இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

இருவகை அனுபவம்: இரத்தமும்-சதையும், வெளிப்பாடும்

எசாயா 22:19-23
உரோமையர் 11:33-36
மத்தேயு 16:13-20

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆனந்தவிகடனில் 'வலைபாயுதே' என்ற பக்கத்தில் இரசம் பற்றிய ஒரு துணுக்கு இருந்தது: 'நம் தட்டுக்களை எளிதாக கழுவுவதற்கு உதவியாக ஏதோ ஒரு தமிழ்ப்பெண் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே இரசம்.' அதாவது, இரசம் ஊற்றி சாப்பிட்ட தட்டைக் கழுவுவது எளிதாக இருக்கும். இதே இரசம் பற்றிய மற்றொரு பதிவில், 'இரசம் என்பது சாமானியர்களின் மதுபானம்' என எழுதியிருந்தது. தண்ணீர், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு என சேர்த்து நல்ல கொதிநிலையில் இறக்கி வைக்கும் இரசம் ஒன்றுதான். ஆனால், அதைக் குடிக்கும் அல்லது அதோடு உண்ணும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக பார்க்கின்றோம். ஆக, ஒன்றின் இருப்பு அல்லது சுவை என்பது அது எப்படி இருக்கிறது அல்லது சுவைக்கிறது என்பதைவிட அதை அனுபவிப்பரைப் பொறுத்தே அமைகின்றது. இந்த அனுபவத்தை முற்சார்பு எண்ணம் (prejudice or pre-understanding) என அழைக்கிறது மெய்யியல். இவ்வாறாக, நாம் அனுபவிக்கும் ஒன்றில் நம் தடத்தை நாம் அப்படியே பதித்துவிடுகின்றோம்.

இதைவிட உயர்ந்ததொரு நிலை இருக்கிறது. அதுதான் வெளிப்பாடு. அதாவது மனிதர்கள் தாங்களாக அனுபவித்திராத ஒன்றைப் பற்றி கடவுள் வெளிப்படுத்துவதுதான் வெளிப்பாடு. வேற்று கிரகத்தார் அல்லது வெளிநாட்டவர் ஒருவரை நம் உணவறைக்கு அழைத்து வந்து ஒரு கப் ரசம் ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் தன் வாழ்வில் ரசம் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. அவர் குடித்து முடித்தவுடன், இதுதான் 'இரசம்' என சொல்கிறோம். இப்போது இது இரசம் என்பதை அவருடைய முன்அனுபவம் அல்லது முற்சார்பு எண்ணம் சொல்லவில்லை. அவராக, அதை அனுபவித்துப் பார்க்கவும் இல்லை. மாறாக, வெளியே இருந்து ஒருவர் வெளிப்படுத்தியதால் அந்த அனுபவத்தை அவர் பெறுகிறார். மேலும் இதை வெளிப்படுத்திய நாம் அந்த நபருக்கு கடவுளாகவே (புதியதை அறிமுகப்படுத்துபவராக) தெரிகின்றோம்.

இவ்வாறு, வாழ்வில் நாம் பெறும் அனுபவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்: (அ) இரத்தமும், சதையும் சார்ந்தது. (ஆ) கடவுள் சார்ந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 16:13-20) பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கக் கேட்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவு, உவமைப்பொழிவு, அற்புதங்கள் நிகழ்வு என மூன்று கட்டங்களில் இயேசுவை சீடர்களுக்கு அறிமுகப்படுத்திய மத்தேயு நற்செய்தியாளர் தனது இந்த அறிமுகம் சீடர்கள் மேல் எத்தகையை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறியும் நிகழ்வே இது. இந்த நிகழ்வு மாற்கு (8:27-30) மற்றும் லூக்கா (9:18-20) நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுதான் ஒத்தமைவு நற்செய்திகளின் மையமாக இருக்கிறது.

  இயேசு என்ற ஒரு நபர் நிற்கின்றார். அவரை இரண்டு வகையானவர்கள் பார்க்கின்றார்கள்: (அ) முதல் வகையினர் மக்கள். இவர்கள் இரத்தமும், சதையும் நிலையிலிருந்து பார்க்கின்றனர். (ஆ) இரண்டாம் வகையினர் சீடர்கள். இவர்கள் விண்ணகத்தந்தை வெளிப்படுத்தும் வெளிப்பாடு நிலையிலிருந்து பார்க்கின்றனர்.

  அ. இரத்தமும், சதையும்

'இரத்தமும், சதையும்' என்பது கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மற்றும் ஆங்கிலத்திற்குள் நுழைந்திருக்கும் ஒரு சொல்லாடல். 'மனித உடல்' அல்லது 'மனிதர்' அல்லது 'மனித வலுவின்மை' ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இது இருக்கிறது. எபிரேய மற்றும் தமிழ் இலக்கியங்கள் 'இரத்தமும், சதையும்' என்பதற்குப் பதிலாக, 'எலும்பும், சதையும்' (காண். தொநூ 2:23 மற்றும் பட்டினத்தாரின் உடற்கூற்றுவண்ணம் வ. 1,24) எனக் குறிப்பிடுகின்றன. ஆணின் விந்து அல்லது சுக்கிலம் எலும்பை உருவாக்குகிறது என்பதும், பெண்ணின் விந்து அல்லது சுரோணிதம் சதையை உருவாக்குகிறது என்ற புரிதலும் இதன் பின்புலத்தில் இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது. ஏனெனில் 'இரத்தமும், சதையும்' என்ற சொல்லாடல் மனித உடலின் 'மென்மைத்தன்மையை' மட்டுமே முன்வைக்கின்றனவே தவிர, 'வன்மைத்தன்மை' பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஆக, கிரேக்க அல்லது ஆங்கில சொல்லாடலை விட எபிரேயம் அல்லது தமிழ் சொல்லாடல் முழுமையானதாகத் தெரிகிறது. 

சொல்லாடல் ஆராய்ச்சி விட்டு, விவிலியப் பொருளுக்கு வருவோம்.

'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு. மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள், 'நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு கேட்பதாகப் பதிவு செய்கின்றனர். ஆனால் மத்தேயு, 'நான்' என்பதை விடுத்து, 'மானிட மகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் சிலர் எலியா எனவும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என மறுமொழி பகர்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சமகாலத்தவர்கள் திருமுழுக்கு யோவானைக் கண்டவர்கள். மெசியா என மக்கள் சந்தேகப்பட்ட ஒருவர் திடீரென ஏரோதால் கொலைசெய்யப்படுகின்றார். கொலைசெய்யப்பட்ட ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வரலாம் என சில பரிசேயர்கள் நம்பினர். சதுசேயர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது. அடுத்ததாக, எலியா. இஸ்ரயேல் மக்களின் மாபெரும் இறைவாக்கினர் எனப் போற்றப்பெறும் இவ்விறைவாக்கினர் தம் பணிவாழ்வில் பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றழித்தவர். தன் யாவே கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிட்டவர். இதன் முத்தாய்ப்பாக இவர் இறக்காமல் அப்படியே வானிற்கு தங்கத்தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். இப்படி வானிற்கு ஏறிச்சென்ற இவர் மீண்டும் வருவார் என சிலர் நம்பினர். அடுத்ததாக, எரேமியா. பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பி புத்துயிர்பெற்றதை பதிவு செய்தவரும், 'புதிய உடன்படிக்கை' என்ற கருத்தியலை இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னவரும் இவரே. தான் அறிவித்த 'புதிய உடன்படிக்கையை' மீண்டும் நிலைநிறுத்த இவர் பிறக்கலாம் எனவும் சிலர் நம்பினர். இறுதியாக, சிலர் தொட்டும் தொடாமல் 'இறைவாக்கினருள் ஒருவர்' எனச் சொல்கின்றனர். இந்த எல்லா புரிதல்களிலும் என்ன தெரிகிறது என்றால் இயேசு என்பவர் ஏற்கனவே இருந்த ஒரு நபரின் தொடர்ச்சி என்பதுதான். 

இதுதான் இரத்தமும், சதையும் அல்லது மனித உள்ளம் கொண்டிருக்கிற புரிதல். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழும், உட்பட்டு சிந்திக்கும் நாம் எல்லாவற்றையும் காலத்தின் தொடர்ச்சியாக அல்லது இடத்தின் நீட்சியாகவே பார்க்கின்றோம். ஆக, இரத்தமும் சதையும் எண்ணும் சிந்தனை காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டதாக இருக்கிறது. இந்த சிந்தனை மூளையிலிருந்து செயல்படும். 'இதன் தொடர்ச்சி அது, அதன் தொடர்ச்சி வேறொன்று' என மூளைதான் வரையறுக்கிறது. 

இந்த வகை சிந்தனை நம் உறவுநிலைகளிலும் இருக்கலாம். அதாவது நாம் அன்பு செய்யும் நபரை நாம் காலத்திற்கு உட்படுத்தியே பார்க்கின்றோம். ஆகையால்தான், நேற்று 10 நிமிடம் பேசிய நபர் இன்று 5 நிமிடம் பேசினால் அல்லது நேற்று விறுவிறுப்பாக பேசிய நபர் இன்று சோர்வாகப் பேசினால் நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. நேற்று 10 நிமிடம் பேசியவர் என்று 15 நிமிடம் பேச வேண்டும் என்றும் நேற்று விறுவிறுப்பாக பேசியவர் இன்னும் அதிக விறுவிறுப்பாக பேச வேண்டும் எனவும் விரும்புகிறோம். 

இதை நாம் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தோம் என்றால், போன வருடம் 10 லட்சம் கொடுத்த கடவுள் இந்த வருடம் 20 லட்சம் கொடுக்க வேண்டும், போன வருடம் காய்ச்சலை குணமாக்கிய கடவுள் இந்த வருடம் கேன்சரைக் குணமாக்கவும் வேண்டும் என செபிக்கின்றோம். இவ்வாறாக, இரத்தமும் சதையும் அனுபவம் குறுகியதாக இருப்பதோடல்லாமல், அடுத்தடுத்து நீட்டிக்கொண்டு போவதாகவும் இருக்கிறது. மேலும் இவ்வகையான அனுபவத்தை நாம் எல்லா மனிதர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கின்றோம். இப்படித்தான் எல்லாரும் சிந்திக்கிறார்கள் என்ற ஒரு கட்டமைப்பும் இங்கே இருக்கிறது.

ஆ. வெளிப்பாடு

இயேசுவின் கேள்வி திரும்பவும் வருகிறது. ஆனால் இம்முறை சற்றே மாறுபடுகிறது: 'ஆனால் நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?' 

'அவர்கள்' என்ற வார்த்தை 'நீங்கள்' என மாறிவிட்டது. மூன்றாம் நபர் நிலையிலிருந்து கேள்வி இரண்டாம் நபர் நிலைக்கு மாற்றப்படுகிறது. 'மானிட மகன்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'நான்' என வெளிப்படையாகச் சொல்கின்றார் இயேசு. 

சீடர்களின் பிரதிநிதியாக முன்வருகின்ற பேதுரு, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என பதில் சொல்கின்றார். மாற்கு நற்செய்தியில் பேதுருவின் பதில், 'நீர் மெசியா' என்றும், லூக்கா நற்செய்தியில், 'நீர் கடவுளின் மெசியா' என்றும் உள்ளது.

பேதுருவின் இந்தப் பதிலைக் கேட்டவுடன், 'யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த இரத்தமும் சதையும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்' என பாராட்டுகின்றார்.

விண்ணகத்தந்தையின் வெளிப்பாடு காலத்திற்கும், நேரத்திற்கும் அப்பாற்பட்டது. ஆகையால்தான், இயேசுவை காலத்தின் வளர்ச்சி அல்லது இடத்தின் நீட்சியாகப் பார்க்காமல், 'நீர் மெசியா' என்ற புதிய கோணத்தில் பார்க்கிறார் பேதுரு. 'ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்' என்று மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது இஸ்ரயேல் சமூகம். ஆனால் யாருக்கும் கிடைக்காத வெளிப்பாடு சீடர்களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் இயேசுவை மெசியாவாக கண்டுகொள்கின்றனர். இந்தக் கண்டுகொள்ளுதல்தான் அவர்களின் நம்பிக்கைப் பயணத்தின் உச்சம்.

ஆக, நம்பிக்கைப் பயணத்தில் ஒரு கட்டத்தில் எரியும் சின்ன ஆயிரம் வாட்ஸ் பல்ப்தான் வெளிப்பாடு. இந்த வெளிச்சத்தில் நம் முன் இருப்பவர் யார் என்று நமக்குத் தெரிந்துவிடுகிறது.

இதை நம் உறவு நிலைகளுக்குப் பொருத்திப்பார்ப்போம். நாம் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பிறந்து நம் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் குடும்பம், பின்புலம் என இருக்கிறது. இந்தப் பின்புலத்தை மட்டும் பார்த்து நாம் உறவாடினால் உறவு நீடிப்பதில்லை. மற்றவரின் குடும்பமும், பின்புலமும் நமக்குப் பிடிக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வெளிப்பாடு அல்லது நம்பிக்கை என்ற ஒளி பிறக்கும்போது அடுத்தவரைப் பற்றிய ஒரு புதிய பிம்பம் நம் மனதில் பதிகிறது. நம் மனது அதை அப்படியே எடுத்துக்கொள்கிறது. இந்த புதிய பிம்பமே நாம் ஒருவர் மற்றவரோடு உறவாட நம்மைத் தூண்டுகிறது.

கடவுளோடு நாம் கொள்ளும் உறவிற்கும் இதைப் பயன்படுத்தலாம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, இயேசு, அகுஸ்தினார் போன்றவர்களின் கடவுள் அனுபவங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இவர்கள் கடவுளிடம், 'இது வேண்டும், அது வேண்டும்' எனக் கேட்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேரத்தில் தாங்கள் காணும் ஒளியில் கடவுளை அப்படியே பற்றிக்கொள்கின்றனர்.

இவ்வாறாக, நம் மனித அனுபவம் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது.

முதல் நிலையில் அல்லது இரத்தமும் சதையும் நிலையில் நம் அனுபவம் இருந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்குப் பதிலாக வருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். எசா 22:19-23). யூதா நாட்டின் செபுனா என்ற அரண்மனைப் பொறுப்பாளன் தன் இரத்தமும் சதையும் என்ற நிலையில் சிந்திக்கிறவனாய் இருக்கிறான். அவனை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கண்டிக்கின்ற யாவே இறைவன், 'உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன். உன் நிலையிலிருந்து கவிழ்த்துவிடுவேன்' என்கின்றார். அதாவது, 'இதுதான் நான். இப்படித்தான் எனக்கு எல்லாம் நடக்கும்' என்று யாரும் கணிக்க முடியாது. இருந்தாலும் இப்படிக் கணித்து வாழ முற்படுகிறான் செபுனா. ஆகையால் இறைவனால் தண்டிக்கப்படுகிறான்.

ஆனால், இரண்டாம் நிலையில் அல்லது வெளிப்பாட்டு நிலையில் அனுபவம் கொண்டிருக்கின்ற எலியாக்கிமிற்கு லக்கி ப்ரைஸ் அடிக்கிறது: 'அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோள்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்கமாட்டான்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இதே நிலைதான் இன்றைய நற்செய்தியிலும் உள்ளது. பேதுருவின் சிறப்பான பதிலைப் பாராட்டுகின்ற இயேசு, 'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் ... விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்' என்கிறார். 

இரத்தமும் சதையும் நிலையிலிருந்து விடைபகர்ந்த மக்களுக்கு எந்தக் கைம்மாறும் இல்லை. ஆனால் கடவுளின் வெளிப்பாட்டிற்குத் தம்மையே திறந்து கொடுத்த பேதுருவுக்கு கைம்மாறு கிடைக்கிறது.

கைம்மாறு பெற்றுத்தரும் கடவுளின் வெளிப்பாடு என்பது ஒரு கொடை. ஆகையால்தான், 'ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?' என இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண் உரோ 11:33-36) மேற்கோள் காட்டுகின்றார் பவுல்.

இந்த இருவகை அனுபவங்கள் நமக்கு வைக்கும் சவால்கள் இரண்டு:

1. நம் உறவுநிலைகள்

எனக்கும் எனக்குமான உறவு, எனக்கும் பிறருக்குமான உறவு, எனக்கும் இறைவனுக்குமான உறவு என்ற இந்த மூன்று நிலைகளின் தரத்தை நிர்ணயிப்பவை மேற்காணும் அனுபவங்களே. எப்படி? 'இரத்தமும் சதையும்' என்ற நிலையில் மட்டுமே நான் உறவு கொண்டால் என்னை தாழ்வாக மதிப்பிடுபவனாகவும், அல்லது மிக உயர்வாக மதிப்பிட்டு ஆணவம் கொண்டவனாகவும், பிறரை அவர்களின் பின்புலத்தோடு மட்டும் பார்ப்பவனாகவும், இறைவனை அடுத்தவர்கள் காட்டும் அடையாளங்கள் வழி மட்டுமே பார்ப்பேன். ஆனால் 'வெளிப்பாடு' நிலையில் இருந்தால் நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்வேன். பிறர்மேல் பரிவும் பொறுமையும் காட்டுவேன். கடவுளோடு நான் இரண்டறக் கலந்துவிடுவேன்.

2. வெளிப்பாடும் கண்டுகொள்பவரும்

எல்லார்மேலும் நிலா ஒளிர்ந்தாலும் அதை வெகு சிலரே கண்டுகொள்கின்றனர். இயேசு எல்லாருக்கும் பொதுவான மனிதராக வலம் வந்தார். போதித்தார். நோய்களைக் குணமாக்கினார். அறிவுரைகள் தந்தார். ஆனால் எல்லா மக்களும் அவரை மெசியாவாக கண்டுகொள்ளவில்லை. சீடர்கள் மட்டுமே கண்டுகொள்கின்றனர். கடவுள் வெளிப்படுத்தும் புள்ளியும், நாம் புரிந்து கொள்ளும் புள்ளியும் இணையுமிடத்தில்தான் கண்டுகொள்தல் தோன்றுகின்றது. ஆக, என்னையும் இறைவனையும் நான் எப்படி இணைத்துக்கொள்கிறேன். இறுதியாக, இரத்தமும் சதையும் - இந்த இரண்டால்தான் நீங்களும், நானும் கட்டப்பட்டிருக்கிறோம். ஆனால் இதிலிருந்து கடக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. அந்த ஆற்றலே வெளிப்பாட்டைக் கண்டுகொள்ள உணர்கிறது.

என் வாழ்வு, வளர்ச்சி, உறவு, நம்பிக்கை என எல்லாப் பயணங்களிலும் 'இரத்தமும் சதையும்' நிலையிலிருந்து, 'வெளிப்பாடு' நிலைக்கு உயர்ந்தால் என் அனுபவமும் இறையனுபவமே ... இனிய அனுபவமே!