இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

விருந்தோம்பும் விருந்தினர்!

தொநூ 18:1-10
கொலோ 1:24-28
லூக் 10:38-42

'முன்னாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் நினைவுகளை விட்டுச் செல்வார்கள்.
ஆனால் இன்றோ சார்ஜரை மட்டுமே விட்டுச் செல்கிறார்கள்.

இந்த டுவிட் சத்தம் விருந்து, விருந்தோம்புதல், வருகை, செல்கை ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள அதிரடி மாற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.

கடவுளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் விருந்தினராக வரவேற்க, அப்படி வந்த கடவுள் விருந்தோம்பியதை இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் காண்கிறோம்.

'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). 'டைட்டன் ஷோரூம்,' 'கீர்த்தி டென்டல் கிளினிக்,' 'வோடஃபோன் ஷோரூம்,' 'சித்தி விநாயகர் கோவில்' என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாட்களில் மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான். தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். 'ஆபிரகாமின் காத்திருத்தல்' பற்றி வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது.

முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு பகுதியில் 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. 'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகையால் வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல் மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன் இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன் இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார் (காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக் கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில் பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.

இரண்டாவதாக, ஆபிரகாமின் வழ்வில் நடக்கப் போகும் முக்கியமான நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று மனிதர்கள் ஆபிரகாமிடம், 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' (18:10) என அவருக்கு ஒரு மகனை வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார். கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மகன் 'ஈசாக்கின்' பெயரின் பொருளும் அதுவே - 'அவன் என் சிரிப்பு' அல்லது 'அவன் என் மகிழ்ச்சி.' இவர்களின் இந்த வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில், ஆபிரகாம்-சாரா தம்பதியினிரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில் எழுகின்றது. மேலும், தொநூ 12ல், 'உன் இனத்தைப் பலுகிப் பெருகச் செய்வேன்' என்று ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது.

ஆபிரகாம் தன்னிடம் வந்த விருந்தினர்களுக்கு, காளையும், வெண்ணெயும், பாலும், தேனும், அப்பமும் விருந்தளித்தார். ஆனால், வந்திருந்த இறைவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்து விருந்தோம்பலுக்குப் பதில் தருகின்றார். இறைவனின் இந்த வாக்குறுதி என்னும் விருந்தோம்பல் ஆபிராகமின் விருந்தோம்பலையும் மிஞ்சி விடுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதி தருகின்றார்.

  இன்றைய இரண்டாம் வாசகத்தில் உள்ள மூன்று முக்கியமான சொற்கோவைகளை நாம் சிந்திப்போம்:

அ. 'கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார்' (1:24). இந்த உலகிற்கு விருந்தினராக வந்த இயேசு கிறிஸ்து இந்த உலகின் மக்களுக்காக தாமே விருந்தாகின்றார். விருந்தினராக வந்தவர் தன் சிலுவைப் பாடுகள் மற்றும் இறப்பின் வழியாக விருந்தோம்புகின்றார். தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு துணிந்து நிற்கிறது இயேசுவின் விருந்தோம்பல்.

ஆ. 'உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து' (1:27) என்று கிறிஸ்துவின் பிரசன்னம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார் பவுல். இது ஒரு பெரிய சிந்தனை மாற்றம். ஏனெனில், முதல் ஏற்பாட்டு ஆண்டவராகிய இறைவன் 'வெளியில் இருப்பவராகவே' (transcendental) கருதப்பட்டார். அவரின் பிரசன்னம் 'வெளியில் இருக்கும் பிரசன்னம்' (transcendental presence). ஆனால் கிறிஸ்துவில், இறைவனின் பிரசன்னம் ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும் நுழைகின்றது (immanent presence). 'உன்னில் கிறிஸ்து இருக்கிறார்' என்ற பவுலின் நினைவுறுத்தல் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவைப்போல வாழ்வதற்கு ஊக்கம் தருகின்றது.

இ. 'இப்பொழுது உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்' (1:24) - 'கிறிஸ்துவின் துன்பத்தை' அறிந்த, 'அவரின் பிரசன்னத்தை தன் உள்ளத்தில் உணர்ந்த' பவுல் இரண்டையும் இணைத்து, கிறிஸ்துவுக்காக தான் துன்புறுவதில் மகிழ்ச்சி இருக்கிறது என்று பெருமிதம் கொள்கின்றார்.

இவ்வாறாக, கிறிஸ்துவின் விருந்தோம்பல் அவரின் தற்கையளிப்பிலும், அவர் தன் மக்களுக்குத் தரும் மாட்சிமையிலும் அடங்கியிருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம் வாசித்த 'திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்' (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது. 'உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக!' என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' 'ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்' (10:30) என்று 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' தொடங்குவதுபோல, 'பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்' (10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின் இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து காட்டுவதாக இருக்கின்றது: 'உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம் தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!' (லூக் 10:8). நற்சீடரின் பண்பு 'பார்ப்பது' என்று 'நல்ல சமாரியனும்,' நற்சீடரின் இன்னொரு பண்பு 'பாதத்தில் அமர்ந்து கேட்பது' என்று 'மார்த்தாவும்' சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.

மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்டுகின்றார் மரியா. 'பாதத்தில் அமர்வதும்,' 'வார்த்தைகளைக் கேட்டலும்' சீடத்துவத்தின் இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக் 5:1, 8:11, 21).

யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, 'உங்கள் இல்லம் ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம் பேசவேண்டாம்' என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள் நுழைவதுபோல இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின் காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில் ரபிக்களின் வருகையின் போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான். ரபியின் வருகையின் போது அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா. ஆனால் இயேசு, மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின் பரபரப்பையும், கவலைகளையும் சுட்;டிக்காட்டி மீண்டும் ஒரு புரட்டிப்போடுதலைச் செய்கின்றார்.

  முட்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார் மார்த்தா. ஏனெனில் கனி கொடுக்க விடாமல் அவரின் 'கவலையும், வாழ்வின் கவர்ச்சிகளும்' தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம் தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா இருந்தாலும், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' (காண். 4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, 'எல்லாவற்றையும் துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்' (காண். 5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், 'எந்தப் பணி முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?' என்ற கேள்வி எழும்போது, 'இறைவார்த்தை அறிவிப்பை' தேர்ந்து கொள்ளும் திருத்தூதர்கள், 'உணவு பரிமாறுவதற்காக' திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். 6:1-6).

'மார்த்தா, மார்த்தா' என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும் இயேசு, 'இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்' எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார். ('செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்' - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து இருக்கின்றது).மரியாள் 'தேர்ந்துகொள்ளப்பட்டவரையே' (9:35) தேர்ந்து கொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்து கொள்ளும் நல்ல பங்கு. அது அவரிடமிருந்து எடுக்கப்படாது.

இயேசு - மரியாள் இவர்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் உரையாடலின் பொருள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எதைப் பற்றி பேசியிருப்பார்கள்? மரியா நிறைய கேள்விகள் கேட்டிருப்பாரா? - 'அதென்ன ஆண்டவரே, இறையரசு? உம் பிறப்பு எப்படி முன்னறிவிக்கப்பட்டது?' என்று இயேசுவிடம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ள முனைந்திருப்பாரா மரியா? எது எப்படி இருந்தாலும், மார்த்தாவின் விருந்தோம்பலை ஏற்று வீட்டிற்குள் நுழைகின்ற இயேசு, தன் வார்த்தைகளால் மரியாவுக்கு விருந்து படைக்கின்றார்.

விருந்தினரே விருந்தோம்புகின்றார்!

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்வியல் சவால்கள் ஐந்து:

1. 'விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம்'

விருந்தோம்புவதற்கு எந்த அளவிற்கு பரந்த மனம் தேவையோ, அதைவிட அதிக அளவு பரந்த மனம் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதற்கும் வேண்டும். ஆபிரகாம் விருந்தினராக மூன்று மனிதர்களை அழைத்தவுடன், 'நீ சொன்னபடியே செய்' என்று அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றனர். 'நாங்கள்தாம் கடவுள்,' 'நாங்கள்தாம் கடவுளின் தூதர்கள்,' 'எங்களுக்கு எல்லாம் இருக்கிறது' என்று அவர்கள் தங்களின் மேன்மை பற்றி எண்ணாமல், உடனடியாக அழைப்பை ஏற்றுக்கொள்ளத் துணிகின்றார்கள். இயேசுவும் மார்த்தாவின் அழைப்பை ஏற்று உடனே அவரது வீட்டிற்குச் செல்கின்றார். முதல் ஏற்பாட்டு வாசகத்தின் மூன்று மனிதர்களும், நற்செய்தி வாசகத்தின் இயேசுவும் நமக்கு வைக்கும் சவால் - 'நமக்கு முன் இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.'

2. 'ஆண்டவரின் கூடாரத்தில் விருந்தினராகும் தகுதி'

'ஆண்டவரின் திருமலையில் தங்குவதற்கு தகுதி உள்ளவர் யார்?' என்ற கேள்வியோடு தொடங்கும் இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 15), அதற்கென ஒரு செக்லிஸ்டை தருகின்றது: 'மாசற்றவராய் நடப்பவர்,' 'நேரியவற்றைச் செய்பவர்,' 'உளமார உண்மை பேசுபவர்,' 'நாவினால் புறங்கூறாதவர்,' 'தோழருக்குத் தீங்கிழையாதவர்,' 'அடத்தவரைப் பழித்துரையாதவர்,' மற்றும் 'தமக்குத் துன்பம் வந்தாலும் கொடுத்த வாக்குறுதியை மீறாதவர்.' இந்தப் பண்புகள் நம்மிடம் இருந்தாலும் நம்மையும் ஆண்டவர் ஏற்று நமக்கு விருந்தோம்புவார்.

3. 'உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து'

முதல் ஏற்பாட்டில் தன் சாயல் மற்றும் பிரசன்னத்தோடு மனிதர்களைப் படைக்கின்றார் கடவுள் (காண். தொநூ 1). பாவத்தால் இந்தச் சாயலும் பிரசன்னமும் மங்கிவிட, பாவத்திற்குக் கழுவாயாகும் இயேசு, மீண்டும் நமக்கு அந்தச் சாயலையும், பிரசன்னத்தையும் புதுப்பித்துத் தருகின்றார். கிறிஸ்துவின் இந்தச் செயல் நமக்கு புதிய அடையாளத்தைத் தருவதோடல்லாமல், அவரைப் போல கடவுளின் மகனாக, மகளாக மாறும் உரிமையையும் நமக்குத் தருகின்றது. ஆக, கிறிஸ்துவின் வழியாக நாம் கடவுளின் விருந்தினராக அல்ல, மாறாக, வீட்டின் பிள்ளைகளாக மாறும் உரிமை பெறுகின்றோம். விருந்தினர்களுக்கு கிடைக்காத உரிமைகள் வீட்டின் பிள்ளைகளுக்கு நிறைய இருக்கின்றன அல்லவா!

4. 'முழுவதுமாக'

விருந்தோம்பல் என்பது 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் செய்யப்படும்' ஒரு செயல் (காண். லூக் 10:27). விருந்து கொடுப்பவரின் இதயம், உள்ளம், ஆற்றல், மற்றும் மனம் விருந்திற்கு வந்திருப்பவரை மையம் கொண்டிருக்க வேண்டும். இந்த நான்கில் ஒன்று தவறினாலும் விருந்தினர் முகம் சுளிக்க வாய்ப்புண்டு.

5. 'தேர்ந்து கொண்ட நல்ல பங்கு!'

'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டின் இறுதியில், 'நீயும் போய் அவ்வாறே செய்யும்!' என்று கட்டளையிடும் இயேசு, இங்கே கட்டளை எதுவும் இன்றி, 'மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டார்' என நிறைவு செய்கின்றார். இந்த இடத்தில் ஒவ்வொரு வாசகரும் தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும். 'நான் தேர்ந்து கொண்ட பங்கு எது?' என்று கேட்க வேண்டும். 'பங்கைத் தேர்ந்து கொள்வது' என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான செயல். ஏசா தன் வயிற்றுப் பசியை சரி செய்வதற்காக தன் தலைப்பேறு உரிமையை தன் சகோதரன் யாக்கோபிடம் அடகு வைக்கும்போது, அவர் நல்ல பங்கைத் தேர்ந்து கொள்ளவில்லை. தன் சகோதரர்களால் எகிப்தியர்களின் கைகளில் விற்கப்படும் யோசேப்பு, அந்த அடிமை நிலையையும் நேர்முகமாக ஏற்றுக்கொள்வதன் வழியாக நல்ல பங்கைத் தேர்ந்து கொள்கின்றார். 'நல்ல பங்கைத் தேர்ந்து கொள்வதற்கு' முன் 'நல்ல பங்கு எது என்பதைக் கண்டறிவது' அவசியம்.

இறுதியாக,

இந்த உலகிற்கு வெறுங்கையராய் வரும் நாம் அனைவருமே விருந்தினர்கள்தாம். வெறுங்கை விருந்தினர்களாய் வந்த நம் கைகளை இந்த உலகம் நிரப்புகிறது. நம்மை ஏற்று, வரவேற்கிறது. நம்மை அன்பு செய்கிறது. நம்மோடு புன்னகை செய்கிறது. விருந்தோம்பல் எப்படி ஒரு கலையோ அப்படியே விருந்தினராக இருப்பதும் ஒரு கலை.

சில விருந்தினர்கள் அவர்களின் வருகையின்போது நமக்கு மகிழ்ச்சி தருகின்றனர்.

சில விருந்தினர்கள் அவர்களின் செல்கையின்போது நமக்கு மகிழ்ச்சி தருகின்றனர்.

நல்ல விருந்தினராக இருப்பதற்கு மூன்று பண்புகள் அவசியம்:

அ. 'திறந்த உள்ளம்.' ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் செல்லும் விருந்தினர் திறந்த உள்ளத்தோடு செல்ல வேண்டும். 'நான், எனது' என்ற தன்மையம் அறவே கூடாது. தன்னையே பூட்டிக்கொள்ளும் ஒருவர் மகிழ்ச்சியாக விருந்துண்ண முடியாது.

ஆ. 'ஒப்பீடு தேவையில்லை!' நம் வீட்டிற்கு விருந்துக்கு வரும் விருந்தினர்கள் பல நேரங்களில் தங்களையும், நம்மையும் ஒப்பீடு செய்வார்கள். இந்த ஒப்பீடு பொறாமை மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கும், பின் கசப்பு உணர்வுகளுக்கும் இட்டுச் செல்லும்.

இ. 'வரையறை அறிதல் வேண்டும்!' நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி ஒரு கோட்டை வரைந்திருக்கிறோம். அந்த கோட்டுக்குள் மற்றவர்கள் நுழைவதை நாம் விரும்புவதில்லை. அதுபோலவே, நாமும் மற்றவர்களின் கோட்டைத் தாண்டி உள்நுழைய முயற்சி செய்தல் கூடாது.

நம் கதவு அருகில் நிற்கும் அனைவருமே நம் இல்லம் நாடி வரும் இறைவனே! இவர்களை நாம் விருந்தினராக வரவேற்க, இவர்களே நமக்கு விருந்து படைக்கத் தொடங்குவதே நம் வாழ்வின் ஆச்சர்யம்!