இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

தாய்மடி தவழும் குழந்தை என

மலாக்கி 1:14-2:1-2,8-10
1 தெசலோனிக்கர் 2:7-9,13
மத்தேயு 23:1-12

கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு வந்தா அங்கே ரெண்டு கொடுமை அரையும் குறையு ஆடுச்சாம்!' என்பது கிராமங்களில் வழங்கப்படும் சொலவடை. அதாவது, மனதிற்கு அமைதி தரும் இடமாக நாம் கோயிலை நினைத்து அங்கே வரும்போது நம் மன அமைதி இழக்கும் இடமாக அது மாறிவிட்டால் எப்படி இருக்கும்?

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் எருசேலம் ஆலயத்திலும் மற்றும் யூத சமயத்திலும் திருப்பணி புரியும் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர் ஆகியோரைச் சாடுவதாக இருக்கின்றது. ஆண்டவரின் ஆலயத்தைத் தேடி வரும் அன்பர்களுக்கு அமைதி தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அல்லது தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இவர்கள் செய்யும் அநியாயங்களைப் பட்டியலிடுகின்றன இந்த வாசகங்கள்:

அ. போதனையில் ஓரவஞ்சனை. அதாவது, இருப்பவர்களுக்கு ஒரு போதனை. இல்லாதவர்களுக்கு ஒரு போதனை. பணம் கொடுத்தால் ஒரு போதனை. பணம் கொடுக்காவிட்டால் ஒரு போதனை. இப்படியாக போதிப்பதிலும் ஏற்றத்தாழ்வு.

ஆ. இரட்டை வேடம். அல்லது வெளிவேடம். இரண்டு அளவுகோல்கள். இரண்டு வாழ்க்கை முறைகள். சொல்வது ஒன்று. செய்வது மற்றொன்று. 

இ. வெளி அடையாளங்களுக்கு முக்கியத்துவம். நான் யார் என்பதை என்னைப் பார்த்தாலே தெரிய வேண்டும் என்று தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது.

ஈ. முந்தியடித்துக்கொண்டு தேடும் மரியாதை. அதாவது, அடுத்தவரின் ஈர்ப்பின் மையமாக இருக்க வேண்டும். எப்போதும் முதலில் அல்லது நடுவில் இருக்க வேண்டும்.

உ. தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட பட்டங்கள். சில பட்டங்களை மற்றவர்கள் தங்களுக்குக் கொடுத்தாலும், தாங்களாகவே சில பட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு அந்தப் பட்டங்கள்தாம் வாழ்வு என்று நினைப்பது.

இந்த 5 தவறுகளும் குருக்கள் மற்றும் அருள்நிலையில் உள்ளவர்களிடம் இருப்பதாக வாசகங்கள் சித்தரித்தாலும், இந்த ஐந்து குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த ஐந்து குணங்களும் நம்மில் உருவாகக் காரணம் நம் நெஞ்சத்தில் அமைதியற்ற நிலைதான். 

அதாவது, நெஞ்சம் அங்கலாயத்துக்கொண்டும், ஆரவாரம் செய்துகொண்டும் இருக்கும்போதுதான் இப்படிப்பட்ட குணங்கள் நம்மில் இருக்கும். 

அமைதிநிறை நெஞ்சம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய பதிலுரைப்பாடலும் (திபா 131), இரண்டாம் வாசகமும் அழகாகப் பதிவு செய்கின்றன:

திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து அமைதி மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. 'உள்ளத்தில் இறுமாப்பு இல்லை'

ஆ. 'பார்வையில் செருக்கு இல்லை'

இ. 'மிஞ்சின, அரிய, பெரிய, காரியங்களில் ஈடுபடுவது இல்லை'

இறுமாப்பும், செருக்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. 'இறுமாப்பு' என்பது நாம் சாப்பிடும் லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போன்றது. சிப்ஸ் பாக்கெட் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும். உடைத்துப் பார்த்தால் சிப்ஸ் மிகக் குறைவான அளவுதான் இருக்கும். நாம் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் பாக்கெட்டில் 8 ரூபாய் வெறும் காற்றுக்குத்தான் கொடுக்கிறோம். இல்லாததை இருப்பது போல காட்டிக்கொள்வதுதான் இறுமாப்பு. செருக்கு என்பது இறுமாப்பு காட்டுவதுதான் உண்மை என உள்மனது கொள்ளும் பொய்யான நம்பிக்கை. இந்த இரண்டும் வரும்போது அடுத்தவரை நாம் சிறுமைப்படுத்தத் தொடங்குகிறோம்.

100 கிராம் லேய்ஸ் பாக்கெட்டையும், ஒரு 50 கிராம் உருளைக் கிழங்கையும் பக்கத்தில் வைத்தால், லேய்ஸ் பாக்கெட்தான் பெரியதாகத் தெரியும். உருளைக் கிழங்கு சிறுமைப்படுத்தப்படும். ஆனால் பாக்கெட் உடைந்தால் உண்மை வெளிப்படும். ஆக, இறுமாப்பும் செருக்கும் இடத்தில் இரட்டையான வாழ்வும், வெளி அடையாளங்களுக்கான முக்கியத்துவமும் தானாய் வந்துவிடும். இந்த இரண்டும் வந்துவிட்டால் 'என்னால் முடியும்' என முடியாத காரியங்களையும் நாம் செய்ய முயற்சி செய்வோம். அது இன்னும் தோல்வியில் போய் முடியும்.

இதற்கு எதிர்மறையாக நாம் கொள்ள வேண்டியது எவை?

திருப்பாடல் ஆசிரியர் தொடர்ந்து சொல்கிறார்: 'நிறைவும்,' 'அமைதியும்' கொண்ட நெஞ்சம். 'நிறைவு' என்பது எப்போதும் ஒரு ரெலடிவ் டேர்ம். அதாவது, ஒன்றும் இல்லாதவருக்கு 10 ரூபாய் என்பது நிறைவே. எல்லாம் இருப்பவருக்கு 10000 கோடி என்றாலும் நிறைவல்லவே. எங்க அய்யாமையிடம் நான் கற்றது இதுதான்:. பகல் முழுவதும் வெயில் வேலை செய்துவிட்டு வெறும் 6 ரூபாய் கூலியுடன் (1990களில்) வீட்டிற்கு வருவார். இதைக் கொடுக்கின்ற பண்ணைக்காரர், 'போதுமா லட்சுமமி!' என்பார். 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவுமே போதாது' என்பார் அய்யாமை. ஆனால் அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ஆக, நிறைவு என்பது உள்ளிருந்து வரும் உணர்வு. வெளியிலிருந்து இயக்கப்படும் அல்லது புகுத்தப்படும் உணர்வு அல்ல அது. நிறைவு வந்துவிட்டால் அமைதியும் தொடர்ந்து வந்துவிடும். அமைதி என்பதும் வெளியிலிருந்து நமக்கு வரும் உணர்வு அல்ல. மாறாக, நம் உள்ளத்தின் நிறைவில் தானாக எழும் ஓர் உணர்வு.

இந்த 'நிறைவு' மற்றும் 'அமைதி' ஆகிய உணர்வுகளுக்கு திருப்பாடல் ஆசிரியர் மிக அழகான உருவகத்தைத் தருகின்றார்: 'தாய்மடி தவழும் குழந்தை.'

பால்குடி மறந்து திட உணவை உண்ணத் தொடங்கும் குழந்தை ஒரு போராட்டத்திற்குப் பின் தன் தாய் மடியில் படுத்துறங்கும். அது அப்படி படுப்பது தன் தாயிடம் கிடைக்கும் பால்குடிக்காக அல்ல. மாறாக, தன் தாய்தான் எல்லாம். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் என்னைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே. 

இதையே தொடர்ந்து ஆசிரியர், 'இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!' என நிறைவு செய்கின்றார் பாடலை.

இதே பண்புகளை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியாரின் திருமுகத்திலும் வாசிக்கின்றோம். தன் நற்செய்திப் பணியின் சிறப்பு மற்றும் தனித்துவம் பற்றி தெசலோனிக்க திருச்சபைக்கு எழுதும் பவுல் தன் நடத்தை பற்றி இப்படி எழுதுகின்றார்:

அ. தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போன்ற கனிவு.

ஆ.எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல்.

இ. உங்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்ற வைராக்கியமும், அதற்கான உழைப்பும்.

இன்று ஒரே உருவகத்தை நம் மனத்தில் பதிய வைப்போம்: 'தாய் மடி தவழும் குழந்தை'

அ. இந்தக் குழந்தை தன்னை ஒருபோதும் தன் தாயிடம் நிருபிக்க மெனக்கெடுவதில்லை. 'இதுதான் என் நிறம். இதுதான் என் படிப்பு. இதுதான் என் திறன். இதுதான் நான்' என்று எதையும் மெய்ப்பிக்க விரும்புவதில்லை. தன் இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்கிறது இந்தக் குழந்தை. இதுதான் எளிமை. இருப்பை இருப்பதாக எடுத்துக்கொள்வது எளிமை. இல்லாததை இருப்பாக ஏற்றுக்கொள்வது இறுமாப்பு. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குற்றம் சுமத்தப்படும் குருக்கள் செய்த தவறு இதுதான். தங்கள் இருப்பை அவர்கள் மறந்துவிட்டார்கள். தாங்கள் பிறந்த பிறப்பை, தங்களின் எளிமையான, கசப்பான வேர்களை மறந்துவிட்டார்கள். ஆக, துணிந்து மற்றவர்களைப் பார்த்து விரல் நீட்டுகிறார்கள்.

ஆ. இந்தக் குழந்தையின் படுக்கை ஆழமாக இருக்கும். அதாவது, தன் தாயின் மடியில் அப்படியே அது தன்னைப் புதைத்துக்கொள்ளும். ஆக, அது கீழே விழுவதற்கான வாய்ப்பே இல்லை. பல நேரங்களில் நாம் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில்தான் நமக்கென அடையாளங்களையும், மதிப்புகளையம், லேபிள்களையும், மரியாதைகளையும் பிடித்துக்கொள்கின்றோம். மரியாதை அல்லது மதிப்பு என்பது வெளியிலிருந்து வரும் உணர்வு அல்ல. மாறாக, என் உள்ளத்து உணர்வு. நான் என் அறைக்குள் வரும்போது அறையில் அமர்ந்திருப்பவர் எழுந்து நிற்பதுதான் மரியாதை என என் மனம் நினைத்துக்கொள்வதால், அவர் எழுந்தால் அது மரியாதை என்றும், எழாவிட்டால் மரியாதைக் குறைவு என்றும் கருதுகிறேன். நான் இந்த நினைப்பையே என் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டால் நான் மரியாதை அல்லது குறைவு பற்றி கவலைப்பட தேவையே இல்லை.

இறுதியாக,

இன்று நாம் நிறைய கதைகளை உண்மை என நம்பிக்கொண்டிருக்கின்றோம். அதிகம் படிக்க வேண்டும், அதிகம் ஓட வேண்டும், அதிகம் உழைக்க வேண்டும், அதிகம் ஜெயிக்க வேண்டும், அதிகம் பணம் வேண்டும், அதிகம் இடம் வேண்டும் என்று 'அதிகம்' என்ற வார்த்தையை நோக்கியே நம் வாழ்க்கை ஓட்டம் இருக்கிறது. 

ஆனால், அதிகத்தில் இல்லை நிறைவும், அமைதியும். இதையே சபை உரையாளரும், 'காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதை விட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்' (4:6) என்கிறார்.

நாம் அருள்நிலையில் இருந்தாலும், பொது நிலையில் இருந்தாலும் அவரின் மடியில் தவழும் குழந்தையாய் வாழ முயற்சி செய்தால், நாம் குறைவிலும், குறைவு கேட்போம். அந்தக் குறைவிலும் நிறைவும், அமைதியும் காண்போம்.