இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

களத்தில் இறங்காத கலப்பை!

1 அரச 19:16, 19-21
கலா 5:1, 13-18
லூக் 9:51-62

டிராக்டர்கள், உழவு வண்டிகள், சட்டிக்கலப்பைகள் போன்ற ஆடம்பரங்கள் நம் கிராமங்களை அணுகுவதற்கு முன், ஒரு ஜோடி மாடுகள் முன் செல்ல, அவற்றின் கழுத்தின் குறுக்கே நுகம் இடப்பட்டு, அந்த நுகத்தில் கலப்பை தலைகீழாகக் தொங்கவிடப்பட்டு, அரையில் கோவணமும், கையில் சாட்டையும் கொண்டவராய் மேலாடை அணியாத, வெயில் பட்டு தோல் கறுத்து மின்னும் அந்த தாத்தாவோ, ஐயோவோ ஜோடி மாடுகளைப் பின்தொடர, கலப்பையின் மரக்கட்டை ரோட்டில் இழுத்துக்கொண்டு போகும் சத்தமும், அந்த சத்தத்தோடு ஒருசேர வரும் மாடுகளின் கழுத்து மணி சத்தமும் நம் காதுகளில் விழுந்திருக்கும்.

கலப்பை சாலையை பதம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவும், கலப்பையின் கூரான பகுதி சாலையின் கடினமான கல்லில் பட்டு தட்டையாகிவிடக் கூடாது என்பதற்காகவும்தான் கலப்பை தலைகீழாகக் கொண்டு செல்லப்பட்டது. கலப்பையின் நோக்கம் சாலையை உழுவது அல்ல. மாறாக, விவசாய நிலத்தை உழுவது. விவசாய நிலத்தில் உழுதால்தான் கலப்பையின் பயணம் நிறைவுறும். விவசாய நிலம் கலப்பையின் கூர்மையைத் தட்டையாக்குவதில்லை. தன் முதுகில் கலப்பை ஊர்ந்து செல்வதை ரசித்து அனுபவிக்கின்றன விவசாய நிலங்கள்.

கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிப்பதால்தான் இந்தப் பின்புலம்.

இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா.

நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு.

கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல்.

கலப்பை களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. கலப்பை இறங்க மறுத்தால், உழுபவர் அதை களத்தில் இறக்க மறுத்தால், நிலம் கலப்பையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நோக்கம் நிறைவேறுவதில்லை. விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல.

நம் சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு தொடங்குவோம்.

'மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்?' 'நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?' என தன் சீடர்களிடம் கேட்ட இயேசு, தொடர்ந்து தான் எத்தகைய மெசியா என்பதை - அதவாது, துன்புறம், கைவிடப்படும், இறக்கும், உயிர்க்கும் மெசியா என - தன் சீடர்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய மெசியாவைப் பின்பற்றும் சீடத்துவத்தின் பண்புகள் பற்றியும் விளக்குகின்றார். ஆனால், இந்த விளக்கத்தை அவரின் சீடர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

சீடர்களின் புரிந்து கொள்ள இயலாத தன்மையையும், அதற்கு இயேசு தரும் பதிலையும்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தி இரண்டு நிகழ்வுகளை நமக்குச் சொல்கிறது: (அ) இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர். (ஆ) இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்.
'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்ல தீர்மானித்து' என நிகழ்வை அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசு மனிதராக இறங்கி வந்ததன் நோக்கம் விண்ணேறிச் செல்வதுதான். அந்த விண்ணேற்ற நிகழ்விற்கு அடிப்படையாக இருப்பது எருசலேம் துன்பமும், இறப்பும், உயிர்ப்பும். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் வாழ்வின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைக்கிறது.

எருசலேம் செல்ல விரும்பும் இயேசு தனக்கு முன் வழியை ஏற்பாடு செய்ய யாக்கோபு மற்றும் யோவானை அனுப்புகின்றார். இந்த இரண்டு சீடர்களையும் 'இடியின் மக்கள்' அல்லது 'இடியைப் போன்றோர்' ('பொவனேர்கேசு' காண். மாற் 3:17) என அழைக்கின்றார் மாற்கு. இந்தப் பெயர் இவர்களுக்கு வழங்கப்பட இன்றைய நற்செய்தியின் நிகழ்வு கூடக் காரணமாக இருக்கலாம். யாக்கோபும், யோவானும் சமாரியரின் ஓர் ஊருக்குப் போகின்றார்கள். ஆனால் இயேசுவின் முகம் எருசலேம் நோக்கி இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இங்கே குறிப்பிடப்படும் சமாரியா நகர் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், சமாரியர்களுக்கும், யூதர்களுக்கும் தூய்மை அடிப்படையில் பிரச்சினைகள் இருந்தது. சமாரியர்களும் யூதர்களே. ஆனால், அசீரியப் படையெடுப்புக்குப் பின் (கி.மு. 721), வடக்கு இஸ்ரயேலில் வாழ்ந்த யூதர்கள் அசீரியர்களோடு திருமண உறவில் இணைந்து தங்களின் தூய்மையை இழந்துவிடுகின்றனர்(!). அவர்கள் சமாரியர்கள் என்ற பெயர் பெறுகின்றனர். இயேசு பரந்த எண்ணம் கொண்டவர் என்று அவர்கள் அறிந்திருந்தாலும், அவரின் நோக்கம் எருசலேம் என்பதால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த சீடர்கள் ஆர்வக்கோளாறில் ஏதாவது செய்திருக்க, அது அவர்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்தவுடன் யாக்கோபுக்கும், யோவானுக்கும் கோபம் வந்துவிடுகிறது. 'ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?' என்று பொங்குகின்றனர். ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட இயேசுவே அமைதியாக இருக்க, இவர்கள் கோபப்படுகின்றன்றனர். டீயை விட கப் சூடாக இருக்கிறது! இயேசு அவர்களின் கோபத்தைக் கடிந்து கொள்கின்றார்.
 
இதே யோவான்தான் இதற்கு முந்தைய நிகழ்வில் சீடர் குழுவைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேயை ஓட்ட, பேய் ஓட்டியவர்மேல் பொறாமை கொண்டு(!) அவரைக் கடிந்து கொள்கின்றார் (காண். லூக் 10:49-50).
இயேசு தன் பணியைத் தொடங்கியபோது அவரின் சொந்த மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் (காண். 4:16-30). இங்கே அவரைச் சாராத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆக, இயேசு எல்லா மக்களாலும் நிராகரிக்கப்படுகின்றார்.
 
மேலும், இந்நிகழ்வு எலியா இறைவாக்கினர் நிகழ்வை ஒத்திருக்கிறது (காண். 2 அரச 1:9, 10). அரசன் அகசியா எலியாவைப் பிடித்துவர ஆள் அனுப்ப, அவரைத் தேடி வந்த ஐம்பதின்மர் தலைவனிடம், 'நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்' என்கிறார். அவ்வாறே நடந்தேறுகிறது. அங்கே நெருப்பு இறங்கி வருதல் எலியாவின் இறைவாக்கு தன்மையை உறுதி செய்யும் நிகழ்வாக இருக்கிறது. ஆனால், இங்கே இயேசு இறைவாக்கினர் என்பதை உறுதி செய்ய வெளிப்புற நிகழ்வுகள் தேவையில்லை. மாறாக, உள்ளத்து நம்பிக்கையே தேவை. மேலும், இயேசுவின் பணி மக்களை அழிப்பதும், நெருப்பிட்டு பொசுக்குவதும் அல்ல. மாறாக, மக்களுக்கு வாழ்வு தருவதும், அவர்களை மீட்பதுமே.
 
இவ்வாறாக, முதல் நிகழ்வில் (9:51-56) சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
தொடர்ந்து வரும் இரண்டாம் நிகழ்வு (9:57-62) அப்படியே தலைகீழாக இருக்கின்றது. இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்ற மூவர் முன்வருகின்றனர். அவர்கள் சமாரியர்களா அல்லது யூதர்களா என்ற பின்புலம் நமக்குத் தரப்படவில்லை. முதல் இரண்டு பேர் வரும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியிலும் வருகிறது (காண். 8:19-22). ஆனால், மூன்றாம் நபர் லூக்காவில் மட்டுமே வருகின்றார்.

இந்த மூன்று பேரின் வருகை சொல்வது இதுதான்: சீடத்துவம் என்பது எல்லா வகையான வேலைகளையும் விட மிக மேலானது - அது தன்னைப் பேணுவதாக இருந்தாலும், இறந்தவரை அடக்கம் செய்வதாக இருந்தாலும், குடும்பத்தைக் காப்பாற்றுவதாக இருந்தாலும்!

'இறந்தோரைப் பற்றிக் கவலைப்படாதேயும்' மற்றும் 'கலப்பையில் கைவைத்தபின்' என்பவை இயேசு காலத்தில் புழக்கத்தில் இருந்த சொலவடைகள். அதாவது, உனக்கு முன் இருக்கும் வேலையை நன்றாகப் பார் என்று அறிவுறுத்துவதே இப்பழமொழிகளின் நோக்கம்.
 
முதலாமவர் மிக உற்சாகமாக இயேசுவிடம் வருகிறார். 'நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்!' என்கிறார். 'எங்கே சென்றாலும்' என்ற வார்த்தை 'எருசலேம் சென்றாலும்,' 'உமக்கு என்ன நடந்தாலும்' என்று சொல்வதுபோலவும், 'இறப்பினும் உன்னைப் பின் தொடர்வேன்' என்று பேதுரு சொல்வதுபோலவும் இருக்கிறது. மானிட மகன் படப்போகும் நிராகரிப்பை இயேசு ஏற்கனவே முன்னுரைத்தார் (9:22, 44). இப்போது சமாரியர்களும் அவரை நிராகரித்துவிட்டனர் (9:53). இந்நிலையில் உற்சாகமான இந்த வாலிபர் எந்த நிராகரிப்பையும் சந்திப்பாரா? நரிகளும், பறவைகளும் இளைப்பாற இடம் பெற்றிருக்கின்றன. அவைகளை இயற்கை அன்னை மடியேந்திக் கொள்கிறாள். ஆனால், மானிட மகனுக்கு அத்தகைய இல்லம் இல்லை. அவருக்கு தலைசாய்க்க இடம் இல்லை எனில், அவரைப் பின்தொடரும் சீடருக்கும் அதே நிலைதான்.
 
இரண்டாமவரை இயேசுவே அழைக்கின்றார். ஆனால் அழைக்கப்பட்டவர், 'முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' என்கிறார். இறந்தவரை அடக்கம் செய்தல் என்பது யூதர்களின் மிக முக்கியமான கடமை (காண். தோபி 1:16-20, 4:3, 6:15). இவரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டாரா என்று எந்தக் குறிப்பும் இல்லை. இயேசுவின் பதில் கண்டிப்பாக இருக்கிறது. இறையரசுப்பணியே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார். 'ஆன்ம அளவில் இறந்தவர்கள் உடல் அளவில் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்' என்று சொல்கிறார் இயேசு. இறையரசுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க முன் வருபவர்களின் அக்கறை இறையரசு பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஆக, அழைக்கப்பட்டவர்களின் பணி 'போய் இறையரசை அறிவிப்பதே' (9:60).

மூன்றாமவர் முதலாமவரைப் போல தானே விரும்பி வந்தாலும், 'ஆயினும்...' என இழுக்கின்றார். 'நான் வீட்டில் சொல்லிவிட்டு வருகிறேன். அனுமதியும்' எனக்கேட்கிறார் இயேசுவிடம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏறக்குறைய இதற்கொத்த நிகழ்வைப் பார்க்கிறோம். பதினொரு ஏர் தனக்கு முன்பாகவும், பன்னிரண்டாம் ஏரை தானே பூட்டியும் உழுது கொண்டிருக்கிறார் எலிசா. அந்த நேரத்தில் அங்கு வருகின்ற எலியா தன் போர்வையை அவர்மேல் போடுகின்றார். இப்படிப் போட்டதன் அடையாளம், 'என்னைப் பின்பற்றி வா!' என்பதே. ஆனால் எலிசாவோ, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும் - அவர்களை முத்தமிட அனுமதியும் - பின் வந்து உம்மைப் பின்செல்வேன்' (1 அரச 19:20) என்கிறார். 'சென்று வா!' என அனுமதிக்கின்றார் எலியா. எலிசாவும் தன் இல்லம் சென்று தன் மாடுகளைப் பிடித்து அடித்து, தன் கலப்பையை நெருப்பிட்டு, இறைச்சியைச் சமைத்து தன் இல்லத்தாரோடு விருந்துண்டு அவர்களிடம் விடைபெறுகின்றார். ஆக, தான் செய்த விவசாயப் பணியை அடியோடு ஒழித்து தன் இறந்தகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் எலிசா.

எலியா அனுமதி கொடுத்ததைப் போல இயேசு இங்கே அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில், எலிசாவின் இறைவாக்குப் பணியை விட, இறையரசுப் பணி மேலானது. இன்னும் அதிக பொறுப்புக்களையும், அவசரத்தையும், வேகத்தையும் கொண்டது. 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையரசுக்குத் தகுதியானவர் அல்ல' என்கிறார் இயேசு.

இந்த இரண்டாம் நிகழ்வும் எலியா நிகழ்வை ஒத்திருக்கிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இயேசு எலியாவைவிட மேலான இறைவாக்கினராகத் துலங்குகின்றார்.

ஆக, இயேசுவின் சீடத்துவம் என்பது பொறுப்புகள் நிறைந்தது. அங்கே இறந்த காலத்திற்கு இடமில்லை. எவ்விதத் தடங்கலும் இன்றி சீடர் முன்னேறிச் செல்ல வேண்டும்.

இந்தக் கருத்தையே தூய பவுலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 5:1, 13-18) முன்வைக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வு பற்றி பேசும் பவுல், அந்த உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை, திருச்சட்டத்தின் அடிமை வாழ்வை, அதற்குத் துணை போகும் ஊனியல்பை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இறந்த காலத்தையும், ஊனியல்பையும் கழுத்தை அமுக்கும் நுகம் என்று உருவகிக்கும் பவுல், 'மீண்டும் அடிமைத் தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்' (5:1) எனக் கண்டிப்பாய்க் கட்டளையிடுகின்றார்.

களத்தில் கலப்பையை இறக்குவதே சீடத்துவம். இந்தக் கலப்பையில் கை வைத்து உழுவதற்கு தடையாக, நாமே நுகத்தைச் சுமந்து கொண்டு குனிந்து நடப்பது சரியல்ல. கலப்பையில் பூட்டப்படும் மாடுகளுக்குத்தாம் நுகம் தேவையே தவிர, கலப்பையைப் பிடிக்கும் நமக்கு அல்ல. கலப்பையைப் பிடிப்பவர் 'நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்' கொண்டிருந்தால்தான் ஆழமாக உழ முடியும். கலப்பையைப் பாதிவழியில் விட்டுவிட்டு ஓடுவதும் சால்பன்று.
 
நான் இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவம் எப்படிப்பட்டது?
  என் சீடத்துவம் களத்தில் இறங்கும் கலப்பையா? அல்லது கலத்தில் இறங்காத, திரும்பிப் பார்க்கின்ற, பாதி வழி திரும்புகின்ற கலப்பையா?

இந்தக் கேள்விகள் நமக்கு ஏழு வாழ்வியல் சவால்களை முன்வைக்கின்றன:
1. இயேசுவின் சமநிலை
சமாரியர்கள் தன்னை நிராகரித்ததைக் கண்டு வருத்தப்படவோ, மூன்று பேர் தன்னைப் பின்பற்ற நினைத்தது கண்டு பெருமிதம் கொள்ளவோ இல்லை இயேசு. இரண்டு உணர்வுகளையும் அவர் மிக எதார்த்தமாக, சமநிலையோடு ஏற்றுக்கொள்கின்றார். இதுதான் வாழ்வில் நாம் கற்க வேண்டிய மிக முக்கிய பாடம். இந்தப் பாடம் கற்றுவிட்டால் நாம் உணர்வுகளால் அடித்துச் செல்லப்படமாட்டோம். நம் மகிழ்வை அடுத்தவர்கள் தீர்மானிக்க விட மாட்டோம்.

2. என் அடையாளம் என்னுள் இருக்கிறது
எலியா ஓர் இறைவாக்கினர் என்று மற்றவர்கள் முன் உறுதி செய்வதற்கு ஓர் அறிகுறி தேவைப்பட்டது. ஆனால் இயேசுவுக்கு அப்படிப்பட்ட வெளிப்புற சான்று தேவையில்லை. மற்றவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் இயேசு மெசியா அல்லது இறைமகன் அல்லது இறைவாக்கினர் அல்ல. யாரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் மெசியா, இறைமகன், இறைவாக்கினர்தான். ஏனெனில் அவரின் இந்த அடையாளம் வெளியில் இருந்து வருவது அல்ல. மாறாக, அவரின் உள்ளே இருந்து வருவது. இன்று நான் என்னை அடையாளப்படுத்துவது எப்படி? வெளியில் இருந்து வரும் சொற்களை வைத்து நான் என் அடையாளத்தை நிர்ணயம் செய்கின்றேனா? என்னிடம் இருக்கும் இறைச்சாயலே, 'நானும் கடவுளின் மகன் அல்லது மகளே' என்ற உணர்வே எனக்கு மிகப்பெரிய அடையாளம் இல்லையா?

3. கடவுளுக்காக வாதாட வேண்டாம்!
இயேசுவை, தங்கள் தலைவரை சமாரிய கிராமம் ஒன்று ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அந்த கிராமத்தின்மேல் நெருப்பு விழ வேண்டும் என துடிக்கின்றனர் யாக்கோபும், யோவானும். இவ்வளவு குருபக்தி இருந்த இவர்கள் இயேசுவின் பாடுகளின்போது எங்கே ஓடிப்போனார்கள்? நிராகரிப்புக்கு உள்ளான இயேசுவே அமைதியாக இருக்க, இவர்கள் கோபத்தால் குதிக்கின்றனர். தங்கள் தலைவரைக் காப்பாற்றத் துடிக்கின்றனர். இன்று நாமும் பல நேரங்களில் நம் கடவுளைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறோம். மதத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவர்மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் முயற்சிகள் அனைத்தும் கடவுளை நாம் காப்பாற்ற நினைக்கும் முயற்சிகளே. வன்முறை வன்முறையை மட்டுமே பெற்றெடுக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். சில நேரங்களில் நாம் கடவுளுக்குப் பதிலாக செயலாற்றவும் நினைக்கிறோம். கடவுள் இரக்கம் காட்டுபவராக இருந்தாலும், அந்த இரக்கத்தை நாம் மற்றவர்களுக்கு தண்டனையாகவும், தீர்ப்பாகவும்தான் கொடுக்க நினைக்கிறோம். ஆக, கடவுளுக்காக வாதாடுவதும், கடவுளின் இடத்தை பிடித்துக் கொண்டு அவருக்குப் பதிலாக வாதாடுவதும் தவறே!

4. கலப்பையில் கை வைத்தால்
கலப்பையில் கை வைத்தவர் திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்? உழுது கொண்டிருக்கும் சால் குறுக்கும், நெடுக்குமாகப் பாயும். உழுகின்ற ஆழம் குறையும். திரும்பிப் பார்க்கும்போது சில நேரங்களில் நமக்குத் திகைப்பாக இருக்கும். பழைய காயங்கள் அல்லது தவறுகள் நம் கண்களுக்குத் தெரியும். முன் வைத்த காலை பின் வைத்தால் நம் கால்கள் பின்னி நாம் விழுந்தவிடவும் வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில், திரும்பிப் பார்த்தல் நம் பணிக்கு இடறலாக இருக்கிறது. அருள்பணி அல்லது துறவற நிலையில் உள்ள ஒருவரைத்தான் இது குறிப்பதாக நாம் பல நேரங்களில் எண்ணுகிறோம். இல்லை! நாம் எந்த அழைப்பு நிலையில் இருந்தாலும், எந்த வேலையைச் செய்பவராக இருந்தாலும், எந்தப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாலும், பின் நோக்காமல், தயங்காமல் நம் இலக்கில் முன்னேறிச் செல்வது அவசியம்.

5. களத்தில் இறங்காத கலப்பை
எலிசாவின் அழைப்பு, இயேசுவின் சீடத்துவம் என்று நாம் சிந்திக்கும் இந்த நாளில், இன்னும் நிறைய கலப்பைகளை இறைவன் தன் பணிக்காக தேர்ந்து கொள்ள வேண்டும் என்று செபிப்போம். மேலும், கலப்பையில் கை வைத்து திரும்பிப் பார்த்தவர்கள், களத்தில் முழுமையாக தங்கள் கலப்பையைச் செலுத்த முடியாதவர்கள், கலப்பை தட்டையாகிப் போனவர்கள் என எல்லாரையும் இரக்கத்தோடும், சகோதர உணர்வோடும் பார்க்க முன்வருவோம். 'என்னால் இவ்வளவுதான் உழ முடிந்தது ஆண்டவரே!' என்று ஓய்வுபெற்ற, விடைபெற்ற கால்களையும் ஒத்தடம் கொடுப்பவர் நம் இறைவன்.

6. ஆண்டவரே என் உரிமைச் சொத்து!
இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 16), 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து' எனப் பாடுகின்றார் ஆசிரியர். யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேலின் ஒவ்வொரு குலத்திற்கும் உரிமைச் சொத்து பிரிக்கப்படுகிறது. ஆனால் லேவி குலத்திற்கு மட்டும் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்போது ஆண்டவர் அவர்களிடம், 'நானே உங்களின் உரிமைச் சொத்து' என்கிறார். இவ்வாறாக, அழிவற்ற சொத்தை உரிமைப்பேறாகப் பெற்றவர்கள் அன்றைய லேவியர்கள், இன்றைய அருள்பணியாளர்கள். ஆக, அருள்பணி நிலையில் இருக்கும் அனைவருக்கும் தன்னிறைவு மனப்பான்மை வேண்டும். தன்னிறைவு (contentment) இல்லாத உள்ளம்தான் கோபம், பொறாமை, மற்றும் தாழ்வு மனப்பான்மையால் அல்லலுறும். சீடத்துவம் என்பது அவசரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பின் காலை இழுத்துக் கொண்டு இருப்பது அல்ல. அதை விடாமுயற்சியோடும், ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் தொடர்ந்து பின்பற்றுவது.

7. அடிமைத்தளை என்னும் நுகம்!
கிறிஸ்துவில் நாம் உரிமை வாழ்வு பெற்றவர்கள் எனில், இன்று நாமே தெரிந்து எடுத்துக் கொண்டு, கழுத்தில் அழுத்திக் கொண்டு துன்புறும் அடிமைத்தளை என்னும் நுகம் எது? இந்த நுகத்தை என்னால் தூக்கி எறிய முடியாமல் இருக்க என்ன காரணம்?

களத்தில் இறங்காத கலப்பையையும் கரம் பிடித்து வழிநடத்துபவர் நம் இறைவன்!
நம் கரம் பிடிக்கும் அந்த இறைவனைப் போல, நம் கரம் நீட்டி மற்றவரின் கழுத்து நுகம் நீக்கினால், எல்லாக் கலப்பைகளும் களம் இறங்குமே!