இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

நற்செய்தியின் தொடக்கம் நம்பிக்கை

எசாயா 40:1-5,9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு 1:1-8

'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்!'

வயல்வெளியில் தங்கி தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியூட்டும் 'நற்செய்தி' என அறிவிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் 'நோ நியூஸ் இஸ் குட் நியூஸ்' என்ற பழமொழி உண்டு. அதாவது, ஒன்றைப் பற்றி செய்தி வராமல் இருக்கிற வரைக்கும் அது நல்ல செய்தி. அல்லது செய்தி என்று ஏதாவது ஒன்றைப் பற்றி ஏதாவது வந்தால் அங்கே ஏதோ எதிர்மறையானது இருக்கிறது என்று அர்த்தம்.

  இன்றைய முதல் (காண். எசாயா 40:1-5, 9-11) மற்றும் நற்செய்தி வாசகங்களின் (காண். மாற்கு 1:1-8) மையமாக இருக்கும் ஒற்றைச் சொல் 'நற்செய்தி.' 'நற்செய்தி' என்றால் 'நல்ல செய்தி' என்று புரிந்து கொள்வது மிகவும் குறுகிய புரிதலாக இருக்கும். 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கான விளக்கத்தை நம் மேனாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், 'நாசரேத்தூர் இயேசு' நூல் முதல் பாகத்தில் பின்வருமாறு பதிவு செய்கிறார்:

'நற்செய்தியாளர்கள் இயேசுவின் போதனையை 'யுவாங்கெலியோன்' என்ற கிரேக்க பதத்தால் குறிப்பிடுகின்றனர். இந்த பதத்தின் பொருள் என்ன? இதை நாம் 'நற்செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். 'நற்செய்தி' என்ற வார்த்தை கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், 'யுவாங்கெலியோன்' என்ற வார்த்தையின் முழுப்பொருளை இது பிரதிபலிப்பதில்லை. தங்களையே தலைவர்களாகவும், மீட்பர்களாகவும், இரட்சகர்களாகவும் கருதிக்கொண்ட உரோமை பேரரசர்களின் வார்த்தை இது. பேரரசரால் விடுக்கப்பட்ட எல்லா செய்தியும் - நல்லது, கெட்டது, மகிழ்ச்சி தரக்கூடியது, துன்பம் தரக்கூடியது - இலத்தீன் மொழியில் 'எவாங்கெலியும்' என்று சொல்லப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், பேரரசனிடமிருந்து வரும் எச்சொல்லும் உலகை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை நற்செய்தியாளர்கள் எடுத்து தங்களின் எழுத்துக்களுக்குப் பெயராகச் சூட்டக் காரணம் என்னவென்றால், உரோமைப் பேரரசர்களின் வார்த்தைகள் பல நேரங்களில் நல்லதற்கான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. அவர்கள் சொன்னார்கள். செய்யவில்லை. ஆனால், தனது சொந்த அதிகாரத்தால் பேசும் இயேசுவின் வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது.'

இவ்வாறாக, எந்த வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறதோ அந்த வார்த்தையே 'நற்செய்தி.' இன்று சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில்கூட இந்நிறுவனங்களின் தயாரிப்புக்களை மற்றவர்களுக்குப் பரவாலக்கம் செய்பவரை 'எவான்ஞ்செலிஸ்ட்' ('நற்செய்தியாளர்') என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் நற்செய்தி சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது.

'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன் நற்செய்தி நூலுக்கு முகவுரை தருகின்றார் இரண்டாம் நற்செய்தியாளர் மாற்கு.

நற்செய்தியின் தொடக்கம் என்று எழுதிவிட்டு உடனடியாக வாசகரை பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்கின்றார் மாற்கு நற்செய்தியாளர்:

நற்செய்தி தொடங்கும் இடம்: பாலைவனம்

நற்செய்தியைத் தொடங்குபவர்: திருழுழுக்கு யோவான்

நற்செய்தியின் கூறு: 'வலிமைமிக்க ஒருவர் ... தூய ஆவியால் திருமுழுக்கு'

ஆக, நற்செய்தி என்பது யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபரால், யாரும் எதிர்பாராத விதமாக தொடங்குகிறது. இதுதான் கிறிஸ்து பிறப்பின் எதார்த்தமும் கூட: யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபர் வழியாக, யாரும் எதிர்பாராத விதமாக நடந்தேறுகிறது.

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் திரி 'நம்பிக்கை' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது நம்பிக்கை.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். யூதா நாடு நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு எருசலேம் மக்கள் அனைவரும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனர். 'எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஒன்றுமில்லை. அரசன் இல்லை. மண் இல்லை. நாடு இல்லை. ஆலயம் இல்லை. திருச்சட்டம் இல்லை' என புலம்பியவர்களைப் பார்த்து, 'ஆறுதல் கூறுங்கள் ... என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். மேலும், ஆண்டவரின் மாட்சி வெளிப்படுவதற்கான வேலைகளையும் முடுக்கிவிடுகின்றார் இறைவாக்கினர்.

'பாலை நிலம்,' 'பாழ்நிலம்,' 'பள்ளத்தாக்கு,' 'மலை-குன்று,' 'கோணலானது,' 'கரடுமுரடானவை' என ஆறுவகை சீரமைப்புக்களைப் பதிவு செய்கின்றார் இறைவாக்கினர் எசாயா. இந்த ஆறு இடங்களும் உருவாகக் காரணம் எருசலேமைச் சூழ்ந்திருந்த போர்மேகம். எங்கும் போர் நடந்து கொண்டிருந்ததால் 'பாலை நிலத்தில்' பாதை மறைந்து போய் கிடந்தது. மேய்ச்சல் நிலம் பாழ்நிலம் ஆனது. போர்களில் ஒளிந்து கொள்வதற்கா பள்ளங்கள் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே செயற்கை பள்ளத்தாக்குகள் இருந்தன. மலை மற்றும் குன்றுகள் மக்கள் ஒளிந்து கொண்டு தாக்கும், போரிலிருந்து தப்பிக்கும் அரண்களாக செயல்பட்டன. வேகமாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் நிறைய கோணல் மாணல் சாலைகள் உருவாகின. எங்கும் நிலையான அமைதி இல்லாததால் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டுங் குழியுமாய் கரடு முரடாய் இருந்தன. மேலும், தொடர்ந்துவரும் 'ஆயன்-ஆடு' உருவகங்கள் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆறுமே ஆடுகள் மேய்வதற்கு எதிராக உள்ள இடங்கள். மேற்காணும் இடங்களில் அல்லது இடங்களால் ஆடுகள் காணாமல்போகும், வழிதவறும், காயங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு.

இந்த இடத்தில் 'சீயோனே, நற்செய்தி தருபவளே,' 'எருசலேமே, நற்செய்தி உரைப்பவளே' என எருசலேமை இளநங்கையாக உருவகம் செய்து 'நற்செய்தியை' பறைசாற்றுகிறார் இறைவாக்கினர். இந்த நற்செய்தியைத் தரும் அரசன் யார் என்றும், அவர் என்ன செய்வார் என்றும் தொடர்ந்து அவரே சொல்கின்றார்:

'ஆயனைப் போல தம் தந்தையை அவர் மேய்ப்பார்.

ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்;பார்.

அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்.

சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.'

'இனி தங்களுக்கு ஒன்றுமே இல்லை. எல்லாம் அழிந்துவிட்டது' என்று எண்ணியவர்களின் வாழ்க்கையில், 'இன்னும் நிறைய இருக்கிறது' என்று வாழ்க்கையின் கதவுகளைத் திறந்துவிடுகின்றார் கடவுள். ஆக, நற்செய்தியின் தொடக்கமாக நம்பிக்கை இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேதுரு 3:8-14) ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிப் பதிவு செய்கின்ற பேதுரு அந்த நாளில் 'புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் மலரும்' என்றும், இந்த நாளுக்கான தயாரிப்பாக மக்கள் 'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் விளங்கவும் வேண்டும்' என்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக வரைகின்றார் மாற்கு. மலாக்கி இறைவாக்கினர் மற்றும் எசாயா இறைவாக்கினரின் உருவகங்களை எடுத்து திருமுழுக்கு யோவானுக்குப் பொருத்துகின்றார்: 'தூதன்,' 'குரல்,' 'வழி,' 'பாதை.'

ஆக, நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது ஆயத்தம் அல்லது தயாரிப்பு. அந்த தயாரிப்பு பாலைநிலங்களில் நடந்தேறுகிறது. அந்த தயாரிப்பை செய்பவர் திருமுழுக்கு யோவான். அவரிடம் சென்றவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற்றுவந்தனர். இந்த நிகழ்வு முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடந்தேறியது என்பதைக் குறிக்கவே நற்செய்தியாளர், 'ஒட்டக முடி ஆடை,' 'தோல் கச்சை,' வெட்டுக்கிளி,' 'காட்டுத்தேன்' போன்ற அடையாளங்களையும் பயன்படுத்துகின்றார். மேலும், தனக்குப்பின் வருபவரின் பண்புகளையும் பட்டியலிடுகின்றார் மாற்கு.

நம்பிக்கை கொண்ட ஒருவரே ஆயத்தம் அல்லது தயாரிப்பு செய்ய முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கும் தரும் பாடங்கள் எவை?

1. நம் கண்களையும் தாண்டிய நிகழ்வு ஒன்று உண்டு

நம்பிக்கைக்குப் பல நேரங்களில் தடையாக இருப்பது நம் கண்கள். நாம் காண்பது மட்டுமே உண்மை என்று நினைத்துக்கொண்டு, நம் எண்ணங்களுக்கு நம் பார்வை அல்லது காட்சியால் குறுகலான ஃப்ரேம் ஒன்றை நாம் ஏற்படுத்திவிடுகிறோம். ஆனால், கண்களின் காட்சிகளையும் கடந்த நிகழ்வுகள் நம் வாழ்வில் உண்டு. பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்குண்ட இஸ்ரயேல் மக்கள் கஷ்டப்பட்டதும் இந்தப் பார்வைக் குறைபாடால்தான். அவர்களின் பார்வையை அகலமாக்குகின்றார் கடவுள்.

இயேசுவின் வருகை அல்லது பிறப்பு செய்த மிகப்பெரிய காரியம் இதுதான். நம் கண்களைத் திறந்துவிட்டது. கடவுளை அப்பா என்றழைக்கவும், ஒருவர் மற்றவரை சகோதரர், சகோதரி என்று ஏற்று அன்பு செய்யவும் நம்மைத் தூண்டியது. இயேசுவின் இறையரசு போதனையே மக்களை தங்கள் எண்ணங்களை விரிவடையச் செய்யும் போதனைதான். 

இத்திருவருகைக்காலத்தில் இந்த எண்ணத்தை நம் மனத்தில் பதிய வைப்போம். நாம் காணும் அனைத்தையும் தாண்டிய வாழ்க்கை அல்லது எதார்த்தம் அல்லது நிகழ்வு உண்டு.

2. நற்செய்தி

நற்செய்தி என்பது 'சொல்லும், செயலும் இணைந்திருக்கும் நிலை' என்று மேலே கண்டோம். இந்த வரையறையின்படி பார்த்தால் கடவுளின் செய்தி மட்டுமே இன்று நற்செய்தியாக இருக்கிறது. நம் சமூக, அரசியல், பொருளாதார, தகவல் தொழில்நுட்ப வாழ்வில் நாம் பேசும், பரிமாறும் பல வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிடுகின்றன. அவைகள் செயல்களாக மாற்றம் பெறத் தவறிவிடுகின்றன. இன்று நான் உரைப்பது நிறைவேறாமல் போவதற்கு தடையாக இருப்பது எது? எனக்கு நானே கொடுக்கும் சின்ன சின்ன வாக்குறுதிகள்கூட பல நேரங்களில் நற்செய்தியாக மாறுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்னுடைய சோம்பலா? அல்லது பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று மேலோட்டமான போக்கா?

3. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து

இயேசு யார் என்பதை இரண்டு அடைமொழிகளால் சொல்லிவிடுகின்றார் மாற்கு: 'கடவுளின் மகன்,' 'கிறிஸ்து.' இந்த இரண்டு வார்த்தைகளை தன் நற்செய்தி நூலில் விரிவாக்கம் செய்து எழுதுகின்றார் மாற்கு. இன்று நாம் தயாரிக்கும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களின் பலூன், நட்சத்திரம், விளக்குகள், குடில்கள், பாடும் கேரல்கள் நடுவில் என் இயேசு யார்? என்று என்னால் வரையறுக்க முடியுமா? எனக்கும் அவருக்கும் உள்ள உறவை நான் எந்த வார்த்தைகளைக் கொண்டு வரையறை செய்வேன்? அவர் என்னுள் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? திருமுழுக்கு யோவான் இயேசுவை 'தன்னைவிட வலிமைமிக்கவர்' என்றும், 'தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவர்' என்றும் வரையறுக்கின்றார். என் வரையறை என்ன?

4. சிறுநுகர் வாழ்வு

இன்று வாழ்வியல் மேலாண்மையில் அதிகம் பேசப்படும் வார்த்தை 'மினிமலிஸ்ட் லிவ்விங்'. அதாவது குறைவானவற்றைக் கொண்டு நிறைவாக வாழ்வது. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை முறை நமக்குச் சவாலாக இருக்கின்றது: 'ஒட்டக முடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன்'. இந்த நான்கையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக, தன்னை அறிந்த ஒரு வாழ்வு. தன்னை அறிந்த ஒருவர், தன்னிலே கட்டின்மை அல்லது விடுதலை பெற்ற ஒருவர் தன் அடையாளங்களைத் தன் ஆடையோடும், தன் உணவோடும் இணைத்துக்கொள்வதில்லை. 'உணவைவிட உடலும், உடையைவிட உயிரும்' என்று இயேசு சொல்வதன் பொருள் இதுவே. அதாவது, வாழ்வில் எல்லாமே இரண்டு கோடுகள். ஒரு கோட்டைவிட மற்ற கோடு சிறியதாக வேண்டுமென்றால் ஒரு கோட்டை நீட்டிவிட வேண்டும். தனக்கு தன் தயாரிப்பு பணி என்ற கோடு பெரியதாக இருந்ததால் திருமுழுக்கு யோவான் தன் உடை மற்றும் உணவு என்ற கோட்டைக் குறுக்கிக் கொண்டார். 

இந்த கிறிஸ்து பிறப்புக் காலம் என் வாழ்வில் சிறுநுகர் பண்பை வளர்த்தால் நலம். தன் மகனுக்காக மாட மாளிகை கட்டவில்லை கடவுள். மாறாக, ஏற்கனவே இருக்கின்ற மாட்டுத் தொழுவம் ஒன்றை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக்கொண்டார். இதுதான் சிறுநுகர் வாழ்வு. இன்று நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து மேலே அனுப்பும் விண்கலம் வரை நாம் இந்தப் பூமியைச் சுரண்டிச் செய்தவைதாம். சுரண்டிக்கொண்டே, வாங்கிக்கொண்டே, குவித்துக்கொண்டே இருப்பதைக் கொஞ்சம் நிறுத்தி இன்னும் கொஞ்சம் இரசிக்கவும், வாழவும் அழைப்பு விடுக்கின்றார் திருமுழுக்கு யோவான்.

5. மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்

உரோமையின் பேதுரு பசிலிக்காவின் 'பியத்தா' (வியாகுல மாதா) சிலையை வடிக்கின்ற மைக்கேலாஞ்சலோ அன்னை மரியாளின் முகத்தை அழகான இளமையான முகமாக வடிக்கின்றார். இதற்கான காரணம் கேட்டபோது 'மாசில்லாத இடத்தில் நோயும், முதுமையும், இறப்பும் இல்லை. அங்கே வளமையும், இளமையும், அழகுமே இருக்கும்' என பதில் தருகிறார். பாலைவனம், பாழ்நிலம், பள்ளத்தாக்கு, மலை-குன்று, கோணலானவை இவை அனைத்தும் நம் உறவு நிலைகளின் உருவகங்களாகக்கூட இருக்கலாம். இவற்றை சரி செய்யவும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இறுதியாக,

நம்பிக்கை என்று நாம் இன்று ஏற்றும் மெழுகுதிரி நற்செய்தியின் தொடக்கமாகட்டும் நம் வாழ்வில். அந்த திரியின் ஒளியில் நாமும் ஒளிர்வோம் நற்செய்தியாக!