் குறையை நிறைவு செய்கிறது. மனித உறவுகளில் நாம் செய்ய வேண்டியது இதுதான். 'இவன் நம்ம சீடன்தான! இவருடைய வீட்டிற்கெல்லாம் ஏன் போகணும்?' என நினைக்கவில்லை இயேசு. ஒருவரின் வீட்டிற்குள் நுழைவது எப்பது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைவது. எல்லாரையும் நாம் நம் வீட்டிற்குள் வரவிடுவதில்லை. இந்த நேரத்தில் என் அருள்பணி நிலையின் மேன்மை புரிகிறது. 'அருள்பணியாளர்' என்று நான் என்னை அறிமுகப்படுத்தினால் அடுத்தவர் என்னை உடனே தன் வீட்டிற்குள் அழைக்கின்றார். இப்படி அழைக்கப்படுவது எனக்கு தரப்படும் மேன்மைதானே! இதில் மிகப்பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. இல்லையா?

சீமோனின் மாமியாரின் வீட்டிற்குள் செல்கின்ற இயேசு அங்கே இருக்கின்ற குறையை நிறைவு செய்கின்றார். ஆக, நான் அடுத்தவரின் வீட்டிற்குள் செல்லும் என் பிரசன்னமும் அடுத்தவரின் குறையை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும். நாம் மற்றவரோடு கொண்டிருக்கின்ற உறவு, 'அருகில் செல்லுதல்,' 'கையைப் பிடித்தல்,' 'தூக்குதல்' என்ற மூன்று நிலைகளாக இருக்க வேண்டும். இன்று நம் உறவுகள் நம்மிடம் பணம், பொருள் என எதுவும் எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், 'அருகில் இருப்பதும்,' 'அரவணைப்பதும்,' 'கைதூக்கிவிடுவதும்' தான். 

இவ்வாறாக, தன் உழைப்பையும், நேரத்தையும், ஆற்றலையும் நாம் அடுத்தவரின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் அது ஒருபோதும் வீணாகவும், விரக்தியாகவும் மாறாது.

ஆ. திரும்ப எதிர்பார்க்காத உழைப்பு

கடந்த மாதம் அருள்பணியாளர் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு துறவற சபையைச் சார்ந்தவர். அவர் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொன்னார். அப்படிச் சொன்னவர் என்னைப் பார்த்து, 'நீ மறைமாவட்டக் குருவாய் இருப்பதால் வெறும் பூசை மட்டும்தான் வைக்க முடியும்!' என்று நக்கலாகச் சொன்னார். இரண்டு மூன்று நாள்களாக என் சிந்தனை அவர் சொன்னதை வைத்தே ஓடியது. நாள் முழுவதும் நான் பிஸியாக இருக்கிறேன். திருப்பலி வைக்கிறேன். மக்களை சந்திக்கிறேன். நோயுற்றவர்களைத் தேடிச் செல்கிறேன். இறந்தவர்களை அடக்கம் செய்கிறேன். ஆனால், மாத இறுதியில் எனக்கென்று சம்பளம் 2 லட்சம் இல்லை. அப்படி என்றால் என் உழைப்பு வீணா?

என் கேள்விக்கான பதில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருக்கிறது. இயேசு நிறைய வேலைகளைச் செய்கிறார். 'பலரை குணமாக்குகின்றார். பல பேய்களை ஓட்டுகின்றார்.' இவர் இதற்கென்று எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. தன் நல்ல உள்ளத்திற்கு மக்களால் ஒருபோதும் கூலி தரமுடியாது என நினைக்கின்ற இயேசு அனைத்தையம் இலவசமாகக் கொடுக்கின்றார். ஆக, இங்கே இயேசுவின் தன்மதிப்பையும் பார்க்கலாம். அவரின் உழைப்பை அவர் ஒருபோதும் விலைபேசவில்லை. நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் என் நண்பருக்கு நான் ஊதியம் கொடுக்க முடியுமா? அல்லது நான் அப்படிச் செய்யும்போது அதற்கு கூலி பெற முடியுமா?

இயேசு ஒருபோதும் தன் வாழ்வை கூலிக்காக வாழவில்லை. இதே மனநிலை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 9:16-19, 22-23) தூய பவுலிடமும் விளங்குவதைப் பார்க்கின்றோம்: 'அப்படியானால், எனக்கு கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதில் உள்ள மனநிறைவே அக்கைம்மாறு. நான் நற்செய்தி அறிவுப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை.' என்ன ஒரு பெரிய மனது பவுலுக்கு? தான் உழைப்பின் கூலிக்கு உரிமையுடையவர் என்றாலும், தான் பெறும் மனநிறைவே அக்கைம்மாறு அல்லது கூலி என நினைக்கின்றார். இப்படி நினைப்பதற்கு நிறைய துணிச்சலும், அதைவிட நிறைய கடவுள் பராமரிப்பின்மேல் நம்பிக்கையும் வேண்டும்.

ஆக, நான் செய்யும் எந்த நற்செயல்களுக்கும் அதற்குரிய கூலியை திரும்ப எதிர்பார்க்காமல் நான் உழைக்கும்போது என் உழைப்பு விரக்தி தருவதில்லை.

இ. முதன்மையானதை முதன்மையானதாக வைப்பது

'நாம் ஒருநாளில் செய்யும் செயல்களில் முக்கியமானவற்றை நாளின் முதலிலேயே செய்துவிட வேண்டும்' என்றும், 'அடுத்தவருக்கான நேரத்தை நாம் அடுத்தவருக்குக் கொடுப்பதைவிட நமக்குரிய நேரத்தை நமக்குக் கொடுக்க வேண்டும்' என்றும் சொல்கிறது மேலாண்மையியல். தன் வாழ்வில் முக்கியம் என கருதும் இறைவேண்டலை நாளின் முதல் வேலையாக வைத்திருக்கின்றார் இயேசு. இயேசு தன் பேட்டரியை சார்ஜ் செய்யும் நேரம் இதுதான். மேலும் இயேசு தனக்குரிய ஓய்வைக்கூட தனக்குக் கொடுக்காமல் தன் வானகத்தந்தைக்காக கொடுக்கின்றார். இயேசுவான் இந்த ஓய்வை எடுக்க முடிந்ததால்தான் நாள்முழுவதும் அவரால் படைப்பாற்றலோடு செயல்பட முடிகிறது.

ஈ. அடுத்தவருக்காக உன்னை மாற்றிக்கொள்ளாதே

இது மிக முக்கியமான பாடம். தனியாக மலையில் செபித்துக்கொண்டிருக்கின்ற இயேசுவைச் சந்திக்கின்ற சீடர்கள், 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' என்கிறார்கள். இயேசு இதைக் கேட்டு மகிழ்ச்சியடையவில்லை. 'அப்படியா, எங்கே அவர்கள்?' என்று அவர்களைத் தேடிச்செல்லவில்லை. அருள்பணியாளர் வாழ்வில் வரும் மிகப்பெரிய சோதனை இதுதான். 'ஃபாதர் உங்கள எல்லாரும் எங்க ஊர்ல தேடுறாங்க!' என்றும், 'நீ நல்லா வேலை செய்ற! உன்னைவிட்டால் யாரால் இந்த வேலையை செய்ய முடியும்?', 'நீங்கதான் பூசைக்கு வரணும். எல்லாரும் மீட்டிங்ல உங்க பேரைத்தான் சொன்னாங்க!,' 'உங்களாலதான் இந்த ஸ்கூல நடத்த முடியும்!' இதெல்லாம் சீடர்களின் வார்த்தைகளைப் போல வரும் சோதனைகள். 

மக்களின் மனது மாறக்கூடியது என்றும், அவர்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்றும், தன்னைவிட மற்றொருவர் தன்வேலையை நன்றாகச் செய்வார் என இயேசு அறிந்திருந்ததாலும்தான், 'அடுத்த ஊருக்குப் போவோம்!' என்கிறார் இயேசு. நம் வாழ்வில் 'போர் அடிக்குது!' என்று சில நேரங்களில் சொல்வதற்குக் காரணம் நாம் ஒரே வேலையைச் செய்வதுதான். அல்லது ஒரே ஊருக்குள் இருப்பதுதான். 'அடுத்த ஊருக்குப் போவோம்!' என்று நான் துணிந்தால் எத்துணை நலம்.

இறுதியாக,

நாம் எல்லாருமே தறியின் ஓடுகட்டைகள்தாம்! விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறோம்தான்! ஆனால், நமக்குள்ளேயே ஓடினால், ஊதியம் தேடி ஓடினால், நீடித்த நிழல்தேடி அமர்ந்தால் நம் வாழ்வு யோபுவின் வார்த்தைகள் போல் விரக்தியாகும்.

ஆனால், அடுத்தவரை நோக்கி, அடுத்தவரின் நலன்நோக்கி, முதன்மையானது நோக்கி நகர்ந்தால் அது நிறைவே - இயேசுவின் வாழ்வு போல!