இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

பிள்ளைகளும், நாய்க்குட்டிகளும்!

எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15:21-28

'ஹோம் ஒர்க் செய்ய, காய்கறி நறுக்க, பால்கனியில் அமர்ந்து பேப்பர் பார்க்க, லேப்டாப் வச்சி வேலை பார்க்க, வயசானவங்க டிவி பார்த்துகிட்டே டிஃபன் சாப்பிட, 3 ஆங்கிள், 6 உயரம் என மொத்தம் 18 வகையாக பயன்படும் டேபிள் மேட் அவங்க வீட்டுல இருக்க, இவங்க வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல இருக்கா?' என்ற விளம்பரத்தை நாம் பார்த்திருப்போம்.

டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கம் நடுத்தர வீடுகளிலும் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது.

  மேசை - இந்த ஒற்றைச் சொல்லை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் இருக்கின்றன. நான் இத்தாலியில் படித்தபோது ஆச்சர்யப்பட்ட ஒன்று மேசைப் பழக்கம். உணவு மேசையில் எப்படி இருப்பது? என்று ஒரு நாள் வகுப்பே நடத்தப்பட்டது. மேசையில் அமர்ந்திருக்கும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரைத் தொடக்கூடாது. ஸ்பூன் அல்லது ஃபோர்க் கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது. ஒருவர் தூரத்தில் இருக்கும் கூடையிலிருக்கும் ரொட்டியில் ஒன்றைக் கேட்டால், கூடை முழுவதையும் தூக்கிக் கொடுக்க வேண்டும். தண்ணீரை கிளாஸில் ஊற்றும்போது புறங்கை கொண்டு ஊற்றக் கூடாது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக எந்த இடம் உனக்குக் குறிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில்தான் நீ உட்கார வேண்டும்.

இத்தாலிய வீடுகளில் தங்களுக்கு பிடித்தமான அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி வரும்போது அவரை முதன்மையான இருக்கையில் அமர வைத்து 'காப்போ தாவோலா' (மேசையின் முதல்வர்) என அறிவித்து மகிழ்வர். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மேசைகள் இருக்கும். வீட்டு உரிமையாளர்கள் அல்லது விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிட ஒரு மேசை. வழிப்போக்கர்கள் அல்லது பணியாளர்கள் அமர்ந்து சாப்பிட மற்றொரு மேசை. எந்தக் காரணத்திற்காகவும் வழிப்போக்கர்களும், முன்பின் தெரியாதவர்களும், பணியாளர்களும் முதல் மேசையில் அமர அனுமதிக்கப்படவே மாட்டார்கள்.

ஆக, மேசை என்பது ஒருவரின் உரிமையைக் காட்டுகிறது. இதே நிலை நம் ஊர் அரச அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பார்க்கலாம். 'என் டேபிளுக்கு இன்னும் வரல!' என்று அலுவலகங்களில் சொல்வார்கள். அதாவது, என் உரிமைக்கு இன்னும் வரவில்லை என்பதே இதன் அர்த்தம். என் பள்ளியின் ஆசிரியை ஒருவரது மேசையை மற்ற ஒருவர் திறந்தபோது அவர் குய்யோ முறையோ என அலறினார். தன் மேசையைத் திறந்தது பெரிய குற்றம் என்றார். ஆக, மேசையின் மேல் நாம் கொண்டாடும் உரிமை இயல்பானது. மேலும், மேசை என்பது நம் வேலையை அடையாளப்படுத்துவதோடு அது சில நேரங்களில் நம் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

இந்தப் பின்புலம் தெளிவானால் இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பொருள் தெளிவாகும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 56:1,6-7) நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் திரும்பிவருவர் என்றும், ஆண்டவரின் ஆலயம் மீண்டும் கட்டப்படும் என்றும் இறைவாக்குரைக்கின்ற எசாயா இறைவாக்கினர், ஆண்டவரின் திருமலை நோக்கி யூதரும், யூதரல்லாத புறவினத்தாரும் வருவர் என முன்மொழிகின்றார். ஆண்டவரின் திருமலை யூதர்களின் வழிபாட்டுத்தலம். இந்த இடத்திற்கு புறவினத்தார்கள் எப்படி அனுமதி பெறுவர்? யூதர்களுக்கு தங்களின் பிறப்புரிமையாக வருகின்ற இந்த உரிமை மற்றவர்களுக்கு எப்படி வருகிறது? மற்றவர்கள் செய்யும் நற்செயல்களால் இந்த உரிமை உருகிறது.

இந்த உரிமையைப் பெற மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றார் எசாயா:
அ. தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொள்ள வேண்டும்
ஆ. ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாமல் கடைப்பிடிக்க வேண்டும்
இ. கடவுளின் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும்

இந்த மூன்று பண்புகளையும் பெற்றிருக்கும் பிற இனத்தவர்கள் ஆண்டவரின் மேசையின் மேல் - பலிபீடத்தின்மேல் - வழிபட உரிமை அல்லது தகுதி பெறுவார்கள். பிறப்பால் வழிபடும் உரிமையைப் பெற்றிருக்கும் யூதர்களோடு இணைகின்றனர் செயல்களால் உரிமை பெற்றவர்கள். இந்த உரிமைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பது கிடையாது. இறைவின் இணைவதே அல்லது ஒன்றுசேர்ப்பதே முக்கியமானது.

இந்த இரண்டு வகை உரிமைகளையும் இன்றைய நற்செய்தி வாசகம்  (காண். மத் 15:21-28) 'பிள்ளைகள்,' 'நாய்க்குட்டிகள்' என உருவகப்படுத்துகிறது.  கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறும் நிகழ்வை மத்தேயு மற்றும் மாற்கு (காண். 7:24-30) மட்டுமே பதிவுசெய்கின்றனர். பெண்ணையும், புறவினத்தாரையும் இழிவுபடுத்துவதுபோல இந்நிகழ்வு இருப்பதால் லூக்கா இதை பதிவு செய்ய மறுக்கின்றார். இயேசுவை ஒரு குறிப்பிட்ட இனத்தின் மெசியா போல இது முன்நிறுத்துவதால் யோவான் இதை தன் நற்செய்திக்கு ஒவ்வாததாக நினைக்கின்றார். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுகளில் சில முக்கியமான வித்தியாசங்களும் இருக்கின்றன. இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா? என்று கேட்டால், 'ஆம்' என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நெருடலாக இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையான நிகழ்வுகள் என்பது விவிலிய ஆராய்ச்சியின் ஒரு விதி. இந்நிகழ்வை வாசிக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நெருடல் நம்மில் எழுகிறது. எப்படி?

இன்றைய நற்செய்தியில் வரும் கானானியப் பெண் மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்டவளாக இருக்கின்றார்: முதலில் அவர் ஒரு பெண். இரண்டாவது அவர் ஒரு புறவினத்துப்பெண். மூன்றாவது அவர் பேய்பிடித்த மகளின் தாய். அதாவது கடவுளின் சாபத்திற்கு ஆளானவள். இப்படியாக மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண் தன்னிடம் உதவி கேட்டுக் கதறி நிற்க, இயேசுவோ பாராமுகம் காட்டுகின்றார். ஓரிடத்தில் நின்று பதில் சொல்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றார். சீடர்கள் இவருக்காக பரிந்துபேசியபோது, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமல்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என தன் இனத்தைச் சார்ந்துகொண்டு பேசுகிறார் இயேசு. அனைத்திற்கும் மேலாக, இஸ்ரயேல் மக்களை 'பிள்ளைகள்' எனவும், புறவினத்தாரை 'நாய்கள்'   (அப்படித்தான் இருக்கிறது மூலமொழியில்) எனவும் உருவகித்து, 'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுதல் முறையல்ல' என சப்பை கட்டு கட்டுகின்றார் இயேசு. இந்த நிகழ்வும், இயேசுவின் வார்த்தைகளும் இயேசுவை, 'மரியாதை தெரியாதவராக, பெண்ணை மதிக்காதவராக, சாதிப்பற்று அல்லது இனப்பற்று கொண்டவராக, மற்ற சாதி அல்லது இனத்தை வெறுக்கின்றவராக, தலைக்கனம் கொண்டவராக' சித்திரிக்கின்றன. இயேசுவைப் பற்றிய இந்தப் புரிதல் நமக்கு நெருடல்தானே.

இயேசுவின் இந்த நெருடல்தருகின்ற ஆளுமை இன்றுவரை விவிலிய ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த நிகழ்வின் உரையாடல்களைக் கொண்டு நாம் இதன் கதைமாந்தர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

நிகழ்வில் 'பெண் - இயேசு,' 'சீடர்கள் - இயேசு' என இரண்டு மேடைகளில் உரையாடல்கள் நடக்கின்றன. 

மேடை 1:
பெண்: 'ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும். என் மகன் பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.'
இயேசு: (ஒருவார்த்தைகூட பதில் பேசவில்லை)
பெண்: 'ஐயா, எனக்கு உதவியருளும்!'
இயேசு: 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'
பெண்: 'ஆம் ஐயா. ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே'
இயேசு: 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உனக்கு நிகழட்டும்.'

மேடை 2:
சீடர்கள்: 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்!'
இயேசு: 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'

முதல் மேடையில் பெண்ணும் இயேசுவும் மூன்று முறை பேசிக்கொள்கின்றனர். மூன்று முறை பெண் பேசுகின்றார். இரண்டுமுறை இயேசு பேசுகின்றார். மூன்று முறைகளும் இயேசுவைப் பார்த்து, 'ஐயா' என மரியாதையோடு அழைக்கின்றார். ஆனால் இயேசுவோ தொடக்கத்தில் மொட்டை கட்டையாக பெண்ணை அழைத்துவிட்டு, இறுதியாக, 'அம்மா' என மரியாதையோடு அழைக்கின்றார். மேலும், பெண் இயேசுவை, 'தாவீதின் மகனே' என அழைக்கின்றார். நிகழ்வின் தொடக்கத்தில் பேய் பிடித்திருக்கும் பேய் இறுதியில் நீங்குகிறது. 'தாவீதின் மகன்' என அறிக்கையிட்ட பெண்ணின் நம்பிக்கையை, 'உம் நம்பிக்கை பெரிது' என பாராட்டுகின்றார் இயேசு.

  இங்கே மேசை ஒன்று இருக்கின்றது. அதில் வீட்டின் பிள்ளைகளம் அமர்ந்திருக்கின்றன. மேசைக்குக் கீழே அவர்கள் வளர்க்கும் நாய் படுத்திருக்கிறது. மேசையின்மேல் அமர்ந்து நாயால் உண்ணமுடியவில்லை என்றாலும், மேசையின்மேலிருந்து விழும் துண்டுகளை உண்பதால் நாயும் மேசையின்மேல் உள்ள உணவின் உரிமையாளர் ஆகிறது. இவ்வாறாக, 'பிள்ளைக்குரிய' மேசை உரிமை இயல்பாக வருகிறது. 'நாய்களுக்குரிய' உரிமை அவை மேசைக்கு அடியில் அமர்ந்திருப்பதில் வருகிறது. 'உன் உணவும், என் உணவும்,' 'பிள்ளைகளின் உணவும், நாய்களின் உணவே' எனத் தோலுரிக்கின்றார் கானானியப்பெண்.

தனக்கு இயல்பாக அல்லது பிறப்பால் வராத இறையரசு உரிமையைத் தன் நம்பிக்கையால் வெற்றிகொள்கின்றார் கானானியப்பெண். 

இரண்டாவது மேடையில் சீடர்களும், இயேசுவம் பேசிக்கொள்கின்றனர். தன் இனம் பற்றிய பேச்சை தன் இனத்தாரோடு வைத்துக்கொள்கின்றார் இயேசு. இந்த வகையில் இயேசு பரவாயில்லை. கொஞ்சம் சென்ஸிடிவ்வாக இருந்திருக்கிறார். சீடர்கள் பெண்ணைப் பற்றி இயேசுவிடம் சொல்வது தங்களி;ன் விருப்பத்தால் மட்டுமல்ல. மாறாக, அந்தப் பெண்ணின் தொந்தரவால்தான். 

எது எப்படியோ, நிகழ்வின் தொடக்கத்தில் இருந்த குழந்தையின் பேய் நிகழ்வின் இறுதியில் காணாமல்போய்விடுகிறது. 'பிள்ளைகளைப்' போலவே, 'நாய்க்குட்டிகளும்' தங்கள் நம்பிக்கையால் நலம் பெறுகின்றன.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:13-15, 29-32) தான் பிற இனத்து மக்களின் திருத்தூதர் என அறிக்கையிடும் பவுல் அதற்காக வருந்தவில்லை எனவும், கடவுளின் இரக்கத்தால் புறவினத்தாரும் உரிமைப்பேறு பெறுகின்றனர் எனவும் சொல்கின்றார். ஆக, 'பிள்ளைகள்' தங்கள் உரிமை என பெற்றுக்கொண்டவற்றை, 'புறவினத்தார்கள்' தங்களின் உரிமையை கடவுளின் இரக்கத்தால் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?

1. உரிமை
தனக்கு இயேசுவின்மேல் இல்லாத உரிமையை தன் நம்பிக்கையால் பெற்றுக்கொள்கிறார் கானானியப் பெண். கிறிஸ்தவர்களாகிய நம் உரிமை எங்கிருந்து வருகிறது? நாம் பெறுகின்ற திருமுழுக்கால் நாம் பிள்ளைகள் என்ற உரிமையையும், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தால் நாய்க்குட்டிகள் என்ற உரிமையையும் பெற்றுக்கொள்கின்றோம்.

2. பெண்
நாம் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு இந்தப் பெண்தான் காரணம். இந்தப் பெண் மட்டும் இல்லை என்றால் இயேசு யூதர்களின் மெசியாவாக மட்டுமே இருந்து மறைந்திருப்பார். இவரிடம் நான் மூன்று நற்குணங்களைப் பார்க்கின்றேன்: (அ) துணிச்சல் - தான் வாழ்ந்த காலத்தின் சமூகம் வைத்திருந்த ஆண்-பெண் வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து, இயேசுவோடு பேசுகின்றார். (ஆ) விடாமுயற்சி - தன் இலக்கு என்பது தன் மகளின் உடல்நலம் என்பதில் தெளிவாக இருக்கின்ற அவர், அந்த இலக்கை அடையும்வரை போராடுகின்றார். தான் 'நாய்' என அழைக்கப்பட்டாலும் போராடுகின்றார். (இ) தோல்வியைச் சந்திக்கும் மனத்திடம் - இதை ஆங்கிலத்தில் 'ரெஸிலியன்ஸ்' என்பார்கள். அதாவது, தனக்கு ஏற்படுகின்ற எந்த இழப்பையும் பொறுத்துக்கொண்டு அதிலிருந்து நிமிர்ந்து வருவது.

3. எசாயாவின் அழைப்பு
இறைவனின் இல்லத்தை 'இறைவேண்டலின் வீடாக' அறிவிக்கின்ற எசாயா அந்த இல்லத்தை நோக்கி மற்றவர்கள் நகர்நது வர அவர்கள், உள்ளத்தாலும், உடலாலும் தூய்மை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். ஆக, எசாயாவின் அழைப்பு வெளிப்புறத்தில் உரிமை போலத் தெரிந்தாலும், உள்புறத்தில் அது கடமையாக இருக்கிறது.

4. நம் குறுகிய கண்ணோட்டம்
'என் இ;னம் - உன் இனம்,' 'நான் - நீ,' 'நாங்கள் - நீங்கள்' என்ற வேறுபாடு நம்மிடையே இருக்கக்கூடாது. இந்த வேறுபாடு இருக்கும்போது நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒரு பெருமித உணர்வு வந்துவிடுகிறது. இந்த உணர்வு வந்துவிட்டால் நாம் யாரையும் மதிப்பதும் கிடையாது. ஆக, பிரித்துப் பார்க்கின்ற பார்வை வேண்டாம்.

5. எளியவரும் வலியவரும்
எளிமை அல்லது வலிமை என்பது நாம் நிற்கும் தளத்தைப் பொறுத்தே இருக்கிறது. நம்மைவிட வலிமை குன்றி இருக்கும் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். அந்தக் குழந்தையால் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நாம் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். கானானியப்பெண் பெண் என்பதாலும், புறவினத்தாள் என்பதாலும் இயேசு அவரை 'நாய்' என அழைக்கின்றார். நம்மிடம் குச்சி இருக்கிறது என்பதற்காக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரையும் குரங்கு என நினைப்பது சால்பன்று.

இறுதியாக,

'நான் பிள்ளையா?' 'நான் நாய்க்குட்டியா?' என்ற கேள்வி எப்போதும் நம் எண்ண ஓட்டத்தில் இருக்க வேண்டும்.

பிள்ளைகளாகும் உரிமை இல்லாதவர்களுக்கும் உரிமை தருவது 'நம்பிக்கை'. இந்த நம்பிக்கையே பெண்ணின் மகளுக்கு நலம் தருகிறது.

மேசையில் விருந்தைத் தயாரித்து வைத்திருக்கும் இயேசு நம்மை இன்று அழைக்கின்றார். நாம் எப்படிச் செல்கின்றோம்? நாம் எந்த உரிமையில் செல்கின்றோம்? நம் உரிமையை நாம் தக்க வைத்துக்கொள்ள என்ன செய்கின்றோம்?