இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

விதைகளின் போராட்டம்!

எசாயா 55:10-11
உரோமையர் 8:18-23
மத்தேயு 13:1-23

மனிதர்களாகிய நமக்கு ஒரு வரலாறு இருப்பது போல நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்கள், மரம், செடி, கொடிகளுக்கும் வரலாறு உண்டு. வரலாறு என்றால் என்ன? ஒர் வேர் பரப்பும் விழுதுதான் வரலாறு. நாம் காணும் ஒவ்வொரு மரமும் ஒரு வரலாறு. எங்கிருந்தோ வந்த பறவையின் எச்சம், மனிதர்கள் தூக்கி வீசிய குப்பை, சில நேரங்களில் விரும்பி இட்ட விதை என விதைகள் பல்வேறு வடிவங்களில் விதைக்கப்படுகின்றன. அப்படி வீசப்பட்ட விதைகள் உடனே மரங்கள் ஆகிவிடுவதில்லை. முதலில் அவர்கள் பூமியோடு போராட வேண்டும். மண்ணை விலக்கி தங்களைத் தாங்களே புதைத்துக்கொள்ள வேண்டும். பின் பூமியின் இருளில் தனது மேல் தோலை அகற்றிவிட்டு, அதிலிருந்து மெல்லியதாய் துளிர்க்க வேண்டும். இப்படி வரும் துளிர் மீண்டும் மண்ணோடு போராடி தன்னையே வெளியே தள்ள வேண்டும். அப்படி பூமிக்கு வெளியே வந்து துளிர்விட்டால் போதுமா? இல்லை. மழை, தண்ணீர், வெப்பம், கால்நடைகள், மனிதர்களின் மிதி என அனைத்திலிருந்தும் தப்ப வேண்டும். அல்லது அவற்றைத் தாண்ட வேண்டும். பின் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற குச்சியின் துணை கொண்டு எழுந்து நின்று, பின் தானாகவே அகல விரிவதுதான் மரம்.

விதையின் இந்த 'வெளியே-உள்ளே,' 'உள்ளே-வெளியே' போராட்டத்தை பதிவு செய்து போராட்டத்தின் இறுதியில் விதை பெறும் வெற்றியைப் பதிவு செய்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

முதல் வாசகம்

ஆண்டவரின் பேரிரக்கத்தை இஸ்ரயேல் மக்களுக்குப் பறைசாற்றும் இரண்டாம் எசாயா ஆண்டவரின் வார்த்தையின் வலிமையை உருவகமாக பதிவு செய்கின்றார். வானத்திலிருந்து இறங்கிவரும் பனிக்கு ஒப்புமை செய்யப்படுகிறது இறைவார்த்தை. மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி நிலத்தில் பெய்து, புதைந்து கிடக்கும் விதைக்கு உயிர் கொடுத்து அதை அரும்பி வளரச் செய்கிறது. இதை இஸ்ரயேலின் மக்களின் வாழ்க்கைக்கு உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடக்கும் இஸ்ராயேல் மக்கள் இருளில், நிலத்தின் அடியில், உயிரற்றுக் கிடக்கும் ஒரு விதை போல இருக்கின்றனர். ஆண்டவரின் பேரிரக்கம் அவர்கள் மேல் பனியாக, மழையாக பெய்ய அவர்கள் அப்படியே புது வாழ்வு பெறுகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வைக் கண்டுகொள்கின்றனர்.

ஆண்டவராகிய கடவுளிடமிருந்து புறப்படும் வாக்கு தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றி மீண்டும் ஆண்டவரிடமே திரும்புகிறது.

விதையின் இறப்பு என்னும் போராட்டத்திற்கு உயிர் தருகிறது மழையும், பனியும்.

இரண்டாம் வாசகம்

தூய ஆவி அருளும் வாழ்வு பற்றி உரோமைத் திருச்சபைக்கு அறிவுறுத்திய பவுல் வரப்போகும் மாட்சி குறித்தும், அதற்குத் தேவையான எதிர்நோக்கு குறித்தும் விளக்குகிறார். 'இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது' (உரோ 8:22).

படைப்பு பேறுகால வேதனையுறக் காரணம் அதன் 'பயனற்ற நிலை' (உரோ 8:20). நிலத்தில் புதைக்கப்பட்ட விதை யாருக்கும் பயன் தருவதில்லை. அது முளைத்து வெளியே வந்தால்தான் பயன் தரும். தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையும் அதே போல 'பயனற்ற நிலையில்தான்' இருக்கின்றது. அதன் இருப்பு மற்றும் வளர்ச்சி பற்றி யாருக்கும் தெரிவதில்லை. ஆனாலும், பேறுகால வேதனையுற்று தாய் பெற்றெடுக்கும்போது, விதையை நிலம் பெற்றெடுக்கும்போது அங்கே புதிய உயிர் தோன்றுகிறது. இவ்வாறாக, பயனற்ற நிலையிலிருந்து பயனுள்ள நிலைக்குக் கடந்து போகக் காரணம் விதையின் எதிர்நோக்கு. தான் முடிவு என நினைப்பதை கடவுள் விடிவு என மாற்றுவார் என உறுதியாக நம்புகிற விதை மட்டுமே விருட்சமாக வளர முடியும்.

இவ்வாறாக, தூய பவுலடியார் படைப்பின் போராட்டத்தைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தப் போராட்டத்திற்குத் தேவையான எதிர்நோக்கு பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

நற்செய்தி வாசகம் 

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் விதைப்பவர் உவமை (மத் 13:1-9), உவமைகளின் நோக்கம் (13:10-17) மற்றும் இயேசு தரும் உவமையின் விளக்கம் (13:18-23) என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இயேசுவே உவமைக்கான விளக்கம் கொடுத்து விடுகிறார். ஆகையால் இன்னொரு விளக்கம் தேவையா? ஒரு உவமைக்கு ஒரு பொருள்தான் இருக்க முடியுமா? 

முதலில் உவமை என்றால் என்ன? தெரிகின்ற பொருளை வைத்து தெரியாமல் இருக்கும் ஒன்றை விளக்குவதே உவமை. ஒன்று மற்றொன்றுக்கு உருவகமாகத் தரப்படுகின்றது. உவமை என்றால் ஒரு கதை. நாம் ஒவ்வொருவருமே ஒரு கதையைத் தான் வாழ்கின்றோம். சத்தியாகிரகம் என்பது காந்தி வாழ்ந்த கதை. தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகள் வாழ்ந்த கதை. உண்மை என்பது அரிச்சந்திரன் வாழ்ந்த கதை. சிரிப்பு என்பது சார்லி சாப்ளின் வாழ்ந்த கதை. வன்முறை என்பது நீரோ வாழ்ந்த கதை. இப்படியாக ஒவ்வொரு மதிப்பீட்டையும் நாம் நம் வாழ்க்கையின் கதையாக அமைத்துக்கொள்ள முடியும். உவமையின் நோக்கம் இதுதான். உவமையைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அதைக் கேட்கும் ஒருவர் தான் உவமையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஊதாரி மகன் உவமையை வாசிக்கும் போதே இந்தக் கதையில் நான் யார் என்று நம் உள்ளம் கேட்கத் தொடங்கிவிடுகிறது. இதுதான் உவமையின் சிறப்பு. உவமை பன்முகம் கொண்டது. அதற்குப் பல அர்த்தங்கள் கொடுக்க முடியும். உவமை நீண்ட கதையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஒற்றைவரியாகக் கூட இருக்கலாம். உவமை எப்போதும் ஆன்மீகம் சார்ந்த பொருளை மட்டும் தரும் என்று நினைக்கத் தேவையில்லை. உவமை உலகம் சார்ந்த பொருளையும் தரலாம். இயேசு உவமைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் சாதாராணமானவை, உலகுசார்ந்தவை: உப்பு, ஒளி, மலை, நகரம், புளிப்பு மாவு, புதையல், வலை, விதை போன்றவை. ஆகையால்தான் இந்த இடத்திலும் அவர் தன் கண்ணுக்க எதிரே இருந்த விவசாய சொல்லாடலையும், பின்புலத்தையும் பதிவு செய்கின்றார்.

இயேசுவின் உவமைகளுக்கு பல வருடங்களாக ஆன்மீகப் பொருள் மட்டுமே கொடுக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு, உலகியல் வாழ்வுக்கு அது ஒவ்வாததாகக் கருதப்பட்டது. ஆனால் உண்மையில் இயேசுவின் உவமைகள் நம் அன்றாட உலக வாழ்வுக்குப் பயன்தரக்கூடியவை.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உவமைக்குத் தரும் விளக்கம் அவருடையது அல்ல என்றும், மாறாக தொடக்கத் திருச்சபையில் இறைவார்த்தையை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய நிலையில் நற்செய்தியாளர்களே இதை எழுதி இயேசுவே சொன்னதாக அவர் வாயில் சொற்களைத் திணிக்கிறார் என்றும் தற்போதைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அலகை, தீய நாட்டம், இன்னல், தடுமாற்றம், செல்வமாயை போன்ற வார்த்தைகள் எல்லாம் தொடக்கக் கிறித்தவர்களின் மத்தியில் நிலவிய சமகாலப் பிரச்சினைகளைக் குறிப்பிடுகின்றன.

இந்த நற்செய்தியை வாசித்தவுடன், இந்த நான்கு நிலங்களில் நான் யார்? என்று பல நேரங்களில் மறையுரைகளை முடித்துவிடுகிறோம். நன்றாகக் கவனியுங்கள். இதற்கு நற்செய்தியாளர் கொடுக்கும் தலைப்பு 'நானிலங்களின் உவமை' அல்ல. மாறாக, 'விதைப்பவர் உவமை'. பிரச்சினை இங்கு விதைப்பவர் மேல் தான். பாவம் விதைகள் என்ன செய்யும்? நிலம் என்ன செய்யும்? விதைப்பவர் நல்ல நிலத்தில் விதைத்திருந்தால் எல்லா விதைகளுமே பலன் கொடுத்திருக்குமே? இந்த உவமையில் உள்ள மற்றொரு நெருடல்: முப்பது மடங்கோ, அறுபது மடங்கோ, நூறு மடங்கோ என்பதுதான். பாலஸ்தீனத்தில் நடைபெறும் விவசாயத்தில் எந்த ஒரு விவசாயமும் முப்பது, அறுபது, நூறு எனப் பலன் தருபவை அல்ல. ஒருபோகம், இருபோகம் விளைவதே அரிது. மேலும் ஒரே நிலத்தில் விழுந்த விதைகளுக்குள் பலன் தருவதில் என்ன வேறுபாடு? விதையில் பிரச்சினையா? அல்லது மண்ணில் பிரச்சினையா? நல்ல நிலத்திற்குள்ளேயே பாகுபாடு என்றால் ரொம்ப நல்ல நிலம், சுமாரான நல்ல நிலம், கொஞ்ச நல்ல நிலம் என்று பிரிக்க முடியுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் 'விதைப்பவர்,' 'விதை,' 'விளைநிலம்' என்ற முக்கோணத்தில் அமைந்துள்ளது. விதைப்பவர் ஒருவர்தாம். விதைகளும் ஒன்றுதாம். ஆனால், விளைநிலமும், சூழ்நிலையும்தாம் விதையின் வளர்ச்சிக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கின்றன. மேலும், மற்றொரு பக்கம், எந்த ஒரு சூழ்நிலையிலும் விதை தானாக வளரக்கூடிய ஆற்றலும் பெற்றுள்ளது.

இன்றைய நற்செய்தியில் விதைகளின் நான்கு வகை போராட்டங்களைக் காண்கின்றோம். (அ) போராடாத விதைகள்: இவ்விதைகள் வழியோரம் விழுந்தவை. இவைகள் விழுந்த சில நொடிகளில் வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிடுகின்றன. அவைகளுக்கு போராட்டம் இல்லை. அவைகளின் இருப்பும் இல்லை. அவைகள் பறவைகளை எதிர்த்தும் போராடவில்லை. நிலத்தை எதிர்த்தும் போராடவில்லை. விழுகின்றன. உணவாகின்றன. (ஆ) போராட தேவை இல்லாத விதைகள்: இவ்விதைகள் பாறைமீது விழுந்தவை. பாறைக்கு மேல் இருக்கின்ற மண் மிகவும் சொற்பமானது. அந்த மண்ணில் தன்னையே புதைக்க விதைகள் போராட தேவையில்லை. பாறைமேல் இருக்கின்ற மண் ஒன்றோடொன்று ஒட்டாமல் விலகிப் பரவிக்கிடக்கிறது. ஆக, பேராட்டம் இல்லாமலேயே இவ்விதைகள் முளைத்துவர ஆரம்பிக்கின்றன. ஆனால், 'வேகமாக வந்தது வேகமாகப் போய்விடும்' என்பது போல, எவ்வளவு வேகமாக இவைகள் வளர்ந்தனவோ, அவ்வளவு வேகமாக அவை காய்ந்து போய்விடுகின்றன. (இ) போராட்டம் ஒடுக்கப்பட்ட விதைகள்: இவ்விதைகள் முள்செடிகளின் நடுவே விழுந்தவை. விதைகள் வளர்ந்து வருவதற்கு முன் முள்செடிகள் வேகமாக வளர்ந்து விதைகளுக்கான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. விதைகள் மெதுவாக வளர்ந்து வரும்போது இச்செடிகள் அவற்றை ஒடுக்கி, அவைகளுக்கு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி கிடைப்பதை தடை செய்து படிப்படியாக விதையின் போராட்டத்iயே ஒடுக்கிவிடுகின்றன. (ஈ) போராடி வென்ற விதைகள்: இவ்வகை விதைகள் தாங்கள் விழுந்த நிலத்தில் வேரூன்றி விழுதுபரப்புகின்றன. இவைகளின் வெற்றிக்குக் காரணம் இவைகளின் போராட்டமே. ஒன்று மட்டும் நிச்சயம். போராட்டம் இல்லாத விதை பலன் தருவதில்லை.

மேலும் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு விதைப்பவரையே முன்வைக்கின்றது. விதைப்பவர் கடவுள் அல்லது கிறிஸ்து. நிலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவரால் பலன் தர வைக்க முடியும். இந்த உலகின் எதார்த்தங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் கடவுளால் செயலாற்ற முடியும். இது கடவுள் மேலோங்கி நிற்கும் நிலையைக் காட்டுகிறது. பல நேரங்களில் நாம் நம் தகுதியற்ற நிலையைத் தான் முன்வைக்கின்றோம். 'நாம் பாவிகளோ, புழுக்களோ, மண்ணோ, சாம்பலோ அல்ல!' இறைவனின் பார்வையில் நாம் அவர் செயலாற்றும் நிலம். அவரால் நம்மில் கண்டிப்பாக பலன் தர வைக்க முடியும். 

அடுத்ததாக, மீட்பு என்பது இறைவன் நமக்குத் தரும் கொடை. நம் பேறுபலன்களாலோ, நல்ல செயல்களாலோ இறைவனின் அரசை உரிமையாக்கிக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், இறைவனின் செயல்பாடுகளுக்கு நாம் நம் மனம் என்னும் நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். மூன்றாவதாக, பறவை என்னும் அலகையும், சுட்டெரிக்கும் சூரியனும், நெருக்கும் முட்செடிகளும் எதிர்மறையாகத் தெரிந்தாலும், அவைகள் சில காலம் நீடிக்கக் கூடியவையே. வரப்போகும் மாட்சியோடு அது ஒப்பிடத் தகுதியற்றது (உரோ 8:18).

இறுதியாக, விதை என்பது நம் வாழ்க்கை. ஒவ்வொரு விதையும் ஒரு மணித்துளி. ஒவ்வொரு விதையும் நம் ஆற்றல். ஒவ்வொரு முறையும் நாம் மணித்துளியை, ஆற்றலை, வாழ்க்கையைச் செலவு செய்யும் போது அதை மற்றொன்றில் முதலீடு செய்கின்றோம். அந்த முதலீற்றுக்கேற்ற பலன் கிடைக்கிறதா? இலத்தின் மொழியில் 'கார்பெ தியம்' என்று ஒரு சொல்லாடல் உண்டு - அதாவது 'பொழுதைப் பிடித்துக்கொள்!' பொழுதும், நாளும் நழுவி ஓடக் கூடியது. அது ஒவ்வொன்றையும் நாம் முழுமையாகப் பிடித்துப் பயன்படுத்தி அனுபவிக்க வேண்டும். 

உவமையில் வரும் மூன்று எதிரிகளைப் பாருங்கள்: 1) பறவை - இத்தகைய எதிரி விதையை, பொழுதை முழுவதும் விழுங்கி விடுகிறது. விதை இருந்ததற்கான தடமே இல்லாமல் போய்விடுகிறது. 2) கதிரவனின் ஒளி - இந்த எதிரி விதையின் உருவைச் சிதைத்து விடுகிறான். 3) முட்செடிகள் - இந்த எதிரி நம்மை வளரச் செய்வது போலத் தெரிந்தாலும் உண்மையில் நம் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொள்கிறான். காலப்போக்கில் நம்மையே நெருக்கி விடுகிறான். வாழ்க்கையை நாம் முழுமையாக வாழவும் தடையாக இந்த குணங்கள் கொண்ட மூன்று எதிரிகள் இருப்பார்கள். கவனமாக இருந்தால் நாமும் பலன் கொடுக்க முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இறைவார்த்தை என்னும் விதை

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் இறைவார்த்தையை விதைக்கு ஒப்பிடுகின்றன. எவ்வாறு விதையின் நோக்கம் வளர்ந்து பலன்தருவதோ, அவ்வாறே இறைவார்த்தையின் நோக்கம் மாற்றத்தை ஏற்படுத்துவது. வார்த்தையும் செயலும் எப்போதும் இணைந்து செல்கின்றன. படைப்பின் தொடக்கத்தில் கடவுள், 'ஒளி உண்டாகுக' என்று வார்த்தை சொல்கின்றார். அந்த வார்த்தை அப்படியே ஒளியாக மாறி நிற்கின்றது. ஆகையால்தான் எபிரேய மொழியில், 'வார்த்தை'யும், 'செயலும்,' 'தவார்' என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றன. இன்று இறைவார்த்தை என்னும் விதையை நான் வாசிக்கின்றேனா? கேட்கின்றேனா? செயல்படுத்துகின்றேனா? மனித வார்த்தைகளை நான் வாக்குறுதிகளாக மற்றவர்களுக்குத் தரும்போது நான் அதன்படி நடந்துகொள்கிறேனா?

2. உறவு மேலாண்மை

இன்றைய நற்செய்தியில் வரும் விதைப்பவர் உவமையை மேலாண்மையியல் ஆசிரியர் ஸ்டீபன் கோவே அவர்களின் கருத்தோடு இணைத்துப் பார்த்தால், மனித வாழ்வின் உறவு நிலைகளுக்கான பாடங்களை நாம் இங்கே காணலாம். எனக்கும், உங்களுக்கும் உறவு இருக்கிறது அல்லது நட்பு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இதில் நான் என்பது விதை. நீங்கள் என்பது நிலம். இந்த இரண்டிற்குமான உறவு நான்கு நிலைகளில் இருக்கலாம்: (அ) எனக்கு தோல்வி - உனக்கும் தோல்வி. நிலத்தில் விழுந்த விதையை பறவைகள் தின்றுவிடுகின்றன. ஆகையால் விதைக்கும் தோல்வி. நிலத்திற்கும் தோல்வி. (ஆ) எனக்கு தோல்வி - உனக்கு வெற்றி. விதைக்குத் தோல்வி. ஏனெனில் வேகமாக வளர்ந்தாலும் வேரின்மையால் காய்ந்து விடுகிறது. நிலத்திற்கு வெற்றி. ஏனெனில் விதை வளர அது உதவுகிறது. (இ) எனக்கு வெற்றி - உனக்கு தோல்வி. விதைக்கு வெற்றி. ஏனெனில் அது வளர்கிறது. ஆனால் நிலத்திற்குத் தோல்வி. ஏனெனில் அது முள்செடிகளால் பங்கிடப்பட்டுவிட்டது. (ஈ) எனக்கு வெற்றி - உனக்கு வெற்றி. இங்கே விதை விளைச்சலைத் தருகிறது. நிலம் அதற்கேற்ற சூழலை அமைத்துக்கொடுக்கிறது. உறவு நிலைகளில் இந்த நான்காம் நிலையே மேன்மையானது. இன்று என் உறவு வாழ்க்கை எந்த 'விதை-நிலம்' மாதிரியாக இருக்கின்றது?

3. எதிர்நோக்கு

நிலத்தை நனைக்கும் பனி விதையை உயிர்க்கச் செய்யும் என்று நம்புவதற்கும், நம் வாழ்வின் இன்றைய போராட்டம் மறைந்து கட்டின்மை கிடைக்கும் என்று நம்புவதற்கும், இயேசுவின் வார்த்தைகளை நாம் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என்றும் நம்புவதற்கும், எதிர்நோக்கு மிக அவசியம். எதிர்நோக்கு இருக்கின்ற ஒருவரால்தான் நம்பிக்கை கொள்ள முடியும். ஆக, நம்பிக்கையும், எதிர்நோக்கும் எப்போதும் இணைந்தே செல்கின்றன. 

4. வெற்றி பெறாத விதைகள்மேல் பரிவு

நிலத்தில் விழும் எல்லா விதைகளும் பலன்தருவதில்லையே. நல்ல நிலத்தில் விழுந்தவைகூட நூறு, அறுபது, முப்பது என வேறு வேறு நிலைகளில்தான் பலன்கொடுக்கின்றன. அப்படி என்றால், பலன்தராத விதைகள் மேல் நமக்கு பரிவு வேண்டும். 'என்னால்தான் பலன்தர முடியும்' என்று இறுமாப்பு எண்ணமும், 'அவர் அப்படித்தான். அவரால் ஒரு பயனும் இல்லை' என்று அடுத்தவரைத் தீர்ப்பிடும் எண்ணமும் அறவே மறைய வேண்டும்.

5. நாம் தடைகளா?

நமக்கு அருகில் இருக்கும், நடக்கும், உயிர்வாழும் சக மனிதர்கள் என்ற விதைகள் வளர நான் இடையூறாக இருக்கின்றேனா? பறவை போல நான் அபகரிக்கின்றேனா? அல்லது கதிரவன் போல சுட்டெரிக்கின்றேனா? அல்லது முள்செடி போல நசுக்கிவிடுகின்றேனா?

இறுதியாக, விதைப்பவருக்கும் விதைக்கும் எதார்த்தத்தில் தூரம் இருந்தாலும் உவமையில் இருப்பதில்லை. விதைப்பவரே விதையாக மாறுகின்றார். விதையின் போரட்டம் விதைப்பவரின் போரட்டமும்கூட. 

இன்று நம் தமிழக மண்ணில் விவசாயம் அருகி வருகின்ற நிலையில் விதைகளின், விதைப்பவர்களின் போராட்டங்கள் கூடிக்கொண்டே போகின்றன. விதைப்பவர்கள் தங்களுக்குள் மோதி இறந்துவிடுவார்கள் என்றும், இனி ரோபோட்டுகள் விதை விதைத்து அறுவடை செய்யும் என பொய்க்கணக்கு போடுகிறது அரசியல். இருந்தாலும், தொடர்ந்து போராடும் குணத்தை நாம் விதைகளிடம் கற்றுக்கொள்வோம்.

போராட்டம் இன்றி வாழ்வில்லை - விதைப்பவருக்கும், விதைகளுக்கும்.