இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

உம்மீது கொள்ளும் அன்பால்!

எரேமியா 20:7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு 16:21-27

போனவாரம் பூசைக்கு வந்துட்டு இந்த வாரமும் பூசைக்கு வந்தவங்க இன்றைய நற்செய்தியைக் கேட்டா ரொம்பவே ஷாக் ஆயிடுவாங்க. பேதுருவைப் பார்த்து போன வாரம், 'ஐயா, மகனே, ராசா, நீ பெரிய ஆளுப்பா, உன் மைன்ட் மனித மைன்ட் அல்ல, கடவுளோட மைன்ட்' என புகழாரம் சூட்டிய இயேசு, 'அப்பாலே போ சாத்தானே' என இரட்டைச் சொற்களில் (கிரேக்கத்தில்) முடித்துவிடுகிறார்.

நம்ம இயேசுவை நாம எப்படித்தான் புரிந்து கொள்றது?

நல்ல கேள்வி. இந்தப் பிரச்சினைதான் பேதுருவுக்கும் இருந்தது. இயேசுவைப் புரிந்துகொள்ள அவரால் முடியவில்லை. அவரோட கெபாசிட்டி அவ்வளவுதான். எல்.கே.ஜி படிக்கிற குழந்தைக்கு 'நான்கு எருதுகளும், ஒரு சிங்கமும்' என்ற கதைதான் சொல்ல முடியும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் 'ஆஸ்கர் லைல்ட் உரைநடை' நடத்த முடியும். நல்லா பார்த்தோம்னா, இயேசு எல்.கே.ஜி குழந்தைகளாக இருந்த பேதுருவுக்கும், சீடர்களுக்கும் 'ஆஸ்கர் வைல்ட்' நடத்துகிறார். 11 பேர் புரிந்த மாதிரி அமைதியாக இருக்கின்றனர். இவர் மட்டும் புரியாம, 'ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது' என்கிறார். நம்ம மனசுக்கு புடிச்ச ஒருவர், 'நான் கொஞ்ச நாள்ள கஷ்டப்படப்போறேன். என் சொத்தெல்லாம் அழிஞ்சுடம். எனக்கு கேன்சர் வந்துடும். நான் செத்துப்போவேன்' என்று நம்மிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நாம என்ன பதில் சொல்வோம்? பேதுரு சொன்ன மாதிரிதான் சொல்வோம்: 'ஐயோ, வாய மூடு! உனக்கு இப்படி எல்லாம் நடக்காது' என்று சொல்வோம். நாமளாவது, 'நடக்காது' என்று கடவுளோடு செக்ரட்டரி மாதிரி சொல்வோம். ஆனால், பேதுருவோ, 'நடக்கக் கூடாது' என்ற தன் விருப்பத்தைத்தான் சொல்கிறார். எல்.கே.ஜி குழந்தை 'ஆஸ்கர் வைல்ட்' படிக்கலனு, 'கிளாஸ் ரூமை விட்டு வெளியே போ' என்று சொல்லிவிட்ட இயேசு என்ற ஆசான் தொடர்ந்து வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு 'ஆஸ்கர் வைல்ட்' மட்டுமே நடத்துகின்றார்: 'பின்பற்றுதல், தன்னலம், சிலுவை, துறத்தல், உயிர், இழப்பு, வாழ்தல், ஆன்மா, வாழ்க்கை, உலகம், ஆதாயம்' என என்னென்னவோ பேசுகின்றார். இலட்சக்கணக்கில் இதற்கான விளக்கவுரை எழுதியே நமக்குப் புரியவில்லை. பாவம், அந்த பச்ச மண்ணுங்களுக்கு எப்படி புரியும்?

ஆக, என்னைப் பொறுத்தவரையில் இயேசு பேதுருவை கடிந்து கொள்ளுதலை நியாயப்படுத்த முடியாது. ஆகையால்தான் மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தியாளர்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்தாலும், பேதுருவோடு உடன்சென்றவரும், அடுத்தவரின் பெயரைக் கெடுக்க விரும்பாதவருமான லூக்கா, இயேசு கடிந்து கொள்வதை எழுதாமல் விடுகின்றார்.

சரி இன்றைய இறைவாக்கு வழிபாட்டை, குறிப்பாக, நற்செய்தியை எப்படி புரிந்துகொள்வது?

இன்றைய திருப்பலியின் சபை மன்றாட்டு நமக்கு தொடக்கத்தளமாக இருக்கிறது:

'உம்மீது கொள்ளும் அன்பால் எங்களுடைய இதயங்களை நிரப்பியருளும்.
நாங்கள் மேன்மேலும் உம்மில் வளரவும்,
நன்மையானதெல்லாம் எங்களில் மலரவும்,
இவ்வாறு உமது செயல் எங்கள் வாழ்வில் வெளிப்படவும்...'


மிக அழகான சபை மன்றாட்டு.

முதல் மூன்று வார்த்தைகள் - உம்மீது கொள்ளும் அன்பால் - இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் அடிநாதமாக இருக்கின்றன. எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (எரே 20:7-9) தொடங்குவோம்.

நாம நம்ம கோயில்களில் அடிக்கடி தியானப்பாடலா ஒரு பாட்டு பாடுவோம். தெரியுமா? 'ஆண்டவரே, நீரே என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப்போனேன்.' இதைப் பாடும்போதெல்லாம் பாடகர் குழுவினரை நான் கவனித்திருக்கிறேன். இது ஏதோ ஒரு காதல் பாடல் போல மிகவும் இரசித்துப் பாடுவார்கள். காதலனும், காதலியும் திருப்பலிக்கு வந்திருந்தால் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்த்து புன்னகை செய்துகொள்வர். ஆனால், எரேமியா நூலில் இது மிகவும் சோகமான பாடல். எப்படி?

ஒரு மனுசன் தன் சொந்த ஊரை விட்டுவிட்டு இன்னொரு ஊருக்குப் போய், 'இந்த ஊரு அழியப்போகுது' என்று சொன்னா, அந்த மனுசனுக்கு என்ன நடக்கும்? ஊரார் அவன்மேல் கோபப்படுவர். அவனை விரட்டுவர். அவனோடு உப்பு, தண்ணீர் புழங்கமாட்டார்கள். அவனைக் கல்லால் எறிவர். இப்படி எருசலேம் மக்களின் - ஆட்சியாளர் (பஸ்கூர்) முதல் அடிமை வரை - எல்லாருடைய சாபங்களையும் பெற்றுவிட்டு ஆண்டவர் முன் செல்கின்ற எரேமியா, விரக்தி, சோர்வு, ஏமாற்றம் என எல்லாவற்றையும் குலைத்து ஒற்றைக்குரலில் பாடும் பாடல்தான் இன்றைய முதல் வாசகம் (காண். 20:7-9). 'ஆண்டவரே, நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனேன்' எனத் தொடங்குகிறார் எரேமியா. எப்போ ஏமாற்றம் வரும்? எதிர்பார்ப்பு இருக்கும் போது ஏமாற்றம் வரும். எரேமியா என்ன எதிர்பார்க்கிறார்? இறைவாக்குப் பணி ஒரு மலர்ப்படுக்கையாக இருக்கும் என நினைக்கிறார். தான் அறிவிப்பது அனைத்தும் நற்செய்தியாக, மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கும் என நினைக்கிறார். அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிறது. எரேமியா ஏமாற்றம் அடைகின்றார். தொடர்ந்து, 'நீர் என்னைவிட வல்லமையுடையவர். என்மேல் வெற்றி கொன்றுவிட்டீர்.' தன்னைக் காதலியாகவும், கடவுளைக் காதலனாகவும் உருவகம் செய்கிறார் எரேமியா. எபிரேயத்தில் இந்த ஆள்கொள்ளுதலின் அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இப்படி முறையிட்டுகொண்டே போனாலும், 'என்னால அமைதியா இருக்க முடியலியே ஆண்டவரே! உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அதை என்னால் அடக்க முடியவில்லை' என்கிறார். அதாவது, ஒருபக்கம் கடவுள் ஏமாற்றிவிட்டார். அதனால, நாமும் அவரைக் கழற்றி விடுவோம் என்ற நினைப்பும், மறுபக்கம், 'அவர் சொன்ன சொல்லை இறைவாக்குரைக்காமல் எப்படி இருக்கிறது' என்ற நினைப்பும் அவரை இருதலைக்கொல்லி எறும்பாக்குகின்றன. 

இறுதியில் முறைப்பாடு எப்படி முடிகிறது? எரே 20:11ல் வாசிக்கின்றோம்: 'ஆண்டவர், வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.' அதாவது, ஆண்டவர் தன்னைவிட்டுத் தூரமாகப் போய்விட்டார் என்ற எண்ணம், 'கடவுள் என்னோடு இருக்கிறார்' என்ற நம்பிக்கையாக மாறுகிறது.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? 'உம்மீது கொள்ளும் அன்பால்'. எப்படி?

தொடக்கத்தில் எரேமியாவின் புலம்பல் எல்லாம் தன்மீது கொண்ட அன்பாகவே இருக்கிறது. 'நான் ஏமாந்து போனேன். நான் நகைப்புக்கு ஆளானேன். என்னை ஏளனம் செய்கிறார்கள். நான் கத்த வேண்டியுள்ளது.' என, 'நான், நான்' என அடுக்கிக்கொண்டே வந்த எரேமியா, 'உம் வார்த்தை' என்று ஆண்டவரின் வார்த்தையை நினைவுகூர்ந்தவுடன் நம்பிக்கை பெறுகின்றார். ஆக, 'என்மேல் கொள்ளும் அன்பால்' என்ற நிலை மாறி, 'உம்மீது கொள்ளும் அன்பால்' என்று நிலைகொள்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு (மத் 16:21-27)க்கு வருவோம்.

வாக்கியத்தின் பொருளின் அடிப்படையில் இந்த நற்செய்திப் பகுதியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசு தன் இறப்பையும், உயிர்ப்பையும் முதன்முறை முன்னறிவித்தல் (16:21)
ஆ. இயேசு பேதுருவைக் கடிந்து கொள்ளுதல் (16:22-23)
இ. இயேசு சீடத்துவம் பற்றி கற்பித்தல் (16:24-27)

இயேசு தன் இறப்பையும், உயிர்ப்பையும் பற்றி ஏற்கனவே அறிந்திவராயிருக்கிறார். அவரின் இறப்பும், உயிர்ப்பும் கடவுளாகிய தந்தையை நோக்கி 'உம்மீது கொள்ளும் அன்பால்' என்பதுபோல இருக்கிறது. ஆனால், இதே மனநிலை பேதுருவிடம் வரவில்லை. இயேசுதான் 'மெசியா,' 'இறைமகன்' என அறிக்கையிட்டு நல்ல பெயர் வாங்கியவர், மெசியாவின் அரசவையில் நாமும் மந்திரிகளாக இருக்கலாம் என கனவு காண்கிறார். ஏனெனில் அன்று நிலவிய மெசியா நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அப்படித்தான் சொன்னது. ஆக, தான் கற்றதையும் கேட்டதையும் வைத்துக் கனவு காண்கிறார் பேதுரு. இந்தக் கனவின் தவறு என்னவென்றால், இது முழுக்க முழுக்க பேதுருவை - 'என்மீது கொள்ளும் அன்பால்' - மையமாக வைத்த நிலையில் இருக்கிறது. ஏன்? மெசியா கஷ்டப்பட்டா கூட இருக்கிறவர்களும்தான கஷ்டப்படனும். அதனாலதான், 'இது உமக்கு நடக்க கூடாது' என்ற வெளியிலும், 'இது எனக்கு நடக்கக் கூடாது' என்று தனக்குள்ளும் சொல்லிக்கொள்கின்றார் பேதுரு. அதைக் கண்டித்துத் திருத்துகின்ற இயேசு, தொடர்ந்து சீடத்துவத்தின் தன்மை பற்றிச் சொல்கின்றார். சீடத்துவத்தில் 'என்மீது கொண்ட அன்பால்' என்ற நிலைக்கு இடமே இல்லை. நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்மேல் கொண்ட அன்பால்தான் வாழ்க்கை இருக்க வேண்டும்.

இதை இன்றைய இரண்டாம் வாசகமும் (உரோ 12:1-2) சொல்கிறது. இயேசுவைப் பற்றிய நீண்ட இறையியல் கட்டுரையை எழுதவிட்டு அதை அறிவுரைப்பகுதியோடு நிறைவு செய்கிறார் பவுல். விவிலியத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில பகுதிகளில் இதுவும் ஒன்று. தனிமனித மற்றும் சமூக, திருச்சபை அறநெறி பற்றி மிக அழகாக, அழுத்தமாக பதிவு செய்கிறார் பவுல். வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்கின்ற பவுல் 'கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.' இரண்டு மாதங்களுக்கு முன் உரோமிலிருந்து வந்த வழிபாட்டு விதிமுறைகளுக்கும், பவுலின் விதிமுறைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. 'அப்பம்' எந்த வடிவத்தில், எவ்வளவு திக்னஸ் கொண்டு, எவ்வளவு மொறுமொறு தன்மை கொண்டு, எவ்வளவு புளிப்பு சேர்க்கப்பட்டு என்ன பத்தி பத்தியாக இருந்தது அந்த வழிபாட்டு விதிமுறை. ஆனால், பவுலின் வழிபாட்டு முறை ரொம்ப சிம்பிள். ஒயின், ஓஸ்தி எதுவும் இல்லாமல், உங்களையே கடவுளுக்குப் படையுங்கள் என்கிறார். ஒயின், ஓஸ்தியைப் படைப்பதை விட நம்மையே படைப்பதுதான் மிகவும் கஷ்டம். 'படையுங்கள்' என்பது தமிழில் உள்ள அழகான வார்த்தை. இந்து ஆலயங்களில் எப்போதெல்லாம் ஒன்றைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறார்களோ அப்போதெல்லாம் அதைப் 'படைத்தல்' என்பார்கள். காணிக்கைப் பொருள் 'படையல்' எனப்படும். விருந்துக்குச் செல்லும்போது முதலில் செல்லும் ஒருவர் தன் தட்டை முழுவதும் நிரப்பிக்கொண்டு, அடுத்தவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், ஒன்றும் கிடைக்காதவர், 'என்ன பெரிய படையலா' இருக்கு என்பார். அதாவது, 'படைத்தல்' என்றால் முழுவதுமாகக் கொடுப்பது. ஆக, 'உங்களுக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் உங்களையே முழுமையான பலியாகக் கடவுளுக்குப் படையுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். ஆக, 'உங்கள் மீது கொள்ளும் அன்பால் அல்ல,' மாறாக, 'கடவுள்மீது கொள்ளும் அன்பால்' என அவர்களின் டிராக்கை மாற்றுகின்றார்.

'என்மேல் கொள்ளும் அன்பு,' 'உம்மேல் கொள்ளும் அன்பாக' மாறுவது எப்படி?

அ. 'எனக்கு சௌகர்யமா' என்ற நிலையிலிருந்து 'எனக்கு சொளந்தர்யமா' என்ற நிலைக்கு மாறுவது

நிறைய விசயங்கள் அல்லது நிறைய மனுசங்க நமக்கு 'கன்வீனியன்ட்டா' (எனக்கு சௌகரியமா) இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா, சௌகர்யமா இருக்கிற எல்லாம் சொளந்தர்யமா இருக்கிறது இல்ல. எரேமியாவுக்கு கடவுளிடம் முறையிடுவது சௌகர்யமா இருந்துச்சு. ஆனா சௌந்தர்யம்தான் இறுதியில் வென்றது. கடவுளின் வார்த்தையை அவரால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. பேதுருவைப் பொறுத்தவரை இயேசுவுக்கு துன்பம் வேண்டாம் என்பது ரொம்ப சௌகர்யம். ஆனால் சௌந்தர்யம் என்னவென்றால் கடவுளின் திருவுளம். உரோமைத் திருச்சபைக்கு வெளிப்புற வழிபாடு ரொம்ப சௌகர்யமாக இருந்துச்சு. ஆனா, உண்மையான சொளந்தர்யம் உள்ளார்ந்த வழிபாட்டில்தான் இருக்கு என உணர்த்துகிறார் பவுல்.

ஆ. 'தேவைகள்' என்ற நிலையிலிருந்து 'அவசியம்' என்ற நிலைக்கு மாறுவது

'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?' என இயேசு கேட்பது எனக்கு மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் டைமன்ட் ராஜ் அவர்களை நினைவுபடுத்துகிறது. 1980களின் இறுதி. நம் நாட்டை விசிடி பிளேயர்கள் எட்டிப்பார்க்காத நேரம். அமெரிக்கா சென்றிருந்த அவர் விசிடி பிளேயர் ஒன்றை வாங்கி வந்திருந்தார். 'இரவு சாப்பிட்டுவிட்டு படம் பார்ப்போம்' எனச் சொல்லிவிட்டார். இரவு உணவு முடிந்து எல்லாரும் ஹாலில் கூடிவிட்டனர். 'இந்தா, போய் என் ரூமில் இருக்கும் விசிடி பிளேயரை எடுத்து வா' என அருள்சகோதரர் ஒருவரிடம் சாவியைக் கொடுத்து அனுப்புகிறார். அதைத் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கிய அருள்சகோதரர் கால் ஸ்லிப்பாகி கீழே விழ, தன் கையில் வைத்திருந்த பிளேயரை கீழே போட்டுவிடுகின்றார். சுக்குநூறாகின்றது பிளேயர். சத்தம் கேட்டு அருள்தந்தையும், மற்றவர்களும் ஓடிவருகிறார்கள். 'அச்சச்சோ!' என்று எல்லாரும் உச் கொட்ட, அருள்தந்தை டைமன்ட் மட்டும், 'தம்பி, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே!' எனக் கேட்டாராம்.

அதவாது, பார்க்காத ஒன்றைப் பார்க்க வேண்டும், விசிடி பிளேயர் தொழில்நுட்பத்தைப் பார்க்க வேண்டும் என்பது தேவைதான். ஆனால் அவசியமானது எது? ஒரு மனித உயிர். இயேசு சொல்வதும் இதுதான். 'இது தேவை. அது தேவை.' என நீங்கள் அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். ஆனால் அவசியமானது ஆன்மா தானே. நிறைய பொருள்கள் வைத்திருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது என்கிறார் இயேசு. ஆக, தேவையானதை விட்டுவிட்டு அவசியத்தை மட்டும் பற்றிக்கொள்வது இரண்டாம் படி.

இ. 'பழையவை' என்ற நிலையிலிருந்து 'புதியவை' என்ற நிலைக்கு

இன்றைய இரண்டாம் வாசகத்தில் உலகத்தின்படி ஒழுகுதலை பழைய நிலை என்று அழைக்கும் பவுல், 'உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக' என்கிறார். இந்த புதிய நிலைதான் 'கடவுளின் திருவுளம் என்ன என்பதைக் காட்டுகிறது.' அத்தோடு, 'எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதையும் தெளிவாகக்' காட்டுகிறது. நாம் பழையவற்றைப் பற்றிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில் பழையவை நமக்குப் பழக்கப்பட்டவை. பழையவை தன் மையம் கொண்டிருக்கிறது. புதியவை பிறர்மையம் கொண்டிருக்கிறது. இந்த மாற்றமே மூன்றாவது படி.

இறுதியாக, 'என்மீது கொள்ளும் அன்பால்' என்ற நிலை 'உம்மீது கொள்ளும் அன்பால்' என மலர்ந்தால், இன்றைய சபை மன்றாட்டு சொல்வது போல, 'நாங்கள் மேன்மேலும் உம்மில் வளர்வோம். நன்மையானதெல்லாம் எங்களில் மலரும். உமது செயல் எங்கள் வாழ்வில் வெளிப்படும்.'