இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

பயன்தர!

எசாயா 58:7-10
1 கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

பணி ஓய்வு பெற்ற அருள்சகோதரிகள் மற்றும் அருள்தந்தையர்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்களின் கண்களில் தெரியும் ஒரு ஏக்கம் இதுதான்:

'என்னால் யாருக்கும் பயன் இல்லை. என்னை யாரும் தேடி வருவதில்லை!'

தாங்கள் பணி ஓய்வு பெற்றாலும் அவர்கள் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பணி செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்:

'பாவசங்கீர்த்தனம் கேட்கிறார்கள்'

'மற்றவர்களுக்காக செபிக்கிறார்கள்'

'புத்தகம் எழுதுகிறார்கள்'

'தேடி வருபவர்களுக்கு உதவி செய்கிறார்கள்'

'தங்கள் துன்பங்களை பிறரின் நல்வாழ்வுக்காக ஒப்புக்கொடுக்கிறார்கள்!'

தங்களால் முடியவில்லை என்றாலும், இவற்றை எல்லாம் இவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

'நான் அடுத்தவர்களுக்குப் பயன்பட வேண்டும்' - என்ற இந்த உணர்வு நமக்குள் ஏன் வருகிறது? எப்போது வருகிறது?

நாம் பயன்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?

'உலகிற்கு உப்பு நீங்கள். உலகிற்கு ஒளி நீங்கள்!' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:13-15) மொழிகின்றார் இயேசு.

இயேசுவின் இந்த வார்த்தைகள் அவரை எனக்கு ஒரு முதலாளித்துவவாதியாக (capitalist) முன்வைக்கிறது.

'நீ பயன்பட்டால்தான் வானகத்தந்தைக்கு பெருமை.

உன் உப்பில் சாரம் இருந்தால்தான், உன் ஒளி மனிதர்முன் ஒளிர்ந்தால்தான் வானகத்தந்தை பெருமை அடைவார்!'

எதற்காக என்னால் வானகத்தந்தை பெருமை அடைய வேண்டும்.

என்னால், என் செயல்களால் வானகத் தந்தைக்கு பெருமை கூடுகிறது என்றால், அவருக்கு இயல்பாகவே பெருமை இல்லையா? என் செயல்களால் வானகத் தந்தையின் பெருமையை கூட்டவும், குறைக்கவும் முடிகிறது என்றால் நான் வானகத் தந்தையைவிட பெரியவர் இல்லையா?

இது ஒருபக்கம் இருக்க,

சிலர்,

'நீங்கள் உலகிற்கு உப்பாக இருக்க வேண்டும். ஒளியாக இருக்க வேண்டும்' என்று மொழிபெயர்த்து அதற்கு பிறரன்பு, இறையன்பு என்ற பொருள் கொடுக்கின்றனர்.

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொற்கள் 'கட்டளைச் சொற்கள்' அல்ல. மாறாக, சாதாரண வாக்கியச் சொற்கள்.

ஆக, 'நீங்கள் இருங்கள்!' என்று சொல்வதற்குப் பதிலாக, 'நீங்கள் இருக்கிறீர்கள்!' எனச் சொல்கின்றார் இயேசு.

மேலும், இங்கே அழுத்தம் தரப்பட வேண்டியது 'நீங்கள்' என்ற வார்த்தைதான்.

யார் உப்பாக, ஒளியாக இருக்கிறார்கள்?

இயேசுவின் சீடர்கள்தாம். மற்றவர்கள் அல்லர்.

ஆக, நான் இயேசுவின் சீடராக இருந்தால் மட்டும்தான் உப்பாக, ஒளியாக இருக்க முடியும். அல்லது உப்பாக, ஒளியாக இருப்பது என்பது சீடத்துவத்தின் ஒரு முக்கிய அங்கம்.

இன்னொரு சிக்கலும் இங்கே இருக்கிறது.

'உப்பு' போல மறைந்திருக்க வேண்டும் என்று சொல்கிற இயேசு, கொஞ்ச நேரத்தில் 'ஒளி' போல இருக்க வேண்டும். மலைமேல் உள்ள ஊர் போல இருக்க வேண்டும், விளக்குத்தண்டின்மேல் இருக்க வேண்டும் என்று வரிசையாக சொல்கின்றார்.

இப்போது குழப்பம் நமக்கு அதிகமாகிறது. உப்பு போல ஒளிந்திருப்பதா? அல்லது ஒளி போல ஒளிர்ந்திருப்பதா? 'உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்' என்று சொல்லும் இயேசு, ஏன் 'மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' (மத் 6:1) என்று சொல்ல வேண்டும்?

இயேசுவின் இந்தச் சொற்களை எப்படி புரிந்துகொள்வது?

'தெ ப்ரூஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' (the proof of pudding is in the eating) என்பது பழமொழி.

அது, நாம் சாப்பிடும் கேக் நன்றாக இருக்கிறது என்பதை அதை நாம் சாப்பிடும்போதுதான் நமக்குத் தெரியும்.

'இஃப் யூ ஆர் குட் ஷோ தேட் யூ ஆர் குட்!' (if you are good show that you are good) என்றும் சொல்வார்கள்.

ஆக, நாம் நல்லவர் என்றால் அது நம் நற்செயல்களால் வெளிப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பாடம்.

இயேசுவின் மலைப்பொழிவை நிறைவு செய்யும் பகுதியாக 'உப்பு,' 'ஒளி' சொல்லாடல்களைப் பதிவு செய்கின்றார் மத்தேயு. இங்கே உப்பு மற்றும் ஒளி என்பவை உருவகங்கள் அல்ல. அவை நேரிடைச் சொற்கள். பலி செலுத்துவதற்கு (லேவி 2:13, எசேக் 43:24), உடன்படிக்கை பிரமாணிக்கத்தை அடையாளப்படுத்த (எஸ்ரா 4:14, எண் 18:19) 'உப்பு' பயன்பட்டது. மேலும், 'உப்பை பங்கிடுவது' என்பது உறவின் அடையாளமாகவும், தூய்மையாக்கவும் (2 அரச 2:19-22), உணவுப்பொருள்களைப் பதப்படுத்தவும் பயன்பட்டது (யோபு 6:6, கொலோ 4:5).

மேற்காணும் பயன்பாட்டைப் போல உங்கள் பயன்பாடு இருக்க வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை.

மாறாக, உங்கள் இயல்பை நீங்கள் இழந்துவிடாதீர்கள் என்று சொல்கிறார் இயேசு.

உப்பின் இயல்பு என்பது அதன் நிறமோ, வடிவமோ, அளவோ அல்ல. மாறாக, அதன் சாரமே. நிறம் இருந்து, வடிவம் இருந்து, அளவு இருந்து சாரம் இல்லை என்றால் அது உப்பைப் போன்ற மண் அவ்வளவுதான்.

ஒவ்வொரு சீடரும் தன் இயல்பு என்ன என்பதை அறிய வேண்டும். அந்த இயல்பை எப்படியேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இயல்பு நமக்கு எங்கிருந்து வருகிறது என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 2:1-5) நமக்குச் சொல்கிறது. தன் அழைப்பு பற்றிய விளக்கத்தை கொரிந்து நகர திருச்சபைக்குப் பதிவு செய்கின்ற பவுல், 'நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய் மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்தேன்' என்றும் 'உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே' என்கிறார்.

இவ்வாறாக, இறைவனின் இயல்பே நம்மிடம் - அதாவது, அவரின் சீடர்களிடம் - 'உப்பாக,' 'ஒளியாக' இருக்கிறது.

ஒளியாக இருப்பது என்றால் எப்படி என்பதை இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 58:7-10) நாம் கற்றுக்கொள்ளலாம்.

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்!'

இன்றைய மாடர்ன் வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில்,

'தியேட்டரின் இருள் நடுவே உன் ஸ்மார்ட்ஃபோன் ஒளிர்வது போல உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை பங்குனி வெயில் போல பல்லைக் காட்டிக்கொண்டு அடிக்கும்!'

அதாவது, நாம பளிச்சுனு தெரியறதுக்கு சில வழிகளைச் சொல்கிறார் எசாயா:

'சாப்பாடு இல்லாதவங்களுக்குச் சாப்பாடு கொடு'

'தங்கள் இடம் இல்லாதவருக்கு உன் இல்லத்தில் இடம் கொடு'

'உடையற்றோரை உடுத்து'

'உன் இனத்தாருக்கு உன்னை மறைத்துக்கொள்ளாதே'

இதுதான் நான் விரும்பும் நோன்பு.

எசாயா இந்த இறைவாக்கை உரைக்கும் நேரம் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று தங்கள் நாடு திரும்பிவிட்டனர். ஆனா, ஏற்கனவே சொந்த நாட்டுல இருந்தவங்க நல்லா இருந்தாங்க. இப்போ புதுசா நாடு திரும்பியவங்களுக்கு உணவும், உடையும், உறைவிடமும் இல்லை. மேலும், 'நான் உன் உறவுக்காரன்' என்று யாராவது சொல்லி உதவி கேட்டு வந்தால் அவர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பூட்டிக் கொண்டனர்.

ஆனால், இவர்கள் எல்லாரும் எருசலேம் ஆலயத்தில் பலி செலுத்துவதற்காக, பலியில் நெருப்பு ஏற்றுவதற்காக நோன்பு இருந்தனர். ஆக, நோன்பு என்பது உனக்கு நீயே பயன் பெற்றுக்கொள்வது அல்ல. மாறாக, அடுத்தவருக்கு பயன்தருவது என்பதே எசாயா முன்வைக்கும் பாடம்.

நாமும் சில நாட்கள் நோன்பு இருக்கிறோம். தவக்காலம் முழுவதும் நோன்பு இருக்கிறோம். இந்த நோன்பினால் நம்மை மட்டுமே நாம் யோசிக்கிறோம். நோன்பு இருந்த மிச்சம் வந்த பணத்தை நாம் அடுத்தவருக்கு செலவிடுவதற்குப் பதிலாக, அதை நமக்கு நாமே செலவழித்துக்கொள்கிறோம். ஆக, நோன்பு என்னை இன்னும் அதிக தன்னலம் உள்ளவராக, தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகிறது. ஆனால், எசாயா சொல்லும் மாற்று நோன்பு தன்னைப் பிறருக்கு நீட்டிக்கொடுப்பதில் இருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட நோன்பு இருந்தால்தான் இறைவன் மக்களின் கூக்குரலுக்குச் செவிகொடுப்பார் எனவும் அறுதியிட்டுக்கூறுகிறார் எசாயா.

இன்றைய இறைவாக்கு வழிபாடு எனக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் மூன்று:

அ. நோ ஃப்ளாஷ் ப்ளீஸ்

'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டி குற்றம் சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னைக் கையளித்து, வறியோரின் தேவையை நீ நிறைவு செய்ய வேண்டும்,' என எசாயாவும், 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!' என இயேசுவும் சொல்கின்றனர். ஆக, ஒளிர்வது என்பது சீடர்கள் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. ஒருவரின் குணமும், செயலும் பிரித்துப்பார்க்க முடியாதவை. என் இயல்பு போல் என் செயலும், என் செயல்போல என் இயல்பும் இருக்க வேண்டும். அருள்பணியாளர் நான் எனச் சொல்லிவிட்டு, என் சொல்லும், செயலும் அதற்கேற்றார்போல இல்லை என்றால் என்னால் ஒளிவீச முடியாது. இன்று நான் சில நேரங்களில் சின்ன சின்ன ஃப்ளாஷ் லைட்டாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். அதுவும் தவறு. ஃப்ளாஷ் லைட் சில நொடிகளே நிற்கக் கூடியது. அந்த லைட்டால் அடுத்தவரின் கண்களும் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கின்றது. ஒருநாள் நல்லவன், ஒருநாள் தியாகி, ஒருநாள் உண்மை என்ற 'ஒருநாள்' வகை வாழ்க்கை எல்லாம் 'ஃப்ளாஷ்' வாழ்க்கை. இது சீக்கிரம் மறைந்துவிடும். மாறாக, என் நுகத்தை நான் அகற்றிவிட்டு, அடுத்தவரின் நலன் கருதி என் வாயை அடக்கி, என் கைகளை நீட்டினால் நானும் நீண்ட ஒளி தருவேன்.

ஆ. இதுதான் நான்

'நான் அவன் இல்லை' என்று ரொம்ப எளிமையாகச் சொல்கிறார் பவுல். எனக்கு கீழ் இருப்பவர்களுக்கு என் வீக்னஸ் பற்றி சொல்வது எனக்கு ஆபத்து என பல நேரங்களில் நான் நினைப்பதுண்டு. 'நான் வீக் ஆக இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள மாட்டேன்' என்று சிலர் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். ஆனால், பவுல் ரொம்ப கூலா 'இதுதான் நான்!' என தன் கொரிந்து நகர திருச்சபைக்கு எழுதுகின்றார். அருள்பணி நிலையில் இருப்பவர்களுக்கு இந்தப் பண்பு மிகவும் அவசியம் என நான் நினைக்கிறேன். 'நான்தான் மெசியா' என்ற அளவில் சில நேரங்களில் என் நடவடிக்கை இருக்கின்றது. ஆனால், என்னை மிஞ்சிய காரியங்கள் பல இருக்கின்றன என்பதை நான் மறந்துவிடுகிறேன். பவுல் எந்த நேரத்திலும் தன் இயல்பை அறிந்திருந்தார். தன் அச்சம், நடுக்கம், வலுவின்மை அவருக்கு தெளிவாகத் தெரிந்தது. அந்த வெறுமையில்தான் இறைவனின் வல்லமை அவரை நிறைத்தது. ஆக, இன்று நான் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டுமென்றால், நான் அவரால் நிரப்பப்பட வேண்டும். அப்படி நிரப்பப்பட நான் என்னையே அறிந்து கொள்வது கட்டாயம்.

இ. தடைகளை எதிர்கொள்தல்

உப்பு எப்போது சாரம் இழக்கும்? அதிகப்படியான காற்றால், வெப்பநிலை மாற்றத்தால், நீடித்த காலம் இருப்பதால், வெயில் படுவதால் என பல நிலைகளில் அது சாரம் இழக்கும். ஆக, நான் சீடராக இருப்பதற்கு என் வெளிப்புறத்தில் இருந்து வரும் தடைகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஒளியாக இருப்பதும் கடினம்தான். குறிப்பாக விளக்குத்தண்டின்மேல் நான் நிற்கும்போது, நான் வலுவிழந்து போகிறேன். ஒருவேளை என்னை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடினாலோ, அல்லது கட்டிலின் கீழ் நான் வைக்கப்பட்டாலோ நான் பாதுகாப்பாக இருப்பேன். காற்றும், புயலும் என்னைத் தாக்காது. விளக்குத் தண்டில் நான் நிற்கும்போது நான் விழுந்துவிடவும், அணைந்துவிடவும் வாய்ப்புக்கள் அதிகம். இருந்தாலும், தடைகளைத் தாண்டி மனிதர்கள்முன் ஒளிர்வதே என் பணி.

இறுதியாக,

மனிதர்களின் இயல்பும் பணியும் இணைந்தே செல்கின்றன. 'என்னால் மற்றவர்களுக்குப் பயன் இல்லை,' என்ற விரக்தியும், 'என்னை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்' என்ற கோபமும் இனி நமக்கு வேண்டாம். நாம் இருக்கும் வரை நம் இயல்பு இருக்கட்டும். நம் உப்பில் சாரம் இருக்கட்டும். நம் ஒளி மனிதர்முன் ஒளிரட்டும்.

பியர்-அகஸ்ட் ரெனோ என்ற பிரெஞ்சு ஓவியர் தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் ஆர்த்ரைட்டிஸ் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். பெயிண்ட் ப்ரஷைப் பிடிக்கவும் அவரின் விரல்களுக்கு வலுவில்லை. ஒரு நாள் மாலை மிகவும் கஷ்டப்பட்டு பெயிண்டிங் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.

'இந்த நிலையில உனக்கு இது தேவையா. பேசாம இருக்க வேண்டியதுதான!' என்றார் அவரைப் பார்க்க வந்த நண்பர்.

'pain will pass away, but beauty remains' - 'வலி மறைந்துவிடும். அழகு நிலைத்துநிற்கும்!' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து வரைந்தார் ரெனோ.

'சுடும்வரைதான் நெருப்பு

சுற்றும்வரைதான் பூமி.

போராடும்வரைதான் மனிதன்' என்கிறார் வைரமுத்து.

நாம் இன்னும் ஒரு வரி கூட்டிக்கொள்வோம்:

'பயன்தரும் வரைதான் உப்பு, ஒளி, நாம்!'