இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

தன்னலமே அன்பாய்!

விடுதலைப் பயணம் 22:21-27
1 தெசலோனிக்கர் 1:5-10
மத்தேயு 22:34-40

கொரிந்து நகர திருச்சபைக்கு தான் எழுதும் முதல் கடிதத்தில் அன்பிற்குப் பாடல் இசைக்கும் தூய பவுல், அன்பின் ஒரு பண்பாய், 'அன்பு தன்னலம் நாடாது' (13:5) என்கிறார். ஆனால், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!' மற்றும் 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் முரண்பட்டு நிற்கின்றன. எப்படி? 'தன்னை அன்பு செய்யும் ஒருவரால் தான் பிறரை அன்பு செய்ய முடியும்' என்பதும், 'தன் முழு இதயத்தையும், உள்ளத்தையும், மனத்தையும் அறிந்து கொண்ட ஒருவரால்தான் கடவுளை அன்பு செய்ய முடியும்.' ஆக, அன்பின் முதற்படி தன்னலம்.

  தன்னலத்தில் தொடங்கி அது பிறர்நலம், இறையன்பு என ஆறாக ஓடினால் அது அன்பு. மாறாக, தன்னலத்தில் தொடங்கி தன்மையமாகவே அது முடிந்துவிட்டால் அது தேங்கிநிற்கும் குட்டை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்ற 'இறையன்பு,' மற்றும் 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை இன்று நாம் எப்படி புரிந்துகொள்வது?

'தன்னலம்' என்ற வார்த்தையிலிருந்தே நம் தேடலைத் தொடங்குவோம்.

'தன்னலம் ஒழிய வேண்டும்' அல்லது 'தன்னலம் கூடாது' என்று பல சிந்தனை ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்த வேளையில், 'தன்னலம் என்னும் மதிப்பீடு' ('The Virtue of Selfishness') என்று 'தன்னலத்திற்கு' புதிய தேடலைக் கொடுத்தவர் அய்ன் ரென்ட் (Ayn Rand) என்ற அமெரிக்க நாவல் ஆசிரியை. இவரின் கருத்திற்குப் பின்புலமாக இருப்பது இவரின் சமகாலத்து மார்க்சிய வெறுப்பு மற்றும் முதலாளித்துவ ஆதரவு என்பதாக இருந்தாலும், இவரின் கருத்து நம்மைச் சற்றே யோசிக்க வைக்கிறது. தன்னலம் ஏன் மதிப்பீடாக இருக்கக்கூடாது?

தன்னலம் என்பது என்னைப் பொறுத்தவரையில் நம் பரிமான வளர்ச்சியின் எச்சம்.

'ஆபத்து காலத்தில் முதலில் நீங்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து கொண்டு, பின் அருகிலிருப்பவருக்கு, அல்லது அருகிலிருக்கும் உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்' என்று விமானத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை செய்வதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?

ஆபத்து என்று வரும்போது ஒவ்வொரு உயிரும் தன்னைத் தான் முதலில் காத்துக்கொள்கிறது. இது இயற்கையின் எதார்த்தம். இதை விட்டுவிட்டு, 'நான் ஒரு தியாகி, பிறர்நலம் பேணுபவன்' என்று என் அருகிருப்பவருக்கு உதவி செய்ய முனைந்தால், அவரும் அழிந்து, நானும் அழிந்துவிட வாய்ப்பு உண்டு.

தன்னலம் என்பது நம் வாழ்வில் மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:

அ. எனக்கென்று ஒரு அளவுகோல். எனக்கு பிடித்தது, பிடிக்காதது, நல்லது, கெட்டது என நான் எனக்கென ஓர் அளவுகோலை வைத்துக்கொள்கிறேன். இந்த அளவுகோல்தான் சரி என்றும் நான் வாதாடுகிறேன். 

ஆ. என் மனம் விரும்புவதை நான் செய்கிறேன். என் மனதின் விருப்பங்கள், என் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் சரியானவை என நான் எண்ணுகின்றேன்.

இ. என் உடலையும், மனத்தையும் பற்றி நான் அதிகம் அக்கறை கொள்கிறேன். என் பிறப்பிலிருந்து இறப்பு வரை என் உடலோடும், மனத்தோடும் பயணிப்பது நான் மட்டுமே. ஆக, இந்த இரண்டையும் பார்த்துக்கொள்ளும் கடமை எனக்கு நிறைய உண்டு.

இந்த மூன்று நிலைகளிலும் நான் என்னையே அன்பு செய்கிறேன். அல்லது என்னை நான் அன்புசெய்யும்போது எனக்கென்று ஒரு அளவுகோலை வைத்துக்கொள்கிறேன், என் மனம் விரும்புவதைச் செய்கிறேன், என் உடலையும், மனத்தையும் பற்றி நிறைய அக்கறை கொள்கிறேன்.

இயேசுவின் போதனை என்னவென்றால், இந்த நிலை உன் தொடக்கமாக இருக்கட்டும். இதிலிருந்து உன் ஓட்டம் இறைவனை நோக்கியும், பிறரை நோக்கியும் இருக்கட்டும். இறைவனின் அளவுகோல் என்ன? இறைவன் விரும்புவது என்ன? பிறரின் அளவுகோல்கள், விருப்பங்கள் எவை? பிறரின் உடல், மனம் இவை பற்றிய என் அக்கறை என்ன? என அழைப்பு விடுக்கின்றார். 'இறையன்பு,' 'பிறரன்பு' என்னும் இரண்டு கட்டளைகளை நினைவுறுத்துகின்றார்.

இறையன்பு எப்படி இருக்க வேண்டும்?

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் ஒருவர் ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்.' கிரேக்கத்தில் 'கார்டியா' (kardia) (இதயம்), 'ப்சுகே' (psyche) (உள்ளம்), மற்றும் 'டியனோயா' (dianoia) (மனம்) என்னும் மூன்று வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 'கார்டியா' (இதயம்) என்பது இங்கே நம் இரத்த ஓட்டத்தை ஒருங்கமைக்கும் உடல் அல்லது பொருள்தன்மையைக் குறிக்கவில்லை. மாறாக, 'உணர்வுகள்' என்பதன் உருவகமாக இருக்கின்றது. கிரேக்கர்கள் உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் என்றே கருதினர். எபிரேயர்களைப் பொறுத்தமட்டில் உணர்வுளின் பிறப்பிடம் வயிறு என்று இருந்தாலும், சில நேரங்களில் இதயம் என்றும் கருதினர். இரண்டாவதாக, 'ப்சுகே' (உள்ளம்) என்றால் 'ஆவி' அல்லது 'ஆன்மா' அல்லது 'உயிர்'. வழக்கமாக விலங்குகள் மற்றும் தாவரங்களின் உயிரை 'ப்சுகே' என்னும் இந்தச் சொல்லால் குறிப்பர். மனிதர்களின் உயிரைக் குறிக்க 'ப்னெயுமா' (pneuma) அல்லது 'ஸோயே' (zoe) என்னும் சொல்லாடல்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா உயிர்களுக்கும் பொதுவான 'ப்சுகே' என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துவதன் வழியாக, நாம் மற்ற விலங்குகள் அல்லது தாவரங்களோடு கொண்டிருக்கின்ற ஒற்றுமையை நமக்கு நினைவுறுத்துகின்றார் ஆசிரியர். மூன்றாவதாக, 'டியனோயா' (மனம்) என்றால் எண்ணம், சிந்தனை, கற்பனை, அல்லது புரிந்துகொள்ளுதல் என்று பொருள். 

'இதயம்,' 'உள்ளம்,' 'மனம்' என்னும் மூன்றும் இயல்பாகவே நம்மை தன்னலம் கொண்டவர்களாகவே வைத்திருக்கின்றன. என்னதான் நான் பிறர்நலம் கொண்டவர் என்றாலும் என் இதயத்தால் என் இரத்தத்தை மட்டுமே ஒருங்கியக்க முடியும். என் உயிரைக் கொண்டு நான் இன்னொருவருக்கு உயிர் கொடுக்க முடியாது. என் கற்பனையை எனக்கு அடுத்திருப்பவருக்குப் புரிய வைக்க முடியாது. இருந்தாலும், இந்த மூன்றையும் கொண்டு ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்யச் சொல்கிறது முதல் கட்டளை. அதாவது, நான் என் இதயம், உள்ளம், மனம் அனைத்திலும் இறைவனை மட்டுமே நிரப்பினேன் என்றால் அங்கே நான் இறைவனை அன்பு செய்கிறேன்.

இந்த நிலையைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பார்க்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தெசலோனிக்க திருச்சபைக்குத் தன் மடலை எழுதுகின்ற பவுல், அவர்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை வெகுவாகப் பாராட்டுகின்றார்:

'நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள்.'

ஒவ்வொரு நம்பிக்கைப் பயணமும் ஒரு திரும்பிவருதலே ('homecoming'). அதாவது, கடவுளை விட்டுத் தொலைவில் சென்ற நாம் திரும்பி வருகிறோம். இயல்பிலேயே நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொப்புள்கொடி இருக்கின்றது. அந்தக் கொடி சில நேரங்களில் தானாக அறுகின்றது. சில நேரங்களில் நாம் அறுத்துக்கொள்கின்றோம். எப்படி என்றாலும் அவரிடம் திரும்பிவருவதற்கான ஒரு ஈர்ப்பு நம்மிடம் இருக்கின்றது. அந்த ஈர்ப்பிற்கு தடையாக இருப்பது நமக்கென நாம் வைத்துக்கொள்ளும் சிலைகள். மனிதர்களாகிய நம்மால் எதையாவது பற்றிக்கொள்ளாமல் இருக்க முடியாது. இறைவனைப் பற்றிக்கொள்ளத் தவறும்போது நாம் ஏதாவது சிலைகளைப் பற்றிக்கொள்கிறோம். 'சிலைகள்' என்பது இங்கே ஓர் உருவகம். 'இறைவன்' தவிர மற்ற அனைத்துமே பவுலைப் பொறுத்தமட்டில் 'சிலைகளே.' ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அவரிடம் திரும்பி வருவது. திரும்பி வருதலோடு மட்டுமல்ல. மாறாக, திரும்பி வந்தவுடன், அவருக்கு ஊழியம் புரிதல். ஊழியம் புரிதல் என்றால் அவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல். தன் விருப்பம், தன் தேர்வு, தன் நிலைப்பாடு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அவரின் விருப்பம், அவரின் தேர்வு, அவரின் நிலைப்பாட்டைச் சிரமேற்றல்.

பிறரன்பு என்றால் என்ன? அதை எப்படி புரிந்துகொள்வது?

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப் பயண நூல் வாசகத்தில் சில பிறரன்பிற்கான சில ப்ராக்டிகல் அட்வைஸ் கொடுக்கின்றார் ஆசிரியர்.

பிறரன்பு என்று சொல்லும்போது, யார் அந்த 'பிறர்' என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 'பிறர்' அல்லது 'அயலார்' அல்லது 'அடுத்திருப்பவர்' என்பதைக் காலங்காலமாக யூதர்கள் தன் சக யூத ஆண் என்றே நினைத்தனர். ஆனால் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின் வழியாக இயேசு, 'பிறர்' என்பவர் 'தேவையில் இருக்கும் எல்லாரையும்' அடையாளம் காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் மூன்று வகையான பிறரைப் பார்க்கின்றோம்:

அ. அந்நியன். அதாவது, மொழி, இனம், கலாச்சாரம், உணவுப்பழக்கம், சமயம் என அனைத்திலும் என்னிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பவன்.

ஆ. கைம்பெண் மற்றும் அநாதை. கணவன் மற்றும் பெற்றவர் இல்லாதவர். ஆதரவு இல்லாதவர். வாழ்வாதாரம் இல்லாதவர்.

இ. கடன் வாங்கிய ஏழை. ஏதோ ஒரு காரணத்திற்காக கடனை வாங்கிவிட்டு - கல்வி, மருத்துவம், உணவு - இன்று அதை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லாத ஒருவர்.

இந்த மூன்றுபேருக்கும் பொதுவான ஓர் உணர்வு 'உடைந்து நிற்தல்' அல்லது 'நிர்வாணமாயிருத்தல்.' மற்றவர்கள் முன் இவர்கள் நாதியற்றவர்கள். இவர்கள்மேல் அன்பு காட்ட ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இங்கே அன்பை விட முதன்மையானதாக இருக்க வேண்டியது 'பரிவு' அல்லது 'திறந்த உள்ளம்' அல்லது 'கனிவு.' முதலில் இது இருந்தால் தான் அங்கே அன்பு பிறக்க முடியும்.

'பரிவு' என்றால் 'அடுத்தவரின் இடத்தில் என்னை நிரப்பி பார்ப்பது.' என் கண் முன்பாக இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஒருவர் மூழ்கிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நான் மாற்றானாகப் பார்க்காமல், அந்த இடத்தில் நானே மூழ்கிக்கொண்டிருப்பதுபோல நினைக்கும்போது தோன்றும் உணர்வே பரிவு. இந்த உணர்வு வந்துவிட்டால் எல்லாரையும் எனதாகப் பார்க்கும் உள்ளம் பிறந்துவிடும்.

ஆகையால்தான் இயேசுவும், 'உன்னை அன்புசெய்வதுபோல' என்கிறார். அதாவது, தன்னலம் இல்லாமல் அன்பு இல்லை. தன்னலம் கொண்டிருக்கும் ஒருவர்தான் பிறர்நலமும் கொண்டிருக்க முடியும்.

இன்று நான் என் அன்பை எனக்கு அடுத்திருப்பவரோடு எப்படிக் காட்டலாம்?

1. உடன்பயணித்தல் (accompaniment)

பிறக்கும் போது தனியாகப் பிறந்து, இறக்கும்போதும் தனியே மரணத்தைச் சந்திக்கும் நாம் வாழ்வு முழுவதும் பிறரின் உடனிருப்பை நாடுகிறோம். நான் எப்படி பிறரின் உடனிருப்பை நாடுகிறேனோ, அந்த அளவிற்கு பிறரோடு உடனிருக்கவும் எனக்குக் கடமை உண்டு. ஆக, என்னோடு எத்தனைபேர் உடன்பயணிக்கிறார்கள் என நினைப்பதைவிட்டு, நான் எத்தனைபேரோடு உடன்பயணிக்கிறேன் எனக் கேட்டுப்பார்க்கலாம்.  இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியில் பணியாற்றி வந்த அருள்சகோதர் ஜேம்ஸ் கிம்டன் அவர்களின் நல்லடக்கத்திற்குச் சென்றிருந்தேன். ஏறக்குறைய 15000 குழந்தைகள் அவரின் உதவியால் படித்தார்கள், படிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் நாடு, தன் மொழி, தன் உறவு, தன் மக்கள், தன் உணவுப் பழக்கம் என எல்லாவற்றையும் இங்கிலாந்தில் விட்டுவிட்டு இங்கே வந்து அந்நியராகிய இக்குழந்தைகளோடு இவர் செய்த பயணமே பிறரன்பு. இதுவே உடன்பயணித்தல். 

இன்று பெரிய அளவுகளில் நாம் உடன்பயணிக்கமுடியவில்லை என்றாலும் வாழ்க்கை நமக்கு வைத்திருக்கும் வரையறைக்குள்ளாவது பயணம் செய்யலாமே.

2. பொறுப்பேற்றல் (responsibility)

அன்பு செய்வது என்பது பொறுப்பேற்றல். 'நான் உன்னை அன்பு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'உனக்கு நான் பொறுப்பில்லை' என்று சொல்வது முரணானது. நான் அன்பு செய்யும் ஒருவருக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொறுப்பேற்கும்போது அங்கே மனிதர்களை நான் முழுமையாக உள்வாங்கிக்கொள்கிறேன். அவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் என் தேவைகளாக, விருப்பங்களாகப் பார்க்கிறேன். பொறுப்பேற்கும்போது நான் அவர்கள் இருப்பதைவிட இன்னும் ஒரு நல்ல நிலைக்கு நான் அவர்களை உயர்த்துகிறேன். 'நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா?' என்ற காயினின் கேள்வி அவனது பொறுப்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது.

3. இலக்கு நிர்ணயித்தல் (goal setting)

நான் பல நேரங்களில் என் இலக்கு அல்லது என் நோக்கம் பற்றியே சிந்திக்கிறேன். இத்தோடு சேர்ந்து மற்றவரின் இலக்கையும், நோக்கத்தையும் நான் சிந்திக்க வேண்டும். மனிதர்கள் எல்லாருமே நல்லவர்கள்தாம். 'நான் பிறரைக் கெடுக்க வேண்டும்' என்று யாரும் கண்விழிப்பது கிடையாது. 'நன்றாக இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும்' என்றே நாம் துயில் எழுகின்றோம். எனவே, என்னால் பிறரின் இலக்கை நோக்கி அவர்களை ஒருபடி முன்னால் தள்ள முடிகிறதா என்று பார்த்தல் சால்பு.

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்: திபா 18:1 'என் ஆண்டவரே, நான் உம்மிடம் அன்புகூர்கின்றேன்'. இந்தவரியின் தனித்துவம் என்னவென்றால், விவிலியத்திலேயே மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு' சொல்கின்ற ஒரே இடம் இதுதான். எப்போதெல்லாம் என் பேட்டரி லோ ஆகின்றதோ, அப்போதெல்லாம் நான் வாசிக்கும் விவிலியப் பகுதிகளில் திபா 18ம் அடங்கும். 

அவரிடம் இன்று நான் 'ஐ லவ் யு' சொல்கிறேன் என்றால், அதற்கு முன் நான் எனக்கு நானே 'ஐ லவ் யு' சொல்ல வேண்டும். அந்த 'ஐ லவ் யு' எனக்கு அடுத்திருப்பவரை நோக்கிச் செல்ல வேண்டும்.

தன்அன்பு - பிறர் அன்பு - இறையன்பு என அனைத்தையும் ஒரே தளத்தில் நிற்க வைத்ததே இயேசுவின் புரட்சி.

ஆக, தன்னலமும் அன்பாய் இருத்தல் சாத்தியமே!