இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

அவசியம், அவசரமில்லை - அவருக்கு!

சாலமோனின் ஞானம் 12:13,16-19
உரோமையர் 8:26-27
மத்தேயு 13:24-43

ஸ்டீஃபன் கோவே என்ற மேலாண்மையியல் எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதி மிகவும் பிரபலமான நூல், தெ ஸெவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி இஃபக்டிவ் பீப்ள். இந்த நூலை 'அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்' என்று தமிழாக்கம் செய்துள்ளனர். இந்த நூலில் 3ஆவது ஹேபிட்டாக - பழக்கமாக, 'முதன்மையானதை முதன்மையானதாக வையுங்கள்' ('Put First Things First) என பதிவு செய்கிறார். இந்த கருதுகோளை விரிவாக்க அவர் 'அவசியம்' (important), 'அவசரம்' (urgent) என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நான்கு கட்டங்களை வரைகின்றார்: (1) 'அவசியம் - அவசரம்,' (2) 'அவசியம் - அவசரமில்லை,' (3) 'அவசியமில்லை - அவசரம்,' மற்றும் (4) 'அவசியமில்லை - அவசரமில்லை.' இந்த நான்கு கட்டங்களில் எந்தக் கட்டத்திற்கு நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இரண்டாவது கட்டத்திற்கு - 'அவசியம் - அவசரமில்லை.' இந்தக் கட்டங்களை வைத்து இவர் நேர மேலாண்மையை விளக்கிச் சொன்னாலும், இந்தக் கட்டங்கள் வாழ்க்கை மேலாண்மைக்கும், ஏன் விண்ணரசு மேலாண்மைக்கும் மிகவே பொருந்துகின்றன. (இந்த நேரத்தில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். அமெரிக்க நாட்டு ஸ்டீஃபன் கோவே சொல்வதற்கு முன்பே, நம்ம ஊர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் இதைச் சொல்லியிருக்கிறார். அவர் தரும் விளக்கக் காணொளி யூடியுபில் இருக்கிறது.)

இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசு பற்றிய மூன்று உவமைகளைத் தருகின்றார். கடந்த வாரம் நாம் வாசிக்கக் கேட்ட மத்தேயு நற்செய்தியாளரின் 'உவமைப் பொழிவு' பகுதியிலிருந்துதான் இது எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் வாசிக்கும் மூன்று உவமைகளில் இரண்டு விவசாய பின்புலத்திலும், மூன்றாவது ஒரு குடும்பத்தின் அடுப்பங்கரையில் நடக்கும் பின்புலத்திலும் உள்ளது.

'களைகள் உவமை,' 'கடுகுவிதை உவமை,' 'புளிப்புமாவு உவமை' என்று மூன்றும் வேறு வேறான ஒப்புமைப் பொருள்களைக் கொண்டிருந்தாலும் இந்த மூன்றிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன:

1. இந்த மூன்று உவமைகளும் 'விண்ணரசு' என்னும் மறைபொருளின் விளக்கமாக பயன்படுத்தப்படுகின்றன.
2. விதையை விதைப்பவரும், கடுகை விதைப்பவரும், புளிப்பை கரைப்பவரும் ஆள்கள் - 'ஒருவர்,' 'ஒருவர்,' 'பெண் ஒருவர்' என பதிவு செய்கிறார் மத்தேயு.
3. இந்த மூன்றும் மிகப்பெரிய இடத்தில் வளர்கின்றன. நல்ல விதை பெரிய இடத்தில் களைகள் நடுவில் வளர்கின்றது. கடுகுவிதை பெரிய வயலில் தனித்து வளர்கிறது. புளிப்பு மாவு ஆறு மரக்கால் மாவின் நடுவில் வளர்ந்து அனைத்து மாவையும் புளிப்பாக்குகிறது - 'ஆறு மரக்கால்' என்பது 'இரண்டு ஏஃபா'. ஒரு 'ஏஃபா' என்றால் 45 லிட்டர் அல்லது 22 படி.ஆக, இந்தப் பெண் ஆட்டி வைத்த மாவு ஏறக்குறைய 90 லிட்டர் (44 படி). ஆக, இவர் இல்லத்தலைவி அல்ல, மாறாக, ஊருக்கே ரொட்டி சுடும் அடுமனைக்காரி.
4. இவை மூன்றும் தாங்கள் இருப்பதை விட அதிக செயலாற்றுகின்றன. நல்லவிதை நிலத்தை நிறைத்துவிடுகிறது. கடுகுவிதை மரமாகிவிடுகிறது. புளிப்பு அனைத்து மாவையும் புளிப்பாக்கிவிடுகிறது.
5. இவை செயலாற்றும் விதம் மனிதக் கண்களுக்கு மறைவாயுள்ளன. 
6. இவைகளின் வளர்ச்சி மற்றவர்களுக்குப் பயன்தருகிறது. 'கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது,' 'கடுகு வானத்துப் பறவைகள் தங்கப் பயன்படுகிறது,' 'புளித்த மாவு அப்பம் சுடப் பயன்படுகிறது.'
7. இவைகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. களைகளைக் களைவது நல்ல செடிகளையும் களைந்துவிடலாம். கடுகுவிதையின் வளர்ச்சியையும் தடுக்க முடியாது. மாவில் புளிப்பைக் கொட்டியவுடன் அதை பிரித்து எடுக்கவோ, அதன் வேகத்தைக் குறைக்கவோ முடியாது.

இந்த ஏழு ஒற்றுமைகளைப் பார்த்தோம் என்றால், 1 நீங்கலாக, மற்ற ஆறு ஒற்றுமைகளும் விண்ணரசைப் பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன:
2. விண்ணரசின் தொடக்கம் இறைவன் ஒருவரே.
3. விண்ணரசு வளரும் இடம் இவ்வுலகம்.
4. பார்ப்பதற்கு சிறிய அளவில், யாரும் கண்டுகொள்ளாத அளவில் இருந்தாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
5. விண்ணரசு செயலாற்றும் விதம் மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
6. விண்ணரசின் வளர்ச்சி எல்லாருக்கும் பலன் தருகிறது.
7. விண்ணரசின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

இவை எல்லாவற்றையும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், விண்ணரசின் இருப்பும், வளர்ச்சியும் 'அவசரமில்லை - அவசியம்' என்ற நிலையில் இருக்கிறது.

இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மத் 13:24-43)  தொடங்குவோம். நல்ல விதைகளை விதைக்கின்ற தலைவர் விதைகளை விதைத்துவிட்டு தூங்குகிறார். அந்த நேரத்தில் பகைவன் களைகளை விதைத்துவிடுகிறான். விவசாய சமூகத்தில் இது அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் ஒரு நிகழ்வ. ஒருவரின் நிலத்தில் நல்ல விளைச்சல் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுகின்ற பக்கத்து நிலத்தின் விவசாயி, களை விதைகளை விதைப்பதும், நச்சு மருந்துகளைத் தெளித்துவிடுவதும், தண்ணீரை பிடுங்கிவிடுவதும், ஆடுமாடுகளை விட்டு மேயச் செய்வதும், காலால் மிதித்து அழிப்பதும், நெருப்பிடுவதும், உப்பைத் தூவுவதும் இன்றும் நடக்கின்ற நிகழ்வுகளே. நம் கதையில் வரும் பகைவன் வெறும் களைகளை மட்டும் விதைக்கிறான். களைகள் வளர்வது முதலில் வேலைக்காரர்களின் கண்களுக்குத் தெரிகிறது. அவர்கள் போய் தங்கள் தலைவரிடம் முறையிடுகின்றனர். அவர்கள் முறையிடும்போது தலைவரின் நல்ல குணத்தையும், நல்ல செயலையும் அடிக்கோடிட்டு பேசுகின்றனர்: 'நீர் நல்ல விதைகளை விதைத்தீர்!' ரொம்பவும் புத்திசாலியான, விவேகமான, எதை யாரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்த வேலைக்காரர்கள் இவர்கள். இவர்களுக்கே தெரியும் இது பகைவனின் வேலை என்று. இருந்தாலும் தன் தலைவரின் பேச்சே இறுதியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் இவர்கள். 'இது பகைவனுடைய வேலை' என்று தலைவர் சொன்னவுடன், தன் தலைவருக்கு பிரமாணிக்கமாக இருக்க விரும்பும் இவர்கள், 'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர். நம்ம தலைவர் அவர்களைவிட புத்திசாலி. புத்திசாலி மட்டுமல்ல. தாராள உள்ளம் கொண்டவர். அவசரப்படாதவர். ஆகையால்தான் அவர்களைப் பொறுமையோடு இருக்கச் சொல்கின்றார். வேலைக்காரர்களின் அவசரம் நல்ல பயிரையும் அழித்துவிடும். களைகள் கோதுமைக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர் மற்றும் உரத்தில் பங்குபோட்டாலும், கதிர் வரும்போது, கோதுமை எது, களை எது என்பது தெளிவாகிவிடுகிறது. ஆக, ஒரு கோதுமைச் செடியும் அழியாமல் காத்து, களைகளைக் களைந்து நெருப்பிடுகின்றார் தலைவர். தலைவரின் நோக்கம் எது? களஞ்சியத்தில் கோதுமை. இந்த நோக்கத்தை அடைவது 'அவசியம் - ஆனால், அவசரமில்லை.' 

அதே போல, கடுகுவிதையின் வளர்ச்சி ஒரே இரவில் வருவதில்லை. எல்லா விதைகளையும் விட சிறிய விதை பெரிய மரமாக மாற வேண்டுமானால், அது அதற்கான நேரத்தையும், இடத்தையும் எடுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று சமரசம் செய்யப்பட்டாலும், அதன் வளர்ச்சி தடைபட்டுவிடும். அவ்வாறே, புளிப்புமாவின் பரவல் ஓரிரவு முழுவதும் நடந்தால்தான் அதன் வேலை நிறைவுறம். அதே நேரத்தில் சரியான நேரத்தில், சரியான இடத்தில் வைக்கப்படும் மாவுதான் புளிப்பு ஏறும் - குளிர்பிரதேசங்களில் அல்லது குளிர்காலத்தில் மாவு எளிதாகப் புளிப்பதில்லை. ஆக, கடுகின் பலும், மாவின் பலனும் வெளிப்படுவது 'அவசியம் - ஆனால் அவசரமில்லை.'

இந்த மூன்றின் வழியாக முன்னிறுத்தப்படுவது விண்ணரசு என்றாலும், அந்த விண்ணரசின் ஆதிமூலமாக இருப்பவர் இறைவன். எனவே, இந்த இறைவனின் இயல்பு எப்படிப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 12:13, 16-19). ஆண்டவராகிய கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என அறுதியிட்டுக் கூறும் ஆசிரியர், இந்த ஆசிரியர் ஆண்டவரின் குணங்களாக ஆறு குணங்களை முன்வைக்கின்றார்: (1) எல்லாவற்றின் மேலும் கருத்தாய் இருக்கிறார், (2) அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டிருக்கின்றார், (3) செருக்கை அடக்குகின்றார், (4) கனிவோடு நீதியை நிலைநாட்டுகின்றார், (5) பொறுமையோடு மனிதர்களை ஆளுகின்றார், மற்றும் (6) மனிதநேயம் கொண்டிருக்கக் கற்றுக்கொடுக்கின்றார்.

இவற்றில் (5) மற்றும் (6) ஆம் குணங்கள் மிக முக்கியமானவை. தான் விரும்பியபோதெல்லாம் விரும்பியதைச் செய்ய கடவுளுக்கு ஆற்றல் இருந்தாலும் அவர் பொறுமையோடு இருக்கின்றார். மேலும், இந்தப் பொறுமையே நீதிமான்களுக்கு மனித நேயத்தைக் கற்றுக்கொடுக்கிறது. ஆக, மனிதநேயம் என்றால் என்ன என்பதற்கான புதிய வரையறையும் இங்கே கிடைக்கிறது. மனித நேயம் என்றால் பொறுமை. மனித நேயம் உள்ளவர் மனிதர்கள் செய்யும் அனைத்துப் பொல்லாப்புக்களையும் பொறுத்துக்கொள்வார். அவரின் முகத்தில் புன்முறுவல் இருக்கும். இந்த மனிதநேயத்தோடு இணைந்து வருவது நன்னம்பிக்கை. ஆக, பொறுமை என்னும் தாய்க்கு 'மனித நேயம்,' 'நன்னம்பிக்கை' என்ற இரண்டு குழந்தைகள்.

இறைவனின் குணம், 'அவசியமானதில்' அக்கறை கொள்கிறது. 'அவசரமில்லாமல்' செயலாற்றுகிறது. ஆக, 'அவசியம் - அவசரமில்லை.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:26-27), 'தூய ஆவி தரும் வாழ்வு,' 'வரப்போகும் மாட்சி' என அறிவுறுத்துகின்ற பவுலடியார், மனித மனநிலையை இரண்டு வார்த்தைகளால் பதிவு செய்கின்றார்: (1) வலுவற்ற நிலை, (2) பெருமூச்சு. நாம் வலுவில்லாதபோதுதான் அதிக பொறுமை இழக்கிறோம். இல்லையா? நம் பொறுமையின்மையின் வெளிப்புற அடையாளம் பெருமூச்சு. 'இது எப்போ முடியுமா?' என்று ஒன்றைப்பற்றி நாம் கவலைப்படும்போது, பொறுமை இழக்கும்போது, நம்மை அறியாமல் பெருமூச்சு விடுகிறோம். ஆனால், இந்த பெருமூச்சை அப்படியே டிரான்ஸ்க்ரைப் செய்து அதை செபமாக கடவுளிடம் தருகின்றார் தூய ஆவி. நம்மில் இருக்கும் இந்தப் பொறுமையின் ஆவி நம் உடலின் வலுவின்மையை, பெருமூச்சை நெறிப்படுத்தி சரி செய்கிறது. 'அவசியத்தை' (கடவுளை) நோக்கி நம் உள்ளங்களை எழுப்புகிறது. 'அவசரத்திலிருந்து' நமக்கு விடுதலை தருகிறது. ஆக, நம்மில் இருக்கும் தூய ஆவியானவர் வழியாக நாமும் கடவுளைப் போல இருக்க முடியும் - 'அவசியம் - அவசரமில்லை' என்று.

இன்றைய வாசகங்களிலிருந்து நாம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. பொறுமை, மனித நேயம், நன்னம்பிக்கை
காஃபி, டீ, சப்பாத்தி என எல்லாவற்றையும் இன்ஸ்டன்டாக மாற்றி உண்ண ஆரம்பித்த நாம் கொஞ்சம் கொஞ்சமாக - இல்லை, வேக வேகமாக - பொறுமை இழந்துகொண்டே வருகிறோம். ஒரு நிமிட வீடியோவைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் அது முடிவதற்கு முன் மற்றொரு வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்தக் காலத்து டிவிகளில் சேனல் மாற்றுவதற்கு திருகு பட்டன் இருந்தது. கொஞ்சநாள் கழித்து அது அமுக்கு பட்டனாக மாறியது. திருகும்போது அருகில் சென்றோம். அமுக்கும்போது குச்சியைப் பயன்படுத்தினோம். இன்று அமர்ந்துகொண்டே ரிமோட் கன்ட்ரோலில் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம். 30 நிமிடங்களில் 60 சேனல்களை மேய்ந்துவிடத் துடிக்கின்றன நம் கண்கள். நாம் எப்போது பொறுமை இழந்தோம்? இந்த பொறுமையின்மை நம் மனிதநேயத்தையும் பாதிக்கிறது. ரோட்டில் அடிபட்டுக்கிடந்த ஒருவரைக் காப்பாற்றி உயிர் கொடுக்கும் பொறுமை நமக்கு இல்லை. மிஞ்சிப்போனால் அடிபட்டவர் துடிப்பதையும், கூடியிருக்கும் கூட்டத்தையும் நாம் நம் செல்ஃபோன்களில் படம் எடுக்கிறோம். அவ்வளவுதான். அதை நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு நம் மனிதநேயம் நின்றுவிடுகிறது. நம் பொறுமை இழப்பால் நாம் மற்றவர்கள்மேல் கொண்டிருக்கின்ற நன்னம்பிக்கையையும் இழந்து வருகின்றோம். எல்லாரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே, விரக்தியாகவே பார்க்கத் தொடங்கியுள்ளோம். ஆனால் வாழ்க்கையின் இனிமை அவசரத்தில் இல்லை என்பதை இன்று உணர்ந்து கொள்வோம். அவசரம் நம் வேலையின், வாழ்க்கையின் வெற்றியைக் கெடுத்துவிடுகிறது.

2. கடவுளே தலைவர் - நடப்பதுதான் நடக்கும்
நல்ல விதை, கடுகு விதை, புளிப்பு மாவு - இவற்றின் செயல்களைத் தொடங்கி வைப்பவர் ஒருவர். அந்த ஒருவர்தான் கடவுள். அவர்தான் நம் வாழ்வின் இயக்கத்தைத் தொடங்கி வைப்பவர். அப்படி இருக்க, எல்லாம் நம் கைகளில் இருந்துதான் வருகிறது என நாம் நினைக்கக்கூடாது. மேலும், எது எது எப்போ எப்போ நடக்கனுமோ, அது அது அப்போ அப்போ நடந்தே தீரும். புளிப்பு மாவு மற்ற மாவுமேல் பரவுவதை எவ்வளவு பெரிய சமையல்காரனாலும் தடுக்க முடியாது. விண்ணரசும் அப்படித்தான். வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நமக்கு விடியும் என்று ஏற்கனவே மாவு கரைத்தாயிற்று. ஆக, அன்றன்று வாழ்க்கை நமக்கு எப்படி திரையை விலக்குகிறதோ, அன்றன்று, நல்வாழ்வை வாழ்ந்து கொண்டு நகர்வதே சால்பு. கரைத்த மாவை அள்ளி வெளியே கொட்டவும் முடியாது. நீர்த்துப் போகச் செய்யவும் முடியாது. ஆக, அவர்மேல் பாரத்தைப் போட்டு அவசியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமாக அடி எடுத்து வைப்பது நலம்.

3. கனி தருவது
களைக்கும், கோதுமைக்கும் உள்ள வித்தியாசத்தை தலைவர் பணியாளருக்கு எப்படி உணர்த்துகின்றார்? கதிர்களை வைத்தே. ஆக, கதிர் கொடுத்தால் அது கோதுமை. கதிர் கொடுக்காவிட்டால் அது களை. அவ்வாறே, கனி கொடுத்தால் நாம் மனிதர்கள். கனி கொடுக்காவிட்டால் நாம் களைகள். களைகள் இடத்தை அடைத்துக்கொண்டு, கோதுமைக்குச் சேர வேண்டிய தண்ணீர் மற்றும் உரத்தை அபகரித்துக்கொண்டு வாழ்கின்றன. அவை மற்றவர்களின் கண்களுக்குப் பசுமையாகத் தெரியாலும். ஆனால் அவைகளால் தலைவருக்கு எந்தப் பயனும் இல்லை. என்னதான் ஒரே தண்ணீர், ஒரே உரம் என வளர்ந்தாலும் களைகள் சேரும் இடம் நெருப்பே. களஞ்சியம் அல்ல. இந்த இடத்தில் பவுல் திமொத்தேயுவுக்குச் சொல்லும் அறிவுரையை நினைவுகூறுகிறேன்: 'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் அவர் மதிப்புக்குரிய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார். தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்' (2 திமொ 2:20). ஆக, என் வாழ்வால் நான் நற்செயல் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும். என் தலைவருக்கு பயனுள்ளவராக இருக்க வேண்டும்.

4. வலுவின்மை, பெருமூச்சு
நம்மை அறியாமல் நம்மைச் சுற்றிக்கொள்ளும் வேகம் நம் வலுவைக் குறைத்து நமக்கு பெருமூச்சைத் தந்துவிடுகிறது. நம் ஊனியல்பில் இவை நடந்தாலும், நமக்குள் இருக்கும் தூய ஆவியானவர் இவற்றை செபங்களாக மாற்றி இறைவன் முன் எடுத்துச் செல்கிறார். ஆக, எல்லாம் நாம் அவரிடமிருந்து பெற்ற கொடைகள் என்ற நிலையில் எல்லாவற்றையும் அவரிடமே திரும்பக் கொடுத்துவிடுவோம்.

5. அவசியம், அவசரமில்லை
மேற்சொன்ன நான்கு கட்டங்களை வரைவோம். நாம் செய்யும் எல்லா செயல்களையும் - டிவி பார்ப்பது, ஃபோன் பேசுவது, நண்பரைப் பார்ப்பது, நல்ல மதிப்பெண்கள் வாங்குவது, திருமணம் செய்வது, மகிழ்ச்சியாக இருப்பது, சினிமாவுக்கு போவது, சண்டை பிடிப்பது, பொறாமை படுவது - என எல்லாவற்றையும் எழுதி இந்த நான்கு கட்டங்களுக்குள் எங்கே பொருந்துகிறது எனப் பார்ப்போம். பின், இரண்டாவது கட்டத்தை மட்டும் தெரிவு செய்து, அந்தக் கட்டத்தில் உள்ளதை மட்டும் வாழ்வோம். 'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி' என கண்ணதாசன் சொல்வது இந்தக் கட்டம் பற்றிறே. இந்த 'ஒன்று' அவசியம். ஆனால், இதற்கு அவசரம் தேவையில்லை. நம் வாழ்வின் இலக்கு, கனவு எல்லாம் இந்தக் கட்டத்தில்தான் இருக்கிறது. வாழ்வின் முக்கியமானவைகளின் இடத்தை முக்கியமில்லாதவைகள் பிடித்துவிட வேண்டாம். அப்படி பிடித்துவிட்டால் நாம் இந்தக் கட்டத்தோடு சமரசம் செய்துகொள்ளத் தொடங்கிவிடுவோம்.

இறுதியாக, இத்தாலியன் மொழியில் 'போக்கே கோஸே, போனே கோஸே' ('poche cose buone cose') என்ற பழமொழி உண்டு. 'கொஞ்சம், ஆனால் நல்ல' என்பது இதன்பொருள். அந்தக் கொஞ்சம், அந்த நல்லதுதான் விண்ணரசு. இது நம்மைச் சுற்றி இருக்கிறது. இதைக் கண்டுகொள்வது 'அவசியம் - ஆனால், அவசரமில்லை!'

'அவசியம் - அவசரமில்லை' - அவருக்கு, உங்களுக்கு, எனக்கு!