இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

மலைமீது ஏறி அமர

செப்பனியா 2:3, 3:12-13
1 கொரிந்தியர் 1:26-31
மத்தேயு 5:1-12

இயேசுவின் மலைப்போதனையை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12) வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசேயாக முன்வைக்க எண்ணியதால், அவரை மலைமேல் நிறுத்தி போதிக்க வைக்கின்றார் என்று சொல்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். அப்படியே இருக்கட்டும்!

ஆனால், இயேசுவின் மலைப்பொழிவு என்னதான் நம் மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், நம் காயங்களுக்கு கட்டுப்போடுவதாக இருந்தாலும், அது நம்மைக் காயப்படுத்துபவர்களையும் நியாயப்படுத்துவதுபோல இருக்கிறது.

உதாரணத்திற்கு,

நான்கு நாள்களாக பட்டினியாகக் கிடந்து தற்கொலை முயற்சிக்கு யோசித்துக் கொண்டிருக்கும் நம் ஊர் விவசாயி,

'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது' எனவும், 'துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்' எனவும் வாசிக்கிறார்.

இப்படி ஏழை நீரின்றி, வாழ்வாதாரமின்றி துன்புற காரணமாக இருக்கும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனரும்,

'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது' எனவும், 'துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்' எனவும் வாசிக்க முடியும்.

ஆக, இயேசுவின் மலைப்பொழிவு ஆள்வோருக்கும், அடிமைப்படுத்துவோருக்கும் சாதகமாக அல்லவா இருக்கிறது?

மேலும், இயேசுவின் மலைப்பொழிவைப் புரிந்து கொள்வதில் இன்னும் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன:

அ. மலைப்பொழிவு யாருக்கு சொல்லப்பட்டது? சீடர்களுக்கு மட்டுமா? அல்லது எல்லாருக்குமா?

ஆ. மலைப்பொழிவில் வாக்களிக்கப்படும் பேற்றை கொடுப்பது யார்? கடவுளா? அல்லது தாங்களாகவே அவர்கள் கண்டுகொள்ள வேண்டுமா? அல்லது இந்தப் பேறு எங்கே கிடைக்கும்? இந்த உலகத்திலா? அல்லது மறுஉலகத்திலா? இந்த உலகத்தில் என்றால், அதன் சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கின்றனவே! மறுஉலகத்தில் என்றால், மறுஉலகம் தரும் ஆறுதல், விண்ணரசு ஆகியவற்றால் இப்போதைக்கு எனக்கு என்ன பயன்?

நிற்க.

முதலில், மலைப்பொழிவின் எட்டு பேறுபெற்ற நிலைகளைப் புரிந்து கொள்வோம்.

'பேறுபெற்றோர்' அல்லது ஆங்கிலத்தின் 'ப்ளஸ்ஸட்' என்ற மொழிபெயர்ப்பே நிறைவானது அல்ல என்கிறார் பாலஸ்தீனத்து ஆசிரியர் எலியாஸ் சாக்கூர் என்பவர். 'நாங்கள் நிலத்திற்குச் சொந்தம்' என்ற நூலில் (பக். 143-44) அவர் பதிவு செய்துள்ளதை நான் இங்கே மொழிபெயர்க்கிறேன்:

இயேசு பேசிய அரமேய மொழி தெரிந்த எனக்கு இயேசுவின் மலைப்பொழிவை மொழிபெயர்த்துப் படிப்பதில் சிரமம் இருக்கிறது. மொழிபெயர்க்கும்போது இயேசு சொன்னதன் சாரம் மறைந்துவிடுகிறது. ஏனெனில், மலைப்பொழிவு பெரும்பாலும் செயப்பாட்டு வினைச்சொல்லாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயேசுவின் மலைப்பொழிவு நாம் 'பேஸ்ஸிவ்வாக' இருந்து அருள்வரங்களைப் பெற்றுக்கொள்வதை அல்ல. மாறாக, வாழ்வை 'ஆக்டிவ்வாக' வாழ்வதற்கே நமக்கு ஊக்கம் தருகின்றது.

'பேறுபெற்றோர்' அல்லது 'ப்ளஸ்ஸட்' என்பது 'மகாரியோய்' என்னும் கிரேக்கச் சொல்லாடலின் பதம். ஆனால், அரமேயத்தில் இதன் வார்த்தை 'யஸார்' என்னும் வினைச்சொல்லிலிருந்து வரும் 'அஸ்ரே'. இந்தச் சொல்லிற்கு 'பேஸ்ஸிவ் ஃபார்ம்' கிடையாது. இதன் பொருள், 'சரியான இலக்கை அடைய சரியான வழியை தெரிந்து அந்த வழியில் உன்னையே நிலைநிறுத்துவது!' அல்லது 'திரும்பி சரியான வழியைக் கண்டுபிடிப்பது,' அல்லது 'நேர்மையாளராக இருப்பது!' என்பதுதான்.

பாலஸ்தீன அகதி முகாமில் வதைக்கப்படும் ஓர் இளைஞனிடம் சென்று, 'துயருறுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்' என நான் சொன்னால், அல்லது 'நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது' என் நான் சொன்னால், அவர் என்மேல் கோபப்படுவார். கடவுளும் நானும் அவரின் நிலையைப் புரிந்துகொள்ளாதது போல இருக்கும்.

அரமேய மொழியில் கேட்கும் இயேசுவின் வார்த்தைகளை நான் இப்படித்தான் மொழிபெயர்ப்பேன்:

'எழு. முன்னேறிச் செல். ஏதாவது செய். நகர்ந்து கொண்டே இரு. நீதிக்கான பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நீ திருப்தி அடைவாய்.'

'எழு. முன்னேறிச் செல். ஏதாவது செய். அமைதி ஏற்படுத்துபவனே. நீ கடவுளின் மகன் என அழைக்கப்படுவாய்.'

இயேசு சொன்னது இதுதான்.

'மனுக்குலம் மேன்மை அடைய உன் கைகளை அழுக்காக்கிக்கொள். இல்லையென்றால் மற்றவர்கள் எளியவர்களையும், பேச்சற்றவர்களையும், வலிமையற்றவர்களையும் அமுக்கி, நசுக்கிவிடுவர்.'

  கிறிஸ்தவம் என்பது 'பேஸ்ஸிவ்' அல்ல. அது எப்போதும் 'ஆக்டிவ்'.

ஒருநாள் இரண்டு வெளவால்கள் பால் நிறைந்த ஒரு பானைக்குள் விழுந்துவிட்டன.

அதில் ஒன்று பெஸ்ஸிமிஸ்ட். மற்றது ஆப்டிமிஸ்ட்.

பெஸ்ஸிமிஸ்ட் வெளவால் சொன்னது, 'நான் என்ன செய்வேன்? எப்படியும் நான் இறந்துவிடுவேன். எதற்காக நான் போராட வேண்டும்? அப்படியே மூழ்கி இறந்துவிடுகிறேன்' என்று சொல்லி பாலுக்குள் மூழ்கிப்போனது.

ஆப்டிமிஸ்ட் வெளவால் சொன்னது, 'நான் இறுதிவரை போராடுவேன். அப்போதுதான், 'இவன் இறுதிவரை போராடினான்' என மற்றவர்கள் சொல்வார்கள்.' போராடத் தொடங்கியது. தன் இறக்கைகளை ஓங்கி ஓங்கி அடித்தது. பறக்க முயன்று அப்படியே மயங்கியது. கொஞ்ச நேரம் கழித்து விழித்தெழுந்தபோது அது பெரிய வெண்ணை உருண்டையில் பாதுகாப்பாக நீந்திக்கொண்டிருந்தது.

விரக்தியில் வீழ்ந்துவிடுவது அல்ல இது.

மாறாக, விரக்தியையும் தாண்டி வருவது.

'எழு. முன்னேறிச் செல். ஏதாவது செய். நகர்ந்து கொண்டே இரு!' இயேசு சொன்னார் சீடர்களிடம்.

சீமோன் கேட்டார், 'இப்படி எல்லாம் நடக்குமா?'

அந்திரேயா கேட்டார், 'இதை எப்படி சோதித்துப் பார்ப்பது?'

யாக்கோபு கேட்டார், 'இது எப்போது நடக்கும்?'

பிலிப்பு கேட்டார், 'எட்டு வார்த்தைகள்தாமா? அல்லது இன்னும் இருக்கின்றனவா?'

பார்த்தலமேயு கேட்டார், 'இதை நான் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமா? அல்லது நான் வாழ வேண்டுமா?'

யோவான் கேட்டார், 'இது எங்களுக்கு மட்டுமா? அல்லது எல்லாருக்குமா?'

யூதாசு இஸ்காரியோத்து கேட்டார், 'இதனால் வரும் லாபம் என்ன?'

இப்படியாக எல்லாரும் கேட்டனர்.

அங்கிருந்த பரிசேயர்களுள் ஒருவர் இயேசுவின் இந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டு, இவற்றால் தன் அறிவுக்கு என்ன பயன் என்று கேட்டார்.

கொஞ்ச நேர நிசப்தம்.

இயேசு அப்போது மனம் நொந்து அழுதார்.

நிற்க.

இயேசுவின் மலைப்பொழிவு நமக்குப் புரிய வேண்டுமானால், அவரைப்போல நாம் 'மலையில் ஏறி அமர' வேண்டும். மலையில் ஏறி அமரும்போது நம்மை அறியாமல் மூன்று விடயங்கள் நடக்கின்றன:

1. நம் பார்வை விரிவடைகிறது.

2. நாம் பெரியவை என்று பார்த்து வியந்தவை சிறியதாகிவிடுகின்றன.

3. நம் உள்ளத்தில் ஒரு 'மாஸ்டர்' உணர்வு வருகின்றது.

இந்த மூன்று விடயங்கள் நடந்தால்தான் மலைப்பொழிவின் மதிப்பீடுகள் நம் வாழ்வாக முடியும்.

இந்த மூன்று விடயங்களைத்தான் இன்றைய முதல் (காண். செப் 2:3, 3:12-13) மற்றும் இரண்டாம் (காண். 1 கொரி 1:26-31) வாசகங்கள் வேறு வார்த்தைகளில் முன்மொழிகின்றன:

'ஆண்டவரைத் தேடுங்கள். நேர்மையை நாடுங்கள். மனத்தாழ்மையைத் தேடுங்கள்' என்கிறார் செப்பனியா.

'உலகின் பார்வையில் மடமை எனத் தெரிவது கடவுளின் பார்வையில் ஞானம்' என்கிறார் பவுல்.

மலைப்பொழிவு நமக்கு இன்று சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

'மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்' என நிறைவுபெறுகிறது மலைப் போதனை.

  அப்படி என்றால், இயேசுவின் மலைப்பொழிவின் நோக்கம் நம் மகிழ்ச்சி.

ராபர்ட் ஸ்சுல்லர் என்ற மேலாண்மையியல் ஆசிரியர், 'தெ பி ஹேப்பி ஆட்டிடியூட்ஸ் - பிஆயாட்டிடியூட்ஸ்' என்ற ஒரு நூலில் மகிழ்ச்சியான வாழ்வின் எட்டு படிக்கட்டுகளாக மலைப்பொழிவைப் பார்க்கின்றார்.

  அவரின் புத்தகத்தின் உந்துதலில் நாம் பின்வரும் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்:

1. 'எனக்கு உதவி தேவை. என்னால் தனியாக செய்ய முடியாது'

ஏழையரின் உள்ளம் எப்போதும் அடுத்தவரைச் சார்ந்தே இருக்கும். மற்றவர்களை அல்லது கடவுளைச் சார்ந்தே தங்கள் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்கின்றனர் ஏழையர். எல்லாம் இருப்பவர்களுக்கு அடுத்தவரின் துணையோ, இருப்போ தேவையில்லை. எல்லாவற்றையும் அவர்களின் பணமும், பொருளும், அதிகாரமும், உறவுப்பலமும் பார்த்துக்கொள்ளும். ஆக, ஏழையரின் உள்ளம் என்பது தேவை கொண்டிருக்கும் உள்ளம். நம் எல்லாருக்குமே ஏதாவது ஒரு தேவை இருக்கும். அந்தத் தேவையை உணர்ந்து கொள்வதும், அந்தத் தேவையை நிறைவேற்ற மற்றவரையும், இறைவனையும் தேடுதல் நலம். அப்படித் தேடுவதில்தான் விண்ணரசு இருக்கிறது. ஏனெனில் விண்ணரசு என்பது வானில் தோன்றும் ஒரு மாய அரச அரண்மனையோ அல்லது நகரமோ அன்று. மாறாக, நாம் ஒருவர் மற்றவர் நடுவில் பாராட்டும் கட்டின்மை, சகோதரத்துவம், நீதி ஆகியவையே விண்ணரசு.

2. 'எனக்கு வலிக்கிறது. ஆனாலும் நான் திரும்பி எழுவேன்'

'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்கிறது புத்தமதம். ஆனால் நம் தவறான முடிவுகளும், செயல்களுமே நமக்கு துன்பம் வருவிக்கின்றன. மனித கண்டுகொள்ளாமை, தீண்டுதல், தீண்டாமை, மடமை போன்றவையும் சில நேரங்களில் துன்பம் வருவிக்கின்றன. துன்பம் வரும்போது உன்னை நீயே குற்றப்படுத்தாதே! குற்ற உணர்வை நீ வளர்க்காதே. அப்படி தன்னையே தீர்ப்பிட்டுக்கொள்வதால் ஒரு பயனும் இல்லை. என் துன்பத்திற்கு நான் யாரைக் காரணம் காட்டுவது என்று சொல்வதைவிட, துன்பத்திற்கான பிரச்சினையை சரி செய்வதே சால்பு. பிரச்சினை என்று ஏதாவது வரும்போது, அதற்கான நேரத்தை எடுத்து அதை சரிசெய்தல் வேண்டும். மேலும், ஒவ்வொரு பிரச்சினையையும் வளர்வதற்கான ஒரு புதிய வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

3. 'நான் சலனமின்றியும், சமத்தாகவும், சரியாகவும் இருப்பேன்'

இதுதான் கனிவு. நாம் திண்ணும் பழத்தின் கனிவு நமக்குத் தெரியும். காயாக இருந்தால் நம் பல்லைப் பதம் பார்த்துவிடும். அதிகமாகக் கனிந்தால் உழன்றுவிடும். சரியான பதத்தில் இருப்பதுதான் கனிவு. ரொம்பவும் சூடாகக்கூடாது. ரொம்பவும் குளிர்ந்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட நடுநிலை. இவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வர் என்கிறது மலைப்பொழிவு. 'நாட்டை உரிமையாக்குதல்' என்பது நம் உள்ளுறை உணர்வு. சிலருக்கு சொந்த வீட்டில் அந்நியராக இருப்பது போல இருக்கும்.சிலர் அந்நிய வீட்டிலும் சொந்த வீடு போல இருப்பர். அடுத்தவர்கள்மேல் கொண்டிருக்கின்ற நேர்முக உரிமையே நாட்டை உரிமையாக்குதல். அதாவது, எந்த ஒரு நிமிடத்திலும், எந்த ஒரு இடத்திலும் வேர்களைப் பதித்து வாழ்வது. இதுதான் நாட்டையும், நகரத்தையும், நல்லவர்களையும் உரிமையாக்கிக்கொள்வது.

4. 'நான் நேரியதை மட்டுமே செய்ய விழைவேன்'

மனிதர்களாகிய நமக்கு நிறைய வேட்கைகள் உண்டு. வேட்கை என்பது நம் உள்ளத்தில் தோன்றி நம்மைச் செயல்பாட்டிற்குத் தூண்டுகிறது. 'வன்முறை,' 'பாலுணர்வு' இந்த இரண்டும்தான் நம்மில் மேலோங்கி இருக்கும் வேட்கைகள் என்கிறது உளவியல். ஆனால், நேரியவற்றிற்கான வேட்கையும், அநீதி எழும்போது கண்கலங்கும், எதிர்த்துக்கேட்கும் வேட்கையும்கூட நம் உள்ளத்தில் இருக்கின்றது. நீதிநிலைநாட்டும் வேட்கை என்பது அதுதான். நானும் நீதியாக இருக்க வேண்டும். அநீதி இல்லாத நிலையை உருவாக்கவும் முயற்சி செய்ய வேண்டும். நீதி என்பது அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது. மற்றவர்களை நம் தேவைக்குப் பயன்படுத்துவதும், அல்லது எனக்குத் தேவையானதை அடைய என்னையும், மற்றவர்களையும், மற்றவைகளையும் வளைப்பது வேட்கையாக இருத்தல் கூடாது.

5. 'என்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறேனோ, அப்படியே நானும் அவர்களிடம் நடந்து கொள்வேன்'

'இரக்கத்தை' 'இரக்கத்தின் பேறு' என்கிறார் இயேசு. மற்ற எல்லா மதிப்பீடுகளுக்கு வேறு வேறு பதில் மதிப்பீடுகளைத் தரும் இயேசு, இரக்கம் என்றவுடன், இரக்கத்தையே திரும்பத் தருகின்றார். மனிதர்கள் அடிப்படையில் இரக்கம் தேவைப்படுபவர்கள். ஏனெனில் நாம் வலுவின்மை நிறைந்தவர்கள். அடுத்தவரின் வலுவின்மைக்கு நம்மையே வளைப்பது இரக்கம். தாயின் தன் குழந்தையைக் குனிந்து பார்ப்பது போல நாம் அடுத்தவருக்கு இரக்கம் காட்டும்போது, அந்த குழந்தையே நம் கண்களில் இரக்கமாக பதிந்துவிடுகிறது.

6. 'நம்பிக்கையை என் வழியே நான் பாயச் செய்வேன்'

தண்ணீர் வருகின்ற பைப்பில் உப்பு அல்லது அழுக்கு படிந்தால் காலப்போக்கில் நீரின் வேகம் குறைந்து, ஒரு நாள் முற்றிலும் நின்றுவிடுகிறது. நம்பிக்கையில் தூய்மைதான் இங்கே மையப்படுத்தப்படுகிறது. கறையில்லாத நம்பிக்கைதான் கடவுளைக் காண்பதற்கான ஒரே வழி. நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒருவரால்தான் தூய்மையாக இருக்க முடியும். நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க அடிப்படையான தேவையே நம்பிக்கை. நம்பிக்கையை நான் கொண்டிருக்கும் போது அது என் வழியாக அடுத்தவருக்கும் பாய்ந்தோடுகிறது.

7. 'நான் பாலம் கட்டுவேன்'

அமைதி ஏற்படுத்துவது என்பது பாலம் கட்டுவது. அல்லது இணைப்புக்கோடாகச் செயல்படுவது. அமைதியை நாம் இழக்கும்போது நமக்குள்ளே, அல்லது நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே விரிசல் வந்துவிடுகிறது. அந்த விரிசலை இன்னும் பெரிதாக்காமல் அதை இணைக்க முயற்சி செய்வதே பாலம் கட்டுதல்.

8. 'எந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்’

துன்புறுத்தப்படுதல் என்பது மற்றவர்கள் தங்கள் வலிமையை நம்மேல் செலுத்துதல். அந்நேரத்தில் நம் இயல்பும், நம் உரிமையும், நம் தான்மையும் பாதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் நான் மற்றவர்களுக்கு பலிகடா என்ற ஒரு எண்ணம் வந்துவிட்டால் நான் மகிழ்ச்சியை இழந்துவிடுவேன். மாறாக, எந்த நிலையிலும் நான் பலிகடா ஆக மாட்டேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியை உறுதியாக தக்க வைத்துக்கொள்வேன்.

இந்த எட்டுப் படிகளையும் நம் வாழ்க்கைப் பாதையின் படிக்கட்டுக்களாக்கி நாம் மலைமீது ஏறினோம் என்றால், அந்த மலை தரும் அமைதியில் அமர்ந்தோம் என்றால் நாமும் மகிழ்ந்து பேருவகை கொள்வோம்.

மலைமீது ஏற எனக்குத் தடையாக இருக்கும் காரணிகள் எவை?

நான் பலமில்லாமல் இருக்கின்றேனா?

அல்லது பாதை கடினமாக இருக்கிறதா?

அல்லது போதிய முன்னேற்பாடுகள் எனக்கில்லையா?

அல்லது சூழல் என்னைக் கட்டுவதாக நினைக்கிறேனா?

அல்லது மலையேறுவதற்கான மனமும் ஆசையும் எனக்கு இல்லையா?

இறுதியாக,

'இவ்வளவு நீளமான பாதையை நான் கடக்க வேண்டுமா?' என்று மலைத்துப் போய் நின்ற சீடனிடம்,

'ஒவ்வொரு அடியாக எடுத்து வை. கடக்க கடக்க பயணம். நடக்க நடக்க பாதை' என்றார் துறவி.

ஞானம் பெற்றான் சீடன்.