இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

காலிக்குடம்

விப 17:3-7
உரோ 5:1-2,5-8
யோவா 4:5-42

எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை இறைவன் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தபோது அவர்கள் கண்ணெதிரே செங்கடல். என்னதான் கடல் தண்ணீரால் நிறைந்திருந்தாலும் அதில் ஒரு வாய் குடிக்க முடியுமா? கடலைப் பிளந்து கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்கின்றார் கடவுள். கடலையே வற்றச் செய்த அவர் தங்கள் தண்ணீர்க்குடங்களையும் வற்றச் செய்துவிட்டார் என முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். 'எவ்ளோ பெரிய விடயம் செய்து கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்? இனி அடிமைத்தனம் இல்லை. வன்முறை இல்லை' என கொண்டாடுவதற்குப் பதிலாக, 'தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை' என முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர் மக்கள்.

ஒரு முறை இப்படித்தான். ஆற்றங்கரையில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையைக் கவனிக்காமல் தாய் நிற்க, குழந்தை ஆற்றுக்குள் இறங்கி விளையாட ஆரம்பிக்கிறது. ஆற்றின் ஓட்டம் வேகமாக இருக்க, குழந்தையை இழுத்துச் செல்கிறது ஆறு. 'யாராவது காப்பாற்றுங்களேன்?' என அலறிக்கொண்டே கரையில் ஓடிவருகிறாள் தாய். இவளின் அழுகுரல் கேட்ட இளைஞன் ஒருவன் ஆற்றுக்குள் குதித்து குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் கொடுக்கின்றாள். கொஞ்ச நேரத்தில், 'ஐயோ! காணோமே! காணோமே!' என மீண்டும் அழுகின்றாள் தாய். 'என்னமா, அதான் குழந்தை கிடைச்சுடுச்சுல. அப்புறம் என்ன?' எனக் கேட்கின்றான் இளைஞன். 'குழந்தையின் ஒரு கால் செருப்பைக் காணோமே!' என தொடர்ந்து அழுகிறாள் அவள்.

ஆக, ஒரு தேவை நிறைவேறியவுடன் அடுத்த தேவை வந்து நம் உள்ளத்தை நிறைத்துக்கொள்கிறது. இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து நிறைகுடமாய் இருந்த இஸ்ரயேல் மக்கள் காலிக்குடமாக நிற்கின்றார்கள் இன்றைய முதல் வாசகத்தில்.

பாவம் மேலோங்கி நின்று மனுக்குலத்தின் குடங்களைக் காலி செய்தபோது, அருள்நிலையால் அதை நிரப்பி நம்பிக்கையால் வழிந்தோடச் செய்கின்றார் என 'காலிக்குடமாக' இருந்த நம்பிக்கையாளர்களின் நிலையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் விளக்கிச் சொல்கிறார் பவுல்.

காலிக்குடம் கொண்டு வந்து தண்ணீர் மொள்ள வந்த சமாரியப்பெண் குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு தன் நகர் திரும்பி தன் நகரத்தார் அனைவரையும் இயேசுவிடம் அழைத்துச் செல்வதை இன்றைய நற்செய்தி நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

காலிக்குடம் வருகிறது. காலிக்குடம் தனியாக விடப்படுகிறது.

ஆக, தண்ணீர் எடுக்க வந்த பெண் தண்ணீர் எடுக்காமலேயே வீடு திரும்புகிறார்.

இந்த இளவல் ஒரு காலிக்குடம்.

முதலில் இவள் ஒரு பெண். இயேசுவின் சமகாலத்தில் இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட பாலினம் பெண் இனம்.

இவள் ஒரு சமாரியப்பெண். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர். இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. இவள் 'ஒரு மாதிரியான பெண்.' பெண்கள் காலை அல்லது மாலையில்தான் நீர் எடுக்க கிணற்றுக்கு வருவர். இந்தப் பெண் நண்பகலில் வருகின்றார். 'யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது' என்பதற்காகவா? அல்லது ஊர் வாயில் விழக்கூடாது என்பதற்காகவா? அல்லது மற்ற பெண்களும் அவரை ஒதுக்கிவிட்டார்களா? இந்தப் பெண்ணின் அறநெறி பற்றி நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. 'இவர் ஐந்து கணவரைக் கொண்டிருந்தார்' என்பதிலிருந்து இவர் அறநெறி பிறழ்வில் இருந்தவர் என நாம் முடிவுசெய்யக்கூடாது. ஏனெனில் 'லெவிரேட் திருமணம்' என்னும் 'கொழுந்தன் திருமணமுறையில்' இவர் திருமணம் செய்திருக்கலாம். இருந்தாலும், இவரின் நண்பகல் வருகை நமக்கு நெருடலாக இருக்கிறது.

ஆக, பிறப்பாலும், பின்புலத்தாலும், பிறழ்வாலும் காலியான குடமாக தண்ணீர் எடுக்க வருகின்றார் இவர்.

இயேசுவுக்கு இந்தப் பெண்ணின் பிறப்பும், பின்புலமும், பிறழ்வும் கண்களுக்குத் தெரியவில்லை. அவரின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த காலிக்குடம் மட்டும்தான்.

'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்!' என்கிறார் இயேசு.

ஏற்கனவே கிணற்றருகில் இருப்பவர் இயேசு. ஆனால் இந்தப் பெண்ணோ இப்போதுதான் வருகின்றார். முறைப்படி பெண்தான் இயேசுவிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண் தண்ணீர் இறைப்பதை இயேசு பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, 'கொஞ்சம் வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டிருக்கலாம்.

'தண்ணீர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து உரையாடல் தொடங்கி தொடர்கிறது.

'நீர் எப்படி தண்ணீர் கேட்கலாம்?'

'தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை'

'நான் தரும் தண்ணீர்'

'தாகம் எடுக்காது'

'அந்த தண்ணீரை எனக்குத் தாரும்'

என தண்ணீரே உரையாடலின் முக்கிய வார்த்தையாக இருக்கிறது.

வெகு சில நிமிடங்களே தாகம் தீர்க்கும் மிகச் சாதாரண தண்ணீரை எடுக்கச் சென்ற இளவலிடம் இயேசு இறையியல் பேச ஆரம்பிக்கின்றார். இதுதான் கடவுளின் பண்பு. நாம் ஒரு தேவை என அவரிடம் சென்றால், அந்த தேவையைக் கடந்து அடுத்தடுத்த நிலைக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.

  'உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு' என இயேசு சொல்வதை 'உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு' எனவும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இயேசுவின் காலத்துச் சமாரியர்கள் ஐந்து கடவுளர்களை வழிபட்டனர் (காண். 2 அரசர்கள் 17:24). அத்தோடு விடவில்லை இயேசு. 'இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்பிற்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்' எனச் சொல்கிறார் இயேசு.

  'நீர் இறைவாக்கினர் என நான் கண்டுகொண்டேன்' என அறிக்கையிட்ட சமாரியப்பெண்ணிடம், 'நானே அவர் - நானே கிறிஸ்து' என தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு.

நிக்கதேம் என்ற யூத ஆணுக்கு இரவில் கிடைக்காத இந்த வெளிப்பாடு, பெயரில்லாத இந்த சமாரியப் பெண்ணுக்கு நண்பகலில் கிடைக்கிறது. இதுவும் கடவுளின் செயல்பாடே.

இறைவனின் அருள்நிலையைத் தாங்கமுடியாத அந்த கண்ணீர் குடம் தான் கொண்டுவந்த தண்ணீர் குடத்தை அப்படியே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறது. தாங்க முடியாத மகிழ்ச்சியில் நாம் பிறரை நோக்கி ஓடுகிறோம். கபிரியேல் தூதரிடம் மங்கள வார்த்தை கேட்ட மரியாள் யூதேயா மலைநாடு நோக்கி ஓடுகிறார். உயிர்த்த இயேசுவை தோட்டத்தில் பார்த்த மகதலா மரியா சீடர்களை நோக்கி ஓடுகிறார். இந்த இளவல் யாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள நினைத்தாளோ அவர்களை நோக்கி ஓடுகிறாள். அதாவது, 'என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார்' என்ற உறுதி வந்தவுடன், 'என்னை ஏற்றுக்கொள்ளாமல் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலையில்லை' என அவர்களை நோக்கி ஓடுகின்றாள் இளவல்.

இதற்கிடையில் உணவு வாங்க ஊருக்குள் சென்ற சீடர்கள் திரும்பி வருகின்றார்கள். தான் இதுவரை பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாத ஒரு டாபிக்கை எடுத்துப் பேசிகின்றார் இயேசு. 'அறுவடை இருக்கு, அரிவாள் இருக்கு, கதிர்கள் முற்றி இருக்கு, வேலைக்காரங்க சம்பளம் வாங்குறாங்க' என்ற இயேசுவின் பேச்சு நகைச்சுவையைத் தருகின்றது. அதாவது, ஃபோனில் நாம் மிக ரம்மியமாக நம் இளவலோடு உரையாடிக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் குறுக்கே யாராவது வந்தால் அவரிடம் சம்பந்தமில்லாமல் நாம் பேசும் உரையாடல்போல இருக்கிறது இயேசுவின் உரையாடல்.

ஊருக்குள் சென்ற இளவல், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?' என மக்களுக்கு அறிவிக்கின்றார். 'வந்து பாருங்கள்' என்ற வார்த்தையை இயேசு தன் முதற்சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலிடம் சொல்லும் வார்த்தையும் இதுவே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 'இவர்தான் மெசியா' என உறுதியாக அறிவிக்காமல், 'இவராக இருப்பாரோ!' என தயக்கம் காட்டுகிறார் இளவல். இறையனுபவத்தில் தயக்கம் மிக அவசியம். சில நேரங்களில், 'இதுதான் இறைவன். இதுதான் இறையனுபவம்' என கடவுளுக்கு செக்ரட்டரி மாதிரி அவரை முற்றிலும் அறிந்தவர்போல நாம் பேசுகிறோம். பல மதங்கள் தொட்டில் கட்டி ஆடும் நம் இந்திய மரபில் இந்த தயக்கம் இன்னும் அதிகம் அவசியமாகிறது. இல்லை என்றால், 'என் கடவுள்தான் பெரியவர்' என நாம் அடுத்தவரை தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுவோம்.

இளவலின் பேச்சைக் கேட்டு சமாரிய நகரத்தார் அனைவரும் இயேசுவிடம் வருகின்றனர். அந்த மக்களின் தாராள உள்ளத்தையும் நாம் பார்க்க வேண்டும். 'என்னிடம் நிறைய தங்கம் இருக்கிறது என நீ உன் சொந்தக்காரனிடம் சொல். அவன் உன்னை நம்ப மாட்டான்' என்கிறார் பவுலோ கோயலோ. அதாவது, 'இவனிடம் என்ன இருக்கிறது? இவனைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே' என சொந்தக்காரர்கள் எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால், இந்த மக்கள் அப்படி அல்ல. 'யார் சொன்னா?' என்பது முக்கியமல்ல. 'என்ன சொன்னாள்?' என்பதுதான் முக்கியம் என இயேசுவை நோக்கி புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் தங்குமாறு இயேசுவிடம் கேட்கின்றனர். தாங்கள் இறையனுபவம் பெற்றவர்களாக, 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்' என அறிந்துகொண்டோம் என நம்பிக்கை அறிக்கை செய்கின்றனர்.

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். குருக்களின் மறையுரை, வழிபாடு, ஞாயிறு மறைப்போதனை, வகுப்புகள் என நிறைய வழியில் நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், அந்த அறிவு முழுமையானது அல்ல. அனுபவம் வழியாக இயேசுவை அறிய புறப்பட வேண்டும்.

'இறைவாக்கினர்,' 'கிறிஸ்து,' 'மீட்பர்' என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் மக்களின் காலிக்குடம் தாகம் என இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு தாகம் இருக்கிறது அவர்களிடம். 'ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?' என்ற கேள்விதான் அது.

ஒவ்வொரு ஆன்மாவும் இதே தேடலோடு தான் இருக்கின்றது. ஆகையால்தான், 'உமக்காகவே படைக்கப்பட்ட எங்கள் ஆன்மாக்கள் உம்மை நாடித் தேடி உம்மில் ஒன்றாகும்வரை அமைதி காண்பதில்லை' என கசிந்துருகுகிறார் தூய அகஸ்தினார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்;க்கைப் பாடம் என்ன?

1. நான் ஒரு காலிக்குடம்

என் கிணறு வற்றும் நேரத்திலும், 'ஆண்டவர் என்னோடு இருக்கிறாரா?' என்ற கேள்வி எழும் நேரத்திலும், என் வாழ்வின் பொருள் என்ன என நான் கேட்கும் நேரத்திலும் நான் செய்ய வேண்டியது என்ன? என் வீட்டில் ஓய்ந்திருக்காமல், என் காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு கிணறு நோக்கி நடைபோட வேண்டும். அது நண்பகலாக இருந்தாலும். ஏனெனில் என் தாகம் தீர்ப்பவர், என் காலிக்குடத்தை நிரப்பவல்லவர் எனக்காக அங்கே காத்துக்கொண்டு இருப்பார். இஸ்ரயேல் மக்களின் காலிக்குடங்களை நிரப்ப ஒரேபு மலையில் காத்துக்கொண்டிருக்கிறார் யாவே இறைவன். சமாரியப் பெண்ணின் காலிக்குடத்தை நிரப்ப கிணற்றடியில் காத்துக்கொண்டிருக்கிறார் இயேசு. என் இறைவனும் எனக்காக தனிமையில் காத்துக்கொண்டிருக்கும் இறைவன். அவரிடம் நான் எப்படி, எந்த நிலையில், எந்த நேரத்தில் சென்றாலும், 'குடத்தை அப்படி வைத்துவிட்டு இங்கு வந்து அமர்' என என்னை தன் அருகில் அமர வைத்து, என்னை உயர்ந்த தேவைகளை நோக்கி அழைத்துச் செல்ல வல்லவர் அவர்.

ஆனால், நான் சில நேரங்களில் என் காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, கானல் நீரை நோக்கியும் செல்ல வாய்ப்பிருக்கிறது. கானல் நீர் எனக்கு அருகில் இருக்கிறது. என் கண்களுக்கு ஈர்ப்பாக தரையின் மேலேயே இருக்கிறது. கிணறு தூரமாக இருக்கிறது. ஆழமாக இருக்கிறது. என்னதான் அருகிலும், கண்களுக்கு ஈர்ப்பாகவும் இருந்தாலும் கானல் நீர் ஒரு மாயை மட்டுமே. அந்த நீர் என் தாகத்தை ஒருபோதும் தணிக்க முடியாது. ஆக, நான் கிணற்றை நோக்கியே செல்கிறேன் என்பதை அடிக்கடி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. என் அருகிருப்பவர் ஒரு காலிக்குடம்

என் வாழ்வில் விரக்தி, துயரம், வெறுமை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை எனக்கு அருகிருப்பவரின் விரக்தியும், துயரமும், வெறுமையுமே. நாம் தினமும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் தன் உள்ளே ஏதாவது ஒரு போராட்டத்தில் இருப்பார். ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு குடம் காலியா இருக்கும். சில நேரங்களில் அடுத்தவரின் குடத்தை நிரப்புவதற்குப் பதிலாக நாம் அந்தக் குடத்தை இன்னும் சுரண்டு புண்ணாக்கிவ அல்லது வற்றச்செய்துவிடுகிறோம்.

அடுத்தவரின் காலிக்குடத்தை நிரப்புக்கூடியவராக நான் இருக்க முடியும்? எப்படி? இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது போல என் அருள்நிலையில் அடுத்தவருக்கு பங்கு கொடுப்பதன்வழியாக, என் அருளை அடுத்தவருக்கு என் வாழ்வின் வழியாக பகிர்ந்து கொடுப்பதன்வழியாக.

3. என் சமூகம் ஒரு காலிக்குடம்

குடங்கள் காலியானால் மனிதர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்க, அரசுக்கு எதிராக முணுமுணுக்காமல் இருப்பார்களா? இன்று தண்ணீர் தான் அரசியல். காவேரி, முல்லைப்பெரியாறு, நதிநீர் இணைப்பு, தாமிரபரணியில் பெப்சிக்கு தண்ணீர், மீத்தேன் திட்டத்தால் தண்ணீர் வறட்சி, தண்ணீர் வறட்சியால் விவசாயிகள் (தற்)கொலை, மீன்பிடிக்கும் தண்ணீரில் மாற்றானின் அத்துமீறல் என நம் குடங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன. 'என் தங்கம், என் உரிமை' என்று போராடும் நம்மால், 'என் தண்ணீர், என் உரிமை' என போராட முடியவில்லை. நான் சிறுபையனாக இருக்கும்போது நிறைய பெட்டிக்கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடைக்கு வெளியிலும் ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கும். யாரும் வந்து குடிக்கலாம். கொஞ்ச ஆண்டுகள் கழித்து குடங்கள் கடைக்குள் சென்றன. இன்று அதே குடங்கள் சின்ன சின்ன வாட்டர் பாக்கெட்டுகளாய், பிளாஸ்டிக் பாட்டில்களாய் கடையில் தொங்குகின்றன.

  நம்மை ஆள்பவர்களுக்கு இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. தங்கள் போலி பிரச்சாரத்தால் மக்களை தன்வயப்படுத்தி தங்கள் ஓட்டு வங்கியை பலப்படுத்தவும், தங்கள் குற்றவாளி தலைவரின் சமாதியில் தியானம் செய்து, ஓங்கி அடித்து ('வெறுங்கழுதைக்குத்தான் வீராப்பு அதிகம்' என ஊரில் சொல்வார்கள்') சத்தியம் செய்வதிலும் குறியாய் இருக்கிறார்கள் அவர்கள்.

வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.

  தாகம் தீர்க்கும் தண்ணீராவது இன்று கிடைக்கட்டும்.

தண்ணீர் எடுக்கச் சென்றவள் வாழ்வின் ஊற்றைக் கண்டுகொள்கிறாள். நம் குடங்கள் காலியாகும்போது நம் பயணம் அவரை நோக்கியதாக இருக்கட்டும். அவரின் ஊற்றில் பருகும் நாம் மற்றவர்களுக்கும் நம் குடங்களைச் சாய்த்துக்கொடுப்போம்.

காலிக்குடங்கள் என்றும் அவர் காலடியில்!