இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

கணிதமறியா கடவுள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

இத்தாலி நாட்டில் விவிலியம் கற்கச் சென்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவம். என் நண்பரும், நானும் தினமும் எங்கள் கல்லூரியின் கஃபேக்குச் சென்று கொர்னெத்தோவும், காஃபியும் குடிப்பது வழக்கம். ஒரு நபருக்கு 90 சென்ட் வீதம் இரண்டு பேருக்கு 1,80 சென்ட் வரும். ஒருநாள் 5 யூரோ கொடுத்துவிட்டு மீதம் 3,20க்காக காத்திருந்த கைகளில் 8,20 யூரோ கொடுத்தார் கேஷியர் பொண்ணு. 'இந்த இத்தாலி பசங்களுக்கு கணக்கே தெரியாது. கொடுத்த காசைவிட இன்னும் நிறைய கொடுக்குறாங்க!' என்று என் நண்பரிடம் சொன்னேன். இதைக் கேட்ட அந்த கேஷியர் பொண்ணு வின்சென்ஸா, 'சில நேரங்களில் கணிதம் தேவையில்லை ஃபாதர். கணிதத்தை மிஞ்சியது வாழ்க்கையில் இருக்கிறது. இந்த எக்ஸ்ட்ரா 5 யூரோ உங்கள் புன்முறுவலுக்கு நான் கொடுக்கும் பரிசு!' என்றார்.

கணிதத்தின் கோட்பாடுகளைக் கடந்து நிற்பவை நிறையவே இருக்கின்றன. சில நேரங்களில் நாம் வெறுங்கையராய் நின்றிருப்போம். கடவுள் யார் வழியாவது நம் கைகளை அப்படியே நிறைத்துவிட்டுப் போய்விடுவார்.

பயம் அல்லது அச்சம் என்ற மனித உணர்வை மையமாக வைத்து, மனித கணிதப்படி இப்படி நடந்தால் அல்லது இப்படி நடக்காவிட்டால் அல்லது இவர்கள் வழியாக வரும் பயத்தை அழிக்கிறது கடவுளின் கணிதம்.

பயத்திற்கும், கணிதத்திற்கும், கடவுளுக்கும் என்ன தொடர்பு?

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மத்தேயு 10:26-33) மையமாக இருக்கிறது சிட்டுக்குருவி உருவகம். துள்ளி விளையாடும் சிட்டுக்குருவிகள் பல கவிஞர்களின் பாடுபொருளாகவும், ஓவியங்களின் மாதிரி உருவமாகவும் இருக்கின்றன. நம் செல்ஃபோன் அலைக்கற்றைகளால் அருகி வரும் அப்பாவி உயிரினம் இது.

'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றி தரையில் விழாது!' (மத் 10:29) என்கிறார் இயேசு. 'காசு' என்பது 'தெனாரியத்தின்' பத்தின் ஒரு பங்கு. ஒரு தெனாரியம் என்பது ஒருவரின் ஒரு நாள் கூலி. இது மிகவும் சொற்பமான பணம். பாலஸ்தீனத்துச் சந்தையில் குருவி விற்பவர்கள் அதை நீளமான கயிற்றில் தொங்கிவிட்டிருப்பர். காசு கொடுத்தவுடன் அப்படியே கயிற்றிலிருந்து அவிழ்த்து அவர்களின் கூடைகளில் போடுவர். ஒரு காசுக்கு ஒரு குருவிதான் என்றாலும் அவசரத்தில் சில நேரங்களில் இரண்டு குருவிகளும் விழுந்துவிடும். வீட்டில் சென்று பையை திறந்து பார்ப்பவர் ஒரு குருவிக்கு பதிலாக இரண்டு குருவிகள் கிடப்பதை பார்த்து ஆச்சர்யப்படுவார். சில நாள்கள் கழித்து அவற்றில் ஒரு குருவி இறந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அவர் அதைப் பற்றி கவலைப்படுவாரா? இல்லை. ஏனெனில் அவர் ஒரு குருவிக்குத்தான் காசு கொடுத்தார். இரண்டாவது குருவி இலவசக் குருவி. இந்த இலவசக் குருவியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

மத்தேயுவின் பதிவு இப்படி இருக்க, லூக்காவோ, 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?' (லூக்கா 12:8) என்று எழுதுகின்றார். காசுக்கு இரண்டு குருவிகள் என்றால், இரண்டு காசுக்கு நான்கு குருவிகள் தானே. இதில் ஐந்தாவது குருவி எப்படி வந்தது? இரண்டு காசுகள் கொடுத்து குருவிகள் வாங்கும்போது, சாம்பிளுக்கு ஒரு குருவியை பறக்கவிட்டுக் காண்பிப்பார்கள் - குருவி நல்ல குருவி என்பதை நிருபணம் செய்ய. காசு கொடுத்து வாங்கிச் செல்லும் குருவியை வாங்கியவர் பார்த்துக்கொள்வார். ஆனால் பறக்கிவிடப்பட்ட குருவியை யார் பார்த்துக்கொள்வார்?

ஆக, குருவி இலவசமாக அல்லது கொசுறாக வந்தாலும் சரி அல்லது அடுத்தவர்கள் அதை வைத்து டெஸ்ட் செய்து அது பறந்தாலும் சரி, அவற்றைப் பற்றி அக்கறைப்படுபவர் கடவுள். நம் தலையில் எத்தனை முடிகள் இருக்கின்றன என நாம் கவலைப்படுவதில்லை. ஆனால், முடிகள் குறைந்தால் கவலைப்படுகிறோம். தலைமுடியை வைத்து ஐன்ஸ்டைன் தன் ரெலடிவிட்டடி தியரியை பின்வருமாறு விளக்கினார்: ஒரு தலையில் மூன்று முடிகள் இருந்தால் அதை நாம் 'கொஞ்சம் முடி' என்கிறோம். ஆனால், அதே மூன்று முடிகள் நமது சாப்பாட்டுத் தட்டில் கிடந்தால் 'நிறைய முடி' என்கிறோம். முடி மூன்றுதான். ஆனால், அது இருக்கும் இடத்தைப் பொறுத்து அதன் மதிப்பிடுதல் மாறுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் 'அஞ்ச வேண்டாம்' என்று தொடங்கி, 'அஞ்சாதிருங்கள்' என முடிகிறது. ஆக, மனிதரின் கணக்குப் படி எப்போதெல்லாம் அச்சம் வருகிறது?

அ. மற்றவர்கள் துன்புறுத்தும்போது அல்லது நம்மைவிட அவர்கள் பலமாய் இருக்கும்போது

இன்றைய நற்செய்திப் பகுதி முந்தைய பகுதி (மத் 10:16-25), அனுப்பப்படும் திருத்தூதர்கள் அடையும் துன்பங்களைப் பட்டியலிடுகிறது. இப்படிப்பட்ட துன்பங்கள் சீடர்களுக்கு இயல்பாகவே அச்சத்தைக் கொடுப்பவை. அதாவது, திருத்தூதர்கள் ஏற்றுக்கொள்ளப்படாதபோது, மற்றவர்களால் துன்பங்கள் இழைக்கப்படும்போது, மற்றவர்கள் ஏச்சுப் பேச்சுக்கள் பேசும்போது என நிறைய துன்பங்கள் வரும். இந்தத் தருணங்களில் மற்றவர்கள் நம்மைவிட பலம் வாய்ந்தவர்களாகத் தெரியலாம். அல்லது நம் மேல் வெற்றி கொள்ளலாம். இந்தத் தருணங்கள் நமக்கு பயத்தை வருவிக்கின்றன.

ஆ. நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை நிகழும்போது

'வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றுமில்லை. அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.' - 'இப்படி எல்லாம் நடக்கிறதே! ஏன்?' என்ற ஆச்சர்யங்கள் இங்கே தேவையில்லை. வாழ்வில் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கம் தேவையில்லை. இத்தகைய ஏக்கங்கள் அல்லது எதிர்பார்ப்புக்களும் நம் அமைதியைக் குலைத்து, நமக்கு கலக்கத்தை உருவாக்கிவிடுகின்றன.

இந்த இரண்டு காரணங்களோடு முதல் வாசகம் (காண். எரேமியா 20:10-13) மேலும் மூன்று காரணிகளைச் சொல்கிறது:

இ. மற்றவர்கள் கொள்ளும் அச்சம்

நீதித்தலைவர்கள் நூலில் (காண். 6-7) போருக்கு மக்களை கிதியோன் அழைத்தபோது, யாரெல்லாம் வரக்கூடாது என்பதற்கான முதற் காரணம் என்னவென்றால், உள்ளத்தில் பயம் கொண்டிருப்பவர்கள். அதாவது, பயம் கொண்டிருக்கும் ஒருவர் பயமில்லாதவரையும் பயமுறுத்துவிடுவதால் பயம் கொண்டிருப்பவருக்கு போரில் அனுமதி இல்லை. எரேமியாவைச் சுற்றி இதே கூக்குரல்தான் இருக்கின்றது. மக்கள் எல்லாரும், 'சுற்றிலும் திகில்' என பேசிக்கொள்கிறார்கள். அதாவது, கிமு 587ஆம் ஆண்டை ஒட்டிய நிகழ்வுகள் இந்த வாசகத்தின் பின்புலத்தில் இருக்கின்றன. எருசலேம் நகரைச் சுற்றி பாபிலோனிய அரசன் நெபுகத்னேசரின் படைகள் குவியத் தொடங்குகின்றன. பாபிலோனின் கையில் எருசலேம் விழப்போகிறது என்பதை பலரும் பல வகைகளில் பேசுகின்றனர். இந்த பேச்சு மக்களுக்குத் திகிலை உண்டாக்குகிறது.

ஈ. மற்றவர்களின் பழிப்புரை

'பழிசுமத்துங்கள். வாருங்கள். அவன்மேல் பழி சுமத்துவோம்' என மக்கள் எரேமியாவை நோக்கி பாய்கின்றனர். எரேமியாவின் காலத்தில் போலி இறைவாக்கினார்கள் தோன்றி, 'இப்படி எல்லாம் நடக்காது' என பொய் உரைக்கின்றனர். ஆனால் எரேமியாவோ எருசலேம்; அழிந்துவிடும் என உண்மையை இறைவாக்கை உரைக்கின்றார். இதை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் நகரத்தார் எரேமியாவின்மேல் பழிசுமத்துகின்றனர். 'இவன் தாய்நாட்டுக்கு எதிராக பேசுகிறான்' என்று அவருக்கு எதிராக எழுந்தார்கள்.

உ. நண்பர்கள் எதிர்பார்க்கும் நம் வீழ்ச்சி

எரேமியாவின் நண்பர்கள் அவர் மேல் பொறாமைப்படுகின்றனர். அத்தோடு எரேமியா வீழ்ந்தால் தான் தங்களுக்கு நலம் எனக் காத்திருக்கின்றனர். இப்படியாக தன்னோடு, தனக்காக இருந்தவர்கள் எல்லாம் தனக்கெதிராக மாறியது எரேமியாவுக்கு பயத்தை உருவாக்குகிறது.

முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சுட்டிக்காட்டும் இந்த ஐந்து காரணங்களுமே நம் வாழ்விலும் இருக்கலாம். இந்த ஐந்து பயங்களால் நாமும் அச்சுறுத்தப்படலாம்.

இந்த அச்சங்கள் எல்லாம் மனிதரின் கணிதத்தின் படி எழும் அச்சங்கள். அதாவது, இப்படி இருந்தால் அச்சம் இருக்கும் என்பது வாழ்வியல் எதார்த்தம். இந்தக் கணிதத்தை அழித்துவிட்டு விடையை மாற்றி எழுதுகின்றார் கடவுள்.

கடவுளின் கணிதம் எப்படி இருக்கின்றது?

1. ஆண்டவர் என்னோடு இருக்கின்றார்

எரேமியாவின் நண்பர்கள் அவரோடு இல்லை. எருசலேம் நகரத்தார் அவரோடு இல்லை. அவரின் இறைவாக்கைக் கேட்டவர்கள் அவரோடு இல்லை. ஆனால் யார் இருக்கின்றார்? 'ஆண்டவராகிய கடவுள்.' எப்படி இருக்கின்றார்? 'வலிமை வாய்ந்த வீரரைப் போல.' இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னோக்கி இழுத்து வாசித்தால் இதன் பின்புலம் புரியும். 'ஆண்டவரே, நீரே என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப்போனேன்' என்று பாடுகிறோமே, அந்த மயக்குதல், காதலன் காதலியை மயக்குதல் அல்ல. மாறாக, இங்கே 'ஏமாற்றுதல்' என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டவர் தன்னை ஆள்கொண்டதாலும், அந்த ஆட்கொள்ளுதலில் தான் ஏமாந்துவிட்டதாகவும் புலம்புகின்றார் எரேமியா. ஒரு பக்கம் புலம்பினாலும், மறு பக்கம், 'உம் சொல் என் இதயத்தில் பற்றியெறியும் தீபோல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது' என ஆறுதல் பெற்றுக்கொள்கின்றார்.

எரேமியா தன்னிடம் ஆண்டவர் இருப்பதாக உணர்கின்றார். 'வலிமை வாய்ந்த வீரர்' என்பதுதான் எரேமியா பயன்படுத்தும் உருவகம். போர்க்களத்தில் வீரரின் உடனிருப்பு பாதுகாப்பும், பலமும் தருகிறது. தன் வாழ்க்கையே போர்க்களமாகிவிட்ட நிலையில், அந்த போர்க்களத்தில் இறைவனின் உடனிருப்பு அவருக்கு பலம் தருகிறது. ஆகையால் அவரால் தன் வாழ்வில் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும்.

2. அருளும் அருள்கொடையும்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆதாம் மற்றும் இயேசுவையும், பாவத்தையும் அருளiயும் ஒப்பீடு செய்யும் தூய பவுலடியார், கடவுளின் அருளும், இயேசு கிறிஸ்துவின் அருள்கொடையும் மேலானது என்கின்றார். 'குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு' என்று சொல்கின்ற பவுல், 'குற்றத்தின்' தன்மை சாவை வருவிக்கிறது. 'அருள்கொடையின்' தன்மை வாழ்வைத் தருகிறது.

ஆதாமின் வழி வந்த பாவம் அச்சத்தை உருவாக்குகிறது. பாவத்தின் குழந்தையாக வரும் சாவு இன்னும் அதிக அச்சத்தைத் தருகிறது. அருளும், அருள்கொடையும் அச்சத்தை அகற்றுகிறது. எப்படி? கடவுள் தன் அருளாலும், இயேசு தன் அருள்கொடையாலும் நம்மை உரிமையாக்கிக்கொள்கின்றனர். அந்த உரிமை வாழ்வு நம் வாழ்வில் அச்சத்தை அகற்றிவிடுகிறது.

3. சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்

கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட நாமும், இயேசுவின் வழியாக அவருடைய பிள்ளைகளாகும் தகுதிபெற்ற நாம் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள்தாம். நமது இந்த மேலான நிலையை இயேசு நமக்கு நினைவூட்டுகின்றார். ஏனெனில் நாம் பல நேரங்களில் மறந்துவிடுகின்றோம். அதாவது, தான் யாருக்கு விற்கப்படுகின்றோம், யாரால் பறக்கவிடப்படுகின்றோம் என்ற அறிவு இல்லாமல் இருக்கும் சிட்டுக்குருவி இறைவனின் கையில் இளைப்பாறுகிறது என்றால், நன்மை, தீமை அறிந்த நாம் இன்னும் அதிகம் இளைப்பாற மாட்டோமா? சில நேரங்களில் நம் மனித தன்மையும், நம் அறிவுமே நம் துன்பத்திற்கு, அச்சத்திற்குக் காரணமாகிவிடுகிறது.

எதிர்காலம் பற்றிய பயம், உடல் பற்றிய பயம், நோய் பற்றிய பயம், தேர்வு பற்றிய பயம், ஆள்கள் பற்றிய பயம் என பயத்தின் எண்ணிக்கை நீளம். பயத்திற்கு மாற்று நம்பிக்கையே.

இவ்வாறாக,

மனிதர்கள் எதையெல்லாம் பயம் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்களோ, அதையெல்லாம் பயம் இல்லை என்ற மாற்றுக்கருத்தை பதிவு செய்கின்றது இன்றைய முதல் வாசகம்.

வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே இறைவனின் கைகளில் இருந்துதான் வருகின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்: அவரின் கைகளில் நம்மையே ஒரு சிட்டுக்குருவியாக உட்கார வைப்பதுதான். இன்று நாம் நம்மையே ஆய்ந்து பார்ப்போம்? இன்று எனக்கு எதெல்லாம் பயம் கொடுக்கிறது? எந்த பயத்தால் நான் கீழே விழுகிறேன்? எந்த பயம் என்னை தடுமாறச் செய்கிறது? என யோசிப்போம்.

நமக்கு பயம் தருபவை எல்லாம் தன்னிலேயே நிறைவற்றவை. ஏனெனில் உடலைக் கொல்பவர்களால் ஆன்மாவை கொல்ல முடியாது. அப்படியிருக்க எல்லாம் வல்ல அவர்மேல் நம்பிக்கை கொள்வோம். இந்த உலகம் நம்;மை கொசுறாக, இலவசமாக, வலுவற்றதாகக் கருதினாலும், அவர் வலிமைமிக வீரராய் நம் உடன் வருகின்றார். அவரின் உள்ளங்கைகளில் அடைக்கலம் புகுபவர்கள் அச்சம் கொள்வதில்லை.

ஏனெனில், நம் கணிதம் வேறு. கடவுளின் கணிதம் வேறு.